அரசியல்வாதிகள் இழுக்கும் ஆதாயத் தேர்
அசம்பாவிதம் ஏதுமின்றி கண்டதேவி சுவர்ணமூர்த்தீசுவரர் தேர்த் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. அதனை அமைதியாக நடத்திக் காட்டிய சிவகங்கை மாவட்ட நிர்வாகத்துக்கும் காவல்துறைக்கும் பாராட்டுகள் உரியன.
தலித்துகள் இந்தத் திருவிழாவில் தேரிழுக்கக் கூடாது என்ற சமூக சீர்கேட்டை எதிர்த்து, நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டியிருந்தது என்பது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விஷயமல்ல. இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஜாதி ஆதிக்க உணர்வு நீடிப்பது கேவலமே. எனினும் கடந்த பல ஆண்டுகளாக ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக உருமாறி, அடிதடியிலும் உயிரிழப்பிலும்கூட முடிவடைந்த இந்தத் தேர்த் திருவிழா, இவ்வாண்டு அமைதியாக நடந்துள்ளது. தலித்துகளையும் அரவணைத்து, திருவிழாவை அமைதியாக நடத்தும்படி உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை, மாவட்ட நிர்வாகம் பொறுப்புணர்வோடு சிறப்பாக நிறைவேற்றியுமிருக்கிறது. இரு ஜாதியினரிடையே அன்பையோ, நட்பையோ, மனிதாபிமானத்தையோ சட்டத்தால் வலியுறுத்தி வளர்த்துவிட முடியாது. சட்டம் ஆணைதான்போட முடியும். அன்பும் அங்கீகாரமும் இல்லாத சூழலில், அந்த ஆணையைச் செயல்படுத்துவது மிகவும் கஷ்டம். பொது மக்களின் உணர்வுகள் கொந்தளிக்கக்கூடிய இதுபோன்ற சமயங்களில், வன்முறையையும் உயிர்ச்சேதத்தையும் தவிர்ப்பதற்காக காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கிறது;
வன்முறையைத் தூண்டக்கூடிய சிலரைத் தடுப்பு நடவடிக்கையாகக் கைது செய்து, தாற்காலிகமாகச் சிறை வைக்கிறது. இந்த அடிப்படையில்தான் புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமியும், விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவனும், கண்டதேவி தேர்த் திருவிழாவுக்குப் புறப்பட்டபோது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கைதை அவர்கள் கடுமையாக எதிர்த்து குரல் கொடுத்துள்ளனர். நீதிமன்றத்துக்கும் சென்றுள்ளனர்.
கிருஷ்ணசாமியும் திருமாவளவனும், தங்கள் தொண்டர்களுடன் கண்டதேவிக்குப் படையெடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்..? தொண்டர்களின் உற்சாகம் கட்டுமீறியிருக்கக்கூடும். நீதிமன்ற ஆணையைக் கூட, தலைவர்களின் தனிப்பட்ட சாதனையாக்கி முழங்கியிருப்பார்கள்.
அத்தலைவர்கள், தங்களுக்கேயுரிய உணர்ச்சிகளைத் தூண்டும் பாணியில் பேசி, மக்களை உசுப்பிவிடும் சூழல் உருவாகியிருக்கும். இதைக் கண்டு தலித் அல்லாதார் அச்சமுற்றோ, ஆவேசமுற்றோ வன்முறையைக் கிளப்ப வழி பிறந்திருக்கும். இத்தலைவர்கள் அதிகம் பேசாமலேயிருந்திருந்தால்கூட, அவர்களுடைய வருகையே கோப-தாபங்களைத் தூண்டியிருக்கும்.
இதெல்லாம் எதுவுமின்றி, கோயில் நிர்வாகமே ‘அனைத்து ஹிந்துக்களும் தேர் இழுக்கலாம்’ என்று அறிவித்து, கணிசமான தலித்துகளின் பங்கேற்புடன் ஊர் கூடித் தேர் இழுத்திருக்கிறது.
ஆனால் திருமாவளவனுக்கும் கிருஷ்ணசாமிக்கும்தான் இந்த நல்ல காரியத்தால் திருப்தி இல்லை! தாங்கள் அனுமதிக்கப்படாததை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் உள்நோக்கம் ஏதுமின்றி, சமூக நோக்கில் மட்டுமே அவர்கள் கண்டதேவிக்குச் செல்ல விரும்பியிருந்தால், தமிழக முதல்வரை நேரடியாகத் தொடர்பு கொண்டு காவல் துறைக்கு முன்கூட்டியே தெரிவித்துவிட்டு, மக்களையும் சூழ்நிலையையும் தயார்ப்படுத்திவிட்டுப் போய்வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யாமல், ஏதோ யுத்தத்துக்கு வியூகம் வகுப்பதுபோல், ரகசியத் திட்டம் தீட்டிப் புறப்படப் பார்த்திருக்கிறார்கள்.
தமிழக அரசும் மனம் வைத்திருந்தால், இவ்விரு தலைவர்களையும் கைது செய்யாமலே பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம். முன்கூட்டியே தகவல் தெரிந்ததால்தான் இருவரும் கைது செய்யப்பட்டார்கள். தகவல் அறிந்ததுமே முதல்வர் ஜெயலலிதா இரு தலைவர்களையும் அழைத்து, கண்டதேவி செல்லும் முயற்சியைக் கைவிடும்படி கூறியிருக்கலாம். அல்லது “எனது அமைச்சர் ஒருவரையும் அனுப்புகிறேன்; மூவருமாகச் சென்று திரும்புங்கள். ஆனால் தொண்டர் படையோ, உணர்ச்சி தூண்டும் பேச்சோ வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டிருக்கலாம். அப்போது அவர்களால் மறுத்திருக்க முடியாது. மறுத்திருந்தால், அவர்களுக்குத்தான் அவப்பெயர் ஏற்பட்டிருக்கும்.
ஆனால், முதல்வர் இப்படி கௌரவமாக நடந்து கொள்ளவில்லை. கைது செய்ய ஆணை பிறப்பித்திருக்கிறார்.
பேதங்களைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுகிற அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கு அப்போதுதான் முடிவுக்கு வரும். ஊர் கூடித்தான் ஆன்மிகத் தேர் இழுக்க வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளின் ஆதாயத் தேராக அது மாறிவிடக்கூடாது.










