ஜூனியர் விகடன்: கடந்த 15-ம் தேதி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் நடிகை ஷாலினி.
‘கும்பகோணம் கோபாலு‘ என்ற படத்தில் நடிகர் பாண்டியராஜனுக்கு ஜோடியாக ‘மயூரி’ என்ற பெயரில் அறிமுகமானவர்தான் இந்த ஷாலினி. அந்தப் படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. ஷாலினி கொஞ்சம் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், வலியப் போய் சான்ஸ் கேட்கும் பழக்கம் இல்லாதவராக இருந்தார்.
மலையாளத்தின் பக்கம் தனது கவனத்தை திருப்பியவர், மம்மூட்டி, மோகன்லால் போன்றோருடன் சினிமாக்களில் தலை காட்டினார். ‘ஸ்த்ரீ’ என்ற டி.வி. சீரியலில் நடித்து கேரளாவில் படுபிரபலமானார். அதன்பிறகு தமிழுக்கு வந்தவர் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ‘சலனம்‘ சீரியலில் நடித்தார். அதன்பிறகு ‘விசில்‘, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘கனா கண்டேன்‘ என வரிசையாகப் பல படங்களில் நடித்திருக்கிறார்.










