வாசிகா


விகடன் புக் கிளப் :

எம் தமிழர் செய்த படம் – சு.தியடோர் பாஸ்கரன் :: ‘மக்களின் கேளிக்கைச் சாதனமாக, ஒரு பொழுதுபோக்காக இருக்க வேண்டிய சினிமா, சமூகத்தை ஆக்கிரமிக்கும் அசுர சக்தியாக மாறி, நம் அன்றாட வாழ்வின் எல்லாப் பரிமாணங்களையும் ஆக்கிரமித்துள்ளது’ என்று தமிழ்த் திரைப்பட வரலாற்றின் அரசியலை நாடிபிடிக்கிற நூல். தமிழ் சினிமாவின் தோற்றம், அதன் தொழில்நுட்ப வளர்ச்சி, பாட்டு, இடைவேளை, சினிமா மொழி, சென்சார் பிரச்னைகள், விவரணப் படங்கள் என்று சினிமாவின் சகல அம்சங்களையும் அக்கறையோடு அணுகுகிறார் தியடோர் பாஸ்கரன்.

தென்னிந்தியாவின் மௌனப் படங்கள் பற்றிய முதல் கட்டுரையிலேயே நூலாசிரியரின் உழைப்பு நன்கு தெரிகிறது. தமிழ் சினிமா வின் பலம், பல வீனம் பற்றி அறிந்துகொள்ள உதவும் முயற்சி.

(உயிர்மை. ரூ.100/-)


பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம் – சுப.வீரபாண்டியன் :: ‘அவரவர் நாட்டில் அவரவர் வாழ்க’ என்னும் புரட்சிக் கவிஞரின் வரிகள்தான், பெரியாரின் கொள்கை. அந்த அடிப்படையில் திராவிடநாடு திராவிடருக்கே என்று முதலிலும், தமிழ்நாடு தமிழருக்கே என்று பிறகும் அவர் குரல் கொடுத்தார்’ என்று தந்தை பெரியாரைத் தமிழ்த் தேசியத் தந்தையாக அடையாளப் படுத்தும் நூல்.

தமிழ்த் தேசியத்தின் எதிரியாகப் பெரியாரைக் காட்டும் கருத்துக்களுக்குப் பதில் சொல்லும் முயற்சியில், ஆதாரங்களை அடுக்குகிறார் நூலாசிரியர் சுப.வீரபாண்டியன். திராவிடர் கழகம் தொடங்கி, மக்களின் சுயமரியாதைக்காகப் போராடிய பெரியாரைத் தமிழ்த் தேசிய வட்டத்துக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

(தமிழ் முழக்கம். ரூ.100/-)


தலித்திய அரசியல் – ராஜ்கவுதமன் :: ‘இங்கே ஒரு சாதிக்கு உள்ளேதான் சகலமும் என்றாகிவிட்டது. புண்ணியம், ஒழுக்கம், பாராட்டு எல்லாமே ஒரு சாதிக்குள்ளே தான் சாத்தியம். மற்றபடி ஒரு சாதி மற்ற சாதியுடன் பகைதான் பாராட்டுகிறது’ என்று நமது சமூகத்தின் யதார்த்ததைக் கண்முன் நிறுத்துகிற ஆய்வு நூல்.

இந்தியாவில் சாதி யின் பூர்விகம், அசுர பலம், தீண்டாமைத் தீவிரம், அதிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் சாதிய இழிவிலிருந்து வெளிவர எடுத்த முயற்சிகள், அதற்காக உழைத்த தலைவர்கள் என வரலாற்றுத் தகவல்களும், ஆதாரங்களுக்கான மேற்கோள்களும் ராஜ் கௌதமனின் உழைப்பைக் காட்டுகின்றன.

(பரிசல். ரூ.25/-)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.