சென்னையில் புத்தகம் என்றால் ‘ஹிக்கின்பாதம்ஸ்’ நினைவுக்கு வரும். அதன் பிறகு பெங்களூர் வாசத்தில் ‘கங்காராம்ஸ்’ பிடித்திருந்தது. ஹிக்கின்பாதம்ஸில் வாஸ்து பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். தென்மேற்கு மூலையில் ஒதுக்குப்புறமாக தமிழ் புத்தகங்கள் வைத்திருப்பார்கள். நியு புக்லேண்ட்ஸில்தான் உருப்படியான வரிசையில் நிறைய தமிழ் புத்தகங்கள் கிடைக்கும் என்றார் ஆனந்த் ராகவ். ஆட்டோகாரர்களுக்கு எளிதில் புரியவேண்டும் என்பதற்காக ஆங்கிலப் பெயர் வைத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். மரங்களும் பெண்மணிகளும் நிறைந்த குளுகுளு தி.நகரில் (52-C, கீழ் தளம், வடக்கு உஸ்மான் ரோடு) இருக்கும் புண்ணியஸ்தலம் புக்லேண்ட்ஸ். மாமிகளும் தண்ணீர் இல்லாத குளங்களும் நிறைந்த மயிலையில் திலீப் குமார் கடையும் (216/10, ராமகிருஷ்ண மடம் சாலை) சென்னை ஷேத்ராடனத்தில் அவசியம் இடம்பெற வேண்டும். (இரண்டு முகவரிக்கும் நன்றி: Kizhakku Pathippagam)
ஈழநாதனின் சிங்கை நூலக அனுபவங்களை பெற இயலாதவர்கள் நிச்சயம் மேற்கண்ட ஏதாவதொன்றுக்கு வருடத்துக்கு ஒரு முறையாவது சென்று வருவார்கள். நூலகங்களில் குவிந்து கிடக்கும் புத்தகங்களை இணையம் மூலமாக அலசுவது சௌகரியமான விஷயம். அதை விட்டு விட்டு, நூறாண்டுகளாக அடைக்கப்பட்ட சந்திரமுகியின் அறையில் நுழைவது போல் இல்லாவிட்டாலும் தூசி வாசனையடிக்கும் பெரிய அடுக்குகளுக்கு நடுவே சுற்றித் திரிவது இன்னொரு சௌகரியமான பொழுதுபோக்கு. இவற்றை மட்டும் நம் வீட்டில் வைத்திருந்தால் நூலாம்படை தட்டவே வாரயிறுதிக்கள் செலவழியுமே என்னும் எண்ணமும் சம்பந்தமில்லாமல் தோன்றும்.
சில புத்தகங்கள் பின்னட்டைக் குறிப்புகளில் கவரும். சில முகப்பு அட்டையின் புகைப்படத்தினால். இவை இரண்டு வகையுமே கிட்டத்தட்ட AnyIndian.com போன்ற இணையத்தின் மூலமே எளிதில் சாத்தியமாகிறது. இவ்வாறு நோட்டமிடுவதில் புகழ் பெற்ற எழுத்தாளர்களும் திண்ணை போன்றவற்றில் வெளியான மதிப்புரைகளில் கவர்ந்தவையும் விருப்பப்பட்டியலில் இடம்பிடிக்கும். சில பல லிஸ்ட்களின் உதவியை நாடியும் வாங்கலாம்.
ஆனால், இவ்வாறு (மட்டுமே) வாங்கினால் எனக்கு பிடித்திருக்கக் கூடிய பல புத்தகங்கள் தட்டிப் போகிறது. இணையம் மூலமே கிடைக்கக்கூடிய தகவல் சார்ந்த புத்தகங்கள் சிலவும் தேவையில்லாமல் சேர்ந்துவிடலாம். சுஜாதாவின் எல்லா எழுத்தையும் வாங்கி (படித்தும்) விட வேண்டும் என்னும் ஆவலுடன் எடுத்து வைக்க சொன்னேன். மொத்தமாக பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. நிரையவே மிரண்டுபோய், நூறு புத்தகங்கள் சுஜாதாவுக்கு quota வைக்க முடிவு செய்து, புரட்டி, எடை அளந்து, தொடர்கதை சிலவற்றை ஒதுக்கி, எடுக்க முடிந்தது.
எஸ்.ராவின் உலகசினிமாவும் மிகவும் ஆர்வமாகப் பார்க்க நுழைந்த ‘பாபா’ படம் போல் சப்பென்று போனது. பாபா படம் போலவே நிறைய மேட்டர் இருந்தது. ஆனால், imdb.com ரோஜர்/ஈபெர்ட் தலை நூறு பட்டியல் போன்ற விவரங்கள். இதுதான் எனக்கு இன்னும் எளிதாக கைநுனி இணையம் வழியாகக் கிடைக்கிறதே என்ற அலட்சியம் எட்டிப் பார்க்க shelf-இலேயே திருப்ப ஏதுவாகிறது.
பசும்பொன் குறித்த புத்தகங்களைப் பார்த்தபோது பெருத்த ஏமாற்றம் மட்டுமே விஞ்சியது. வாங்க வேண்டிய பு(து)த்தகங்களில் பலவும் இணைப்பு துண்டிக்கப்பட்ட தரவிறக்கமாகிப் போனது. ரொம்ப காலமாகத் தேடிக் கொண்டிருந்த (ஆனால் லிஸ்ட்டில் இல்லாத/மறந்து போன) மௌனி மாட்டிக் கொண்டார்.
கலைமகள் களஞ்சியத்தின் இரண்டாம் பாகம் தேவையில்லை என்றால் ‘இரண்டையுமே சேர்த்து எடுத்துக் கொள்ளவேண்டும்’ என்று மிரட்டுகிறார்கள். தொகுப்பின் இரண்டாம் பாகம் முழுவதும் சிறுகதைகளே நிறைந்திருந்தது. கட்டுரைகள் மட்டுமே பிரியமாக இருக்கும் என்னுடைய தற்கால வாசிப்புக்கு வேண்டாத சுமையாக இருக்குமே என்று நினைத்தால் negotiation-க்கு வேலை வைத்தார்கள்.
அசோகமித்திரனும் தனது கிழக்குக் கட்டுரைத் தொகுப்பின் முதல் பாகத்தில், எனக்கு ஏனோ சாய்ஸில் விட்டுவிடத் தூண்டினார். அதற்கும் ஒன்று எடுத்தாலே மற்றொரு புத்தகம் (இரண்டும் தனித்தனியே 350 ரூபாய்) என்று ஆசை காட்டினாலும் கடைசியில் தனியே தர சம்மதிக்கிறார்கள். இணைம் மூலம் இந்த மாதிரி (என்னுடைய) அடாவடித்தனம் செல்லுபடியாகுமா என்று தெரியவில்லை 😉
மொத்தமாக வாங்கிய புத்தகங்கள் இன்னும் இரண்டு மாதம் கழித்துதான் வந்து சேரும் என்றாலும் நிச்சயதார்த்தம் முடிந்து கல்யாணத்துக்கு காத்திருக்கும் பிரம்மச்சாரி போன்ற சுகமான காலம் இது.
Noolagam – Interview with Mr. Ramalingam – Narmada Pathippagam:
“ஒரே கூரையின் கீழ் எல்லா தமிழ் நூல்களும்” என்கிற விதத்தில் உருவாக்கப்பட்ட ‘புக் லேண்ட்ஸ்’ பற்றி…?
தமிழில் ஒவ்வொரு பதிப்பாளரும் ஒரு (ஆஸ்தான) எழுத்தாளருடைய நூல்களையே அதிகம் வெளியிடுகிறார்கள். குறிப்பாக, மு.வ. நூல்களென்றால் பாரி, நா.பா. – தமிழ்ப் புத்தகாலயம், ஜெயகாந்தன் – மீனாட்சி, கலைஞர் – பாரதி, சுஜாதா – இமயம். இந்த பதிப்பாளர்களெல்லாம் ஆளுக்கொரு திசையில் சிதறிக்கிடக்கிறார்கள். அதனாலே வெளியூரிலிருந்தோ, வெளிநாட்டிலிருந்தோ புத்தகம் வாங்க வருபவர்கள் ரொம்ப கஷ்டப்படுகிறார்கள். அதனாலே, ஒரே இடத்தில் எல்லா நூல்களும் விற்பனைக்கு கிடைத்தால் வசதியாக இருக்கும் என்பதால்தான் புக்லேண்டை ஆரம்பித்தோம். தமிழில் ஒரு சில புத்தகங்களை மட்டுமே வெளியிட்ட பதிப்பகங்கள் நிறைய இருக்கின்றன. அவர்களின் நூல்களை சந்தைப்படுத்துவதற்கும் இந்த புக்லேண்ட்ஸ் உதவிகரமாக இருக்கிறது.
முக்கியமாக, சென்னையில் உள்ள நவீன, குளிர்சாதன வசதி கொண்ட நூல் விற்பனைக்கூடத்தில் ஆங்கில நூல்கள் மட்டுமே அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. தமிழ் நூல்களை அவர்கள் விற்க விரும்பவதில்லை. தமிழ் நூல்களை விற்கும் ஓரிரு நிறுவனங்களும் அவற்றை தற்போது குறைத்துக் கொண்டு வருகின்றன. இந்த நிலையை மாற்றி தமிழ் நூல்களை விற்பனை செய்யும் நோக்கத்தோடு அமைக்கப்பட்டதுதான், புக்லேண்ட்ஸ்.”
அசோகமித்திரன் கட்டுரைகள் – 2 : முதல் நூலில் அசோகமித்திரனின் அனுபவங்களும் அபிப்பிராயங்களும் இடம்பெற்றுள்ளன. இந்நூலில் கலைகளும் கலைஞர்களும்.
தமிழிலும் பிற மொழிகளிலும் பல்வேறு காலகட்டங்களில் வெளியான முக்கியமான நூல்கள் குறித்தும், ஏராளமான இந்திய, அயல்மொழி எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் வாழ்க்கை குறித்தும் அசோகமித்திரன் எழுதிய கட்டுரைகள் இந்நூலின் முக்கியப் பகுதி. நாடகம், சினிமா போன்ற நுண்கலைகள் குறித்த அவரது அக்கறைகள் தனிப்பகுதியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டிருக்கின்றன.










