நினைத்ததை நடத்தும் ஆளுங்கட்சி


ஜனநாயகத்துக்கு அழகல்ல

நீரஜா சௌத்ரி : தமிழில்: ஆர்.நடராஜன்: பொது மக்கள் கருத்து என்பது பெரும்பாலும் சிறிய விஷயங்களைச் சுற்றித்தான் சுழல்கிறது. வெளியுறவுச் செயலரை எப்போது ராஜீவ் காந்தி பகிரங்கமாக பணி நீக்கம் செய்தாரோ அப்போதிருந்துதான் விஷயங்கள் தவறாகப் போகத் தொடங்கின. அது ஒரு சின்ன சம்பவம்தான் என்றாலும் அது அதிகார மமதை என்ற அற்ப குணத்தை வெளிப்படுத்தியதால் மக்கள் அதை எதிர்த்தனர். அதற்குப் பிறகுதான் போபர்ஸ் வந்தது.

சிபு சோரனை முதல்வர் பதவியில் அமர்த்திய ஜார்க்கண்ட் ஆளுநரின் நடவடிக்கை சின்ன விஷயமாகத் தோன்றினாலும், அது வெளிப்படுத்திய மனப்போக்கு மக்களின் ஆட்சேபத்துக்கு வழி கோலியது. ஜார்க்கண்டில் ஆட்சி அமைப்பதற்கு அதிக இடங்களைக் கொண்ட தனிப் பெரும் கட்சியை (பாஜக) அல்லது தனிப் பெரும் கூட்டணியை (தேஜகூ) அழைக்க வேண்டும் என்ற கோட்பாட்டை சயீத் சிப்தே ராஸி பின்பற்றவில்லை. 81 உறுப்பினர் கொண்ட பேரவையில் தங்களுக்கு 41 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறி 5 சுயேச்சை எம்எல்ஏக்களை பாஜக அவர் முன் அணிவகுத்துக் காட்டியதையும் அவர் புறக்கணித்துவிட்டார். யாரை விரும்புகிறாரோ அவரை பதவியில் அமர்த்த ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் உண்டு என்றாலும் அது கடிவாளமற்ற அதிகாரம் அல்ல.

கோவாவைப் பின்தொடர்ந்து உடனே ஜார்க்கண்ட் நிகழ்ச்சிகள் நடந்தது இரண்டாவது காரணம். அங்கு பாரிக்கர் அரசைக் கவிழ்ப்பதற்கான நடவடிக்கையை காங்கிரஸ் மேற்கொண்டது. ஆனால் அதற்கு போதிய எம்எல்ஏக்கள் எண்ணிக்கை இல்லாததால் அந்த நடவடிக்கை அரைகுறையாக முடிந்தது. கோவா சட்டப் பேரவையில் பாஜகவைச் சேர்ந்த பேரவைத் தலைவர் மோசமாக நடந்துகொண்டார். இதனால் ஆளுநர் பேரவையைக் கலைத்தார். ஆனால் திடீரென காங்கிரஸின் பிரதாப் சிங் ரானேவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க மனோகர் பாரிக்கருக்கு 2 நாள் மட்டுமே அவகாசம் தந்த அவர் ரானேவுக்கு ஒரு மாதம் அவகாசம் அளித்தார்.

1970-80 களின் காங்கிரஸை இது நினைவுபடுத்தியது. பெரிய கட்சி என்ற தோரணையில் செயல்படும் காங்கிரஸ் மீண்டும் உருவாகிறதோ என்ற அச்சத்தை இது காங்கிரஸின் பிராந்திய கூட்டணிக் கட்சிகள் மத்தியில் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசு விரும்புவதை மற்ற மாநிலங்களின் ஆளுநர்களைச் செய்ய வைக்கும்போது, பிகாரிலும் ஏன் அதைச் செய்ய வைக்கக் கூடாது என்று வாதாடும் ஆவேச லாலு பிரசாத்தை காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அங்கு ஆட்சியமைக்க ராப்ரி தேவி உரிமை கோரியிருக்கிறார்.

படுதோல்வியில் முடிந்த இந்தச் சம்பவங்கள் அனைத்திலும் மிகவும் கவலைக்குரிய அம்சம், இவை வெளிப்படுத்தும் மனநிலைதான்.

One response to “நினைத்ததை நடத்தும் ஆளுங்கட்சி

Anonymous -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.