EAR — JAR — WAR


இரண்டு நாட்களாக தொழில் நுட்ப உலகில் முங்கிக் குளிக்கும் வாய்ப்பு. முந்தாநாள் பாஸ்டனில் நடந்த லீனக்ஸ்வோர்ல்டை எட்டிப் பார்க்க முடிந்தது. தொடர்ந்து நேற்றைக்கும் ஆரக்கிளின் தயவில் (ஜாவா) சேவைகளின் மூலம் கட்டமைப்பு (SOA) மற்றும் ஜாக்ஸன் (JAX) துரைகளின் வழித்தோன்றல்களை அறிய முடிந்தது.சில குறிப்புகள்:

* வெறுமனே சொற்பொழிவாற்றாமல், கணினியில் நிரலிகள் நிறைய செய்ய வைக்கிறார்கள். பலவித ஜாவா, ஆரக்கிள் நிரலிகளை பத்து மாதத்துக்கு இலவசமாக, ஆராய்ந்து அனுபவித்து மென்பொருள் எழுதலாம். பின் பிடித்திருந்தால் கம்பெனியை வாங்க வைக்கலாம். இல்லையென்றால், புத்தம்புதிதாக வந்திருக்கும் அடுத்த பதிப்பை வலையில் இருந்து இறக்கிக் கொண்டு மீண்டும் நிரலி குளிக்கலாம்.

* மென்பொருள் எழுத்தர்களுக்கு இலவசம் என்றால் கொள்ளைப் பிரியம். யாராவது டி-ஷர்ட், தொப்பி, பேனா, மென்வட்டு என்று எது கொடுத்தாலும் வாஞ்சையாக எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். காரைத் துடைக்க புதிய துணி தேவையாம்.

* மைரோசாஃப்ட் முதல் ஆரக்கிள் தொட்டு பரி நிரலி வரை எல்லாம் ஒரே நுட்பத்தைத்தான் கொடுப்பது போல் இருக்கிறது. மென்பொருள் வாசிகளும் படைப்பாளிகள் போலத்தான். சிலர் அக்மார்க் கறபனையோட்டத்தைக் கொண்டு புதுசு புதுசாக படைக்கிறார்கள். வேறு சிலர் மற்றவர்களின் நடையை ஈயடிச்சான் காப்பி போல் கூகிள் இன்னபிற வலையில் தேடி Ctrl+C, Ctrl+V போட்டு விடுகிறார்கள். பல பத்திரிகைகள் வெளிவருவது போல் பல்வேறு நிறுவனங்களின் தொழில்நுட்பங்கள். உலகத்தைப் புரட்டிப் போட தனித்துவம் முக்கியம்.

* ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் சதவீதம் — ஒன்றோ இரண்டோ
பங்குபெற்ற இந்தியர்கள்/தெற்காசியர்கள் — 33%
பெண்கள் வீதம் — 25%
(எல்லாமே தோராயம்தான்; ஆனால் ஆப்பிரிக்க அமெரிக்கர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.)

* கேட்கும் கும்பலில் பலர் என்னைப் போல் வாய்மூடி இண்ட்ரோவர்ட்கள்தான். கணினித் தகராறின் போது, மதிய உணவின் போது, மாலை பட்-லைட்டின் போது என்று எண்ணி எண்ணிதான் பேசுகிறார்கள். காட்டமாக தொழில் நுட்பத்தையும் புதிய போக்குகளையும் விவாதிப்பவர்களில் பெரும்பாலோர் லெக்சர் கொடுத்தவர்கள்.

* முதுகுக்குப் பின்னே யாராவது எட்டிப் பார்த்தால், ஸ்விட்ச் போட்டது போல் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் வேலை செய்யத் தெரியாதவர்களில் பலர் — மென்பொருள் எழுத வந்து விடுகிறார்கள். ஜாவா எழுதினாலும் ஸ்டோர்ட் ப்ரோசீஜர் எழுதினாலும் யாரும் கண்காணிக்காதபோது வடிவமைப்பார்கள். அசட்டுத் தவறுகளை யாராவது பார்த்து விட்டால் கேலி செய்வார்களோ என்னும் எண்ணமாக இருக்கலாம். சுதந்திரமாக சிந்திக்கத் தனிமையை நாடுபவர்களாக இருக்கலாம். ஆனால், போதகர் பின்னே வந்தால், ஸ்தம்பித்துப் போயும், அக்கம்பக்கம் நகர்ந்தவுடன் சுறுசுறுப்பும் ஆனார்கள்.

இவ்வளவும் பார்த்தாயே… ஏதாவது கற்றுக் கொண்டாயா என்கிறீர்களா!? அதற்கு சில புத்தகங்களை குலுக்கலில் வென்று அதிர்ஷ்டசாலியானேன் ;-))

(அ.கு.:
WAR — Web Application Archive
JAR — Java Archive (file format)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.