‘இச்’ இளகல்கள்


ஜூனியர் விகடன்: “திருமாவளவனை முதல்வர் ஆக்குவேன் என்றும் வீர வசனம் பேசுகிறார் ராமதாஸ். இதற்கு முன்பு பலருக்கும் இதேபோல் வீர வசனம் பேசி ‘அல்வா’ கொடுத்தவர்தான் இவர். இப்போது அவரது ‘அல்வா’ லிஸ்ட்டில் விழுந்திருக்கிறார் திருமாவளவன்!” — ‘மக்கள் தமிழ் தேசம்’ தலைவர் ராஜ கண்ணப்பன்.

அரசியல் அல்வா இருக்கட்டும். நேற்றைய குல்கந்து அல்வா தினம் இனிதே முடிந்திருக்கும் நேரம் இது. ரோஜாப் பூ வாங்கித் தராவிட்டால் காதலே இல்லை. கூடவே இரண்டு மாச சம்பளத்தைக் கொண்டு வைரக் கல் பரிசு வேண்டும். ஆதர்ச அமெரிக்க காதலன்/புருஷன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.

ஹவாயில் வசித்தால் மீன் பிடிக்கும் வேட்கை வேண்டும் என்பது போல் அமெரிக்க வாழ் இந்தியக்குடிகளையும் இந்தப் பழக்கவழக்கங்கள் விருப்பமுடனேயே எட்டியுள்ளது. கண்மூடித்தனமான வரலஷ்மி விரதத்திற்கும், கர்வாசவுத்திற்கும், கணுப்பொடி வைத்தலுக்கும் பர்த்தியாக ‘காதலர் தினம்‘ தோன்றியதும் நன்மைக்கே.

நாள் முழுக்கப் பட்டினி இருப்பது, அதன்பின் நிலாவுக்கு காத்திருத்தலும் இல்லை. கார்போஹைட்ரேட் நிரம்பி வழியும் அடைகள் இல்லை. சீவிக்காத காக்கைகளுக்காக வெள்ளைப் பனியின் மேல் பச்சை இலை போட்டு கலர் கலராக சாதம் உருட்டுவதும் தேவையில்லையே… உருப்படியான மென்வட்டுகள், வாழ்நாள் முழுக்க கூடவே வரக்கூடிய அணிகலன்கள், வசந்த கால புத்தாடைகள், பல் கூசவைக்கும் சாக்லெட்டுகள், ஜேம்ஸ் வசந்தன் விரும்பும் உள்ளாடைகள் என்று குறிகிய கால சிற்றின்பத்துக்கும் நீண்ட நாள் பேரின்பத்துக்கும் வழிவகுக்கும் ‘அன்பர் தின’ நடைமுறைகள் வரவேற்கத்தக்கதுதான்.

தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப் பிசாசுகள் — விக்ரமாதித்யன்:

ஒருத்தி / இன்னொருத்தி

ஒருத்திபோல
தெரிந்தாள் இன்னொருத்தி
ஒருத்திபோல
ஆவாளோ இன்னொருத்தி
இன்னொருத்தி புதுமையாகலாம்
ஒருத்திதான் உரிமையாவாள்.
இன்னொருத்தி கைப்பையை
எடுத்துப்பார்த்ததுண்டா நீ
ஒருத்தி இடத்தை
இட்டு நிரப்பமுடியுமா இன்னொருத்தி

ஒருத்தி அருமை
இன்னொருத்தியிடம்

(வெளியீடு: காவ்யா. விலை: ரூ.100)

எங்காவது பராக்கு பார்த்துவிட்டு, இது போன்ற கவிதைகளைக் காட்டி அசத்திய காலம் (அண்ணா)மலையேறி செல்வி முடிந்து திருமதியானவுடன் ப்ராக்டிலாகி விட்டது. தற்போதைக்கு, ரயிலைத் தவறவிட்டால் கீழ்க்கண்ட இளகலை எடுத்துவிட்டு சமாளிக்கலாம்.

ஆனந்த விகடன்
உனக்கும் எனக்கும்
பிடித்த பாடல்
தேநீர்க் கடையில்
பாடிக் கொண்டிருக்கிறது

கடைசி பேருந்தையும்
விட்டு விட்டு
கேட்டுக்
கொண்டிருக்கிறது
காதல்!
— நா.முத்துக்குமார்

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.