Daily Archives: நவம்பர் 15, 2004

பொய்விளம்பி

ஜெயேந்திரரின் கைது அனைவரும் அறிந்ததே. அதையட்டி நமக்கு மட்டுமே கிடைத்த சில உண்மையில்லாதத் தகவல்கள்.

— ஜயேந்திரருக்கும் விஜயேந்திரருக்கும் கடும்போட்டி நிலவுவதாக கூகிள் சொல்லுகிறது. ஜயேந்திர (சரஸ்வதி) என்று தேடினால் 22,100 பக்கங்கள் கிடைக்கும். விஜயேந்திர (சரஸ்வதி) என்றால் 19,000 பக்கங்களைப் பெறுவதால், வெகு விரைவிலேயே ‘பெரியவரை’ முந்தி விடுவார் என்று கூகிளறிந்த வட்டாரங்கள் எழுதுகிறது.

— ஜயேந்திரர் சமீபத்தில் ‘சத்ரபதி’ படத்தை ரசித்திருக்கிறார். ‘நம்மை மாதிரியே முதல் பாதியில் யார் என்பதை காட்டிக் கொள்ளாமல், பிற்பகுதியில் உலகுக்கு வெளிக்கொணருவது நன்றாக இருக்கிற’தாக சக சிறைக் கைதிகளிடம் சொன்னதாகத் தெரிகிறது.

— இந்து முண்ணனி தலைவர் இராம. கோபலன் சிறையில் ஜயேந்திரரை திடீர் விஸிட் அடித்தார். சந்தித்தபொழுது ஆதி சங்கராச்சாரியார் எழுதிய கீதையின் உரையை படிக்கக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.

— ‘அட்டகாசம்’ சரணின் அடுத்த படத்தில் இரட்டை வேடம் கட்ட பொருத்தமான நடிகரைத் தேடி வருவது நாம் அறிந்ததே. கதையைக் கேட்ட ‘ஜயேந்திரர்’ இந்தப் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், ‘இந்து ஞான மரபில் ஏழு தரிசனங்கள்’ கிடைக்கும் விதமாக திரைக்கதை அமைக்கும்படியாக சொல்லியிருப்பதால் உதவி இயக்குநர்கள் மண்டை உடைத்துக் கொள்கிறார்கள்.

— தனது அடுத்த அம்பலத்தை விரைவாக வெளியிடுவதாக திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிவிப்பார். “சுய மரியாதைத் தோழர்கள் அனைத்து ஹிந்து மத அமைப்புக்குள்ளும் ஊடுருவி ‘விடுதலை’ அளிக்கும் கடைசி நிலையில் இருக்கிறார்கள். நமது முதன்மைத் தலைவர் மாட்டிக் கொண்டிருப்பதை இந்த நேரத்தில் அம்பலப் படுத்தினால் — ‘குருதிப்புனலில்’ கமல் செய்யாத தவறை நாம் செய்தவர்களாகும் அபாயம் இருக்கிறது” என ரகசிய சுற்றறிக்கையில்

எழுதியுள்ளார்.

— முதல்வர் ஜெயலலிதா ‘நக்கீரனை’ எட்டாம் வகுப்புப் பாடத் திட்டத்தின் தமிழ் துணைப்பாடமாக ஆக்கப் போகிறார். உண்மை, திறனாய்வு, எளிய தமிழ், அரசல் புரசலான செக்ஸ் செய்திகள் போன்ற டீனேஜ் மக்களுக்கு ஏற்ற விஷயங்களை செம்மொழியில் சொல்வதால் இந்த அந்தஸ்து கிடைக்கிறது. இதன் மூலம், எதிர் பிரச்சாரத்தில் இயங்க நினைக்கும் ‘நக்கீரனும்’ தன் பக்கம் சேர்ந்து விடும் என்று நம்புகிறார்.

——————–

– பாஸ்டன் பாலாஜி

பிகு: முழுக்க முழுக்க கற்பனை செய்திகளே 🙂

Eraa. Murugan 

Eraa. Murugan Posted by Hello

Kanniyakumari Thiruvalluvar 

Kanniyakumari Thiruvalluvar Posted by Hello

எனது வெண்பாப் புராணம் – என். சொக்கன்

© தினம் ஒரு கவிதை

Eraa Murugan - Thanks: Kizhakkuஎன்னுடைய முதல் சிறுகதைத் தொகுதியான ‘ஒரு பச்சை பார்க்கர் பேனா’வின் முன்னுரையில், இரா. முருகன் இப்படி எழுதினார் :

‘என். சொக்கன், புதுக்கவிதை எழுத ஆரம்பித்து – எல்லோரும் இப்படித்தான் தொடங்குகிறோம் – சிறுகதைக்கு வந்தவர்’

இந்த வாக்கியம் ஓரளவு உண்மைதான். என்றாலும், நான் எழுத ஆரம்பித்தது புதுக்கவிதை அல்ல. மரபுக் கவிதைதான்.

பத்தாம் வகுப்பில் எங்களுக்கு இலக்கணப் பாடம் நடத்திய ஆசிரியர் பெயர் திரு. பெ. செ. சுந்தரம். அவர்தான் வெண்பா இலக்கணத்தைப் புரியும்படி சொல்லித்தந்து, கூடவே எங்களுக்கு ஒரு பயிற்சியும் கொடுத்தார்.

www.kalanjiyam.comஅதாகப்பட்டது, ஏதாவது ஒரு திருக்குறள் புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொள்வது. புத்தக கிரிக்கெட் விளையாடுவதுபோல், அதில் சடாரென்று ஒரு பக்கத்தைப் பிரித்து, அங்கே தட்டுப்படுகிற குறளை, ஒரு காகிதத்தில் எழுதிக்கொள்வது.

பிறகு, அந்தக் குறளை அக்குவேறு ணிவேறாய்ப் பிரித்து, நேர் – நேர் தேமா, நிரை – நேர் புளிமா என்றெல்லாம் பட்டியலிடவேண்டும்.

இப்போதுதான், முக்கியமான கடைசிக் கட்டம். நாங்கள் தேர்ந்தெடுத்த அந்தத் திருக்குறளில், அவர் சொல்லிக்கொடுத்த வெண்பா இலக்கணம் சரியாக வருகிறதா என்று சோதிக்கவேண்டும். அதாவது, வெண்பா இலக்கணப்படி எங்கேனும் தளை தட்டுகிறதா என்று பார்க்கவேண்டும்.

ஒருவேளை தளை தட்டினால், நேராக அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு, ஆசிரியரின் அறைக்கு வரவேண்டும். தளை தட்டாமல், எல்லாம் சரியாக இருக்குமானால், மீண்டும் திருக்குறள் புத்தகத்தை எடுத்துக்கொண்டு, வேறொரு பக்கத்தைப் பிரித்து, முதலில் செய்த எல்லாவற்றையும் திரும்பச் செய்யவேண்டும்.

இப்படியாக, ஏழெட்டுக் குறள்களைப் பிரித்து மேய்ந்தபிறகு, அவர் ஏன் இந்தப் பயிற்சியை எங்களுக்குத் தந்திருக்கிறார் என்று புரிந்துவிட்டது. பல மாதங்கள் செலவழித்து, 1330 குறள்களையும் அலசி ஆராய்ந்தால்கூட, எங்கேயும் தளை தட்டப்போவதில்லை. ஆனால், இப்படிப் பிரித்து ஆராய்கிற கலையால், வெண்பா இலக்கணம் எங்களுக்குப் பளிச்சென்று புரியும்.

சிரியர் பெ. செ. சுந்தரத்துக்கு நன்றி. அநேகமாய், அவருடைய வகுப்பில் படித்த எல்லோரும், வெண்பாப் பித்து பிடித்து அலைந்தோம் என்பதுதான் உண்மை. குறிப்பாக, நானும், என்னுடைய சிநேகிதன் கார்த்திகேயனும் இணைந்து, சொந்தமாகக் குறள் வெண்பாக்களெல்லாம் எழுதத் தொடங்கிவிட்டோம்.

thirukural.tamilpower.comஅப்போது எழுதிய வெண்பாக்களெல்லாம் இப்போது எங்கே தொலைந்துவிட்டது என்று தெரியவில்லை. னால், வெண்பா இலக்கணம்மட்டும், ஒரு வசீகரமான நினைவாக எனக்குள் ஆழமாய்ப் பதிந்துவிட்டது.

பின்னர், பல ஆண்டுகள்கழித்து, இணையத்தில் உலவத் தொடங்கியபின், மன்ற மையம் என்ற தளத்தில், ‘வெண்பா வடிக்கலாம் வா’, என்ற சுவாரஸ்யமான விவாதத்தில் கலந்துகொண்டேன்.

வகைவகையாய், சுவைசுவையாய் அங்குள்ளவர்கள் எழுதித் தள்ளியிருந்த அழகு வெண்பாக்களைப் பார்த்தபிறகுதான், மீண்டும் வெண்பா எழுதவேண்டும் என்ற ஆசை எனக்கு வந்தது.

ஆனால், மன்ற மையத்தில் தொடர்ந்து எழுதிவந்தவர்கள் எல்லோரும், அபாரமான தமிழாற்றல் கொண்டவர்களாய் இருந்தார்கள். அவர்களுக்கிடையே, என்னுடைய பொம்மை வெண்பாக்கள் எடுபடுமா என்ற பயத்தில், ஒரு வாசகனாகவே தொடர்ந்துகொண்டிருந்தேன்.

அப்போது, என்னுடைய சிறுகதைகள் ஐந்தாறு, ஒரே வாரத்தில், வெவ்வேறு பத்திரிகைகளால் நிராகரிக்கப்பட்டுத் திரும்பிவந்தன. மிகவும் அவமானகரமான அந்த சோகத்தை, யாரிடமாவது பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்பினேன். ஆகவே, அதை ஒரு வெண்பா வடிவில் எழுதி, மன்ற மையத்தில் இட்டேன்.

சற்றே அவசரத்துடனும், உணர்ச்சிமயமாகவும் எழுதிய அந்த அரைகுறை வெண்பா, இப்போதும் பளிச்சென்று நினைவிருக்கிறது :



திரும்பி வருகிற ஒவ்வொரு அஞ்சலும்

தீயாய்ச் சுடுகுது என்னை – எழுத்தை

விரும்பியே தொட்டதாய் ஞாபகம். ஏன்இந்த

வேதனை நாள்கள் எனக்கு ?

இந்தப் பாவில், வெண்பா இலக்கணம் சரியாகவே பயின்றுவருகிறது. என்றாலும், இதில் சில அசட்டுத்தனமான பிழைகள் செய்திருந்தேன். (உதாரணம் : ‘அஞ்சல்’ என்னும் வார்த்தை, உயிரெழுத்தில் தொடங்குவதால், ‘ஒவ்வொரு அஞ்சல்’ என்பது சரியில்லை. ‘ஒவ்வோர் அஞ்சல்’ என்பதுதான் சரி – னால், ‘ஒவ்வோர் அஞ்சல்’ என்று எழுதும்போது, தளை தட்டுகிறது !)

தவிர, இந்தப் பாடலின் எதுகையும், மோனையும் சரியாக அமையவில்லை. இதுபோன்ற தவறுகளையெல்லாம் மன்ற மையத்திலிருந்த அறிஞர்கள் பொறுமையாய் எடுத்துச்சொல்லி திருத்தினார்கள்.

மீண்டும் பத்தாங்கிளாஸ் இலக்கண வகுப்பில் அமர்ந்திருப்பதுபோல்தான் உணர்ந்தேன் நான். மறுபடி உற்சாகமாய் வெண்பாவைக் கற்றுக்கொண்டு, என் தவறுகளைத் திருத்திக்கொண்டேன்.

அதன்பிறகு, அவ்வப்போது விளையாட்டுத்தனமாய் வெண்பாக்கள் எழுதிப் பார்ப்பதுண்டு. ‘மரபுப் பிரியர்’ நண்பர் சின்னக் கண்ணன் எழுதிய பல சிறுகதைகளுக்கு, வெண்பாவிலேயே விமர்சனம் எழுதி விளையாடியிருக்கிறோம்.

எல்லாம் சரி, இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் ?

விஷயம் இருக்கிறது. இங்கே இடம் போதவில்லை. அடுத்த வாரம் பேசலாம்.

நன்றி: Yahoo! Groups : dokavithai

அராஃபத்தும் புஷ்ஷும்

பத்ரியின் பதிவுக்கு என்னுடைய நன்றிகள்.

என்னுடைய தமிழோவியம் கட்டுரை, யாஸர் அராராஃபத் என்னும் அரசியல்வாதியைக் குறித்தவை. பாலஸ்தீன மக்களையும் இஸ்ரேலியத் தலைமையையும் குறித்து நிறைய எழுதலாம். அராராஃபத்தை காந்தியின் நெஞ்சுரத்தோடு ஒப்பிட முடியாது. காந்திக்கு தேசத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு ஒத்துக் கொள்ளும் மனப்பான்மை இருந்தது. அகதிகளாக சிலரை பாகிஸ்தானுக்கும், சிலரை இந்தியாவுக்கும் அழைத்துக் கொள்ளும் மனப்பக்குவம் இருந்தது. அந்த கஷ்டமான முடிவை மக்களிடன் எடுத்துச் சொல்லி வழி நடத்தினார்.

யாரையும் இன்னொருவரோடு ஒப்பிடுவது எனக்கு உவப்பில்லாத செயல். அடுத்த வீட்டுக் குழந்தையையும் என்னுடைய குழந்தையையும் சமனிட்டு, ‘என் குழந்தைக்கு கராத்தே தெரியும்’ என்றும், உடனே நான் ‘என் குழந்தைக்கு குங்-பூ’ என்றும் சொல்லி சமாதானம் அடைவது போல் எனக்குப் படுகிறது. இருந்தாலும் இன்றைய காலகட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி புஷ்தான் கொள்கைகளிலும், உடும்புப்பிடிநிலைகளிலும், மக்கள் ஆதரவுகளிலும் அராராஃபத்திற்கு மிக அருகே நிற்கிறார். புஷ்ஷை எதிர்ப்பவர்கள் அதே நிலைப்பாட்டை யாஸர் அராராஃபத் மேலும் பாய்ச்சலாம். போர் தொடுப்பதன் மூலமே சுதந்திரத்தை நிலைநிறுத்தமுடியும் என்பதை இருவரும் நம்புகிறார்கள். பணத்தை திசைதிருப்புவது, கடவுள் நம்பிக்கை மூலம் அரசியல், உட்கட்சி கிளர்ச்சிகளை நசுக்குதல் என்று தொடரலாம்.

பி.எல்.ஓ.வின் லெபனான் தாக்குதல்களை குறித்து எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லை. ஜனவரி 1976-இல் டமோர் (Damour) பகுதிகளில் நடந்த சூறையாடல்களும், அவற்றின் தொடர்ச்சியாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அகதிகளானதும் இணையத்தில் அலசப்படுகிறது. சிரியாவுடன் ஒத்துழைத்து பிற நாடுகளில் கலகம் விளைவிக்கவும் அராராஃபத் அஞ்சவில்லை.

பெஸ்லானில் நடந்த குழந்தைகள் பலி எனக்கு முதலில் அச்சத்தையும், தொடர்ந்து வெறுப்பையும் கொடுக்கிறது. ஆனால் அதற்கு முன்னுதாரணமாக 1974-இன் மே மாதத்தில் இருபத்தியோரு குழந்தைகள் இறந்திருக்கின்றனர். வட இஸ்ரேலில் இருக்கும் நகரம் மாலோ-விற்குள் (Ma’alot) மூன்று பி.எல்.ஓ. தீவிரவாதிகள் நுழைந்திருக்கிறார்கள். வழியில் இருந்த ஒரு குடும்பத்தினைக் கொன்றுவிட்டு, பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடத்தை பிணைக்கைதியாகி இருக்கிறார்கள். வழக்கமான கோரிக்கைதான். நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களை விடுவிக்க வேண்டுமானால், சிறையில் இருக்கும் அவர்களின் கூட்டாளிகள் விடுவிக்கப்பட வேண்டும். ரஷியாவைப் போல் இஸ்ரேலும் விட்டுக் கொடுக்கவில்லை. இஸ்ரேலியப் அதிரடிப்படை நுழைந்தவுடன் குழந்தைகளின் மேல் கைகுண்டுகளும், துப்பாக்கிகளும் செலுத்தப்பட 25 பேர் மரணமடைந்துள்ளனர். பி.எல்.ஓ.வின் தலைவர் அரா·பத்தை நினைவு கூர்கிறோம். இறக்கடிக்கப்பட்ட குழந்தைகள் பெயர்களும் இணையத்தில் கிடைக்கிறது.

——

இஸ்ரேலின் பங்குக்கு அவர்களும் பல்லாயிரக்கணக்கில் அவர்களின் புகழ்பெற்ற சகுனி வேலைகளை செய்திருப்பார்கள். இஸ்ரேலின் பிரதம மந்திரியாக இரண்டு தீவிரவாதிகள் இருந்திருக்கிறார்கள்.

* மெனேச்சம் பேகின் (Menachem Begin) கிங் டேவிட் ஹோட்டலில் நடந்த குண்டு வெடிப்பில் 92 பேர்களைக் கொன்றிருக்கிறார்.

* டேர் யாஸினில் (Deir Yassin) யிட்ஸாக் ஷமீரின் (Yitzhak Shamir) ஸ்டேர்ன் அடியாட்கள் (Stern Gang) 260 பேர்களை அழித்திருக்கிறார்கள்.

ஏரியல் ஷரோன் (Ariel Sharon) போர்க்கால கிரிமினல். ஷரோன் இறக்கும்போது அவருக்கு நினைவாஞ்சலி எழுதுபவர்கள் சப்ரா (Sabra), ஷட்டிலா (Shatila) அகதிகள் முகாமில் கொன்று குவிக்கப்பட்ட இரண்டாயிரத்து ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்களைக் குறித்தும் எழுதுவார்கள்.

திட்டமிட்ட முறையில் தாக்குபவர்களுக்கு வசதியாக இரவு விளக்குகளை அமைத்துக் கொடுத்தது, பன்னாட்டுத் தொண்டு நிறுவன ஆர்வலர்களை அப்புறப்படுத்தியது போன்றவற்றையும் விவரிப்பார்கள். தானே பார்த்து பார்த்து நிகழ்த்திய க்யுப்யா (Qibya) அட்டூழியங்களையும் கொல்லப்பட்ட அறுபது மக்களையும் குறிப்பிடுவார்கள்.

——

இருபக்கத்தில் இருந்தும் இன்னும் நிறைய அடுக்கலாம். அராஃபத்தை மட்டுமே ஆதரித்த இந்திய ஊடகங்கள்தான் எனக்கு வருத்தமளித்தது. ஒருவரின் மறைவுக்குப் பிறகு அவதூறு சொல்லவேண்டாம். ஆனால், அவரின் தவறுகளையும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய தருணங்களில் நடக்கும் பிழற்வுகளையும் பத்திரிகைகள் சுட்டிகாட்டலாம்.

மாலதி மைத்ரியின் வரிகள் தோன்றுகிறது.

‘ஏதேனும் ஒரு திசையில்

குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம்

என் உடலின் ஏதோவொரு பாகம்

ஊனமடைகிறது’


(நீரின்றி அமையாது உலகு – பக்கம் 30)