ராம் மோகன் ராவ் சுதந்திரப் பறவையா? — ப.திருமாவேலன்


Vikatan.com::

”ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ராஜ்பவனில் தியாகிகளுக்கு கவர்னர் விருந்து தருவது வழக்கம். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இப்படியரு விருந்து நடத்தாமல் கவர்னர் தவிர்த்துவிட்டு… ஏதென்ஸ் போய்விட்டார்” என்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், தொலைபேசியில் பேசும்போது முதல்வர் ஜெயலலிதாவிடம் சொன்னதாக லட்சுமி பிரானேஷ் சொல்கிறார்.

”நான் வெளிநாடு செல்வதற்கு ஜனாதிபதியும், உள்துறையும்தான் அனுமதி கொடுத்திருந்தது. நான் இங்கு இருந்திருந்தாலும் அன்று விருந்து கொடுத்திருக்க மாட்டேன். தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் தீவிபத்தில் நூறு குழந்தைகள் இறந்த சோகம் கப்பியிருந்தது” என்று அழவைத்துவிட்டார் ராமமோகன் ராவ்.

‘என்னை வெளிநாடு செல்ல அனுமதி கொடுத்துவிட்டு… ஏன் போனாய் என்று இப்போது கேட்பதில் நியாயமில்லையே’ என்று கேட்கும் கேள்விக்கு மாண்புமிகு சிவராஜ் பாட்டீல் தான் பதில் சொல்லவேண்டும்.

வீட்டில் உண்ணாவிரதம் இருக்கும் ஆசாமி, பசித்தால் இட்டிலி சாப்பிட்டுவிட வேண்டுமே என்ற பயத்தில் ஹோட்டலுக்கு ஓடிப்போனதுபோல…. பாவம் கும்பகோணம் சோகத்தை தாங்கமுடியாத ராம மோகன்ராவ்…. அந்த சோகத்தை மறக்க ஒலிம்பிக்ஸ் விளையாட்டு பார்க்கப்போனது தமிழ்நாட்டில் எந்த அரசியல்வாதிக்கும் தோன்றியிருக்காது.

ஏதென்ஸில் விளையாடப் போன சிலருக்கு பதக்கம் கிடைத்தது. உற்சாக மருந்து அருந்திய சிலரின் பதக்கம் பறிக்கவும்பட்டது. ராம்மோகன் ராவின் பதவி பறிப்புக்கு ஏதென்ஸ் போட்டியும் காரணமாகிவிட்டது. ஏதென்ஸின் முக்கியத்துவம் பற்றிக்கேட்டால் தமிழ் மக்கள் சொல்ல ஒரு காரணம் கிடைத்துவிட்டது.”

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.