‘Gattacca’ படம் எதிர்கால மக்களை குறித்தது. அறிவியல் புனைகதை வகையை சேர்ந்தது. வருங்காலத்தில் அனைத்து குழந்தைகளும் செயற்கை முறையிலேயே கருத்தரிக்கப்படுகின்றது. பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்பது முதல், அறிவாளியா, விஞ்ஞானியா, விளையாட்டு வீரனா, அறிவியல் மேதையா, பங்குச்சந்தை வித்தகரா, எவ்வளவு வயது வாழலாம், என்ன கலர் கண், எவ்வளவு உயரம், முக்கிய உறுப்புகளின் அங்க அளவுகள் வரை அனைத்தும் தீர்மானிக்கப்பட்ட பின்பே செய்ற்கை முறையில் குழந்தை பிறக்கிறது. இவ்வாறு பிறப்பவர்களின் தகுதியை முன்கூட்டியே நிர்ணயித்து, என்ன வேலை, என்ன படிப்பு, எப்பொழுது ப்ரோமஷன் என்பது வரை கருவிலேயே அட்டவணை போட்டு பெற்றோர், பள்ளி, கல்லூரி, கம்பெனி, கோல்·ப் க்ளப் என அனைவருக்கும் அப்பாயிண்ட்மண்ட் கொடுத்து விடுகிறார்கள்.
இந்த மாதிரி செயற்கை குழந்தை வேண்டாம், இயற்கையான கருத்தரிப்பே வேண்டும் என்று பிறக்கும் குழந்தைகளுக்கு சமுதாயத்தில் மவுசு கிடையாது. ஈனப்பட்டவ்ர்களை போல் பார்க்கப்படும் அவர்கள், தகுதியிருந்தாலும் தாழ்த்தியே வைக்கப் படுகிறார்கள். கதையின் நாயகன் இயற்கை முறையில் பிறந்தவன். வில்லனாக வருபவன் அவனுடைய தம்பி. செயற்கை முறையில் பிறந்தவன். முன்கதை சுருக்கம் போதும்.
கதையில் ஒரு காட்சி: அண்ணன், தம்பி இருவரும் சிறு வயது முதலே, ஆற்றில் நீச்சல் போட்டி நடத்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் இயற்கை முறையில் பிறந்து சாதாரண மானுடர்களுக்கு வரும் நோய்களால் தாக்கப்பட்டு, கண் பார்வை குறைச்சலினால் கண்ணாடி போட்டுக் கொண்டு, மலேரியா முதல் ஜாண்டிஸ் வரை எல்லா வைரஸ்களும் குடியிருக்கும் அண்ணனே வெல்கிறான். அற்புதமான உடற்கட்டு, மனநலன், திரண்ட தோள்கள், நல்ல பாக்டீரியாக்கள் மட்டுமே உடலில் வைத்த செயற்கை தம்பி எல்லா நீச்சலோட்ட போட்டிகளிலும், அனைத்து வயதிலும் தோற்கிறான். எப்படி??? படத்தின் இறுதியில் தம்பி, அண்ணனிடம் கேட்கும் இந்த கேள்விக்கு விடை சொல்கிறான்:
“நான் திரும்பிச் சென்று கரையைத் தொடுவதை குறித்து கவலைப் படுவதில்லை. என்னுடைய இலக்கு எல்லாம் அதிக தூரம், மிக வேகமாக நீஞ்சி ஒரு வழிப் பாதையில் வெல்வதுதான். வென்ற பிறகு, திரும்பக் கரையை அடைவதை குறித்து கருத்தில் கொள்ள மாட்டேன்”.
ஜி-மெயிலுக்குப் போட்டியாக யாஹூ குதித்தது. இன்று ரீடிஃப் ஒரு GB-யாக இடவசதியை அதிகரித்து இருக்கிறது. இவர்களும் இந்த மாதிரி ‘கெட்டாக்கா’ அண்ணனின் மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள்.
ஜி-மெயிலிடம் ஒரு திட்டம் இருந்தது.
இப்போது களத்தில் குதித்திருக்கும் யாஹூ, ரிடிஃப் போன்றோரிடம் இது போல் எல்லாம் எதுவும் கிடையாது. ‘அவன் செய்து விட்டானா… நானும் copycat-ஆக செயல்படுகிறேன்’ என்னும் தொலைநோக்கு பார்வை மட்டுமே தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாள் கழித்து ஜி-மெயில் ‘எங்களின் சோதனை முடிந்து விட்டது. இனி அனைவரும் மாதம் பத்து டாலர் சந்தா கட்டவேண்டும்’ என்று அறிவித்தால், யாஹூவும், ரீடிஃப்-உம் வழிதொடரும்.
தொண்ணூறுகளின் இறுதியில் இணையம் ஒரு பொற்களஞ்சியமாக விளங்கியது. இலவச இடவசதி, இலவச முத்து மாலை, வங்கியில் அக்கவுண்ட் திறந்தால் நூறு டாலர், ஷாப்பிங் தளத்தில் கணக்கு தொடங்கினால் டிவி என்று ‘பிதாமகன்’ சூர்யாவாக அள்ளி விட்டார்கள். அப்போதைக்கு ஐ.பி.ஓ. கொடுத்த பணம் இருந்தது. வரவுக்கு மேலே (சொல்லப் போனால், வரவே இல்லாமல் கூட) செலவழிக்க பங்குச்சந்தை ஆதரவளித்தது. அன்றும், இன்றும் (என்றும்?) அமெரிக்காவின் பொருளாதாரத்தின் உயிர்நாடியைக் கையில் வைத்திருக்கும், ஆலன் க்ரீன்ஸ்பான் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்து அவஸ்தைபடுத்துகின்றன: ‘Irrational Exuberance’
என்னுடைய கவலை ‘எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை; எதிர்த்த வீட்டுக்காரனுக்கு இரண்டு கண்ணும் அவியட்டும்’ என்னும் கதையாக யாஹூவும், இன்ன் பிறரும், கூகிள் வாரி வழங்கும் இடத்தையும் காலி செய்ய சொல்லாமல் இருப்பதுதான்.
(பாலாஜி)


வீட்டில் இருக்கும் கருப்பு-வெள்ளை டிவியில் அந்த விளம்பரம் வந்தால் அணைத்து விடுவார்கள். செய்திகளுக்கு முன் வரும் ‘நிரோத்’ விளம்பரம் சில காலத்துக்குப் பின் அனுமதிக்கப் பட்டது. என்ன சொல்ல வருகிறார்கள், எதற்கு பயன்படுத்தலாம் என்பது ஓரளவு புரிந்திருந்தாலும், சுய தேடலும் ஆர்வமும் மிகுந்தது மட்டுமே மிச்சம். செய்தித்தாள்களில், விளம்பரப் பலகையில் என்று நிறைய இடங்களில், இருவர் கை கோர்த்து – பீச் மணலில் அந்தி மயங்குவதை, ரசிப்பதை பார்க்கலாம். அதற்கும் நிரோத்துக்கும், குடும்ப கட்டுபாடுக்கும் என்ன சம்பந்தம் என்று விளங்காத அப்பாவிகளாக நாங்கள் மூவரும் இருந்தோம். இந்த மாதிரி விஷயங்களை விளக்குவதற்காகவேனும் ஆறாம் வகுப்பில் இருந்தே செக்ஸ் எஜுகேஷன் வர வேண்டும் என்று காரசாரமாக விவாதிப்போம். எங்களுடன் வம்பு செய்யும் 10-டி பசங்களுக்குக் கூட அதில் கருத்தொற்றுமை நிலவியது. 














