Monthly Archives: ஜூன் 2004

7G ரெயின்போ காலனி – கனாக் காணும் காலங்கள் (1)

பாடகி:மதுமிதா

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடலாசிரியர்: நா முத்துக்குமார்

கனாக் காணும் காலங்கள்

கரைந்தோடும் நேரங்கள்

கலையாது கோலம் போடுமா?

விழி போடும் கடிதங்கள்

வழி மாறும் பயணங்கள்

தனியாக ஓடம் போகுமா?

இது இடைவெளி குறைகிற தருணம்

இரு இதயத்தில் மெல்லிய சலனம்

இனி இரவுகள் இன்னொரு நரகம்

இளமையின் அதிசயம்

இது கத்தியில் நடந்திடும் பருவம்

தினம் கனவினில் அவரவர் உருவம்

சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்

கடவுளின் ரகசியம்

உலகில் மிக இனித்திடும் பாஷை

இதயம் இரண்டு பேசிடும் பாஷை

மெதுவாய் இனி மழை வரும் ஓசை…

நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை

நான் வேறு நீ வேறென்றால் நட்பு என்று பெயரில்லை

பறக்காத பறவைக்கெல்லாம் பறவையென்று பெயரில்லை

திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை

தனிமையில் கால்கள் எதைத் தேடிப் போகிறதோ?

திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ?

தாயோடும் சில தயக்கங்கள் இருக்கும்

தோழமையில் அது கிடையாதே

தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்

தடுத்திடவே இங்கு வழியில்லையே….

இது என்ன காற்றில் இன்று

ஈரப்பதம் குறைகிறதே

ஏகாந்தம் பூசிக் கொண்டு அந்திவேளை அழைக்கிறதே

அதிகாலை நேரம் எல்லாம்

தூங்காமல் விடிகிறதே

விழி மூடி தனக்குள் பேசும்

மௌனங்கள் பிடிக்கிறதே

நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்

நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்

படபடப்பாய் சில கோபங்கள் தோன்றும்

பனித்துளியாய் அது மறைவது ஏன்

நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை

மன நடுக்கம் அது மிகக் கொடுமை

பாடல் கேட்க: RAAGA – 7G Rainbow Colony

‘இம்’ என்றால் திருட்டு… ‘இச்’ என்றால் திருட்டு!

எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் முதன் முதலாக குப்புற படுத்துக் கொண்டது, நீஞ்ச ஆரம்பித்தது, தவழத் தொடங்கியது, உட்காரத் தெரியாமல் படுக்கையில் அடிக்கடி விழுந்தது, பின் ஒருவாறாக உட்கார கத்துக் கொண்டது என பலவற்றையும் வீடியோவில் பதிவு செய்திருக்கிறேன். அவளுக்கு ‘அ, ஆ..’, சொல்லிக் கொடுப்பது, ஆங்கில சொற்றொடர்களின் தமிழ் அர்த்தம் என எல்லா வீட்டிலும் எல்லாரும் சொல்லிக் கொடுப்பதை முடியும்போது பயிற்றுவிக்கிறேன். இவற்றின் போது எனக்கு நிகழும் அனுபவங்களை, நண்பர்களின் வாரயிறுதி டின்னர் விருந்துகளிலோ, இந்தியாவுடன் தொலைபேசியில் பேசும் நள்ளிரவுகளிலோ ஆர்வத்துடன் விவரிப்பேன்.

போன ஞாயிற்றுக்கிழமை அதிசயமாக சில வேலைகளைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தேன். பாத்ரூம் முழுக்க சுத்தம் செய்வது, ஒட்டடை அடிப்பது, பழைய படித்த புத்தகங்களில் இருந்து உபயோகமான பக்கங்களை மட்டும் கிழித்து வைத்துக் கொண்டு மற்றவற்றை தூக்கிப்போட்டது, ரொம்ப நாளாக உபயோகிக்காத என்றோ பயனளிக்கக்கூடிய சில சாமான்களை பரணில் பத்திரபடுத்தியது என்று ஒரு மணி நேரம் சென்றிருக்கும். சமையலில் வழக்கம்போல் மும்முரமாய் இருந்த அம்மாவிடம், என் மகள் சென்று, ‘அப்பா, ரொம்ப வேலை பண்றாம்மா’ என்று சொன்னது ஆச்சரியமாக, கொஞ்சம் வெட்கமாகவும் இருந்தது.

என் குழந்தை சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதன் ஆழ்மனதில் எவ்வாறு சில ஆணாதிக்க (இந்திய) பிம்பங்கள் விழுந்தது என்று ஓரமாக வருத்தப்பட்டது. அவற்றை மாற்ற என்ன செய்யலாம் என்று தனியாக யோசிக்கவேண்டும். அமெரிக்கப் பெற்றோரின் குழந்தைக்கு, சனியோ, ஞாயிறோ, தந்தை களத்தில் இறங்கி பெயிண்ட் அடித்தாலோ, களை பிடுங்கி செடி நட்டாலோ, பெரிய விஷயமாக இராது. ஆர்வத்துடன் கூடமாட உதவிகள் செய்வாளாக இருக்கும். இல்லை, தோழர்களோடு விளையாட ஓடிப் போய்விடுவாளாக இருக்கும். தந்தை முழுச் சோம்பேறியாக இருந்து, திடீரென்று ஒரு நல்ல நாளில் கலப்பை தூக்கினால், எந்த நாட்டிலும் குழந்தை வியக்கும்.

எஸ்.ராமகிருஷ்ணனின் தமிழில் சுட்ட படங்களை விமரிசித்ததை பார்த்தவுடன் ஒவ்வொரு நாட்டு குழந்தைகளின் மனோபாவத்தோடு ஒப்பிடத் தோன்றியது. பிற மொழிகளில் வெளிவந்த படங்களை ஆங்கிலத்தில், உள்ளூர் கலாசாரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொடுக்கிறார்கள். நியு யார்க் டைம்ஸ் முதல் லோக்கல் பத்திரிகை வரை, முன்னுமொரு காலத்தில் எழுதப்பட்ட ரோமியோ-ஜூலியட் கதைகளை காலத்திற்கேற்ப முலாம் பூசி கொடுத்தால் கூட வியந்து பாராட்டுகிறது. ஆங்கிலத்தில் முன்பு வெளிவந்த ‘Around the world in 80 days’, ’12 Angry Men’ என பத்து வருடத்திற்கொரு முறை போதிய இடைவெளி விட்டுவிட்டு மறுபதிப்பு தந்து கொண்டேயிருக்கிறார்கள்.

‘மகளிர் மட்டும்’ படத்தையும் அதன் ஆங்கில பதிப்பையும் ஒரு சேர பார்க்கலாம். நமது மொழிக்கு ஏற்ப, தமிழ் பழக்கவழக்கங்களுடன் திரைக்கதை, வசனம் அமைத்து, மனதில் நிற்கும் காட்சியமைப்போடு படத்தைத் தந்ததற்கு பாராட்ட வேண்டாம். அட… இது மொழி மாற்றம்தானே… என்று டப்பிங் படத்தை பார்க்கும் முன்-நிர்ணயித்த பார்வையுடன் படம் பார்க்கும் கலர் கண்ணாடியை இறக்கி விட்டுக் கொள்ளலாம். Sense & Sensibility என்னும் ஆங்கில படம் மிகவும் ரசிக்கத்தக்கது. ‘ஒன்றி பார்க்க முடியுமா?’ என்று கேட்டால் என்னால் முடியாது. ஆனால், ‘கண்டு கொண்டேன்… கண்டு கொண்டேன்’-இல் தபுவின் நடுத்தர வர்க்க சமன்பாடுகள் மனதைப் பிசையும். ‘Godfather’-தான் ‘நாயகன்’ என்பது எல்லாப் படங்களுக்கும் வார்ப்புரு தேடும் நோக்கோடு ஒப்பிடுவதை சொல்கிறது. ஒரே genre திரைப்படங்களா? ஆம்… தழுவலா? நிச்சயம் இல்லை.

புத்தகங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் படங்கள் ஆஸ்கார் தேர்வாகிறது. அவை கூட அக்மார்க் ஒரிஜினல் இல்லை என்பதால் உலக அரங்கின் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என சொல்லலாம். ‘சதி லீலாவதி’ தத்து எடுக்கப் பட்ட தமிழ்ப்படமாகவே இருக்கட்டும். அதை தமிழர்களின் குணத்திற்கேற்ப எவ்வாறு மாற்றப்படவில்லை என்பதை விவரிக்கவேண்டும். சண்டைக் காட்சிகளைப் பார்த்தால் இது ஏற்கனவே ஆங்கிலப் படத்தில் ஜேம்ஸ் பாண்ட் செய்வது போல் இருக்கிறது என்று அங்கலாய்ப்பது எனது நுண்ணிய கிரகிப்புத்தன்மையையும், அனேக படங்களை பார்த்தையும் சுட்டலாம். ஆனால், அந்த சண்டை எவ்வாறு நம்பமுடியாமல் இருக்கிறது என்று ஃப்ரேம் பை ஃப்ரேம் அலசுவதை விட்டு விட்டு, ‘உன் குழந்தை ஏற்கனவே பக்கத்து வீட்டுப் பையன் எழுதிய ABCDதானே எழுதுகிறது’ என்பதுதான் பலரின் கூற்றாக இருக்கிறது.

எனக்கு இரண்டு பேரும் அ..ஆ..இ…ஈ, எழுதுவதில் பிரசினையில்லை. இருவரும், அதை அவர்கள் கையெழுத்தில் எழுதினார்களா என்பதில்தான் எனக்கு ஆர்வம்.

விருப்பப் பட்டியல் (1)

மரத்தடி & .com:

  1. நினைவலைகள் முதல் புதுக்கவிதைகள் வரை பொறுத்தமான படங்கள் போட வேண்டும்.

  2. ‘எழுத்தாளரைக் கேளுங்கள்’ தொடர வேண்டும்.

  3. பட்டிமன்ற தீர்ப்பு வேண்டும்.

  4. இந்த ஆண்டுவிழாவில் அனைத்து உறுப்பினர்களும் ஒரு பதிவின் மூலமாவது பங்கு பெற வேண்டும்.

  5. அடுத்த சுவாரசியமான அறிவிப்பு வேண்டும்.

  6. காணாமல் போன ஆனந்த் ராகவ் முதல் ரமேஷ் அப்பாதுரை வரை அனைவரும், நேரத்தை எங்கிருந்தாவது கண்டுபிடித்தாவது எழுத வேண்டும்.

  7. ஆசாத் முதல் நம்பி வரை மேலும் பலரும் வலைப்பதிவுகள் ஆரம்பித்து, இரண்டிலும் தொடர்ந்து எழுத வேண்டும்.

  8. 7-ஜி ரெயின்போ காலனி பாடல்களையும் பிரசன்னா முதல் பரி வரை எல்லாரும் விமர்சிக்க வேண்டும்.

  9. கோடைகால போட்டியில் பரிசு எனக்கு கிடைக்க வேண்டும் 😉

மீண்டும் மீண்டும் வா….

திரைக்கு வந்து சில வாரங்களே ஆன தமிழ்ப் படங்களை திருட்டு விசிடியிலும், திரைக்கு வந்து சில மாதங்களே ஆன ஆங்கிலப் படங்களை திருடாத டிவிடியிலும், பார்த்து விடுவதால், சன் டிவி, கே டிவி, என்.பி.சி. ஹெச்.பி.ஓ., டி.என்.டி. இன்ன பிற முப்பது சொச்ச தொலைக்காட்சிகளில் காட்டப்படும் படங்கள், பார்த்த படங்களாவே இருக்கின்றது. இந்த மாதிரி channel-surfing செய்துகொண்டு, பார்க்காத படம் தெரிகிறதா என்று தேடும்போது, கிடைக்கும் சில காட்சிகள் சுவாரசியம். கடந்த சில வாரங்களாக இந்த மாதிரி தடுக்கி விழுந்து மீண்டும் ஆங்காங்கேபார்த்த படங்கள், வாட் வுமன் வாண்ட்; சதி லீலாவதி; மின்சாரக் கனவுகள்; ப்ரிட்ஜெட் ஜோன்ஸ் டைரி; பாட்சா.

What Women Want சிரிப்பதோடு நிறுத்தாமல் கொஞ்சமாய் சிந்திக்கவும் வைக்கும் படம். விவேக் முதல் ‘செம ரகளை’ சத்யராஜ் வரை தமிழில் சரியாக உல்டா செய்யாத கதாநாயகனாக மெல் கிப்ஸன். பெண்களை போகப் பொருளாக மட்டும் நினைப்பவர். திடீரென்று பெண்கள் மனதில் நினைப்பதை அறியும் சக்தி பெறுகிறார். (ஆண்கள் நினைப்பதை இன்னும் அவரால் கிரகிக்க இயலாது. ஆண்கள் ஏதாவது நினைக்கிறார்களா என்று கேட்டால், எனக்கு பதில் தெரியாது.)

அந்தக் காலத்து விக்ரமாதித்தனுக்குத் தெரிந்த ஆய கலைகள் அறுபத்து நான்கில், பிறர் மனதில் இருப்பதை அறிவதும் ஒன்று. விளம்பர நிறுவனத்தில் வேலை பார்க்கும் மெல் கிப்ஸன், எவ்வாறு, பெண்களின் மனதை அறிந்து, Nike காலணி விளம்பரம் முதல் ஹீரோயினின் காதல் வரை கவர்கிறார் என்பதே திரைக்கதை. பெண்கள் எதைப் பற்றி சிந்திக்கிறார்கள் என்பதை கொஞ்சம் politically incorrect-ஆக சொல்லும் தத்துவப் படம். தகப்பனாக, மகளின் சிந்தனைகளை கேட்பது, மேலாளராக, சகாக்களின் எண்ணங்களை அறிந்து கொள்வது, அவரை மெல்ல மாற்றி, male chauvinismஐ குறைக்கிறது.

Bridget Jones Diary கொஞ்சம் வழவழா கொழகொழா வகையைச் சார்ந்தது. சுவாரசியமான Chick-flick என்பது எப்படிப்பட்ட வகை என்று கேட்டால் இப்படத்தை தைரியமாக நான் உதாரணம் சொல்வேன். டைரி என்பது டைட்டிலிலேயே இருக்கிறதே, படம் முழுக்க டைரி வடிவில் சொல்லப்படுகிறதோ, என்று எண்ணினால், ஆங்காங்கே கொஞ்சம் டைரி டெக்னிக் உபயோகப்படுத்திக் கொண்டார்கள். Streetsmart நடிகரான Hugh Grant-ஐ, கிட்டத்தட்ட வில்லனாக காண்பித்ததால் மட்டும் எனக்குப் படம் அவ்வளவாக ரசிக்கவில்லை.

மனதில் நினைத்ததை, உள்ளது உள்ளபடியே பேசும் ஒருத்திக்கு, உற்ற துணை கிடைக்குமா? கிடைத்தாலும், அதை கெடுப்பதற்கு ஒருவன் எவ்வளவு தூரம் முயல்வான் என்பதுதான் கதையின் அடிநாதம். அம்மாவால் பெண் பார்க்க வைக்கப்படும் முதல் காட்சியில் ஆரம்பித்து கடைசி காட்சியில் காதலனிடம் டைரியை விளக்குவதற்காக ஓடும் காட்சி வரை ரெனீ ஜ்வெல்கர் இனிப்பான அடுத்த வீட்டுப் பெண்ணாக வந்து போகிறார். வித்தியாசமான படம். படம் பார்க்கும்போது ‘ஐய்யயோ… இவ்வாறு செய்யாதே’ என என்னை நானே தர்மசங்கடத்தில் ஆழ்த்தி கொள்வதே படத்தின் வெற்றி. உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம்; ஆனால், பார்க்கவேண்டிய படம்.

சதி லீலாவதி – ஆங்கில மூலம் எது என்பது குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து ரசிக்கும் படம்;

மின்சாரக் கனவுகள் – வானொலியில் வரும் ஞாயிற்றுகிழமை ஒலிசித்திரம் போல் கேட்டேன். எவ்வளவு பார்க்காத காட்சிகள்! விசிடிக்காரர்கள் அழகாக எடிட் செய்கிறார்கள்;

பாட்சா – ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு’ என்பதற்காக முதல் பகுதியை இண்டெர்வல் வரை மீண்டும் மீண்டும் பார்க்கலாம்.

நம்மில் ஒருவன்.. நமக்காக ஒருவன்! – ஷங்கர் பேட்டி

ஆனந்த விகடன்:

“இத்தனை வருட சினிமா அனுபவம் தந்த படிப்பினை என்ன?”

“ரொம்பக் கஷ்டப்பட்டு ‘செட்டில்’ ஆயிட்டோம் என்று நினைத்தால், அது உண்மையில்லைன்னு தெரியுது! ‘செட்டில்’ ஆவது ஒன்றுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பும் நம்பிக்கையும். ஆனால், நடக்கிறது என்ன?

இந்த வாழ்க்கை கடைசிவரைக்கும் உழைப்பைக் கேட்டுக்கிட்டே இருக்கு. அதுவும் சினிமா… குறைந்தபட்ச தர்மத்தோடு இருக்கிறவங்கதான் நிலைக்க முடியுது. இது நண்பர்கள் யாரு, எதிரிகள் யாருன்னு தெரிஞ்சுக்க முடியாத உலகம். ஆனா அந்த ரெண்டு பேருமே கண் முன்னாடி சிநேகமா சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. அதுதான் விசேஷம்!”

“விமரிசனங்களை எப்படி எடுத்துப்பீங்க?”

“நல்லாயிருக்குன்னு சொல்லும் போது சந்தோஷப்படறோமே… அதுமாதிரி நெகட்டிவ் விமரிசனம் கேட்கும்போதும் ‘லைட்’டாக எடுத்துக்க வேண்டியதுதான்.

நானே குத்தம் பண்ணியிருக்கலாம். ஆனால், ‘பாய்ஸ்’ படத்துக்கு விகடன் எழுதின விமரிசனம்… தப்பிருந்தா தலையில் குட்டலாம். ஸ்கேலில் ரெண்டு தட்டு தட்டலாம். முட்டிப்போட வைக்கலாம். கத்தியை எடுத்துச் செருகலாமா? அந்தக் காயம் அதிகமாக வலித்தது.

என்னை வளர்த்துவிட்டு, என்னைக் கொண்டாடிவிட்டு, திடீர்னு தோளிலிருந்து தூக்கிப் போட்டால் என்ன செய்வேன், சொல்லுங்க. பரவாயில்லை.. இப்போ அந்தக் காயம் ஆறிவிட்டது!”

ரெண்டு வரி நோட்: இவை மென்பொருள் எழுதுபவர்களுக்குக் கூட பொருத்தமாக பட்டது.

வெறும் பொழுது – உமா மகேஸ்வரி

சுயம்

அடுப்படியின்

அழுக்கு மொஸைய்க்.

விரலிடுக்கில் பாத்திரக் கரி.

காற்றிலாடு துணிக்கொடியும்,

நேற்றிருந்த கனாக்களும்

வாழ்க்கையாச்சு.

இருப்பின் அவஸ்தை மறைக்க

இயல்பாகிப் போனதோர்

சந்தோஷ முகமூடி.

சுயத் திமிர் வேறு.

தன்னைத் தான் ஆய்வதோடு

பிறர் குணமும் கூறு போடல்

தொடரத் தொடர வேதனை மிகும்.

தொலைதூரத்தில் விசும்பும் நிலவும்,

கேள்விகள் இன்றி சதா

புல் தின்னும் ஆடுகளும்

மனம் உறுத்தும்.

பேச்செல்லாம்

சவ ஊர்வலத்தின் சங்கொலி போல்

வெறுமை.

இவை தவிர்த்து எப்போதும்

கடல் துப்பிய சிப்பியாய்

கரை மணலில்

நான் தனித்து



விடுமுறைக்குப் பின்னான வீடு

விரிகிறது தனது

அலாதியான சிக்கல்களோடு

ஒரு மாபெரும் சிலந்தி வலையாக.

அதன் தற்காலிகமான கலகலப்பை,

மழலை கூடிய குரல்களை

வேடிக்கை விளையாட்டுக்களை

மிருதுவான களங்கமின்மையைத்

திணித்து எடுத்துப் போனார்கள்

பிள்ளைகள் தங்கள் பள்ளிப்பைகளில்.

ஸ்கூல் பஸ் நகர்கிறது

சிரிப்பொலிகளோடும்,

அழுகைத் துளிகளோடும், ஆடும் கைகளோடும்.

முடிக்கப் படாத குழந்தை ஓவியத்தின்

வர்ணங்கள் வாசற்படியில்

வடிந்திருக்கின்றன.

பாதாளத்துடன் இறங்கிவிட்ட

வீட்டின் தலையைப் பிளந்து

என் தனிமையோடு

உள் நுழைகிறேன்

என்னைப் பிய்த்துத் தின்னத்

தயாராகக் காத்திருக்கிறது

அசையாத குரங்கு பொம்மையின்

ஒற்றைக் கை

தமிழினி – 224 பக்கங்கள் – ரூ. 100/-

விக்ரமாதித்யனும் வேதாளமும்

அபராஜிதா

வேதாளத்தை

விக்ரமாதித்யனுக்குப் பிடிக்கும் நிரம்பவே

விக்ரமாதித்யனை

வேதாளத்துக்குப் பிடிப்பது போலவே

விக்ரமாதித்யனுக்கு

வேதாளத்தின் விண்ணானமும் விருப்பம்தான்

விக்ரமாதித்யன் விருப்பம் தெரிந்துதான்

வேதாளமும் விண்ணானம் பேசுகிறது விடாமல்

வேதாளத்தை எப்போது வேண்டுமானாலும்

வெட்டிவிட்டுப் போகமுடியும் விக்ரமாதித்யனால்

வேதாளத்தை நம்பியில்லை

விக்ரமாதித்யன்

வேதாளத்தின் தயவு

வேண்டியதில்லை விக்ரமாதித்யனுக்கு

வேதாளம் கதை

தெரியாதவனில்லை விக்ரமாதித்யன்

வேதாளத்தின் முடிவும்

அறிந்தவன்தான் விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன் வாழ்வில்

வேதாளங்கள் அநேகம்

வேதாளத்துக்கோ ஒரே ஒரு

விக்ரமாதியன்தான்

இனிய உதயம் – ஏப்ரல் 2004

ஊடகப்போக்கன்

Algerian chefs put the finishing touches to giant couscousபோன வாரத்தில் என் மனதில் நின்ற இணையச் செய்திகள்

  • 22,000 பேர்கள் சாப்பிடக்கூடிய உலகின் மிகப்பெரிய couscous (??) செய்து அல்ஜீரியா சாதனை படைத்துள்ளது. நூறு ஆடுகள், ஒன்றைரை டன் காய்கறிகள், 2600 கிலோ semolina (??) கொண்டு செய்யப்பட்டது. (BBC)
  • எழுதி முடித்தவுடன் அச்சிட்டு புத்தகமாக வெளிக் கொணர்ந்து விடலாம். நியு ஜெர்ஸியில் இருக்கும் Bookends என்னும் கடைக்கு ஃப்ளாப்பியைக் கொடுத்தால், பதினேழு நிமிடங்களில் தயார். (NYT)
  • இணையத்தின் ஆரம்ப காலத்தில் வாசக சுதந்திரம் கிட்டியது; அனைத்து உலகப் பத்திரிகைகளும் கிடைத்ததால். அடுத்து, படைப்பாளிகளுக்கு; வலைப்பக்கம், வலைப் பதிவு போன்றவற்றால். கூகிளின் விளம்பர தொழில்நுட்பம் மூலம் “freedom of the press is guaranteed only to those who own one” என்னும் பொன்மொழி பொய்யாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. (NYT)

  • இணையத்தின் மூலம் அதிகாரபூர்வமாக புதிய படங்களை பார்க்கலாம்; வலையிறக்கலாம். மாதத்திற்கு 12.95 டாலர் மட்டும் கொடுத்தால் போதும். (இணையமெங்கும்)

  • கல்லூரிகளில் இருந்து பட்டம் பெறுவதற்கு, சமூக சேவையை கட்டாயமாக்க வேண்டும். வருடத்திற்கு இருபத்தி ஐந்து மணி நேரமாவது பொதுத் தொண்டு புரிந்தால்தான் டிகிரி கையில் கிடைக்கும் என்பதை சட்டமாக்க, பென்சில்வேனியா எம்.எல்.ஏ மைக்கேல் மசோதா கொண்டு வந்துள்ளார். (NYT)
  • 1981-இல் பதவியேற்றவுடன் ரோனால்ட் ரேகன் வருமான வரியைப் பெருமளவு குறைத்தார். அதன் பிறகு அவரது பதவிக்காலம் முடியும் வரை குறைத்த வரியை ஏற்றினார். (Democrats)
  • பெங்களுரை விட சென்னையில் விலைவாசி அதிகம். லாஸ் ஏஞ்சலீஸை விட நியு யார்க்கில் வசிக்க அதிக செலவாகும். பே ஏரியாவை விட சிகாகோவில் குடியிருப்பதற்கு பணம் நிறைய வேண்டும். (இணையமெங்கும்)

    Indian Prime Minister Indira Gandhi

  • ஜூன், 12, 1975: தேர்தலில் ஊழல் புரிந்த குற்றத்திற்காக இந்திரா காந்தியை ஆறு வருட காலத்திற்கு எந்தப் பதவியும் வகிக்க கூடாது என தீர்ப்பாகிறது. (இந்த நாள்… அந்த வருடம்: BBC)

  • ஏழு வருடக் குழந்தைகளினால் பதியப்பட்ட பயனுள்ள வலைப்பதிவுகள். (BBC)
  • குணப்படுத்தக் கூடியதாக இருந்தாலும், 2000-த்தில் மட்டும், 600,000 பேருக்கு தொழுநோய் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. (BBC)
  • ரேகனுக்கு இரங்கல் கூறும் வாக்கெடுப்பு விவரம் – 355:0;

    கம்யூனிசத்தை அழிப்பதிலும், உலகத்தின் அனைத்து மூலைகளிலும் சுதந்திரம் பரவ பாடுபட்டதற்கும் பாராட்டு வாகெடுப்பு – 375:0;

    அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை – 435. (Sun Papers)

  • வாஷிங்டன் நகர ரெயில்வே அறிவிப்பு: ரேகன் இறந்ததன் நினைவாக, இன்று வழக்கம் போல் வண்டிகள் ஓடும். (In remembrance of President Reagan, we will be operating on our normal schedule.)

    Boris Becker, AP

  • குடியரசு கட்சியின் அவைத் தலைவர் மேல் குற்றச்சாட்டு: தேர்தல் நிதி கொடுத்த நிறுவனத்தை சட்டங்களிலிருந்து விலக்கு கொடுத்தார்; மறைத்து, கடத்தி வைக்கப்பட்டிருந்த டெக்ஸாஸ் (டெமொக்ராடிக்) எம்.எல்.ஏ.க்களை கண்டுபிடிக்க தேசிய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டது. (இணையமெங்கும்)
  • சொந்த வீட்டைக் கட்டித்தர லஞ்சமாக அரசு ஏலங்களை கொடுத்த புகாரில், கனெக்டிக்ட் மாகாண கவர்னர் மீது impeachment (தமிழில் என்ன?) நடவடிக்கை ஆரம்பம். (இணையமெங்கும்)

  • சவூதியில் மேலைநாட்டுக்காரர்கள் கூட பர்தா போட ஆரம்பித்துள்ளார்கள். ஷாப்பிங் போவதற்கு அஞ்சுகிறார்கள். உலகின் மிகப் பணக்கார நாட்டில் பிச்சை எடுக்கும் ஏழ்மை எட்டிப் பார்க்கிறது. (கதை அல்ல நிஜம்: BBC)

  • டான்சானிய நாட்டில், மனிதர்களை சாப்பிடும் சிங்கத்தைக் கொல்ல, சொந்த மனைவியின் உடலுக்கு விஷம் வைத்தார். (BBC)

  • அனில் அம்பானி ராஜ்யசபா எம்பி ஆகிறார். சமாஜ்வாடி கட்சியின் ஆதரவுடன் உபியில் நிற்கிறார். (இணையமெங்கும்)
  • தேசபந்து சி.ஆர்.தாஸ் நினைவு நாள் – ஜூன் 16 (எனது நாள்-காட்டி)

  • நியு ஹாம்ப்ஷைர் மாகாணத்தின் அட்டர்னி ஜெனரல் பதவி விலகினார். அரசு சார்பாக நடந்த மனையியல் வன்முறை (domestic-violence ?) கூட்டத்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். (NYT)

  • விம்பிள்டனில் இனி லீனக்ஸ் கோலோச்சும். பெக்கர் முதன்முறையாக வென்றபோதுதான், விம்பிள்டனில் கணினி எட்டிப் பார்த்திருக்கிறது. (BBC)
  • அழும் ஒட்டகத்தின் கதை (‘The Story of Weeping Camel’) என்னும் பார்க்க வேண்டிய படம், ஸ்டீவன் ஸ்பில்பெர்க்+டாம் ஹான்க்ஸ் இருக்கும் ‘தி டெர்மினல்’ படத்துடன் அமெரிக்காவெங்கும் வெள்ளித் திரைகளில் வெளியாகிறது. (Boston Metro)

  • தாகம் (‘Thirst’) என்னும் குறும்படமும் நிறையப் பேசப்படும். இந்தியா, ஜெர்மனி, பொலிவியா என்று மூன்று நாடுகளில் நடக்கும் மூன்று பிரச்னைகளுக்கும் உள்ள தண்ணீர் தனியார்மயமாக்கல் திரியை கொளுத்திப் போடுகிறார்கள். (IMDB)
  • Moroccan author Tahar Ben Jelloun’s novel, This Blinding Absence of Light, won the 100,000 euro International Impac Dublin Literary Award 2004. (BBC)
  • கிஸ்வாஹிலி மொழியில் மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மற்றும் விண்டோஸ் வெளிவரும். அதிக அளவில் தாய்மொழி பேசும், ஆனால் குறைந்த அளவில் கணினி ஊடுருவிய மொழிகளில் இனிமேல் மைக்ரோசாஃப்ட் கவனம் செலுத்தும் என்று அறிக்கை. (BBC)

  • Short Film Contest 

    Short Film Contest Posted by Hello

    Book List 

    Book List Posted by Hello