Monthly Archives: ஜூன் 2004

காலச்சுவடு – ஜூன் 2004 (My Takeaways)

கடவுளுக்குத் தெரியாதவர்கள் – ஆதவன் தீட்சண்யா: “அவனது ஒன்பதாவது படமிது. நான்கிற்கு உள்நாட்டிலும் அயலிலுமாகப் பல்வேறு விருதுகள். விருது வழங்குவோரின் சம்பிரதாயப் புகழுரைகளால் விவரிக்க முடியாத மேட்டிமை படிந்து படைப்பின் நோக்கம் திரிபட்டு மக்களிடமிருந்து அன்னியமாகி விடுவதாகச் சலிப்புறுவான். நடைமுறை வாழ்வில் காணக்கிடைக்கும் மறுக்க முடியாத உண்மை நிகழ்வுகளை முன்பின்னாய்க் கோர்த்துத் தொகுத்தெடுப்பதில் கையாளும் நுட்பகதியிலான அணுகுமுறை பார்வையாளனை ஏதேனுமொரு பக்கம் சாய்ந்து வாதிட நெம்பும். உள்ளதை உள்ளவாறே முன்வைத்து விரியும் காட்சிகளின் நேரடியர்த்தம் அதன் பின்புலத்தில் சொல்லப்படாத வேறொன்றிற்கான சிந்திப்பைக் கோரி நகரும்.

அவன் வெளிப்படையாகவே யாவற்றையும் சொல்வதாகவும் அதனாலேயே அவை கலைத்தன்மையற்றுச் சக்கையாய் இருப்பதாக ஒரு சாராரும் கலையுலக ஒளிவட்டங்களின் கவனிப்புக்காக மிகுந்த பூடகத்தை முன்னிறுத்துவதாய் மற்றாரும் குற்றமேற்றுவதுண்டு. உங்களது அளவுகோலால் அடுத்தவனை அளக்காதீரென்று முகத்திலடித்துச் சொல்ல நாத்துடிக்கும் எனக்கு. அவனோ பூடகமென்று புரியுமளவு அதில் வெளிப்படைத் தன்மை பொதிந்திருப்பதாயும் நேரடியாய்த் தெரிபவை ரகசியங்களற்றே கிடப்பதாய் நினைக்க வேண்டியதில்லை என்றும் குறைவான சொற்பிரயோகங்களில் சாந்தமாக மறுப்பான். ஒப்பாரியிலும் தாலாட்டிலும் ராகம் தாளம் தேடும் கோட்பாட்டு வாத்திகளைப் போலவே படைப்பின் ரகசியங்களறிந்திடும் சிரத்தையற்ற எளிமை விரும்பிகளும் எனது அனுதாபத்திற்குரியவர்களே என்பான். பால்யத்தில் நாம் கண்டும் காட்டியும் வந்த நிர்வாணத்தைத்தான் வாழ்நாள் முழுதிலுமே ரசசியமெனப் பொத்திக்கொள்வதும் அதை அறியத் துடிப்பதுமாகத் தவித்து மாய்கிறோம் என்று கூறியது எத்தனைப் பேருக்குப் புரிந்ததெனத் தெரியவில்லை.

ஒரு பெண்ணின் மனதுக்கும் உடலுக்கும் அவளே எஜமானி என்றும் அதில் எதன் பேராலும் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதையும் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதே எனது நோக்கமாயிருந்தது. உடல்தேவையின் பொருட்டோ கலக மனப்பான்மையினாலோ பழிவாங்கும் உணர்வினாலோ – எதனால் அவ்வாறு நடந்துகொண்டேன் என்பதை இதுவரையிலும் நான் ஆராய வில்லை. ஆனாலும் என் காரியம் என்னளவில் குற்றமற்றது என்று இன்றளவும் நம்புகிறேன்.”

நல்ல வாசிப்பை காட்சியாக்கும் கதை.



குவளைக் கண்ணன் – இடைப்பட்ட பொழுது:

பாட்டி வீட்டுக்குப் போனான்

ஒரு விடுமுறையில்

சலிப்படைந்த தினமொன்றில்

அந்தச் சிற்றூரில்

ஆடுகளைப் பின்தொடர்ந்து

காட்டினுள் நுழைந்தான்

கோடைப் பகலில்

பின்மாலைபோல

இருண்டிருந்த அந்தக் காட்டில்

விசித்திர இலைகளைக் கொண்ட

மரமொன்றுடன் நட்பானான்,

விடைபெறும் நாளில்

இலையொன்றைத்

தனது நினைவாகத் தந்தனுப்பியது மரம்.

விடுமுறை கழிந்து பள்ளி சென்றான்

புதிய

மொழியாசிரியை

அந்த மரத்தின் பூவையும்

உடற்பயிற்சி ஆசிரியர்

மரத்தின் பட்டைகளையும்

நினைவூட்டினார்கள்

தனது ஜியோமிதிப் பெட்டியில்

காட்டை எடுத்துக்கொண்டு

சிற்றோடை போல

ஓடிக்கொண்டிருக்கும் அவன்

வரிகளுக்கு இடையில்

மறைந்திருக்கும் வன்மிருகங்களைப்

பார்க்கவில்லை இன்னும்



நீரோட்டம் – கண்ணன்: “நான் சந்திக்கும் பலர் எதற்காக இவ்வளவு பொய் சொல்கிறார்கள் என்றே தெரியவில்லை. பல சமயம் பொய் வெளிப்படும்போதே பொய் எனத் தெரிவித்தபடி வருகிறது. அல்லது இரண்டொரு நாட்களில் பொய் என ஊர்ஜிதமாகிறது. மீண்டுமொரு முறை பேச நேரும் போது முன்னர் கூறிய பொய்கள் மறைந்து புதிய பொய்கள் வெளிப்படுகின்றன. இவர்கள் எல்லோரையும் மோசமானவர்கள் எனக் கருத முடியவில்லை. பலர் நல்லவர்கள். நண்பர்கள். இந்தப் பொய்களுக்கு அற்பத்தனத்தைவிடப் பெரிய காரணம் எதையும் கண்டுபிடிக்கவும் முடியவில்லை. நான் பொய் சொல்லாதவன் அல்லதான். சத்திய சீலன்களைத் தேடி உறவுகொள்பவனும் அல்ல. இருப்பினும் அன்றாடம் பல சில்லறைப் பொய்களைச் சந்திக்க வேண்டியிருப்பது, வழக்கமான தமிழ் சினிமாவைப் பார்ப்பதுபோல, அவமானமாக இருக்கிறது. நம் அறிவை, புரிதலை, உள்ளுணர்வை இப்பொய்கள் தொடர்ந்து அவமதிக்கின்றன. இக்காலகட்டத்தில் “பொய்யானாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்’ என்ற பழமொழி என் மனத்தில் புதிய பொருள் கொண்டு ஒளிரத் தொடங்கியுள்ளது.”



பேராசிரியர் தொ. பரமசிவன்: “சங்க இலக்கியப் பாடல் தொகுப்புகளின் பெருமைகளில் ஒன்று அவை சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களாலும் படைக்கப்பட்டவை என்பதாகும். கூல வணிகன் (தானிய வணிகன்), வண்ணக்கன் (பொன்னின் மாற்று அறிந்து சொல்பவன்), அறுவை வணிகன் (துணி வாணிகன்), கணக்காயன் (ஆசிரியன்), காமாக் காணி (சோதிடம் வல்லவன்), குயத்தி, குறமகள் என்று அனைத்துத் தரப்பினரும் “செய்யுள்’ செய்யும் போது, அரசதிகாரம் பெற்ற கிழார்களும் அரசன் மனைவியரும் அரசர்களும் ஏன் பாடியிருக்கக்கூடாது?”



பெருமாள்முருகன்: “குறையை “மக்கள் மன்றத்தில்’ வைப்பதன் மூலமாக இரு நன்மைகள் ஏற்படும். அவை:

  • க. நூலைப் பயன்படுத்தும் வாசகர்கள் இக்குறைகளை மனத்தில் கொண்டு அவற்றைக் களைந்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனெனில் எல்லா வாசகர்களும் இக்குறைகளைக் கண்டுபிடிப்பவராகச் செயல்பட முடியாது.
  • உ. பல்கலைக்கழகம் இனி வெளியிடும் நூல்களில் கூடுதல் கவனம் செலுத்தலாம். தகவல் தொடர்புச் சாதனங்களில் ஒரு செய்தி வெளியிடப்படும்போது கிடைக்கும் கவனம், தனி நபர் கடித வெளிப்பாடுகளில் கிடைக்காது என்பது இன்றைய கால விதி.”
  • தேர்தல் வருது!

    நான் வலைப்பூ ஆசிரியராக இருந்தபோது இந்திய வலைப்பதிவுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழின் சார்பாக பத்ரியும், வெங்கட்டும் போன வருடத்துப் பட்டியலில் இடம்பிடித்திருந்தார்கள். சென்ற வருடத்தில் வாகை சூடியவர் நம்ம வெங்கட்.

    இந்த வருடத்திற்கான முஸ்தீபு வேலைகளை சுறுசுறுப்பாக துவங்கி விட்டார்கள். நம்மிடம் எவ்வாறு நடத்தலாம், எந்த தலைப்புகளில் கருத்து கணிப்பு நடத்தலாம் என்று கேட்டிருக்கிறார்கள்: அறிவிப்பு

    தமிழ் பதிவுகளில் என்னுடைய பரிந்துரையில் இடம்பெறுபவர்கள்:

    1. அருண்

    2. பத்ரி

    3. ஹரி கிருஷ்ணன்

    4. மதுரபாரதி

    5. பவித்ரா

    6. பா ராகவன்

    7. பிகே சிவகுமார்

    8. சுந்தரவடிவேல்

    9. வெங்கடேஷ்

    10. வெங்கட்

    ரெண்டு வரி நோட்

    முத்துராமன் – ராயர் காபி க்ளப்

    1. தொடரும் நேசம் – 7837

    2. ஒற்றை மரம் – 7762

    இரண்டு அப்பா கதைகளில், ‘தொடரும் நேசம்’ ரொம்ப பிடித்திருந்தது.

    • ‘சிங்கம், புலி போல அப்பாவுக்கு சைக்கிள்’

    • ‘சைக்கிளில் பட்ட வெயில் வெளிச்சம், மிதமான ஒளியில் மின்னியது’

    • ‘நிஜம் குற்றுயிராய்க் கிடந்தது. நிழல் பார்க்கத் தூண்டுவதாய் இருந்தது’

    • ‘நடக்கத் துவங்கிய குழந்தையை, கவனமாய் கையைப் பற்றி அழைத்துச் செல்வது போலிருக்கும்’

    • ‘அப்பா ‘மவுத்’ ஆன பிற்பாடு’

    முல்ஹோலண்ட் ஃபால்ஸ்

    ‘ஜெனிஃபர் கானலி’யைப் பார்த்தால் மகாத்மாவே சபலப்பட்டு போவார்IMDB-இல் துழாவியபோது ‘பிதாமகனில்’ ஒரு பாடலுக்கு வந்துபோகும் சிம்ரன் போன்றவரை குறித்து ஒருவர் எழுதியிருக்கிறார். படத்தின் கதாநாயகி மெலனி கிரிஃபித்துக்கு, மோசமாக நடிப்பவர்களுக்காகத் கொடுக்கப்படும் ராஸ்ப்பெரி விருது வழங்கப்பட்டிருக்கிறது. 1950களின் லாஸ் ஏஞ்சலீஸை கண்முன்னே கொண்டு வருகிறது. ஹாலிவுட்டின் சத்யராஜ் ‘ஜான் மால்கோவிச்’ நடித்திருக்கிறார். எஸ். ராமகிருஷ்ணனை கேட்டால் ‘காக்க… காக்க’வின் ஆங்கில ஒரிஜினல் இதுதான் என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்.

    என்னதான் சிறப்பான நடிகர்களை பொருத்தமான வேடங்களுக்குப் போட்டாலும், கதாபாத்திரத்தின் சித்தரிப்பு தெளிவாக இல்லாவிட்டால், படம் மக்களை சென்றடையாது என்பதற்கு, இந்தப் படம் நல்ல உதாரணம். நான்கு எல்லே போலீஸ். சட்டத்தை துச்சமாக மதித்து, சட்டத்தை நிலை நாட்டுபவர்கள். ஹீரோ, மனைவியுடன் மகிழ்ச்சியான வாழ்வில் இருக்கிறார். அப்பொழுது அங்கு நிகழும் ஒரு பெண்ணின் மரணம் எவ்வாறு அவர்களைப் பிரிக்கிறது என்பதை குழப்பாமல் சொல்லியிருகிறார்கள்.

    படத்தின் தலைப்பு ஒரு காரணப் பெயர். மாஃபியாத் தலைவர்களும், போதை ராஜக்களும் எல்லேயில் கால் வைத்தால், நால்வர் அணி அவர்களைத் தள்ளிவிட்டு விடும் இடத்தின் பெயர்தான் ‘முல்ஹோலண்ட் ஃபால்ஸ்’. என்கவுண்டர், ஜெயில், வாய்தா, வக்கீல், மனித உரிமை என்று எல்லாம் சிரமப்படாமல், ஒரேயொரு தள்ளு. ஹாலிவுட் படங்களின் எதிர்பார்ப்புக்குரிய தரத்தை 1950ல் உலாவந்த மகிழுந்துகளின் மூலமும், ஆடைகள் மூலமும் சிறப்பாக காட்டுகிறார்கள். குற்றம் செய்பவர்களை தண்டிக்கும் நால்வரின் தலைவரே சபலப் படுவது, பெரிய மனிதர்களின் சிறுமைத்தனம், கணவன்-மனைவி இடையே நிகழும் புரிதல், கோவலன் ஹீரோவின் குற்றவுணர்ச்சி என்று மன அலசல்களை நிறைய கோடிட்டு காட்ட வாய்ப்பிருந்தும் 70-எம்எம் அளவுக்குக் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

    ஜெனிஃபர் கானலியின் படங்களாக பார்த்து வரும் எனக்கு, அவருடைய மிகச்சிறிய காரெக்டர் வருத்தத்தைத் தந்தது. ஜான் மால்கோவிச்சும் கலக்கல் நடிகர். அவருக்கு சில சுவாரசியமான வசனங்கள் தரப்பட்டுள்ளன. அணுவை குறித்து ஐந்து வரிகளில் சிறுகுறிப்பு கொடுத்து, வாழ்க்கையின் பெருங்குறிப்பு வரைகிறார். அவருடைய வசனங்களில் இருந்து சில….

  • ‘ஆயிரம் பேர் நலமாக வாழ்வதற்கு, நூறு பேர் இறக்கத்தான் வேண்டும்’. (A hundred die so that a thousand may live.)

  • ‘நாகரிகத்தின் அடையாளமாக சிலர் தங்களின் வாழ்க்கையை சீக்கிரமாக முடித்துக் கொண்டு, மற்றவர்களை வாழவைப்பார்கள்’. (Some people die before their time so that others can live. It’s a cornerstone of civilization.)

    ஹீரோயின் மெலனி கிரிஃபித் தூக்கம் வராமல் கணவனுக்காக காத்திருக்கும்போது கையில் வைத்திருக்கும் எர்னஸ்ட் ஹெமிங்வேயின் ‘A Farewell to Arms’ஐ யாராவது வாசித்திருக்கிறீர்களா?

    ஏ.எம்.சி.யில் ஒளிபரப்பாகும்போது அவசியம் ஒரு முறை பார்க்கலாம்.

  • Jenniffer Connelly in Mulholand Falls 

    Jenniffer Connelly in Mulholand Falls Posted by Hello

    Mulholand Falls – Climax 

    Mulholand Falls – Climax Posted by Hello

    Mulholand Falls 

    Mulholand Falls Posted by Hello

    ஹிந்திப் பட வருமானம்

    ஹிந்திப் படங்களின் வருமானம்: 1999 முதல் தற்போதைய ‘யுவா’ வரை அமெரிக்காவில் எவ்வளவு சம்பாதித்துள்ளது? வெற்றிகரமான ஆங்கிலப் படங்கள், அமெரிக்காவிலும், மற்ற இடங்களிலும் எவ்வளவு ஈட்டுகிறது? இந்தியர்கள், அமெரிக்காவில் இருந்து பெருமளவில் வீட்டுக்கு அனுப்பப்பட்டதால், படங்களின் வரும்படி குறைந்துள்ளதா? ஹிந்தி ‘அலைபாயுதே’, ‘ஹே ராம்’ அமெரிக்காவில் மட்டுமாவது வெற்றிபெற்றதா? ‘கிலாடி 420’ போன்ற அமெரிக்க இந்தியர்களிடம் எடுபடாத படங்களுக்கு, எவ்வளவு பணம் வருகிறது? தெரிந்து கொள்ள…

    நன்றி: The Numbers – Box Office Data, Movie Stars, Idle Speculation

    குறிப்பு: அட்டவணையை இங்கு போட்டால் ப்ளாஃகர் தகராறு செய்வதால் ஜியோசிடிஸ் மூலம் கொடுத்துள்ளேன். (Blogger Help : When I put a table in my posts, there are extra blank lines. How do I get rid of these?)

    ரெண்டு வரி நோட்ஸ்

    எண்பதுகளின் சென்னை: டீன்களில் தமிழருக்கு வரும் அனுபவங்களை பாப் இசையில் சொல்லியிருக்கிறார்கள். பாடகர் இன்னும் கொஞ்சம் காம்ப்ளான் குடித்துவிட்டு வந்திருக்கலாம். வீட்டில் இருந்து தொலைபேசும் நண்பிகள் கிசுகிசுப்பது போல் இல்லை; ஆனாலும், துள்ளலான வரிகளுக்கு, ஷாகுல் ஹமீது பாய்ச்சல் கொடுத்திருக்கலாம்?! ஜோரான விசிலடிப்புடன் ஆரம்பிக்கும் இசை, மிரட்டாமல் கலக்கி இருக்கிறது. ஸ்ரீகாந்தின் மற்ற பாடல்களையும் கேட்க வேண்டும்! (தேவையில்லாத நோட்: எல்.சுப்ரமணியமின் மகள் ஒரு தமிழ் பாப் ஆலபம் வெளியிட்டிருக்கிறார். குட்டி பதினாறடி பாய்ந்திருப்பதாக ‘இந்தியா டுடே’ சொல்லியிருக்கிறார்கள்.)

    क़्युन ङॊ ग़या ना – ஹிந்தி: ‘மிஷன் காஷ்மீ’ரின் ‘ரிண்ட் போஷ் மால்’ பாடல் கேட்டிருக்கிறீர்களா? பிடித்திருந்ததா? அதே மாதிரி ரெண்டு மூணு ரீ-மிக்ஸில் ஷங்கர்-எஹ்ஸான்-லாய் இசையமைத்திருக்கிறார்கள். ஐந்து பாடல்களில், நான்கு பாடல்களை ஷங்கர் பாடியிருப்பது டூ மச். வேறு பாடகரை போட்டிருந்தாலாவது வெரைட்டி கிடைத்திருக்கலாம். (தேவையுள்ள நோட்: எனக்கு ஹிந்தி கொஞ்சம் மட்டுமே தெரியும். சாஸ்திரீய/கர்நாடக/தமிழ்/ஹிந்துஸ்தானி இசை கொஞ்சம் கூடத் தெரியாது. 🙂

    விருப்பப் பட்டியல் (2)

    தமிழோவியம்:

    1. default=’blank’ போடாமல் இருக்க வேண்டும்.

    2. மரத்தடி.காம் போல் எழுத்தாளர் பட்டியலிட்டு, ஒருவரின் அனைத்து படைப்புகளையும் எளிதில் படிக்கும் வசதி வேண்டும்.

    3. தொடர்கள் முதல் புதுக்கவிதைகள் வரை பொறுத்தமான ஓவியங்கள், படங்கள் போட வேண்டும்.

    4. ‘வேர்கள்’ தொடர வேண்டும்.

    5. வாரம் ஒரு குறுக்கெழுத்துப் போட்டி வேண்டும்.

    6. இன்னும் நிறைய படைப்பாளிகளின் வாராந்தர column அறிமுகம் செய்யவேண்டும்.

    7. தமிழில் வெளிவந்த மற்றும் வெளிவரும் தரமான வேறு புத்தகங்களையும் அடிக்கடி ஈ-புத்தகங்களாக கொடுக்க வேண்டும்.

    8. கோப்புகள் well-organizedஆக, எளிதில் தேடி கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

    9. வாரம் ஒருமுறை புதுப்பித்தல் தவிர, அன்றாட முக்கிய நிகழ்வுகளை குறித்து தராசு எழுத வேண்டும்.

    10. இசை உலா வேலை செய்ய வேண்டும்.