Daily Archives: ஜூன் 28, 2004

சொல்லாமலே போன கதை

‘செயின்ஃபில்ட்’ (Seinfeld) அமெரிக்காவில் புகழ்பெற்ற காமெடித் தொடர். அதில் வரும் ஒரு காட்சியை இந்தப் படம் நினைவுக்குக் கொண்டு வந்தது.

Seinfeld: ‘அந்த சினிமாவுக்குப் போகலாம்… ரெடியா?’

நண்பர்கள்: ‘ஐயோ… அந்தப் படமா! படு மோசமாச்சே… நான் வர மாட்டேன்!’

Seinfeld: ‘மோசமான படத்துக்குத்தான் கூட ஆள் வேண்டும். தனியாக காமெண்ட் அடிக்கமுடியாது; கிண்டல் செய்வதை ரசிக்க துணைக்கு ஒருத்தர் வேண்டும்!’

‘லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷனை’ (Lost in Translation) பார்த்த சோகத்தைப் பகிர்ந்து கொள்ள மனைவி இருந்தது ஆறுதல். படத்தின் அறிமுகம்+விமர்சனத்தை இங்கேயே நிறுத்திக் கொள்ளலாம். இருந்தாலும் இன்னும் கொஞ்சம்….

அமெரிக்கர்கள் இருவர், ஜப்பானில் சந்தித்து நட்பு பாராட்டுகிறார்கள். நடு வயது போராட்டத்தில் தத்தளிக்கிறோமோ என்று குழம்பும் ஹீரோ ‘பில் முர்ரே’. இளவயது உளவியல் பட்டதாரியாக அழகு ஹீரோயின் ‘ஸ்கார்லெட் ஜோஹான்ஸன்’. தொலைபேசியில் ரிப்போர்ட் கொடுக்கும் மனைவியை காதில் வாங்கிக் கொண்டு, குழந்தைச் செல்வங்களிடமிருந்து தப்பித்து, வாழ்க்கையை தள்ளி வருகிறார் ஹீரோ. புகைப்பட பிடிப்பு மேல் பெரும்பிடிப்பு கொண்ட காதல் கணவனிடம் பிடிப்பில்லாமல், போரடிக்கிறது ஹீரோயினுக்கு. விஸ்கி விளம்பரத்திற்காக டோ க்யோ வந்து சேருகிறார் ‘எண்பதுகளின் மார்க்கெட் இழந்த சிவாஜி கணேசன்’ போன்ற ஹீரோ.

சாதாரணமாக தனிமையில் வாடும் ஆண்-பெண் சந்தித்தால், ஒரு முத்தம், ஒரு நிலவு, ஒரு விருந்து, பிறகு படுக்கை என்று நிறையப் படங்கள் முன்னேறும். (படுக்கையில் எவ்வளவு தூரம் முன்னேறுகிறார்கள் என்று காட்டப்படுவதை பொறுத்து, PG-13, R, NC-17 என்று சான்றிதழ் தந்து விடுவார்கள்.) இங்கு இயக்குநர் சோஃபியா வித்தியாசப் படுகிறார். நிஜ வாழ்வில் எவ்வாறு நடந்து கொள்வோமோ, எவ்வாறு சும்மா, சாதாரணமாக அளவளாவுவோமோ, அவ்வாறே டயலாக்+காட்சியமைப்பு வைத்தது ஆச்சரியம்தான்.

ஹீரோ, ஹீரோயின் இருவரும் ஜெட்-லாஃக்கினால் அவதிப்படுகிறார்கள். (இவ்வளவு நாள் ஜெட்-லாஃக் நீடிக்கும் என்று எந்த மறத்தமிழனும் ஒப்புக் கொள்ளமாட்டான். கிடைக்கும் இருபது நாள் விடுமுறையில் இவ்வளவு நாள் ‘இது இரவா… இல்லை பகலா’ என்று கஷ்டப்பட்டால் வெகேஷன் கோவிந்தா…. கோவிந்தா….). ஜப்பானிய மொழி தெரியாமல் சிற்றுண்டி முதல் ஆஸ்பத்திரி வரை அல்லல்படுகிறார்கள். (முப்பது நாளில் ஜப்பானிய மொழி புத்தகங்களையும் நக்கலடிக்கிறார்கள். காதலியிடம் சொல்லும் ‘நான் உங்கள் குடும்பத்துக்கு அறிமுகமாக விரும்புகிறேன்’ போன்ற சொற்றொடர்களை எசகுபிசகாக ஓட்டல் மேனேஜரிடம் சொல்லி ரியாக்ஷன் பார்த்து சிரிப்பது… சொக்கன் இப்பொழுதுதான் ஜப்பானில் இருந்து திரும்பியுள்ளார்… அவ்வளவு கஷ்டமா இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும்).

இந்தப் படத்தை இயக்கியவர் ‘காட்ஃபாதர்’ புகழ் கோப்போலாவின் மகள் சோஃபியா. அவரின் நிஜ வாழ்க்கையை கிட்டத்தட்ட பிரதிபலிப்பவராக ஹீரோயின் கதாபாத்திரம். தனக்கும், தன் முன்னாள் கணவனுக்கும் இடையிலே இருந்த பிஸினஸ் ஒப்பந்தத்தை ஒத்த திருமணம், கணவனுக்கும் ‘There’s Something About Mary’ கேமரான் டையாஸுக்கும் உள்ள உறவு போன்றவற்றின் தாக்கம் நிறைந்திருப்பதாக விஷயமறிந்த IMDB வட்டாரங்கள் சொல்கிறது.

படத்தின் இறுதியில் பில் முரே, ஹீரோயினின் காதில் ஏதோ கிசுகிசுப்பார். அவர் என்ன சொன்னர், அவள் ஏன் மெல்ல சிரித்தாள் என்பது மிகவும் அலசப்பட்டது. அது என்ன என்பது நமக்குத் தெரியாது. கிட்டத்தட்ட படம் முழுக்கவே, அது போல் பூடகத்தன்மை.

மரத்தடி குழுமத்தில் ஷக்தி எழுதியதுபோல் ஸ்ல்ல்ல்ல்லோ படத்திலும் இதை சேர்க்கமுடியாது. ஆனால், மாறுபட்ட எதையோ சொல்ல வரும் கதாசிரியர், வித்தியாசமான தாக்கத்தைக் கொண்டு வர நினைத்து ஏமாற்றிக் கொள்கிறார் என்றே தோன்றியது! கவிதையில் சப்-டெக்ஸ்ட் பார்த்திருக்கிறேன். கதைகளில், திரைப்படங்களில் கூட ரசித்திருக்கிறேன். வெளிப்படையாய் ஏதும் புரியாமல், பூடகத்தனமை மட்டுமே குடிகொண்டு, ஆஸ்கார் விருது தேர்வாளர்களுக்கு மட்டுமே விரும்பக்கூடிய படம்.

விருப்பப் பட்டியல் – வைரமுத்து

கேள் மனமே கேள்

சத்தங்கள் இல்லாத தனிமை கேட்பேன்

சரஞ்சரமாய் வந்துவிழும் வார்த்தை கேட்பேன்

ரத்தத்தில் எப்போதும் வேகம் கேட்பேன்

ரகசியங்கள் இல்லாத வாழ்க்கை கேட்பேன்

சுத்தத்தைக் கொண்டாடும் சூழல் கேட்பேன்

சுடர்விட்டுப் பொலிகின்ற ஞானம் கேட்பேன்

யுத்தங்கள் இல்லாத உலகம் கேட்பேன்

உலகெங்கும் சம்பங்கு மழையைக் கேட்பேன்

கண்ணிரண்டில் முதுமையிலும் பார்வை கேட்பேன்

கடைசிவரை கேட்கின்ற செவிகள் கேட்பேன்

பின்னிரவில் விழிக்காத தூக்கம் கேட்பேன்

பிழையெல்லாம் மன்னிக்கும் பெருமை கேட்பேன்

வெண்ணிலவில் நனைகின்ற சாலை கேட்பேன்

விண்மீனை மறைக்காத வானம் கேட்பேன்

மென்காற்று வீசிவரும் இல்லம் கேட்பேன்

மின்சாரம் போகாத இரவு கேட்பேன்

தன்னலங்கள் தீர்ந்துவிடும் இதயம் கேட்பேன்

தங்கத்தைச் செங்கல்லாய் காணக் கேட்பேன்

விண்வெளியில் உள்ளதெல்லாம் அறியக் கேட்பேன்

விஞ்ஞானம் பொதுவுடைமை ஆகக் கேட்பேன்

மண்ணுலகம் கண்ணீரை ஒழிக்கக் கேட்பேன்

மனிதஇனம் செவ்வாயில் வசிக்கக் கேட்பேன்

பொன்னுலகம் பூமியிலே தோன்றக் கேட்பேன்

போர்க்களத்தில் பூஞ்செடிகள் பூக்கக் கேட்பேன்

கோடையிலும் வற்றாத குளங்கள் கேட்பேன்

குளத்தோடு கமலப்பூக் கூட்டம் கேட்பேன்

மேடையிலே தோற்காத வீரம் கேட்பேன்

மேதைகளை சந்திக்கும் மேன்மை கேட்பேன்

வாடையிலும் நடுங்காத தேகம் கேட்பேன்

வாவென்றால் ஓடிவரும் கவிதை கேட்பேன்

பாடையிலே போகையில்என் பாடல் கேட்டால்

பட்டென்று விழிக்கின்ற ஆற்றல் கேட்பேன்

அதிராத குரல்கொண்ட நண்பர் கேட்பேன்

அளவோடு பேசுகின்ற பெண்கள் கேட்பேன்

உதிராத மலர்கொண்ட சோலை கேட்பேன்

உயிர்சென்று தடவுகின்ற தென்றல் கேட்பேன்

முதிராத சிறுமிகளின் முத்தம் கேட்பேன்

மோகனத்து வீணைகளின் சத்தம் கேட்பேன்

பதினாறு வயதுள்ள உள்ளம் கேட்பேன்

பறவையோடு பேசுமொரு பாஷை கேட்பேன்

முப்பதுநாள் காய்கின்ற நிலவைக் கேட்பேன்

முற்றத்தில் வந்தாடும் முகிலைக் கேட்பேன்

எப்போதும் காதலிக்கும் இதயம் கேட்பேன்

இருக்கும்வரை வழங்கவரும் செல்வம் கேட்பேன்

தப்பேதும் நேராத தமிழைக் கேட்பேன்

தமிழுக்கே ஆடுகின்ற தலைகள் கேட்பேன்

இப்போது போலிருக்கும் இளமை கேட்பேன்

இருந்தாலும் அறிவுக்கு நரைகள் கேட்பேன்

வானளந்த தமிழ்த்தாயின் பாலைக் கேட்பேன்

வைகைநதி புலவர்களின் மூளை கேட்பேன்

தேனளந்த தமிழ்ச்சங்க ஓலை கேட்பேன்

தென்னாழி தின்றதமிழ்த் தாளைக் கேட்பேன்

மானமகன் குட்டுவனின் வில்லைக் கேட்பேன்

மாமன்னன் பாண்டியனின் வேலைக் கேட்பேன்

ஞானமகன் வள்ளுவனின் கோலைக் கேட்பேன்

ராஜராஜன் வைத்திருந்த வாளைக் கேட்பேன்

1995

பெரியகுளம் – திண்டுக்கல் நெடுஞ்சாலை. ஒரு விழா முடிந்து நண்பர்களோடு காரில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் பரிசைப் பிரித்துப் பார்க்கிறார் நண்பர் ஒருவர். அது ஒரு வெள்ளிக் குத்துவிளக்கு. நல்ல வெள்ளிதானா என்று தேய்த்துப் பார்க்கிறார் இன்னொரு நண்பர். “விளக்கை அதிகம் தேய்க்காதீர்கள்; பூதம் வந்துவிடப் போகிறது” என்று சிரிக்கிறேன் நான். அப்படி பூதம் வந்துவிட்டால் யார் யார் என்னென்ன கேட்பார்கள் என்ற சுவையான கற்பனை தொடங்க ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்கிறார்கள். கடைசியில் கேள்வி எனக்கு வருகிறது. காரை நிறுத்துங்கள் என்கிறேன். ஒரு புளிய மரத்தடி. தாள் கொடுங்கள் என்கிறேன்; தாள் இல்லை. அழைப்பிதழ்களின் வெள்ளைப் பக்கங்களில் எழுதத் தொடங்குகிறேன். எழுத வசதி எண்சீர் விருத்தம், புளிய மரத்தடியில் பூத்த கவிதை இது.

வைரமுத்து

நோட் #1: ‘அமர்க்களம்’ படத்தில் இந்தப் பாடல் இன்னும் கொஞ்சம் கூட்டல் கழித்தலோடு இடம்பெற்றது.

நோட் #2: அதே படத்தில் இடம்பெற்ற ‘மேகங்கள் எனைத் தொட்டுப் போனதுண்டு’, எனக்கு இந்தப் பாடலை விட மிகவும் பிடிக்கும்.

நோட் #3: பவித்ராவின் ஆங்கில வலைப்பதிவில், அவருடைய விஷ்-லிஸ்ட் படித்திருக்கிறீர்களா?