Irrational Exuberance


‘Gattacca’ படம் எதிர்கால மக்களை குறித்தது. அறிவியல் புனைகதை வகையை சேர்ந்தது. வருங்காலத்தில் அனைத்து குழந்தைகளும் செயற்கை முறையிலேயே கருத்தரிக்கப்படுகின்றது. பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்பது முதல், அறிவாளியா, விஞ்ஞானியா, விளையாட்டு வீரனா, அறிவியல் மேதையா, பங்குச்சந்தை வித்தகரா, எவ்வளவு வயது வாழலாம், என்ன கலர் கண், எவ்வளவு உயரம், முக்கிய உறுப்புகளின் அங்க அளவுகள் வரை அனைத்தும் தீர்மானிக்கப்பட்ட பின்பே செய்ற்கை முறையில் குழந்தை பிறக்கிறது. இவ்வாறு பிறப்பவர்களின் தகுதியை முன்கூட்டியே நிர்ணயித்து, என்ன வேலை, என்ன படிப்பு, எப்பொழுது ப்ரோமஷன் என்பது வரை கருவிலேயே அட்டவணை போட்டு பெற்றோர், பள்ளி, கல்லூரி, கம்பெனி, கோல்·ப் க்ளப் என அனைவருக்கும் அப்பாயிண்ட்மண்ட் கொடுத்து விடுகிறார்கள்.

இந்த மாதிரி செயற்கை குழந்தை வேண்டாம், இயற்கையான கருத்தரிப்பே வேண்டும் என்று பிறக்கும் குழந்தைகளுக்கு சமுதாயத்தில் மவுசு கிடையாது. ஈனப்பட்டவ்ர்களை போல் பார்க்கப்படும் அவர்கள், தகுதியிருந்தாலும் தாழ்த்தியே வைக்கப் படுகிறார்கள். கதையின் நாயகன் இயற்கை முறையில் பிறந்தவன். வில்லனாக வருபவன் அவனுடைய தம்பி. செயற்கை முறையில் பிறந்தவன். முன்கதை சுருக்கம் போதும்.

கதையில் ஒரு காட்சி: அண்ணன், தம்பி இருவரும் சிறு வயது முதலே, ஆற்றில் நீச்சல் போட்டி நடத்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் இயற்கை முறையில் பிறந்து சாதாரண மானுடர்களுக்கு வரும் நோய்களால் தாக்கப்பட்டு, கண் பார்வை குறைச்சலினால் கண்ணாடி போட்டுக் கொண்டு, மலேரியா முதல் ஜாண்டிஸ் வரை எல்லா வைரஸ்களும் குடியிருக்கும் அண்ணனே வெல்கிறான். அற்புதமான உடற்கட்டு, மனநலன், திரண்ட தோள்கள், நல்ல பாக்டீரியாக்கள் மட்டுமே உடலில் வைத்த செயற்கை தம்பி எல்லா நீச்சலோட்ட போட்டிகளிலும், அனைத்து வயதிலும் தோற்கிறான். எப்படி??? படத்தின் இறுதியில் தம்பி, அண்ணனிடம் கேட்கும் இந்த கேள்விக்கு விடை சொல்கிறான்:

“நான் திரும்பிச் சென்று கரையைத் தொடுவதை குறித்து கவலைப் படுவதில்லை. என்னுடைய இலக்கு எல்லாம் அதிக தூரம், மிக வேகமாக நீஞ்சி ஒரு வழிப் பாதையில் வெல்வதுதான். வென்ற பிறகு, திரும்பக் கரையை அடைவதை குறித்து கருத்தில் கொள்ள மாட்டேன்”.

ஜி-மெயிலுக்குப் போட்டியாக யாஹூ குதித்தது. இன்று ரீடிஃப் ஒரு GB-யாக இடவசதியை அதிகரித்து இருக்கிறது. இவர்களும் இந்த மாதிரி ‘கெட்டாக்கா’ அண்ணனின் மனோபாவத்தில்தான் இருக்கிறார்கள்.

ஜி-மெயிலிடம் ஒரு திட்டம் இருந்தது.

  • சிலருக்கு மட்டுமே இந்த கிகா பைட் மடல் சேவை. யாருக்கு வேண்டுமானாலும் எளிதில் கிடைக்காது.

  • அவர்களின் மடல்களும் ஆராயப்பட்டு, விளம்பரங்கள் கொடுக்கப்படும். காட்டாக, நான் நண்பனிடம் ·ப்ளோரிடா வருவதாக மின்னஞ்சல் கொடுத்தால், அவனுடைய பதிலில், டிஸ்னி வோர்ல்டுக்கு டிக்கெட் வாங்குவதற்கான சலுகைக் கூப்பானும், விமானப் பயண கம்பெனியின் சிறப்பு விலைப் பட்டியலும் கொடுக்கப் பட்டிருக்கும்.

    இப்போது களத்தில் குதித்திருக்கும் யாஹூ, ரிடிஃப் போன்றோரிடம் இது போல் எல்லாம் எதுவும் கிடையாது. ‘அவன் செய்து விட்டானா… நானும் copycat-ஆக செயல்படுகிறேன்’ என்னும் தொலைநோக்கு பார்வை மட்டுமே தெரிகிறது. இன்னும் கொஞ்ச நாள் கழித்து ஜி-மெயில் ‘எங்களின் சோதனை முடிந்து விட்டது. இனி அனைவரும் மாதம் பத்து டாலர் சந்தா கட்டவேண்டும்’ என்று அறிவித்தால், யாஹூவும், ரீடிஃப்-உம் வழிதொடரும்.

    தொண்ணூறுகளின் இறுதியில் இணையம் ஒரு பொற்களஞ்சியமாக விளங்கியது. இலவச இடவசதி, இலவச முத்து மாலை, வங்கியில் அக்கவுண்ட் திறந்தால் நூறு டாலர், ஷாப்பிங் தளத்தில் கணக்கு தொடங்கினால் டிவி என்று ‘பிதாமகன்’ சூர்யாவாக அள்ளி விட்டார்கள். அப்போதைக்கு ஐ.பி.ஓ. கொடுத்த பணம் இருந்தது. வரவுக்கு மேலே (சொல்லப் போனால், வரவே இல்லாமல் கூட) செலவழிக்க பங்குச்சந்தை ஆதரவளித்தது. அன்றும், இன்றும் (என்றும்?) அமெரிக்காவின் பொருளாதாரத்தின் உயிர்நாடியைக் கையில் வைத்திருக்கும், ஆலன் க்ரீன்ஸ்பான் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்து அவஸ்தைபடுத்துகின்றன: ‘Irrational Exuberance’

    என்னுடைய கவலை ‘எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை; எதிர்த்த வீட்டுக்காரனுக்கு இரண்டு கண்ணும் அவியட்டும்’ என்னும் கதையாக யாஹூவும், இன்ன் பிறரும், கூகிள் வாரி வழங்கும் இடத்தையும் காலி செய்ய சொல்லாமல் இருப்பதுதான்.

    (பாலாஜி)

  • 4 responses to “Irrational Exuberance

    1. கேட்டக்கா (?) – படம் அறிமுகத்துக்கு நன்றி. 2 3 நாட்களாக நல்ல பதிவுகளாய் உள்ளது. என் கண்ணில் கோளாறா? லில்லை உங்கள் மனதில் ஏதேனும் ஆகிவிட்டதா? நிலாச்சாரல் மாதிரி ஏதாவாது?.. 🙂 நன்றி – ஈதமிழா!

    2. நன்றி கார்த்திக்ராமஸ்… இதுக்கு முன்னாடி நல்லாயில்லே என்பதை அழகா சொல்லியிருக்கீங்க ;)) (சாய் பாபா மேட்டர் குறித்து நீங்க விவரமா எழுதலாமே; சுட்டிகள் இன்னும் முழுக்கப் படிக்கவில்லை).

    3. அடடா பாபா இதென்ன விதண்டாவாதம். நீங்கள் எப்போதுமே நல்லாத்தான் எழுதுறீங்கன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா?
      சாயி பாபா பற்றி : எனக்கு அவர்மீது எவ்வித கோபமும் இல்லை. நான் அவரை வெறுப்பவனும் இல்லை. அவரது ஆன்மீகத்தில் ஆழம் இல்லை என்பது என் சாராம்சம். விவரமாய் எழுதி என்ன செய்யறதாம். அவருக்கு எதிரா ஒரு ஆசிரமம் அமைக்கவா? 🙂 அட போங்க:)
      பக்தர்களின் மனம் கோணாமல் நடப்பது எனக்கும் உகந்ததே! ஷிரிடி சாயி பாபா குரு நானக்கின் குரு பரம்பரையில் வந்தவாராக ஒரு செய்தி அறிந்தேன். தகவலை மெய்பிக்க சரக்கு கையில் இல்லை இப்போது. எனக்கு வேலையெல்லாம், குரு கிரந்த சாகிப்புக்கும், அதற்கு மேலும்.
      மற்றோருக்கு பாபா இருப்பதில் எனக்கு நட்டம் ஒன்றும் இல்லை. பாராவின் வலைப்பதிவில்
      குட்டி சங்கரர் பற்றி தெரிந்து கொண்டேன். உலகம் போற போக்கே நல்லால்லே தங்கமே!
      நீங்கள் பிட்சியனா(பிலானி)? எந்த வருடம்? என்ன மேஜர்?

    4. இப்போது ஹார்ட்டிஸ்க் விலை ஐந்து வருடத்திற்கு முன்னால் இருந்ததை விட பல மடங்கு குறைந்து விட்டது. ஆனால் யாஹூ அதே ஒரிரண்டு MB கள் தான் கொடுத்து வந்தது. குறைந்த பட்சம் இடத்தையாவது அவர்கள் எப்போதோ அதிகரித்திற்க வேண்டும். ஜி-மெயில் வந்து மிரட்டிய பின்னால் தான் சலுகைகள் வருகிறது. மக்கள் இனி இடம் மட்டும் ஈமெயிலில் முக்கியம் இல்லை என்று சீக்கிரம் உணர்வார்கள். சீக்கிரம் அடுத்த கட்ட வசதிகளை எதிர்பார்க்க தொடங்குவார்கள்.

      நவன்

    பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.