காணவில்லை – இந்தியாவின் நைட்டிங்கேல்


இந்தியாவின் நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கர் ராஜ்ய சபா எம்.பி.யாக இருப்பது அனைவரும் அறிந்ததே. அவர்கள் பாடுவதற்கு அப்பாயிண்ட்மண்ட் கிடைப்பதே பெரிய விஷயம். இன்ன பிற நேரங்களில், ஆஷா போன்ஸ்லே, வாணி ஜெயராம் போன்ற கலைஞர்களை வளர்வதற்கு முன் கிள்ளிவிட துடிப்பவர். தேசபக்திப் பாடல்களையும் உணர்ச்சி ததும்பப் பாடுவார். இப்பொழுது பொழுது போக்காக எம்.பி.பதவி. பொழுது போக்கக் கூட அரசவை மட்டும் எட்டிப் பார்க்கவில்லை.

பேருக்குப் பின்னால் போட்டுக் கொள்ள இரண்டு இனிஷியல் கிடைக்கும் என்னும் எண்ணத்தில் பதவியை ஒப்புக் கொண்டாரோ என்னவோ? (இந்த நேரத்தில் காரணமில்லாமல் ‘சோ’ நினைவுக்கு வருகிறார். பதவியை தங்கத்தட்டில் வைத்து கொடுத்தபோது கூட, தன்னால், ரெகுலராக பங்கேற்க முடியாது என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டு எம்.பி.யானார்).

திரைப்பட உலகத்தை மொத்தமாக குறை சொல்லலாம் என்று ஆர்வத்துடன் சத்ருகன் சின்ஹா முதல் சுனில் தத் வரை லிஸ்ட் போடுவதற்கு முன்பே ஷபனா ஆஸ்மி சிவப்புக் கொடி தூக்குகிறார். மாநிலங்களவையில் இந்த பிரசினையை எடுத்து வைத்ததே ஷபனாதான். எம்.பி3 திருட்டு, கர்நாடக/ஹிந்துஸ்தானி இசை பாரம்பரிய பராமரிப்பு, பாடல் வரிகளுக்கான ரேட்டிங், சென்ஸார் சர்டிபிகேட் போல் திரை மற்றும் இசை ஆல்பங்களுக்கும் சான்றிதழ், புதிய கலைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில் தனியார் நிறுவனங்களுக்கான திட்டங்கள் என குரல் கொடுக்க ஆயிரம் விஷயம் இருக்கிறது. அதை எல்லாம் விட்டு விட்டு இசைத் தொண்டும், பள்ளி திறப்பு விழாக்களுக்கும் (சவுரவ் கங்குலியின் மனைவி நடத்தும் நடனப் பள்ளி திறப்பு போன்ற விழாக்களினால் குளிர்காலக் கூட்டத் தொடருக்கு ஆஜர் கொடுக்க முடியவில்லை – லதாவின் அதிகாரபூர்வ அறிக்கை) செல்வதே தலையாய கடமை என்றால் கலை சேவை மட்டும் செய்து கொண்டு இருக்க வேண்டியதுதானே?

எதற்காக தேச சேவைக்கு வருகிறார்?

2 responses to “காணவில்லை – இந்தியாவின் நைட்டிங்கேல்

  1. சொந்தமா எழுதினதுக்கு முன்னாடி ஒரு ஸ்டாம்ப் ஒட்டினா(சே, இங்கயும் ஒட்டணுமா) படிக்க வசதியா இருக்கும்ல? 🙂

    அம்மணி கல்கத்தா போனா ரசகுல்லா கெடைக்கும்னு போயிருப்பாங்களோ என்னமோ.

  2. கையெழுத்து மாதிரி ஒண்ணு போட்டுடலாம்… எங்கே பார்த்தாலும் ‘பாலாஜி’ என்று ரொம்ப முத்திரை தெரியப் போகுது 😛

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.