Daily Archives: ஜூன் 3, 2004

இலக்கிய அரசியலும் வெகுஜன அரசியலும் – காலச்சுவடு கண்ணன்

உலகத்தமிழ்.காம்: அறிவு ஜீவிகள் அரசியல் இயக்கங்களுடன் கொள்ள வேண்டிய உறவின் தன்மை பற்றியும், இருக்க வேண்டிய விலகல் பற்றியும் பரவலான விவாதங்கள் நடந்துள்ளன. குறிப்பாக எட்வர்ட் சையத்தின் கட்டுரைகள். இவற்றை ஆராய்வது அல்ல இங்கு நோக்கம். அரசியலின் ‘அசுத்தத்’திற்கு வெளியே சமூகத்தில் தனியாகச் ‘சுத்தம்’ என்று நிலவுகிறதா என்பதைப் பார்க்கலாம்.

பத்திரிகையாளர்கள் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் எந்த அவதூறையும் எழுதிவிட்டு ‘பத்திரிகைச் சுதந்திரம்’ என்ற உயர்ந்த விழுமியத்தில் பதுக்கிக்கொள்ளும் வரம் படைத்தவர்கள். தாங்கள் செய்யும் செயல்பாடுகளுக்கும் ஊழலுக்கும் அவர்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை.

சமூகப் பிரச்சினைகள் பற்றியும் மனித மனம் பற்றியும் தீர்க்கமான சிந்தனைகள் அறிவுஜீவிகளிடம் இருக்கலாம். இவை கரிசனம் கொண்ட அரசியல்வாதிகளுக்கும் பயன்படலாம். எனவே இந்த இரு சார்புகளுக்கும் இடையே உரையாடல் நடப்பது நமது சமூகத்திற்குப் பயனுள்ளதாக இருக்கலாம். மாறாக, இன்று அரசியலையோ சமூகத்தையோ சீர்திருத்தும் அறச்சார்புகளோ விழுமியங்களோ நமது அறிவு ஜீவிகளிடம் இருப்பதாகக் கருதுவது ஒரு மூடநம்பிக்கை என்றே கொள்ள முடியும்.

கலை – குழந்தை – மசாலாப் படங்கள்

சமீபத்தில் பார்த்ததில் விவரமாக விமர்சனம் எழுதலாம் என்று தள்ளிப் போட்டவற்றில் சில:

அமோரஸ் பெரஸ்: மணி ரத்னத்தின் புண்ணியத்தில் இந்திய வலைப்பதிவுகளில் நிறைய அடிபட்ட படம். இந்தப் படத்தின் அறிமுகமானவர் ‘ஒய் டூ மாமா தம்பியேன்’ என்னும் அடுத்த படத்திலும் பின்னியிருப்பதாக ஆஸ்கார் பரிந்துரைத்தது. அந்த மெக்ஸிகன் படத்தின் இயக்குநர்தான் நாளை வெளிவரும் புத்தம்புதிய ஹாரி பாட்டரின் இயக்குநர். (மாதவனின் மொட்டை தலைக்கும் ஹாரி பாட்டரின் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது இப்படித்தான் 🙂

படத்தின் கதாநாயகர் – எடிட்டிங். இரண்டாவது நாயகர் – காட்சியமைப்புகள். கொஞ்சம் ஒழுக்கத்தை போதிப்பது போல் தோன்றினாலும், நம் மனதின் எதிர்பாராத ஈடுபாடுகளையும் வினோத முடிவெடுப்புகளையும் அமர்க்களமாக, ஆனால் 70எம்எம் பயமுறுத்தல் இல்லாமல் காட்டியிருந்தார்கள். ‘காதல் என்றால் நாய்க்குணம்’ (love is a bitch) என்னும் தலைப்பு. மூன்று கதாநாயகர்களின் குணங்களையும் அவர்களின் செல்லப்பிராணிகளை குறியீடாகத் தொட்டுக்க மட்டும் வைத்துக் கொண்டு, ரத்தமும் சதையுமாக காட்டிய படம்.

ஷ்ரெக்:மூன்றரை வருடம் முன்பு பார்த்த ‘மின்னலே’க்குப் பிறகு வெள்ளித்திரையில் ரசித்த படம். குழந்தை பிறந்தவுடன் சில படம் ‘ஏ’ முத்திரையாலும், சில படம் கமல் வசனம் பேசுவதாலும், சில படம் சரத்குமார் நடித்திருந்ததாலும், பல படம் ‘பிஜி’ முத்திரை இல்லாததாலும் சின்னத்திரையில் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தோம். பெரிய ஸ்க்ரீனில் நிறைய ட்ரெயிலர்களுடன், பாப்கார்ன் கொறித்துக் கொண்டு, படத்தை நிறுத்தி நிறுத்தி செல்லும் அரசுப் பேருந்து விசிஆர் இல்லாமல், பாஸ்டன் டு பாம்பே செல்லும்பொழுது விடும் தமிழ்ப் படங்களின் இடைவேளை கூட இல்லாமல் பார்த்ததே முதல் சந்தோஷம்.

க்ரேஸி மோகன் வசனம் எழுதினால் ரெண்டு மூன்று முறை படம் பார்க்க வேண்டும். விஷயம் அறிந்த ஜீவன்களுடன் பார்த்தால் படத்தை ஆங்காங்கே நிறுத்தி நான் சாய்ஸில் விட்டுவிட்ட நகைச்சுவைகளை சுட்டி காட்டுவார்கள். இந்தப் படத்துக்கு க்ரேஸி வசனம் எழுதாவிட்டாலும், சில ஜோக்குகள் புரியவில்லை. கருணாஸ் செய்யும் அபத்த ‘வாலி’ உல்டா போல் அல்லாமல், விவேக்த்தனமாக ஒழுங்காக பல ஹிட் திரைப்படங்களை போட்டுத் தாக்கியிருந்தார்கள். புதிய காரெக்டராக அறிமுகமான பூனையாரின் அட்டகாசத்துக்காகவே டிவிடி வந்தவுடன் மறுமுறை பார்க்க வேண்டும்.

‘நீ நீயாகவே இரு; இன்னொருத்தருக்காக ‘செட்டப்ப மாத்தி கெட்டப்ப மாத்தி’ எல்லாம் முயற்சி செய்யாதே’ என்னும் உயரிய தத்துவத்தை குழந்தைகள் முதல் கோட்டான்கள் வரை மனதில் அறையுமாறு சொல்லியிருந்தார்கள்.

ஸ்மிலியாஸ் சென்ஸ் ஆஃப் ஸ்னோ: பீட்டர் ஹோக்கின் புத்தகத்தைப் படமாக்கியுள்ளார்கள். தமிழில் ஹீரோ செய்யும் சாகசங்களை இங்கு ஹீரோயின் அசத்துகிறார். ரெண்டு டூயட், ஒரு குடும்பப் பாடல், ஒரு சோகப் பாடல், ஒரு தத்துவப் பாடல் என்று மொழிமாற்றி சூப்பர் ஹிட் ஆக்கலாம். அதுதான் ‘விக்ரம்’ ஏற்கனவே வந்து விட்டதே என்கிறீர்களா!?

படத்தின் ஓரிரு வசனங்கள் மனதை மிகவும் கவர்ந்தது. மனிதனின் வளர்ச்சியையும் எண்கணிதத்தையும் ஒப்புமை செய்திருந்தார். குழந்தைப் பருவத்தில் எல்லாமே நிறையாகத் தெரிகிறது. வளர வளர நாம் சாதிக்க வேண்டியது, கிடைக்க வேண்டியது எல்லாம் நெகட்டிவ். கொஞ்சம் போல் நடு வயதில் மனிதர்களின் அழுக்கு, அவர்களின் ஆசை இடுக்குகள் எல்லாம் பின்னம். இன்னும் போகப் போக நாம் அறிய வேண்டியது, தேடல் எல்லாம் அண்ட பராபரத்தையும் தாண்டிய நிலை. மனிதர்களைப் புரிந்து கொள்வது காம்ப்ளெக்ஸ்கள் நிறைந்த கடினம் என்பது போல் விளக்கினார். இந்த உரையாடலுக்காகவே புத்தகத்தைப் படிக்கும் ஆர்வம் மேலிட்டது.

நானும் ஆங்கில, ஸ்பானிஷ், மெக்ஸிகன், தாய்வான், சீனா என்று படங்களாகப் பார்த்து தள்ளத்தள்ள இரமணீதரனும் பார்க்காத படங்களாக லிஸ்ட் போட்டு செல்கிறார்.

பூஞ்சிட்டு

நிலாச்சாரல்.காம்: குழந்தைகளுக்கான மாத இதழை நிலாச்சாரல் கொண்டு வந்திருக்கிறது. புதிர்கள், படங்கள், ஆங்கிலக் கவிதைகள் என்று சிறுவர்களுகளின் எழுத்தைப் பதிப்பித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எழுதும் ஆர்வத்தை இவை ஊக்குவிக்கும். ஆங்கிலக் கட்டுரைகளும் ஆங்காங்கே கொடுத்திருப்பது, தமிழ் அதிகம் பயன்பாடுத்தாதவர்களின் eyeballs வரவழைக்கும். மிகவும் பாராட்டப்படவேண்டிய முயற்சி.

கலைஞர் கருணாநிதிக்கு 81-வது பிறந்த நாள் வாழ்த்து



திராவகத் தேன் – வைரமுத்து

உன் மீது அடித்த புயல்

திசைமாறி அடித்திருந்தால்

இமயமலை கொஞ்சம்

இடம் பெயர்ந்திருக்கும்

உன் மீது அடித்த வெய்யில்

கடல் மீது அடித்திருந்தால்

பாதிச் சமுத்திரம்

பாலையாய்ப் போயிருக்கும்

நீயோ

புயலில்

சவாரி செய்தாய்

வெயிலை

சமாதி செய்தாய்

எப்படி நீ கற்றாய்

எரிமலைக் குழம்பு தடவி

வெற்றிலை போடும்

வித்தை?

நீ ஒரு

விசித்திரக் கலவை

திராவகமும் தேனும்

சரிவிகிதத்தில்

சுயமரியாதைப் பண்ணையின்

வீரிய விதையே

உன்னைப்

பாறைகளுக்கடியில்

பதுக்கி வைத்திருந்தாலும்

நிழல் தரும்

விருட்சமாய் அல்லவா

விரிவாய்?

தன்மானம் ஒன்றே

உன்

தனிக்கவசம்

சொல்

முத்தமிடவாவது

நீ

தலை தாழ்ந்ததுண்டா?

அறுபதா? உனக்கா?

அடையாளம் இருக்கிறதா?

நிஜத்தை விசாரிக்க

நீதிமன்றம் கிடையாது

காலண்டர் கூடப்

பொய் சொல்லும் காலமிது

உன் ரத்தத்தில் கரைந்திருக்கும்

தமிழ்த் தங்கம்

முதுமையின் நரைகளை

முறியடித்து விடுகிறது

தோல்வி உனக்கொரு

துயரமன்று – அதுபோல்

வெற்றியும் உனக்கொரு

விஷயமன்று

இலையுதிர் காலமும்

வசந்தமும் இங்கே

கிளைகளுக்குத்தான்

வேர்களுக்கல்லவே

நீ

தேர்தலின் நெற்றிக்குப்

பொட்டாய் இருப்பதினும்

இனத்தின் மார்புக்கு

விழுப்புண்ணாய் இரு

காலத்தின் கணக்கேடு

விருதுகளை விட்டுவிடும்

விழுப்புண்களையே அது

விரும்பும்

என்

கால்சட்டைப் பருவமுதல்

கனவுகளை வளர்த்தவனே

காந்த எழுத்தாலே

கண்களுக்கு இனித்தவனே

என்

கிராமத்து வானத்தில்

கீதமாய் நிறைந்தவனே

என் இதயத்தின்

நான்கு அறைகளும்

அந்த

நன்றியால் நுரைத்திருக்கும்

எனக்கு

இதயத்தை நேரடியாய்

இறக்கி வைக்கத் தெரியாது

ஆனால்

உன்னை நினைத்து

எப்போதாவது நான் உகுக்கும்

இருதுளிக் கண்ணீர் –

உன் தோளில் விழும்

அத்தனை மாலைகளையும்

அடித்துக் கொண்டோ டி விடும்

(கலைஞருக்கு மணிவிழா கவிதை – 1984)

அன்று: The Hindu : Karunanidhi cancels birthday functions

இன்று: கருணாநிதி பிறந்த நாள்: சிறப்பாக கொண்டாட திமுக முடிவு