உண்ணி – பா. ராகவன்


எதிர்வீட்டு மாலதி ஒரு பூனை வளர்த்துக்கொண்டிருந்தாள். பூனைக்குட்டி என்றும் வளர்ந்த பூனை என்றும் சொல்ல முடியாத பருவத்துப் பூனை அது.

கல்லூரிக்குச் செல்லும் நேரம் நீங்கலாக மாலதியைப் பெரும்பாலும் அந்தப் பூனையுடன் தான் பார்ப்பேன். வாசல் படியில் அமர்ந்து அதன் ரோமத்தைக் கோதிவிட்டுக்கொண்டோ , அதன் மூக்குடன் தன் மூக்கை உரசி விளையாடிக்கொண்டோ இருப்பாள்.

பூனையின் மேனி பார்க்கமட்டுமே பரிசுத்தம். எத்தனை கிருமிகள், உண்ணிகள் இருக்குமோ? ஐயோ, இந்தப்பெண் ஏன் இப்படி ஈஷுகிறாள்; உடம்புக்கு ஏதாவது வந்துதொலைக்கப் போகிறதே என்று எனக்குத் தான் எப்போதும் பதறும்.

எதிர்வீடு தான் என்றாலும் எங்காவது பார்த்தால் அடையாளம் கண்டு அரைப் புன்னகை செய்யுமளவு மட்டுமே எங்களுக்குள் நெருக்கம் என்பதால் கொஞ்சம் தயங்கினேன். போயும் போயும் முதல் சம்பாஷணையைப் பூனை உண்ணியிலிருந்தா தொடங்குவது?

ஒரு நாள் நட்ட நடு ராத்திரி ஒன்றுக்குப் போகவென எழுந்திருக்க வேண்டியதானது. உறக்கம் கலைந்ததால் கொஞ்சம் வெளியே வந்து இரவின் மரகத வெளிச்சத்தை அனுபவித்தபடி சற்று நின்றேன்.

தற்செயலாக எதிர்வீட்டு மொட்டைமாடியைப் பார்த்தால், அங்கே மாலதி! எப்போதும் போல் அப்போதும் அவள் மடியில் அந்தப் பூனை. என் யூகம் சரியானால், அவள் அப்போது அந்த ஜந்துவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

மிகத் தீவிரமாக.

என் வியப்பு அதுவல்ல; பூனையும் தன் மொழியில் கிசுகிசுப்பாக பதில் சொல்லிக்கொண்டிருந்தது தான்.

இது என் பிரமை, அல்லது தூக்கக் கலக்கத்தின் காரணமாயிருக்கும் என்று நினைத்தேன். ஒரு வேளை அவள் சித்தம் பிறழ்ந்தவளாக இருப்பாளோ? ஐயோ பாவம் வயசுப் பெண். நாளைக்கே கல்யாணமாகி புருஷன் என்றொருவன் வந்தால் , இதைக்கண்டு என்ன சொல்வான்? ஜீவ காருண்யம் உத்தமமானது தான். ஆனால் இது வேறுவிதமாகவல்லவா இருக்கிறது?

அவள் தன் பூனைக்கு வெங்காய சாம்பார் சாதமும் தக்காளி ஜூஸும் பாப்கார்னும் (ரகசியமாக) பான்பராகும் தருவதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். அப்போதே அவளிடம் இல்லாவிட்டாலும் அவளது பெற்றோரிடம் சொல்லலாம் என்று நினைத்திருக்கிறேன். எதுவோ என்னை அப்போதெல்லாம் தடுத்தது.

ஆனால் இந்த அர்த்தராத்திரி கூத்தைப் பார்த்தபின் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

விடியட்டும் என்று காத்திருந்தேன். பல் கூடத் துலக்காமல் நேரே அவள் வீட்டுப் படியேறி, கதவைத் தட்டிவிட்டு நின்றேன்.

சில விநாடிகளில் கதவு திறந்தது. அவர் எதிர்ப்பட்டார். படபடவென்று விஷயத்தைக் கொட்டிவிட்டு, கவனித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, பதிலுக்குக் கூடக் காத்திராமல் வீட்டுக்கு வந்து கதவைச் சாத்திக்கொண்டேன்.

அடுத்த சில நாட்களில் அவள் மீண்டும் என் பார்வையில் தென்பட்டபோதெல்லாம் பூனை இல்லாமல் தான் இருந்தாள். ஆனால் முகம் மட்டும் வாடியிருந்தது போலிருந்தது. நான் ஏதும் செய்வதற்கில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

விரைவில் அவள் சகஜநிலைமைக்குத் திரும்பியதையும் கவனித்தேன். பூனையை மறந்துவிட்டாள் போலிருக்கிறது .

எனக்கு அரிக்க ஆரம்பித்தது.

நன்றி: புத்தகப் புழு

One response to “உண்ணி – பா. ராகவன்

  1. பிங்குபாக்: ஒளிப் பாம்புகள் - பா ராகவன் « Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.