ஆன்மிகப் புத்தகங்கள் – ஆர். பொன்னம்மாள் (10)


பாண்டுரங்க மகிமை என்னும் பக்த விஜயம்: கிரி ட்ரேடிங் மற்றும் காமகோடி நிறுவனர் திரு. சொர்ணகிரி அவர்கள் பக்த விஜயம் எழுதும்படி கேட்டுக் கொண்டது 1980-இல். 96-இல் இருந்து காமகோடியில் ‘பரமாச்சார்யாள் பாதையிலே’, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி, எல்லை தெய்வங்கள், விவேக சிந்தாமணி என்று பல பகுதிகளில் ‘ஆழ்வார்களின் வரலாற்றையும்’ மாதப் பகுதியாக எழுதி வந்தார். வேமன்னா, கோபால்தாசர் போன்ற பக்தர்கள் வரலாறு சேர்ந்து பெருகிக் கொண்டே போய், நாராயண பட்டத்ரி, பில்வமங்கள், எழுத்தச்சன் என்று மலையாள அடியார்களும் இணைய ஜூன் 2003-இல் புத்தகமாக வெளிவந்தது. ஆயிரம் பக்கங்களைத் தாண்டும் இந்த நேர்த்தியான வெளியீட்டை எவர் படிக்கத் தொஅங்கினாலும் கீழே வைப்பது சிரமம். பள்ளி இடைவேளையில் வந்து எழுதிய மட்டும் இங்க் மை காய்வதற்கு முன் சுடச்சுடப் படித்துவிட்டு ஓடிய அந்த இனிய பொழுதுகளையும் மறக்க முடியவில்லை; படித்த பெரியோர்களின் தியாக உணர்வும் பொதுமனித அக்கறையும் வராலாறுகளும் மறக்கவில்லை.

தேவி திருவிளையாடல்: இதுவும் 1980-இல் எழுதி முடிக்கப்பட்டது. ஆனால், 1997-இல்தான் வானதியால் வெளியிடப்பட்டது. பராசக்தியின் லீலைகள்; மதுரை, காசி, கன்யாகுமரி வரலாறுகளும், மகிஷாசுரமர்த்தனி, சும்பநிசும்ப, பண்டாசுர வதம் எல்லாம் சொல்லப்பட்டிருக்கும் ஆன்மீக நூல்.

தசாவதாரம்: கங்கை புத்தக நிலைய வெளியீடாக டிசம்பர் 2001-இல் வெளிவந்த நூல். 184 பக்கங்களில் அனாவசியமான வர்ணனைகள் எதுவுமில்லாமல் பத்து அவதாரங்களையும் சிறுவர்களுக்கு ஏற்ற கதை வடிவில் சொல்லப்பட்டிருக்கின்றன.

(சிறு குறிப்பு வளரும்)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.