புத்தகம் வெளியிட, விற்க…


IHT: New do-it-yourself chapter for authors: அமெரிக்காவின் ஹிக்கின்பாதம்ஸ் (நீங்கள் பெங்களூர்வாசி என்றால் அமெரிக்காவின் ‘கங்காராம்ஸ்’) என்று பார்டர்ஸ் புத்தகக்கடையை சொல்லலாம். வாரா வாரம் சென்று புது புத்தகம் மேய்வதற்காகவும், சல்லிசான விலையில் என்ன புத்தகங்களை கூறு கட்டியிருக்கிறார்கள் என்பதற்கும், புத்தக அறிமுகக் கூட்டங்களில் என்ன அலசுகிறார்கள் என்றும் பார்க்க செல்லலாம். புத்தக விற்பனையில் மட்டுமே ஜொலித்துக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது பதிப்பாளராக முயற்சியை ஆரம்பித்துள்ளார்கள்.

அஞ்சு டாலர் கொடுத்து ‘சுயமாக புத்தகம் வெளியிடுதுவது எப்படி’ என்று ஒரு செய்முறை விளக்கத்தை வாங்க வேண்டும். அதில் கொடுக்கப்பட்டிருக்கும் முறைகளைப் பின்பற்றி இருநூறு டாலருடன் உங்கள் காவியத்தையும் இணைத்து அனுப்ப வேண்டியதுதான் பாக்கி. முப்பதே நாட்களில் உங்கள் கைகளில் பத்து பிரதிகள் தவழும். இருநூறுக்கு பதிலாக ஐந்நூறு டாலர் கொடுத்தால் இன்னும் ராஜ மரியாதை. உள்ளூர் புத்தகக் கடைகளின் முகப்பில் உங்களின் புத்தகம் மிளிரும். ISBN எண் கொடுப்பார்கள். பார்டர்ஸ்.காம் வலைதளத்தின் மூலம் ட்ரிஸ்டாடன் -டி-கன்ஹாவில் கூட வாசகர்கள் புத்தகத்தை வாங்கிக் கொள்ளலாம்.

.காம் மூலம் மில்லியனர்கள் உருவான காலத்தில் மின்புத்தகம், சுய புத்தக அச்சடிப்பு என்பது பரவலாக புகழ்பெற ஆரம்பித்தது. துக்கடா பதிப்பகங்கள் காணாமல் போன பிறகு மிச்சம் இருந்த சுய வெளியிட்டாளர்களை பார்டர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் சாப்பிட்டது. இது வரை 45,000 புத்தகங்கள் இந்த முறையில் வெளிவந்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை கடும் முயற்சிக்குப் பின்பே சுய வெளியீட்டை நாடிய எழுத்தாளர்கள், இப்பொழுது ஆரம்ப நிலையிலேயே பதிப்பகங்களின் படிகளை ஏறி இறங்காமல் தன்னம்பிக்கையோடு தானே வெளியிட்டு விடுகிறார்கள்.

வெளியிடுவது எளிதுதான்; தவறுகளை திருத்தி, எடிட் செய்து, வாசகர்களை படிக்க செய்வதுதான் கஷ்டமான காரியம்! வருடத்திற்கு ஒன்றரை லட்சம் புத்தகங்கள் வெளிவரும் அமெரிக்காவில் உங்களின் புத்தகத்தை பரவலாக்கவும் சில திட்டங்களை இவர்கள் கொடுக்கிறார்கள். முதல் வருடத்திற்குள் ஐந்நூறு பிரதிகள் விற்றுவிட்டாலே, நட்சத்திர அந்தஸ்து கொடுத்து, பதிப்பாளர்களே விளம்பரமும் தொலைகாட்சி நேரங்களும் இத்யாதி விளம்பர உத்திகளும் கொடுக்க விழைகிறார்கள். இதுவரை ஐ-யூனிவர்ஸ் வெளியிட்ட பதினேழாயிரம் புத்தகங்களில் வெறும் 84 மட்டுமே இந்த நட்சத்திர அந்தஸ்த்தை அடைந்திருக்கிறது. அவற்றில் இருந்தும் ஒரு அரை டஜன் மட்டுமே ஹிக்கின்பாதம்ஸ் போன்ற வெகுஜன புத்தகக் கடைகளை எட்டி பார்க்க முடிந்திருக்கிறது.

‘எழுத்தாள்ர்கள் (அல்லது அப்படி அழைக்கப்பட விரும்புபவர்கள்) சுய புத்தகபதிப்பின் மூலம் சீக்கிரமே ஆயிரக்கணக்கான புத்தகக்கடைகளையும் லட்சகணக்கான வாசகர்களையும் அடையலாம் என்பது மாயை’ என்கிறார் பார்டர்ஸ் நிறுவனத்தின் அதிபர்.

One response to “புத்தகம் வெளியிட, விற்க…

  1. தமிழில் இந்த மாதிரி எழுத்தாளர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வெளியிடும் பதிப்பகங்கள் உள்ளனவா? தயவுசெய்து தெரிவிக்கவும்.

    செல்பேசி எண் – 97107 20106

ஒளிர்ஞர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.