Daily Archives: பிப்ரவரி 23, 2004

பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்?

rhizomes&nodes: “நாடெர் எடுத்துள்ள முடிவு குறித்தும் எழுத வேண்டும்.அவர் ஜனநாயக் கட்சி மீது வைக்கும் விமர்சனங்கள் நியாயமானவையே- ஆனால் இம்முடிவு யார் தரப்பை வலுப்படுத்தும், ஒட்டுகள் சிதறினால் யார் பயனடவார்கள்?“.

தமிழ்நாட்டில் பெயர் குழப்பம் செய்வார்கள். திமுக சார்பாக மைலாப்பூரில் ‘ராமஜெயம்’ என்பவர் தேர்தலில் நின்றால், அதே பெயர் கொண்டுள்ள இருவர் சுயேச்சையாக போட்டியிடுவார்கள். திமுக-வை சேர்ந்த இன்னும் சிலர் போட்டி வேட்பாளராக எதிர்கட்சியின் சார்பில் களமிறக்கப் படுவார்கள். அவரின் சாதி, இனம், மொழி இன்ன பிற பாகுபாடை சேர்ந்தவர்களும் சுயேச்சையாக நிக்கவைக்கப் படுவார்கள். திமுகவும் இதே மாதிரி வேலையை தன்னுடைய எதிர்கட்சி வேட்பாளருக்கு பதில் மரியாதை செய்யும்.

அமெரிக்காவின் ரால்ஃப் நாடரும் கிட்டத்தட்ட இதே போன்ற உதவியை புஷ்ஷுக்கு மீண்டும் செய்வார் போலத் தெரிகிறது. போன தடவை ப்ளோரிடா மற்றும் பல மாநிலங்களில் விந்தியாவின் மெல்லிய ஆடை நெய்த இழை போன்ற ஓட்டு வித்தியாசத்தில் ஆல் கோர் தோற்கக் காரணமானவர். ஆனால், புளித்துப் போன இரு கட்சிகளுக்கு நல்ல மாற்றாகவும் விளங்குபவர். சிகரெட் விற்பவர்களும், காப்பீடு நிறுவனங்களும், மருந்து தயாரிப்பவர்களும், கார் கம்பெனிகளும் பணத்தைக் கொட்டி வளர்க்கும் கட்சிகளுக்கு நடுவே, தேர்தல் நிதி கையூட்டு வாங்காமல் போட்டியிட முயற்சிப்பவர்.

அமெரிக்காவின் முக்கிய நிறுவனங்கள் அனைத்துமே இரு கட்சி வேட்பாளர்களுக்கும் பணத்தை வாரி வழங்குகிறது. தங்களுக்குத் தேவையான சட்டதிட்டங்களை நிறைவேற்ற இது வழிவகுக்கும். கொடுக்கும் விகிதாசாரங்களில்தான் வேறுபாடு. இந்த டிவி சீரியல் மந்தை கூட்டத்தில் தனித்து நிற்பவர்: நாடர்.

த.மா.கா. சீரிய கொள்கைகளை கொண்டிருக்கலாம். ஆனால், தனிவழி சென்றதால், மீண்டும் அதிமுக கோலோச்ச வழிவகுத்தது. பஞ்சதந்திரக் காலத்தில் இருந்து சொல்லி வரும் ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ ஏனோ நினைவுக்கு வருகிறது.

மனுசனை மனுசன் சாப்பிடறாண்டா….

சில நாட்கள் முன்பு பிபிசியின் இந்த நாள் பகுதியில் லுமும்பா இறந்ததாக அறிவிக்கப்பட்ட தினத்தை நினைவு கூர்ந்திருந்தார்கள். இவரை குறித்து எனக்கு முதலில் அறிமுகம் செய்தவர் கணேஷ். ராகாகி-யில் அவர் எழுதியதில் இருந்து:



காங்கோ நாட்டின் முதல் பிரதமர் “லூமும்பா”…. சுருக்கமாகச் சொல்வதானால் காங்கோ நாட்டு காந்தி…

Patrice Lumumbaதனது பேச்சாற்றலினால் காங்கோ மக்களை ஓன்று படுத்தி பெல்ஜியத்திடமி¢ருந்து விடுதலை வாங்கித் தருகிறார். 35 வயதில் காங்கோவின் முதல் பிரதமர்…..ஆனால், வெளியேற வேண்டிய பெல்ஜிய அதிகார கும்பலும் அமெரிக்க CIA வும் சேர்ந்து இரண்டே மாதங்களில் லுமும்பாவை பதவியை விட்டுத் தூக்கிவிட்டு, கர்னல் “மொபுட்டு” வை பிரதமராக்குகிறார்கள்..லுமும்பா house arrestல்…. ஒர் மழை நாள் இரவில் லுமும்பா குடும்பத்தோடு காரில் தப்பிக்கிறார்… அவர்களை ஓட விட்டு நாட்டின் எல்லையில் பிடிக்கிறது ராணுவம்…..சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்.. காங்கோ நாட்டின் அரசாங்க விழாவில் “மொபுட்டு” லுமும்பாவின் தியாகத்தை மக்களின் முன் புகழ்ந்து கொண்டிருக்கும் போது, மொபுட்டுவின் ராணுவம் லுமும்பாவை காட்டில் வைத்து சுட்டுக் கொல்கிறது……..

படம் பாருங்கள்.. நமக்கு பரிச்சயமில்லாத, பழக்கமில்லாத ஓரு நாட்டின் தலைவன்….இருந்தாலும் படம் பார்த்தபின் லூமும்பா நம் மனதை தொட்டுச் செல்வது உறுதி… அதுவே இந்த படத்தின் படைப்பாளிகளின் வெற்றியும்………

படம் பிரெஞ்ச் மொழியில், ஆங்கில sub titles……

பிபிசி செய்தித்தளம் மேலும் தகவல்களைக் கொடுக்கிறது.

(அமெரிக்காவில் எந்த ஊடகமாவது இதே போல் ‘ஹைதி’ குறித்து பாரபட்சமற்ற அலசல்களைக் கொடுக்கிறதா?):

* கசாய் மாகாணத்தில் ஆயிரம் பேரை கொன்று குவித்ததாக லுமும்பாவின் மீது குற்றஞ்சாட்டப் பட்டிருந்தது.

* நான்கு மாதமே அரியணையில் இருந்த பிறகு, கம்யூனிச சிந்தனைகளால் ராணுவத்தின் ஆதரவை இழக்கிறார்.

* புதிய ஜனாதிபதி மொய்ஸே ஷோம்பெ “இது எங்களுடைய பிரச்சினை; மற்றவர்கள் தலையிட வேண்டாம்” என்று கூறி ஐக்கிய நாடுகள் சபை விசாரிக்க முயற்சித்ததை (இந்தியா காஷ்மீர் விவகரத்தைத் தடுப்பது போல்) தடுத்து விடுகிறார்.

காலம் நிகழ்வு
ஜூன் 1960 லுமும்பா பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.
அக்டோபர் 1960 பதவி பறிக்கப் படுகிறது
டிசம்பர் 1960 லுமும்பா கைதாகிறார்.
18 ஜனவரி 1961 லுமும்பா மற்றும் நெருங்கிய ஆதரவாளர்கள் encounter முறையில் கொலை செய்யப்படுகிறார்கள்.
செப்டம்பர் 1961 புதிய ஜனாதிபது கசுவுபூ ்கர்னல் சோசப் மொபுட்டுவை ஆட்சியிழக்க வைக்கிறார்.
நவம்பர் 2001 அமெரிக்கா மற்றும் பெல்ஜியாவுக்குத் தெரியாமல் லுமும்பா கொலை அரங்கேறியிருக்காது என்னும் பெல்ஜியாவின் அறிக்கை வெளியாகிறது.்
பிப்ரவரி 2002 பெல்ஜியா தவறை ஒத்துக் கொண்டு மன்னிப்பு கேட்கிறது. சுதந்திரத்தை நிலைநாட்ட கொங்கோவுக்கு மூன்று மில்லியன் நிதி அள்ளித் தருகிறது.

ஆஸ்கர் – ‘அ’ முதல்… – சந்திரன்

நச்சாதார்க்கும் இனியன் : “ஆஸ்கர் பரிசு பெற்ற படங்களின் வரிசையையும் சிறு குறிப்பை மட்டுமே ஆசிரியர் தந்துள்ளார். ஏன் அந்தப் படம் ஆஸ்கர் பரிசு பெற்றது- போன்ற செய்திகள் நூலில் இல்லை. வெறும் தரவுகள் வாசகனுக்கு எந்தவித அனுபவத்தையும் தரப்போவதில்லை. படம் பார்க்காத பார்வையாளர்களையும் பார்க்க வைக்கும்படி படங்களைப் பற்றி எழுதியிருக்க வேண்டும். நூலாசிரியர் பார்க்காத காரணத்தினால் பல படங்களை வாசகன் அறிந்து கொள்ள முடியாமல் ஆக்கப்பட்டிருப்பது இந்நூலின் குறை!”

நன்றி: ஆறாம்திணை

பீடி – (மீறல் வகைமையில் ஒரு சிறுகதை): கோபி கிருஷ்ணன்

சிறுகதைகள் மீது என்னுடைய பார்வை, ஒரு சிலரின் கவிதை மேலான கருத்து போல் ஆகி வருகிறது. குமுதம்/விகடனாலோ அல்லது இணையத்தில் காணப்படும் கதைகளினாலோ, இப்படி ஒரு எண்ணம் மேலோங்கி விட்டது. (இவ்வாறு தோன்றுவதற்கும் நான் கதை எழுத ஆரம்பித்ததுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை Smile). ரசிக்கும்படியான கதைகளை படித்தல் அரிதாகி வரும் தருணங்களில், நான் படித்ததில் பிடித்த ஒன்றில் இருந்து சில பகுதிகள்:



“பீடி ஒரு கலாச்சாரக் குறியீடு… கலாச்சாரப் பாதுகாவலர்கள் மன்னிக்காவிட்டால் பாதகமில்லை.

சூழலியல்வாதிகள் கண்டனம் தெரிவிக்கவும், ஓஸோன் படலத்தில் பொத்தல். மனப்படலத்தில் ஏராளமான பொத்தல்கள் . வாயில் சதா நிக்கோட்டினை நாடும் விழைவு.

புகைத்தலின் உதயம் : 16.10.68 இரவு. காரணம் அந்தரங்கமானது. என் மீது நானே அருவருப்பு கொள்ளச் சுயமாக ஏற்படுத்திக்கொண்ட களங்கம்.

புகைத்தலின் மறைவு : என் மறைவு நாள். என் பிணத்துக்கு எரியூட்டும் போது ஒரு கட்டு சந்திரிகா பீடியை என்னருகில் வையுங்கள். என் இறுதி ஆசை இது மட்டும்.

1975 தாம்பரத்தில் ஒரு ராத்தங்கலுக்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தேன். படுக்கையில் கிடந்தவண்ணம் புகைத்துக்கொண்டிருந்தேன். யதேச்சையாகக் கூரையைப் பார்த்ததில் ‘உங்கள் சாம்பலை எங்கு அனுப்ப?’ என்ற ஆங்கில வாசகம் தென்பட்டது. இருப்பினும் அமைதியாக புகைத்தல் தொடர்ந்தது.

பீடி ஒரு குறியீடு.”



நன்றி: ஆறாம்திணை

யோசிப்பாரா ரஜினி? – ஆர்.வெங்கடேஷ்

தமிழ் சிஃபி – சமாச்சர்:: ரஜினி: “நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக ஆகிவிட்டது. இந்தியா முழுவதுமே, சினிமா தரும் பாப்புலாரிட்டியை நம்பி, அரசியலில் கால் வைக்கும் பிரபலங்கள் ஏராளம். குறைந்தபட்சம் ஒரு எம்.பி.யாகவோ, மந்திரியாகவோ கூட ஆகிவிடுகிறார்கள். கவர்ச்சி அரசியல் என்பது இன்றைய இந்தியாவின் தலையெழுத்துக்களில் ஒன்று. அதை இந்தியர்கள் ஏற்கவும் பழகிவிட்டார்கள்.

ஆனால், ரஜினி விஷயத்தில் எம் கவலையெல்லாம், ரசிகர்கள் பக்கம்தான். இன்னும் ரஜினி வாயைத் திறந்து தமது அரசியல் பயணம் பற்றியோ, கொள்கைகள் பற்றியோ எதுவுமே பேசவில்லை. தனக்கென இயக்கம் கண்டு, ஜனநாயக அரசியலில் அவர் பங்கெடுத்துக்கொள்வதற்கான பணிகளைத் தொடங்கவும் இல்லை. ஆனால், ரசிகர்கள் மட்டும் உதைபட்டுக்கொண்டும், மண்டை உடைந்துகொண்டும் இருக்கிறார்கள்.”