Daily Archives: பிப்ரவரி 20, 2004

சுற்றுபுற வீடுகள் (4) – Muse Log

நான் கோக் குடிப்பதில்லைதான் என்றாலும், விரும்பி அருந்தும் மனைவி மற்றும் நண்பர்களை உஷார் செய்யவேண்டும். இந்தியாவில்(லும்) எந்தவிதமான நச்சுப் பொருளகளும் இல்லை கற்பூரமேற்றி சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் தயார் செய்யும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் புட்டிகள் வாங்குபவர்களும் கவனமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்தத் தண்ணீர் குடித்தாலும் ஆபத்தே. பேசாமல் சக்கரவாகப் பறவையாகி மழையை மட்டும் அட்மாஸ்ஃபியருக்கு அப்பால் சென்று குடித்து விட்டு உயிர் வாழவேண்டும்.

குமரகுருவின் ம்யூஸ்-லாஃக் மூலம் என்னுடைய வருகைப் பதிவேடு அதிகரித்தது. அவருடைய Muse Log-க்கு ஒரு அறிமுகம் தேவையில்லை. கல்யான் வர்மாவின் கோக் ஏன் குடிக்கக்கூடாது என்னும் செய்முறை விளக்கத்தை பார்க்க சொல்லியிருந்தார்.

குமரகுரு சொல்வது போல் இந்தியா மிளிர்கிறது பார்ப்பதற்கு ரம்மியமாக உள்ளது. விஐபி லக்கேஜ் விளம்பரத்தில் வந்த அம்மா-பையன் பிரிவாக இருக்கட்டும், இப்போது வரும் ஐசிஐசிஐ ‘நான் உன்னுடன் வாழ்நாள் முழுவதும்’ ஆகட்டும், ரிலயன்ஸ் மொபைலின் சம்பந்தம் இல்லாமல் ஊக்கமடைபவர்களைக் காண்பிக்கும் செல்பேசியாகட்டும், ‘ஹமாரா பஜாஜ்’ உருக்கமாகட்டும், ஒரு செண்டிமெண்டல் ஃபூலாகிய எனக்குப் பிடித்த விளம்பரங்கள் அனைத்துமே.

அவர்கள் தாய்மண்ணையும், இந்தியப் பற்றையும், பாசபந்தத்தையும் காட்டி காசு செலவழிக்க சொல்கிறார்கள். வாஜ்பேயி ஓட்டு கேட்கிறார். தவறா?

நன்றி: வர்மா

ஆஸ்கார் ஆருடங்கள்

ஆஸ்கர் விருதுகளில் கிட்டத்தட்ட நிறையவற்றை ஹேமந்த் சரியாகவே கணித்துள்ளார்.

என்னுடைய பட்டியல்:

விருது பெறப்போகிறவர் பெற்றிருக்க வேண்டியவர்
சிறந்த நடிகர் ஜானி டெப் சான் பென்
சிறந்த துணை நடிகர் டிம் ராபின்ஸ் பெனிசியோ டெல் டோரோ
சிறந்த நடிகை டயான் கீடன் சர்லீஸ் தெரான்
சிறந்த துணை நடிகை ஹாலி ஹண்டர் ரெனீ செல்வகர்
சிறந்த வரைமுகட்ட படம் ஃபைண்டிங் நீமோ ??? (தெரியாது)
சிறந்த கலை லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் நான் விரும்பும் படம் பரிந்துரைக்கப் படவில்லை (பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்) எனவே, தி லாஸ்ட் சாமுராய்
சிறந்த உடை அமைப்பு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் லாஸ்ட் சாமுராய்
சிறந்த முகப்பூச்சு லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் லாஸ்ட் சாமுராய்
சிறந்த இயக்கம் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மிஸ்டிக் ரிவர்
சிறந்த எழுத்து (புத்தகத்தை அடிப்படையாக வைத்து) லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்
சிறந்த எழுத்து (திரைக்கதை) லாஸ்ட் இன் ட்ரான்ஸ்லேஷன் ஃபைண்டிங் நீமோ
சிறந்த மாயாஜால வித்தை லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்
சிறந்த இசை (திரைப்படம்) லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் பிஃக் ஃபிஷ்
சிறந்த படம் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் மாஸ்டர் அண்ட் கமாண்டர்: தி ஃபார் சைட் ஆஃப் தி வோர்ல்ட்

ஆஸ்கார் பரிந்துரைகள் வந்தவுடன் கொடுத்த வலைப்பதிவு.

கணினி உபயோகங்கள்



For additional tech toons visit jklossner.com

எனக்குப் பிடித்தக் கதைகள்(73) – பாவண்ணன்

தேடியதும் கிடைத்ததும் – கரிச்சான் குஞ்சுவின் “நூறுகள்”

1)

பிறகு ஏதோ முடிவுக்கு வந்ததைப்போல பெட்டியை எடுத்துக்கொண்டு விறுவிறுவென்று ரயிலிலிருந்து இறங்கினாராம். நிலையத்தை விட்டு பத்துநிமிட தூரம் நடந்து வந்து ஒரு விடுதிக்குள் தேநீர் குடிப்பதற்காக நுழைந்தாராம். பிறகு, வெகுஇயல்பாக அப்பையைத் திறந்து பார்த்தாராம். குழந்தைகளுக்கான ஒருசில ஆடைகள். சில புதிய காலணிகள். வண்ணக் காலுறைகள். ஒரு பொம்மை. சில ஆப்பிள்கள். கொய்யாப்பழங்கள். இவற்றுக்கிடையே கைக்குட்டையால் கட்டப்பட்ட நூறு ரூபாய்க் கட்டொன்றும் இருந்ததாம். யாரிடமிருந்தோ கைப்பற்றிக்கொண்டு ஓடோடி வந்ததைப்போன்ற எண்ணங்களும் பின்னாலேயே யாராரோ துரத்திக்கொண்டு வருவதைப்போன்ற எண்ணங்களும் ஒருசில நொடிகளுக்கு மனத்தை அழுத்தினவாம்.

“அந்தப் பயணமே யாரையாவது பார்த்துப் பணத்தைப் புரட்டி எடுத்துக்கொண்டு வருவதற்காகத்தான். பத்துப்பேரைப் பார்த்தோம். பார்க்காத அந்தப் பதினோராவது ஆள் தாமாகவே முன்வந்து கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் என்று எண்ணிக்கொள்ளலாமே” என்று பதறும் தன் மனத்துக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினாராம். வீட்டுக்கு வந்ததும் அறையை மூடிக்கொண்டு பணத்தை எண்ணியிருக்கிறார். பத்தாயிரம் ரூபாய். அப்போதே மகனை அழைத்துக்கொண்டு பெங்களூருக்குச் சென்று கல்லூரியில் சேர்த்துவிட்டு விடுதிக்கும் பணத்தைக் கட்டிவிட்டு வந்தாராம். திரும்பிவரப் பேருந்துக்கான பணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மிச்சப் பணத்தை அங்கேயே ஒரு வங்கியில் மகனுடைய பெயரில் போட்டுவிட்டாராம்.

எல்லாவற்றையும் சொல்லிமுடித்துவிட்டுத் தான் செய்தது சரியா தவறா என்ற கேள்வியை என் முன்னால் வைத்தார். நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமே எழவில்லை. சரி என்கிற பதிலையே அவர் ஒரு பக்கம் முன்வைத்துக்கொண்டு தவறுதான் என்கிற வாதங்களுக்கான கருத்தோட்டங்களை அடுக்கினார். தொடர்ந்து அவர் வாதங்களை அவரே நொறுக்கும்படி சரிதான் என்கிற வாதங்களுக்கான கருத்தோட்டங்களையும் அடுக்கினார்.

—-

2)

வாழ்வும் ஒரு சீட்டாட்டம் போலத்தான். வெற்றிக்கான சீட்டு கிடைத்துவிட்டால் ஆட்டத்தில் மகிழ்ச்சி பிறந்துவிடும். ஆனால் அச்சீட்டின் வருகையோ வராமையோ நம் கையில் இல்லை. அட்டைகளின் சுழற்சியில் யாருக்கு அது வருமோ , யாருக்கு அது பொருந்திப்போகுமோ என்பது இறுதிவரை தெரிவதே இல்லை. வாழ்வில் அடைகிற வெற்றிக்கும் இப்படி ஒரு வெற்றிச் சீட்டு தேவைப்படுகிறது. சிலருக்கு இந்த வெற்றிச் சீட்டு எந்த முயற்சியும் இல்லாமலேயே கிடைத்துவிடுகிறது. வேண்டாம் என்று உதறித் தள்ளினாலும் காலடிக்கு வந்து சேர்கிறது. வேண்டும் என்ற தவமிருப்பவர்கள் கைகளில் அகப்படுவதே இல்லை. இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் வெற்றி எப்போது வரும் எப்போது கைநழுவிப்போகும் என்பது தெரிவதும் இல்லை.

எப்போதுமே தோல்வியைத் தழுவுகிறவர்தான் அவர். வாய்ப்பேச்சில் எப்படியாவது வெளியுலகில் காரியங்களைச் சாதிக்க முயல்பவர். கதை நடக்கும் நாளில் வெளியுலகில் தம் காரியத்தில் வெற்றி காண முடியாதபடி பெருந்தோல்விகள் காத்திருக்கின்றன. தன் படுக்கைக்கு நூறாவது பெண்ணை அழைத்துவந்ததை வெற்றியாகக் கொண்டாடுகிறவன் முதலாக சுந்தர காண்டத்தை நூறாவது முறையாகப் பாராயணம் செய்வதை வெற்றியாகக் கொண்டாடுகிறவன் வரை யாரும் உதவ முன்வரவில்லை. மாறாக காலமெல்லாம் தோல்வியையே தந்தபடியிருந்த சீட்டாட்டம் வெற்றியைத் தருகிறது. வெற்றிக்கும் தோல்விக்கும் தனிப்பட்ட அர்த்தம் எதுவுமில்லை. அவை வெறும் சொற்குவியல். அந்த உண்மையை நாம் கண்டடையும்போது நம் மனத்தில் “நூறுகள்” என்னும் கரிச்சான் குஞ்சுவின் சிறுகதை ஆழமாக வேரூன்றுகிறது.

*

http://www.thinnai.com/ar0822035.html

‘நாவலும் யதார்த்தமும்’ – சுந்தர ராமசாமி

1.

பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ் மேடைப் பேச்சுகளை உள்ளூர ஒரு அநாகரிகம் என்றுதான் என் மனம் மதிப்பிடுகிறது. தன் முன்னால் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து தான் விரும்பும் கருத்துக்களை பேச்சாளர் கூறுவது; அதற்கான நேரத்தையும் அவரே தீர்மானித்துக் கொள்வது; பேசி முடித்ததும் அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு தன் பேச்சைப் பற்றி என்ன அபிப்ராயம் என்பதை அறிய துளிகூட அக்கறை இல்லாமல் மற்றோரிடத்துக்குப் பேசப் போய்விடுவது. பேச்சாளர் என்ன நினைக்கிறார் என்பது கேட்பவர்கள் எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. ஆனால் பேச்சைக் கேட்டவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பேச்சாளருக்குத் தெரிவதேயில்லை. அவருக்கு அதற்கான அக்கறையும் இல்லை. சிந்தனை உலகத்தைச் சார்ந்த இந்த ஒருவழிப் போக்குவரத்தைத்தான் நான் அநாகரிகம் என்கிறேன்.

—-

2.

எங்களுக்கு அந்தக் கவலை இல்லை என்று நீங்கள் சொன்னால் அதிகக் கவலை கொண்டிருக்கிறீர்களோ என்று நான் சந்தேகப்படத் தொடங்குவேன். ஏனென்றால் எந்த விஷயத்தைப் பற்றி நான் கவலை கொண்டிருக்கிறேனோ அந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் யாராவது விசாரித்தால் எனக்கு அதுபற்றி கவலையில்லையே என்றுதான் சொல்வேன். தன்னைப் போல் பிறரையும் நினைப்பதுதானே மனித சுபாவம். மனிதர்களுக்குரிய அநேக சுவபாவங்கள் எனக்கும் உண்டு. என் பிம்பத்திற்கு அந்தச் சுபாவங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு உண்டு.

—-

3.

ஒரு நாவலைப் படிக்கும்போது அது ஏதோ ஒரு விதத்தில் நம்மிடம் ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உறவு சாதகமானதா? பாதகமானதா? நிறைவைத் தரக்கூடியதா? அல்லது குறையுணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதா என்பதையெல்லாம் இரண்டாவதாகப் பார்க்க வேண்டியது. நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை அடிக்கடி நினைத்துக் கொள்கிறோம். நமக்குக் கட்டோடு பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். நண்பர்களைவிட அதிகமாக அவர்களை நினைத்துக் கொள்கிறோம். எதற்குச் சொல்கிறேன் என்றால் நமக்குப் பிடிக்கும் நாவல்கள்தான் நம்மைப் பாதிக்கின்றன என்பது அல்ல. பிடிக்காத நாவல்களும் நம்மைப் பாதிக்கின்றன. எதிர்மறையாகப் பாதிக்கின்றன. எந்தப் பாதிப்பையும் நிகழ்த்தாத நாவல் மனதிலிருந்து உதிர்ந்து போய்விடுகிறது. நேற்றுப் படித்து முடித்த ஒரு நாவல் இன்று மனதிலிருந்து உதிர்ந்துபோய்விட்டது; 20 வருடங்களுக்கு முன்னர் படித்த நாவல் மனதுக்குள் இன்றும் ஜீவகளையுடன் இருக்கிறது. ஏன் ஒன்று உதிர்ந்துபோயிற்று? ஏன் மற்றொன்று உயிர்ப்புடன் வாழ்கிறது? படைப்புச் சம்பந்தப்பட்ட அடிப்படையான பிரச்சனையே இதுதான்.

—-

(திருவண்ணாமலை, முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை – 16.8.1999)

http://www.thinnai.com/ar0815033.html

தமிழில் எழுதலாம் வாருங்கள்! – காசி

வலையில் பரப்பலாம் வாருங்கள்: “புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இணையம் ஒரு இன்றியமையாத பிணைப்பை தங்கள் தாய்ச் சமூகத்துடன் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. வாசிக்க நேரம் போதவில்லை என்று சொல்லும் அளவுக்கு இன்று இணையத்தில் தமிழ்த் தளங்கள் வளர்ந்து வருகின்றன.”

சுவாரசியமான கேள்விகளுக்கு விடையளிப்பதாக வாக்கு கொடுத்து காசி ஆரம்பித்திருக்கிறார்.