Daily Archives: பிப்ரவரி 19, 2004

கம்பீரம் – திரைப்பாடல் அறிமுகம்

நட்சத்திரங்கள்: சரத்குமார், லைலா, ப்ரணதி

இசை: மணி ஷர்மா

ஒரு சர்க்கரை நிலவேவும், ஆள்தோட்டா பூபதியும் கொடுத்த பின்பு மணி ஷர்மாவின் இசைக்குப் பெரிய ரசிகனாய் ஆகி யிருந்தேன். ஏழுமலை, நரசிம்மாவுக்குப் பிறகு ‘சித்தப்பா’ படத்துக்கும் இது போதும் என்பதாலோ என்னவோ அடக்கியே வாசித்திருக்கிறார்.

1. ஒரு சின்ன வெண்ணிலா கல்பனா 1/4 (பாடல் வரிகளுக்காக)

காதலனின் நினைப்பில் கசிந்துருகும் காதலி தாலாட்டுகிறார். காதலியின் தோழிகளும் கோரஸ் நடனமாடுகிறார்கள். தூக்கம் வராமல் கஷ்டப்படும்போது கேட்டால் பாடல் முடிவதற்குள் ‘கொர்’ விடலாம். தமிழ் சினிமா தத்துவத்தின் படி, இவ்வாறு ஆராதித்தால், இடைவேளைக்குப் பிறகு அனேகமாக ஹீரோயினுடன் சண்டையோ, அல்லது மனைவியின் அகால மரணமோ நிச்சயம். எம்.ஜி.ஆரின் வழித்தோன்றலாக, உதயசூரியனை குறித்தும் மறக்காமல் நினைவூட்டுகிறார்.

சிரிக்க வைக்கும் வரிகள்:



‘அந்தக் கோவில் கதவை மூடு

இவள் கைகூப்பும் கடவுள் நீதான்!

அடக் கண்ணீரே இல்லாக் கண்கள்

இனி என்னோட கண்கள்தானே!’

2. கண்ணின் மணியே எஸ்.பி.பி., குழந்தை வைஷாலி 2/4

ரொம்ப நாளைக்குப் பிறகு அப்பாவும் பையனும் பாடும் அழகிய மெலடி. நடுநடுவே வரும் குழந்தை குரலில், கொஞ்சம் ரங்கீலாவின் சிறுவன் டைப் ராப்பும் பொருத்தமாக இருக்கிறது.

குழந்தையின் கேள்வி வரிகள்:



‘மிக்கி மவுஸா மாறி டிஷும் போட வாப்பா…

உர்ருன்னுதான் எப்பவுமே இருப்பது ஏம்ப்பா?’

3. செம்பருத்தி பூவே ஸ்ரீனிவாஸ், கங்கா 1.5/4

சரத்தும் லைலாவும் வெளிநாட்டில் டூயட் பாடுகிறார்கள். நொடிக்கொரு சுற்றுலா தளம். ஜிகினா ஆடைகள். குழப்பமான உள்ளூர்காரர்களின் பார்வைகளுக்கு நடுவே ஆடுகிறார்கள். நாம PG-13 மட்டும்தானே பொதுவிடங்களில் செய்வோம், இவர்கள் கிட்டதட்ட R படத்துக்கான செய்கையெல்லாம் பப்ளிக்காக செய்கிறார்களே என வியக்கிறார்கள்.

சிந்திக்க சில வரிகள்:



‘மனசுக்குள்ள வந்து மைதா அரச்சியே

முரட்டுத்தனமே உன்ன நான் முறுக்கிக் காட்டட்டா’

4. சம்பல் காட்டு கொள்ளைகாரி சங்கீதா 1.5/4

வெண்குழல்விளக்குப் பிடிக்க நிச்சயம் தியேட்டருக்கு வெளியே சென்று வரலாம். அதற்குள், அரைகுறை ஆட்டத்தை ரசிக்கும் வில்லனின் குகைக்குள் சரத்குமார் புகுந்திருப்பார். தங்கர் பச்சானுக்கு ‘பத்திரக்கோட்ட மாமா’ தேவைப்படுவது போல் ‘கம்பீர’த்துக்கும் ஆட்டப் பாடல் அவசியம்தான் போல!

கொஞ்சம் XXX காட்டும் வரிகள்:



‘இதோ இந்த இடுப்பு…

செங்கல் சூளை நெருப்பு

பஸ்மமாகத் தொட்டுக்கோடா டேய்!

ஒரே ஒரு சுண்டு விரல்

என்மேல வச்சுப்பாரு

ஒரு கிலோ எடை கூடும் டோய்’

5. நானாக நானிருந்தேன் விஜய் யேசுதாஸ், சுஜாதா 3/4

கிராமப்புற லொகேஷன். சுங்கிடிப் புடவையில் பாடலின் ஆரம்பத்தில் தோன்றும் லைலா, தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும் தாவணி, அதுவும் இல்லாத பாவாடை-சட்டை என விதவிதமாக வெட்கப்படுகிறார். மணி ஷர்மாவின் அட்டகாசமான தெலுங்கு பீட் + சொக்கும் வரிகள் + காதல் தெறிக்கும் பாடகர்கள், பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும்.



‘குறுத்தோலையாய் நானும் உன் வாசல் வந்து ஊஞ்சலாட

மாவிலையாய் நீ சேர்ந்து கொள்வாயோ?

தூரிகை உதடு நீதான்

காகிதக் கன்னம் நான்தான்

இரவும் பகலும் எழுதேண்டா’

பாடல்களைக் கேட்க இங்கே செல்லவும்.

நன்றி: தமிழோவியம்

வலைப்பூ வைரஸ்

கோழி சுரம், சார்ஸ் போன்று இணையத்தில் மட்டும் தோன்றியிருக்கும் நோய் உங்களைத் தாக்கிவிட்டதா?

10. கணினி திரை ஒளிர ஆரம்பிப்பதற்கு முன்பே வலைப்பதிவுகள், உங்கள் கண்களுக்குத் தெரியும்.

9. ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிடுவது போல், நான்கு தடவையாவது வலைப் பதிவீர்கள்.

8. உங்களுக்கென மூன்று வலைப்பதிவாவது இருக்கும்.

7. கேட்கும் பாடல், boss சொல்லும் வணக்கம், காலையில் ட்ரெயின் தவறவிட்டது என எதைப்பற்றியும் வலைக்குறிக்க விருப்பம்.

6. புதிதாக யாராவது இலவசமாக வலைப் பதிக்க வாய்ப்பளித்தால், பயனராகப் பதிந்து விடுவீர்கள்.

5. பத்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி பின்னூட்டம் பகுதியை நோட்டம் விடுவீர்கள். அரை மணிக்குள் பதில் எதுவும் வராவிட்டால், பதில் வராத சோகத்தையே வலைப்பதிய வேண்டும்.

4. தினசரி நூறு வலைப்பதிவுகளையாவது மேய்ந்து, மறுமொழி வாயும் வைத்து விடுவீர்கள். பதில் பெரிதாகத் தோன்றினால், அதை அப்படியே உங்கள் பதிவுக்கு புதிய கருவாக்கி விடுவீர்கள்.

3. வார்ப்புருவை வாரத்துக்கு ஒருமுறையும், பின்னூட்ட சேவகரை மாதத்துக்கு ஒரு முறையும், வண்ணக்கலவைகளை பத்து நாளுக்கு ஒரு தடவையும், வடிவமைப்பை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மாற்றுவீர்கள்.

2. இன்று புதிதாக பார்த்த ஸ்மைலிகளையும், புதிய சின்னங்களையும் பின்னூட்டப் பெட்டிகளில் கொடுக்க வேண்டும்.

1. எட்டு விதமான வருகைப் பதிவேடோடு, அரட்டை பெட்டி, அறிவிப்புப் பலகை, செய்தியோடை, விருந்தினர் கணக்கெடுப்பு இத்யாதி வைத்துக் கொண்டிருப்பீர்கள்.

கொசுறு: அரசியல் சின்னமாக எங்கவது விளம்பரம் கொடுக்க வாய்ப்பு கிடைத்தால், வலைப்பதிவின் முகவரியை சுவரொட்டுவீர்கள்.

மூன்றுக்குக் கீழே ஆம் சொன்னால் – நீங்கள் கூகிள் மூலமாக இங்கு தடுக்கி விழுந்திருப்பீர்கள்.

மூன்று-ஐந்து கேள்விக்கு ஆம் என்றால் – வலைப்பூ மயக்கத்தில் உள்ளீர்கள்.

ஆறு கேள்விக்கு மேல் ஆம் என்றால் – வலைப்பூவிற்கு அடிமையாகி விட்டீர்கள்…

நன்றி: பவித்ரா அரசி