Daily Archives: பிப்ரவரி 8, 2004

இதுதான் நியூயார்க் – வைரமுத்து

வானைத் தொடத் துடிக்கும்

விஞ்ஞான விரல்களாய்க்

கட்டடங்கள் புடைத்து நிற்கும்

கால்வலித்த மேகம்

உச்சிமாடியில்

உட்கார்ந்து போகும்

தீப்பிடித்த வீடாய்

வாழ்க்கை விரையும்

மூழ்கும் கப்பலின் எலிகளாய்க்

கார்கள் பறக்கும்

கார்நிறுத்த இடம் கிடைத்தால்

உலோபியின் புதையலாய்

உள்ளம் களிக்கும்

போகத்தின் உச்சத்தில் பேசும்

பொருளற்ற வார்த்தைகளாய்

அங்கங்கே மெல்லிசை காதுகிழிக்கும்

வீதியில் பூக்கும்

வெள்ளை ரோஜாக்கள்

பெண்மையின் அடையாளங்களை மட்டும்

மூடி மறைத்து முறுவலிக்கும்

‘வா’ என்று கேட்க

வண்டுக்கும் உரிமையுண்டு

‘போ’ என்று தள்ளப்

பூவுக்கும் உரிமையுண்டு

கணவனுக்கு – மனைவியினும்

காரின் கற்பு

முக்கியமாகும்

மனைவிக்கு

பர்த்தாவை விடவும்

‘பாத்ரூம்’ சுத்தம் முக்கியமாகும்

நடைபாதைக் காதல்

மூச்சுவிட மறந்து

முத்தமிட்டுக் கொண்டிருக்கும்

சுற்றிவரும் போலீஸ்

ஒட்டிய உதடுபிரிக்க

உதவும்

0

ஷாம்பூ போட்டுக் குளித்த

மரங்கள்

வாழை இலைச் சாலைகள்

முடிவெட்டிக் கொண்ட

புல்வெளிகள்

கட்டடங்களை

உரசி பறக்கும்

உலோகப் பறவைகள்

எல்லாம் இருந்தும்

ஏதோ ஒன்று இல்லாத வாழ்க்கை

0

அறிவு –

உறவை

டாலர்களாய்ப் பார்க்கும்

உணவை

வைட்டமின்களாய்ப் பார்க்கும்

நாற்பது வரைக்கும்

அவர்கள் சாப்பிட உணவு

நாற்பதுக்குப் பிறகு

அவர்களை சாப்பிடும் உணவு

வாரத்தில் ஐந்துநாள்

வாழ்க்கை விற்கப்படும்

வாரத்தில் இரண்டுநாள்

வாழ்க்கை வாங்கப்படும்

பாசம்

பாலித்தீன் பை

காதல்

கைதுடைக்கும் காகிதம்

….

அங்கங்கே

ரகசியக் குரலில்

கோஷம் கேட்கும்

வீட்டுக் கூரையில்

நிலா வேண்டுமா?

மாத்திரை போடு

சூரியனில் நடக்க வேண்டுமா?

மாத்திரை போடு

கிளியோபாட்ராவை

எழுப்பித் தருகிறோம்

மாத்திரை போடு

இப்படி

வீதி முனைகளில்

சுலபத் தவணையில்

தற்கொலை விற்கும்

0

பாப்கார்ன் கொறித்துக் கொண்டே

பள்ளி மாணவி சொல்வாள்:

‘இன்றைக்கே

கலைத்து விடுங்கள் டாக்டர்

நாளை

பத்தாம் வகுப்பு பரீட்சை’

0

1989

நன்றி: வைரமுத்து கவிதைகள்

(கி.பி. 2000 வரை கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதைகளுள்

அறிஞர்கள் தேர்ந்தெடுத்த தொகுப்பு)

உரிமை: டாக்டர் பொன்மணிவைரமுத்து

ரூ. 300/-

சூர்யா வெளியீடு


என்னுடைய சில சிதறல்கள்:

* அமெரிக்கா வருவதற்கு முன்பே படித்து விட்ட கவிதை.

* வார்த்தைகளும் எண்ணங்களும் பிரமிப்பை ஏற்படுத்தியது அந்தக் காலம்.

* சொல்லமைப்புகள் மட்டுமே ஒரு ‘அட…’வையும், தட்டையான பிம்பங்கள் மேல் ஒரு ‘ஹ்ம்ம்ம்…’மும் போடுகிறேன் இந்தக் காலம்.

* நியூ யார்க்கை குறித்து மற்றவர்கள் இன்னும் இப்படித்தான் கற்பனை செய்து வைத்திருக்கிறார்களா….!

சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள்

நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்… எனக்கு கணினி பற்றி ஏதும் தெரியாது. இன்னமும் என் கட்டுரைகளை நான் காகிதத்தில் தான் எழுதி வருகிறேன். மிகச் சமீபத்தில் தான் webcam என்பது கூட தெரியும். இன்னமும் கணினியின் மைக் வழியே மற்றொருவருடன் எனக்குப் பேசத் தெரியாது.

ஸீரோ டிகிரி மின் நாவலாக வெளிவர என் உதவியாளர்களே பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்திய மொழிகளிலேயே முதல் மின் நாவல் என்று ஸீரோ டிகிரியைப் பற்றி விளம்பரப்படுத்தியது அவர்களுடைய தவறு. அவர்கள் எனக்கு விஷயத்தைச் சொன்ன பிறகு நான் வேறு வேலைகளில் மூழ்கி விட்டேன்; பயணங்கள் வேறு.

அதற்குள் ஒருவர் ஏதோ கொலைக் குற்றத்தைக் கண்டுபிடித்து விட்டதைப் போல் தனது இணைய தளத்தில் கூப்பாடு போட்டிருக்கிறார். என் உதவியாளர் செய்த பிழைக்காக “சாரு பொய் சொல்லுகிறார்’ என்று அலறும் இவர் யார் தெரியுமா? பொய் சொல்லுவதையே தனது தொழிலாகக் கொண்டவர். அந்தக் கீழ்மையான தொழிலுக்குக் கூலி: சில பல லட்சங்கள். தொழிலில் ஒப்பாரி வைப்பதும் உப தொழில்.

கூலிக்கு ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டிருக்கிறீர்கள் தானே? அதுபோல் இவர் சமீபத்தில் வைத்த ஒப்பாரி என்ன தெரியுமா?

ஒரு அரசியல் தலைவரின் மரணத்தின் போது தழுதழுத்த குரலில் (பொய்யான தழுதழுப்பு என்று வெளிப் படையாகவே தெரிந்தது.) “ஒரு சகாப்தமே இங்கு உறங்கிக் கொண்டிருக்கிறது’ என்று கூறியது. இப்படிச் சொல்வதற்கு உங்கள் தன்மானத்தை நீங்கள் விற்க வேண்டும். விலையாக சில பல லட்சங்கள் உங்களுக்குக் கிடைக்கும். இப்படி கூலிக்கு மாரடிப்பவர்கள் தான் விளிம்பு நிலையில் நின்று, பட்டினி கிடந்து, உலக இலக்கியங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களைப் பார்த்து குற்றம் சாட்டுகிறார்கள்.

இவர்களால் எனது படைப்பை எதிர்கொள்ள முடியாது. அதற்கு வேண்டிய இலக்கிய அறிவு இவர்களிடம் இல்லை. இவர்களிடம் இருப்பது பண பலம், அதிகார பலம். இதையெல்லாம் காண்பித்து ஒரு கலைஞனை பயமுறுத்த நினைப்பது கோழைத்தனம்.

நேற்று எம்.எஃப்.ஹுசேனின் ஓவியங்களை சில அரசியல் ரவுடிகள் நாசப்படுத்திய போது அவர் கூறினார்: “இது mediocrityயின் காலம். நீங்கள் உங்களுடைய தலையை உயர்த்த முடியாது. உயர்த்தினால், உங்கள் தலை நசுக்கப்படும்… ஆனால், இவர்கள் கோழைகள். கலாச்சாரம் பற்றி ஏதுமறியாத கூலிப்படையை வைத்து இவர்கள் நம்மைத் தாக்குகிறார்கள். ஆனால், இது நீடிக்காது. காலம் இவர்களைக் காணாமல் அடித்துவிடும்…’

இலக்கிய உலகில் புகுந்து இலக்கியவாதிகளை மிரட்டும் அரசியல் தரகர்களுக்கும் என்னுடைய பதில் இதே தான்!

சாரு நிவேதிதா

நன்றி: கோணல் பக்கங்கள்

காதல் சடுகுடு

Kaathal Sadugugu (c) Hindu

மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே

மழைநீராய்ச் சிதறிப் போகின்றோம் அன்பே

(மேகத்தில்)

பிரிவென்பதால் நெஞ்சிலே பாரமில்லை

மழையென்பது நீருக்கு மரணமில்லை

மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி

வானில் சேர்ந்திடுவோம்

இருவரும் கூடி ஒருதுளியாகி

முத்தாய் மாறிடுவோம்

(மேகத்தில்)

கண்ணைக் கவ்வும் உன் கண்களைக் காதலித்தேன்

கற்பைத் தொடும் உன் பார்வையைக் காதலித்தேன்

ஆசை கொண்டு உன் ஆண்மையைக் காதலித்தேன்

மீசை கொண்டு உன் மென்மையைக் காதலித்தேன்

நிலா விழும் உன் விழிகளைக் காதலித்தேன்

நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன்

நெற்றி தொடும் உன் முடிகளைக் காதலித்தேன்

நெஞ்சை மூடும் உன் உடைகளைக் காதலித்தேன்

கண்ணா சில நாள் பிரிவோம் அதனால் உறவா செத்துவிடும்

கடல் நீர் கொஞ்சம் மேகம் ஆனால் கடலா வற்றிவிடும்

வெளியூர் போகும் காற்றும் ஒரு நாள்

வீட்டுக்குத் திரும்பி வரும்

பிரிதல் என்பது இலையுதிர் காலம்

நிச்சயம் வசந்தம் வரும்

(மேகத்தால்)

அன்பே, அன்பே உனை எங்கனம் பிரிந்திருப்பேன்

நிலா வந்தால் என் இரவுகள் இருந்திருப்பேன்

உன்னை எண்ணி என் உயிர்த்தலம் உறைந்திருப்பேன்

கண்ணால் கண்டால் நான் இருமுறை உயிர்த் தரிப்பேன்

அன்பே, அன்பே உனை எங்கனம் மறந்திருப்பேன்

நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன்

பெண்ணே, பெண்ணே நம் பிரிவினில் துணையிருப்பேன்

கண்ணே கண்ணே என் கண்களை அனுப்பி வைப்பேன்

இத்தனை பிரிவு தகுமா என்று

இயற்கையைக் கண்டிக்கிறேன்

ஏன்தான் அவரைக் கண்டேன் என்று

என் கண்களைத் தண்டிக்கிறேன்

(மேகத்தால்)

நன்றி: புகாரி – உயிரெழுத்து