சன் டிவி பொங்கல் வாழ்த்துக்கள்


பொங்கல் அன்றும் அலுவலகம் வந்ததில் கரும்பு, சக்கரைப்

பொங்கல், வடைகளை விட சன் டிவி நிகழ்ச்சிகளை

உடனடியாகப் பார்க்காததே மனதில் நின்றது. சென்னைப்

பொங்கல்களில் பெரிதாக ஒன்றும் தவற விடவில்லை.

கொல்லைப் புறத்தில் இரண்டு கரும்பு, மஞ்சக் குலைகள்,

பட ரிலீஸ் என்று கழித்த நாட்கள்.

பாஸ்டனில் சூரியன் நன்றாக எட்டிப் பார்த்தாலும் உறைய வைக்கும் குளிர்.

இரயிலில் சென்று பத்து நிமிடம் நடக்கும் போது கூட குளிர்

அதிகம் தெரிவதில்லை. நடக்கிறேனா, ஓடுகிறேனா என்று அறியாமல்

உடம்பின் அத்தனை பாகங்களையும் மூன்று நான்கு ஆடை தடுப்பிட்டு

குளிரில் நடுங்காமல் அலுவலகம் வந்து விடலாம். ஆனால் காத்திருக்கும்

நிமிடங்கள்தான் அரள் வைத்தது. நாலைந்து நிமிடங்கள்தான் ரயிலுக்குப்

பொறுத்திருக்க வேண்டும். காதலிக்காக, தேர்வு முடிவுக்காக என பல

காத்திருத்தல்களில் இல்லாத கொடுமை அது.

சன் டிவியின் பனிரெண்டு மணி நேர சிறப்பு நிகழ்ச்சிகளை ஒரு மணி

நேரத்தில் இரவில் மேய்ந்தேன். கமல் சுவாரசியமாய்ப் பேசினார். தவற

விடக் கூடாத பல கருத்துகளைத் தாங்கிய பேச்சு. இணைய எழுத்துக்களைப்

படிக்கிறார்.

என்ன படிப்பீங்க என்ற கேள்விக்கு கதைகள் எல்லாம் இணையத்தில் கூட

நன்றாக இருக்கிறது என்றார். அம்பலமா, திண்ணயா என்று சொல்லவில்லை.

தன் கவிதைகளைப் பொதுவில் வைப்பதற்கு தைரியம் இருந்தால் போதும்

என்ற தன்னடக்கப் பார்வை கவர்ந்தது. கஷ்டப்பட்டு செதுக்கிய படம்

தோல்வி அடையும்போது ஏற்படும் வருத்தத்தை, குப்பையான படங்கள்

ஓடியதை நினைத்து சமாதானப் படுத்திக் கொள்வேன் என்றது ஏதோ

பற்றற்றவர் மாதிரி ஆக்கிவிட்டது.

ஆனால், தொடர்ந்து வந்த ‘உன்னை விட’ காட்சிகள் விருமாண்டிக்கு

அன்னலட்சுமியுடன் இருக்கும் பற்றை நன்றாகவே சொன்னது.

பேரம் சரிப் படாததால் அமெரிக்காவில் படம் முக்கிய நகரங்களில்

மட்டுமே ரிலீஸ். முக்கிய நகரம் என்பது ரஹ்மானுக்கு நியு யார்க்

மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ். இவருக்கு எவை என்பது சொல்லவில்லை.

ஆனால், ‘விருமாண்டி உருவான கதை, ‘நீக்கப் பட்ட காட்சிகள்’,

‘விடுபட்ட பாடல்’, ‘கமல் இன்ன பிறர் பேட்டி’ என்று விஷய அடர்த்தியுடன்

கூடிய அமெரிக்காவில் மட்டுமே பார்க்கக் கூடிய திரை வட்டு வருகிறது.

உருப்படியான சிந்தனை என்று சொல்ல வேண்டும். ‘அன்பே சிவம்’

அதிகாரபூர்வமாக வந்தாலும் அதிகாரபூர்வமற்ற டிவிடிகளே அதிகம்

சுழற்சியில் இருக்கும் அமெரிக்க இந்தியர்களிடம், காசு சம்பாதிக்க

சரியான வழி.

மேக்ரோவிஷன் நகல் தடுப்பு, சகாய விலை என்று சீக்கிரமே வந்தால்

படம் வெளியிட்டு பணம் பண்ணுவதை விட வட்டு வெளியிட்டு லாபம்

ஈட்டலாம்.

அடுத்து ஒரு ஆங்கிலப் பேட்டிக்குத் தமிழில் விளமபரங்கள் வந்தது.

‘அலைகள் ஓய்வதில்லை – 2’-இல் நடிக்கும் சோனியா அகர்வால் என்று

சரியாக எழுதியிருந்தார்கள். மற்ற பல பெயர்கள் ‘அபர்னா’, ‘சிநெகன்’

என்று போட்டார்கள். நிஜப் பெயரே அப்படித்தானா இல்லை அபர்ணா,

சிநேகன் என்பதா என்று கேட்டு சொல்லுங்கள். எல்லா விளம்பரத்திலும்

‘வாழ்த்து*க்*கள்’ சொன்னார்கள்.

ஆணாதிக்க மனோபாவத்தை ஸ்ரீகாந்த அழகாக வெளிப் படுத்தினார்.

பெண்களைக் கிண்டல் செய்வது, பைக்கைத் தாறுமாறாக ஓட்டுவது,

சமைப்பதற்காகத் திருமணம் செய்து கொள்வது என்று ஒரு தமிழ்க்

குடிமகனுக்குரிய எந்த அம்சத்தையும் விட்டுவிடாமல் பேசினார்.

கல்லூரியில் காதல் கவிதை எழுதுபவனும், ரக்ஷ¡பந்தனுக்கு ராக்கி

அமைத்துக் கொடுப்பவனும் அல்டாப்பாக ஊர் சுற்றுவான் என்பது

நம்ப முடியவில்லை. இந்த மாதிரி எல்லாம் கலை நேசம் கொண்டவர்களை

எங்கள் கல்லூரியில் பெண்கள் கூட்டம் மொய்க்கும். அதற்காகவே

ஓவிய, அழகியல் உணர்ச்சி கொண்டவர்களாகக் காண்பித்துக்

கொண்டவர்கள் சிலர்.

காதல் கடிதம் கொடுத்ததை ஒப்புக் கொள்ளும் ஸ்ரீகாந்த்தும் காதலே

செய்யவில்லை என்னும் சோனியா அகர்வாலும் நம் ஹீரோ ஹீரோயின்களின்

ஆதர்ச அந்தரங்க வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு

எடுத்துக்காட்டு. இருவரும் மாற்றி சொல்லி இருந்தால் பத்திரிகைகளுக்கு

சரக்குக் கிடைத்திருக்கும். (பத்திரி*க்*கையா? பத்திரிகையா?)

‘பு.ச’ மலேசியாவில் எடுக்கப் பட்ட படம். ‘வாலி’ படத்தை உல்டா

செய்யும் கருணாஸ் காமெடி. ‘மலர்களே’ பாடல் குறித்து யாரும்

காமெராவில் பதிவு செய்யவில்லை. தனுஷ்ஷின் பேட்டி எதார்த்தமாக

இருந்தது.

தான் நடிப்பதை, ரசிகர்களின் கைதட்டலை ரசிப்பதை, தன் பெயர்

டைட்டிலில் வருவதை, திரையில் வருவதை கூட்டத்தோடுப் பார்ப்பதற்காக

முதல் காட்சி செல்வேன் என்றார். ஒருவர் கஷ்டப்பட்டு செய்யும்

சண்டைக் காட்சியை விட, பார்வையாளர்கள் ரசிக்கும் காதல் காட்சிகளே

அதிகம் அடிபடுவதற்கு வருத்தப் பட்டார். சூப்பர் ஸ்டார் ஒருவரே என

ஒத்துக் கொண்டார்.

நற்பணி மன்றம் வைப்பதற்கு அவசரப்படாததும் நம்ம உஷா போன்று

வெற்றிகளைக் கண்டு போதை தலைக்கேறாமல் இன்னும் நல்ல படைப்புகளைத்

தர வேண்டும் என்னும் ஆர்வமும், ரசிகர்களுடன் எப்போதும் நெருங்கி

இருக்க வேண்டும் என்னும் எண்ணங்களும் சுவாரசிய படுத்தியது.

பட்டிமன்றத்தின் ‘பெண்கள் அதிகமாக நேசிப்பது புகுந்த வீடா,

பிறந்த வீடா’ என்னும் அரதப் பழசான வாதங்களையும், politically correct

ஆனால் தவறான கணிப்பான புகுந்த வீடு என்னும் முடிவையும் நாளை

பார்க்க வேண்டும். உருப்படியான தலைப்பாக ‘ஆணாதிக்க மனோபாவத்தை

அதிகம் வெளிப்படுத்துவது ஆண்களே, பெண்களே’ என்று எல்லாம்

எங்காவது வாதிடுவார்களா?

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.