குழந்தை எழுத்தாளர் சங்கம் – ஆர். பொன்னம்மாள் (4)


தாய்மாமன் வீட்டிலிருந்த என் அன்னை தன் மாமன் மகனை மணக்க ‘எழுதக் கூடாது’, என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. பாட்டியின் கண்ணீர் அன்னையின் பேனாக்களை மூடிக் கொள்ள வைத்தது.

முதல் கதை பிரசுரமான நாள்: நவ. 28, 1956

திருமணமான நாள்: ஜன. 28, 1958.

தந்தையின் அனுமதியோடு சில கதைகள் மீண்டும் பிரசுரமாக ஆரம்பித்தது. முதல் குழந்தை பிறந்த நாள்: ஜன. 19, 1960. ஆறாவது மாதம் ஜுரத்தில் அந்தக் குழந்தை மடிந்ததால் தன் எழுத்துப் பணியைத் துறந்த என் தாய் குடும்பமே உலகம் என வாழ்ந்தார்கள்.

என் தமையனுக்கு 15 வயது. என் தமக்கைக்கு 13 வயது. என் தந்தை விரும்பிப் படிக்கும் ‘தினமணி’ நாளிதழில் குழந்தை எழுத்தாளர் சங்க (கு.எ.ச.) சிறுகதைப் போட்டி அறிவிப்பு வெளி வந்திருந்தது. அக்காவும், அண்ணனும் தூண்ட மீண்டும் எழுத ஆரம்பித்தார்கள்.

நவ. 13, 1976 அன்று ‘எல்.எல்.ஏ. பில்டிங்கில்’ (தேவநேயப் பாவாணர் நூலகத்தில்) ஏவிஎம் பரிசளிப்பு விழா நடக்கப் போவதாகவும், என் தாய்க்கு இரண்டாம் பரிசு கிடைத்திருப்பதாகவும் கடிதம் வந்தது. இப்போது எங்கள் குடும்பத்துக்கே இறக்கை முளைத்திருந்தது. விழாவில் கலந்து கொண்டு பரிசை வாங்கி வந்தோம்.

(கொஞ்சம் இடைச் செருகல்: கு.எ.ச.வின் 1978 வரலாற்றுப் போட்டியில் கலந்து கொண்ட என் சகோதரியும், ‘திரு.வி.க. வாழ்க்கை வரலாற்று’க்கு ஏவிஎம் வெள்ளிப் பதக்கம் பெற்றாள்.)

1983-இல் என் தாய் எழுதிய ‘கருணை விழிகள்’ என்ற நாவல் கு.எ.ச. மூலமாக முதல் பரிசான தங்கப் பதக்கத்தைப் பரிசாகப் பெற்றுத் தந்ததோடு, கோகுலத்தில் தொடராகவும் வெளிவந்து சிறுவர்களிடையே பெரும் பாராட்டினை பெற்றது.

(சிறு குறிப்பு வளரும்)

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.