தமிழில் கடித இலக்கியம் பிரபலம்.
கி.ரா.வுக்கு கு. அழகிரிசாமி எழுதிய கடிதங்கள், அம்பேத்கரின் கடிதங்கள், வ.உ.சி. காந்தி கடிதப் போக்குவரத்து, பகிரங்கக் கடிதங்கள், கழக உடன் பிறப்புகளுக்கு எழுதிய கடிதங்கள் என்று பெரிய பட்டியல்.
அது போல் சமூக ஊடகங்களில் வெளியான சுவாரசியமான உரையாடல்கள், பின்னூட்டங்கள், கவுண்ட்டர் கொடுத்து போடும் அதிரடி பதில்கள் – போன்றவற்றை வருடா வருடம் ஒருவர் தொகுத்து நூலாக்க வேண்டும்.
விகடன் வலைபாயுதே போல் தெரிந்தவர்களை மட்டும் கவனிக்காமல், (எந்தப் பத்திரிகை) வலைப்பேச்சு போல் தற்கால வம்புதும்புகளை செய்தித் துணுக்கு போல் சேகரிப்பதோடு நிற்காமல்…
அந்தந்த வாரத்தில் வலைஞர்களை
- கொதிப்புயரச் செய்து கொந்தளிக்க வைத்த நிகழ்வுகளுக்கான பன்முகப் பார்வை
- கவனம் பெற்ற நூல்; விமர்சனத்திற்குள்ளான புத்தகம்
- மீம்; கிண்டல் படங்கள்; கேலிச் சித்திரங்கள்
- நாலே வார்த்தையில் நறுக்குத் தெறித்தது போன்ற பின்மொழி
- வாதங்கள், பிரதிவாதங்கள்; காரசாரமான கருத்து வசனங்கள்
- கம்பீர் முதல் கவின் வரை – பிரமுகர் தகவல் குறித்த முத்துகள்
- மாமல்லன் போல் ஒரு சிக்கலை மட்டும் ஒரு தரப்பில் இருந்து கையில் எடுக்காத நடுநிலை ஸ்ட்டேஸ் க்வோ மொண்ணைத்தனம்
ஒரு வருடத்திற்கு ஒரு வெளியீடு.
கிண்டில் + அச்சு நூல்.
அதிக பட்சம் 250 பக்கங்கள்.
தமிங்கிலம் – எனவே ஆங்கிலமும் பரவலாக எட்டிப் பார்க்கும்.
பிரிட்டானிக்கா, மலையாள மனோரமா இயர் புக் எல்லாம் அந்தக் காலம்.
இந்தத் தொகுப்பு ஜென்-ஆல்ஃபா, ஜென்-Z காலம்.
தலைப்பிற்கான உரை :
செப்புதலையும் வினாவுதலையும் வழுவாமற் போற்றுக. (நன்றி: தமிழ் எண்ணம்: தொல்காப்பியரின் ‘வினாவும் செப்பும்’: கருத்தாடல் நோக்கு )











