Tag Archives: Inception

விஸ்வரூபம் meets Inception

விடியற்காலையில் எல்லோரும் எழுந்து வேலைக்கும் கல்விக்கும் கிளம்பும் நேரத்தில் நான் மட்டும் உறங்குவது பிடித்தமான விஷயம்.

அரை முழிப்பு இருக்கும். அடித்துப் போட்டது போல் தூக்கமும் இருக்கும். என்னை சுற்றி அனைவரும் ஓடிக் கொண்டிருக்க, நான் மட்டும் நின்று நிதானித்து ரசிப்பது போல் இருக்கும்.

அப்படித்தான் இன்றும். அப்பொழுது கனவு அவசியம் வரும். வீட்டில் எல்லோருமாக கிளம்பி பெங்களூர் போகிறோம். நான் பெங்களூரூவிற்கு சென்று இருபதாண்டுகளாகி விட்டது. அதனால் நிறைய மாற்றம். மல்லேஸ்வரம் முழுக்க high rise கட்டிடங்கள். அங்கேதான் என் நண்பர் அழைத்திருக்கிறார்.

அபார்ட்மெண்ட் காப்ளெக்சினுக்குளேயே கோவில் வருகிறது. ஆங்காங்கே பார்வதியும் பரந்தாமனும் வருகிறார்கள். சூட் போட்டர்வர்கள் ஷூ அணிந்தே பரமசிவன் பாதாந்தர விந்தங்களை தொடுகிறார்கள்.

வீட்டைத் தேடுகையில் mall வருகிறது. ஷாப்பிங் செய்ய மனைவி அழைக்கிறாள். Inception மாதிரி அவள்தான் என் கனவை ஆக்கிரமித்து விதைகளை இட்டு வைக்கிறாளோ என சுதாரித்தேன்.

நிமித்தகாரன்: குறும்படம்

இணைய நண்பர்கள் இணைந்து எடுத்த படம். புக் கிரிக்கெட் மட்டுமே விளையாடிக் கொண்டிருக்கும் புத்தகப்புழுக்கள் களமிறங்கி இருக்கிறது.

‘ஏதாவது செய்யணும் பாஸ்’ என்னும் பாலாஜி மனோகரன். தமிழோவியம்.காம் எடிட்டர், வலையக நிர்வாகம், அரங்கேற்றங்களுக்கு கேமிரா படப்பிடிப்பு என்றிருந்த கணேஷ் சந்திரா. ஒரு கை விரலுக்குள் அடங்கும் எண்ணிக்கை கொண்ட திறன்மிக்க இணைய கதாசிரியர்களுள் துள்ளலும் தனித்துவமும் நிறைந்த புனைவுகளைப் பதிவில் இடும் ஒருபக்கம் ஸ்ரீதர். நியூ ஜெர்சி டிராமா குழு மேடையேற்றும் எல்லா நாடகத்திலும் முக்கிய கதாபத்திரமோ, முக்கால் நிமிட வேடமோ… நினைவில் நிற்க வைக்கும் மோகன்.

முதலில் பிடித்தவை

  • கனவு காண்பவரின் உச்சரிப்பு; இயல்பான முகசேஷ்டை
  • இம்புட்டு பெரிய கதையை ஒப்பிப்பது போல் இல்லாமல், சுவாரசியமாக்கிய நிமித்தகாரன்
  • மிரட்சியும் மிளிர்வும் கொண்ட கனவு தேவதை
  • நேர்த்தியான எடிட்டிங்
  • அந்தப் பழைய ஓலைச்சுவடி போன்ற புத்தகம்
  • ஒளிப்படங்களை வைத்து யட்சிணியைக் காட்சியாக்கிய விதம்
  • குழப்பமில்லாத, எளிதில் புரியக்கூடிய சிம்பிளான படமாக்கம்

சில ஒப்பீடு

  • ஓவியம் என்டெர்டெயின்மென்ட்ஸ் குழுவினர், கலைஞர் டிவி ‘நாளைய இயக்குநர்‘ பார்க்கலாம்.
  • இன்செப்சன்‘ படம் வெளியாவதற்கு முன்பு எழுதப்பட்ட கதை! இம்ப்ரெசிவ்
  • ராமேஸ்வரம் கோவில் மண்டபம் போன்ற புகழ்பெற்ற புகைப்படத்திற்கு பதிலாக அரிதான படம் போட்டிருக்கலாம்.

கடைசியாக குறை

  • த்ரில்லருக்கு இசை அதிர வேண்டியதுதான். மோகனின் வசனத்தையும் கேட்க விட்டிருக்கலாம்.
  • Show but Not Tell என்போம். அதற்கு இன்னும் பெரிய பட்ஜெட் தேவையாக இருக்கலாம். இது விஷுவல் கம்யூனிகேசன் அல்லவா?

கதை வசனகர்த்தா: Post by ஸ்ரீதர் நாராயணன் from ஒரு பக்கம்

விமர்சகர் அவுரங்கசீப்: முயற்சிக்கு வாழ்த்து. நாஞ்சில் சம்பத் சொற்பொழிவுக்கு நிகரான நீளம் கொண்ட வசனங்கள் மட்டும் சற்று பிரச்னையாக உள்ளன. கதையை அப்படியே படமாக்கியதுபோல் உள்ளது. இடையே திரைக்கதை என்று ஒன்று உள்ளதை நினைவில் இருத்தியிருக்கலாம். இயக்குநர் இந்தியா வந்தால் சின்னத்திரைகளில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று தோன்றுகிறது.

எழுத்தாளர் என் சொக்கன்: இந்தக் கதையை ஏற்கெனவே படித்தேனா என்பது நினைவில்லை, ஆனால் படமாகப் பார்க்க நன்றாக இருந்தது.

12 நிமிடப் படத்தில் 11 நிமிடங்கள் ஒரே ரூம், வெறும் டயலாக், அதைச் சுவாரஸ்யமாகக் காட்டுவது சுலபமில்லை, அதை நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

கடைசி நிமிட ட்விஸ்ட்மட்டும் கொஞ்சம் குமுதம் ஒரு பக்கச் சிறுகதைபோலப் புரிந்துகொள்ளப்பட்டுவிடுகிற சாத்தியம் உள்ளது 🙂

அதேபோல், அந்தக் கடைசி நிமிடத்தில் பேசும் பெண்ணுக்கு டப்பிங் வேறு யாராவது பேசியிருக்கலாம். உணர்ச்சியே இல்லாத குரல்.