நன்றி: Richard Brautigan: All Watched Over By Machines Of Loving Grace
நான் யோசிக்க விரும்புகிறேன் (எவ்வளவு
சீக்கிரமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் பசும் புற்றரை
அங்கே பாலூட்டிகளும் கணினிகளும்
ஓருவருக்கொருவர் ஒத்தாசையாக ஒன்றாக
நிரல்நெறி இணக்கத்துடன்
நன்னீர் போல்
நிர்மலமான வான்வெளியைத் தொடும்.
நான் யோசிக்க விரும்புகிறேன்
(தயவு செய்து… இப்போதே!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் வனாந்திரம்
கற்பகதரு மரங்களும் கணிப்பொருள்களும் நிரம்பியிருக்க
மனக்கவலையின்றி மான்கள் சஞ்சரிக்க
கணிப்பொறிகளைக் கடந்தால்
அங்கே கான்முகம் போல்
சுழலும் மொட்டுகள் அரும்பும்.
நான் யோசிக்க விரும்புகிறேன்
(அப்படித்தான் இருக்கவேண்டும்!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் சுற்றுப்புறச் சூழியல்
நம் பயனில் வேலையில் இருந்து விடுதலை கிட்ட
இயற்கையுடன் மீண்டும் இணைய
நாம் பாலூட்டியாக திரும்ப மாற
சகோதரன்களும் சகோதரிகளுமாய் இருக்க
அன்பான கிருபை கொண்ட கருவிகள்
அனைவரையும் கண்காணிக்கும்.
என் குறிப்புகள்
இந்த ஆக்கம் 1967ல் எழுதப்பட்டது. அப்போது உடோப்பியக் கனவுகள் இருந்தால் சரி. கம்ப்யூட்டரும் காட்டு விலங்குகளும் கைகோர்த்துக் கொண்டு சந்தோஷமாய் வாழுகின்றன என்று எண்ணியிருக்கலாம்.
ஐம்பதாண்டுகள் கழித்துப் பார்த்தால், மனிதன் + முதலியம் ==> முடிந்தவரை குப்பை போடுகிறது. தொழில்நுட்பம் என்பது வேவு பார்ப்பதற்கும், ஒற்றறிவதற்கும், ரகசியமாய் கண்காணிப்பதற்கும், அடுத்தவரின் பொருள்களைத் திருடுவதற்கும், உலகளாவிய உளவுக்கும் நேர்மையாய் இருக்கிறது.
மீண்டும் 1967ல் இருந்த நிலையைப் பார்க்கலாம். இணையம் கிடையாது, உலகளாவிய செல்பேசி பயன்பாடு கிடையாது. ருஷியாவுடன் பிரச்சினைகள் இருந்தாலும், இன்னுமொரு உலகப்போர் மூளும் அபாயம் கிடையாது. ஐஸிஸ் கிடையாது. எல்லோர் கையிலும் ஐபோன் கிடையாது. கணினிக் கழிவுகள் கிடையாது.
அந்தக் காலகட்டத்தில் பறக்கும் கார்கள், சூரியசக்தியில் ஓடும் வீடுகள், பசுமைப் புரட்சி, கூட்டுறவு என நினைத்து எழுதியிருப்பார். இன்று?