Tag Archives: Aamir Khan

அவதூறு வழக்கும் அவதூதர்களும்

மஹராஜ் – அசப்பில் மோடியைச் சொல்கிறார்களோ என்னும் சம்சயம்.

எல்லோருக்கும் குழந்தையைத் தருகிறேன் என்கிறார்.
தான் மனிதனே அல்ல என நம்புகிறார். தெய்வாம்சம் ஆகவே நடந்து கொள்கிறார்.
அவரின் சீடர்கள் மகராஜை தெய்வமாகவேப் பார்க்கிறார்கள்.

நல்ல வேளை. கவனமாக எந்த நேரடி ஒப்பிடலோ, மறைமுக வசனமோ, குறிப்பால் உணர்த்தும் காட்சியோ பா.ஜ.க.வையோ பிரதம மந்திரி நரேந்திர மோடியையோச் சொல்லவில்லை.

இரு நூறாண்டுகள் முன்பு நடந்த அசல் சம்பவங்கள். நிஜ நாயகரின் பெயர் கர்சன் தாஸ் முல்ஜி – தயானந்த சரஸ்வதி போல்… ராஜா ராம் கோகன் ராய் போல்…

சமூக சீர்திருத்தவாதிகளைக் குறித்து பள்ளி புத்தகங்களில் படித்தவுடன், இவர்களை ஏன் படமாக எடுக்காமல், தூர்தர்ஷனில் நாடகமாக மட்டுமே போடுகிறார்கள் என்னும் சந்தேகம் கலந்த சோகம் எழுந்ததுண்டு. அப்பொழுது ஆமிர் கான் நடிக்க வந்த காலம்.

இப்பொழுது, ஆமிர் கான் மகனின் முதல் படம்.
முந்தையத் தலைமுறை நாயகர்கள் எல்லாம் மசாலாப் படங்களில் அறிமுகம் ஆனவர்கள்.

ஃபூல் அவுர் காண்டே – அஜய் தேவ்கன்
மைனே பியார் கியா – சல்மான் கான்
சான்வரியா – ரன்பீர் கபூர்
கஹோ நா பியார் ஹை – ஹ்ரிதிக் ரோஷன்
பான்ட் பாஜா பாராத் – ரன்வீர் சிங்
பாபி – ரிஷி கபூர்
ஹீரோ – ஜாக்கி ஷ்ராஃப்
பர்சாத் – பாபி தியோல்
கயாமத் ஸே கயாமத் தக் – ஆமிர் கான்
தீவானா – ஷாரூக் கான்

எல்லோரும் ஆடலும், பாடலும், காதலும், அடிதடியும் கொண்டு வெள்ளித்திரைக்குக் கொணரப்பட்டவர்கள். ஆனால், ஜுனைத் கான் வேறு மாதிரி களத்தில் இறங்கி இருக்கிறார்.

ஆஸ்காருக்கு பாடுபட்ட ‘டைட்டானிக்’ நாயகர் லியொனார்டோ டிகப்ரியோ வரலாற்று நாயகர்களாக பல படங்களில் நடித்தவர். அவர்களின் சரித்திரங்களையும் சாகசங்களையும் தகிடுதத்தங்களையும் நடித்து அகாதெமி விருது பெற்றவர்.

ஆமிர் பையனுக்கும் அதே ஆசை. ஹாலிவு படங்களில் கொஞ்சம் நியாயம் இருக்கும். வில்லனுடைய பார்வையைச் சொல்வார்கள். சமய, சந்தர்ப்பங்களை விளக்குவார்கள். சூழ்நிலைக் கைதியாவதை உணர்த்துவார்கள்.

மஹாராஜ் – இங்கெல்லாம் சறுக்குகிறது. ஹவேலி ஏன் உருவானது? எவ்வாறு அதன் உறுப்பினர்களைக் கட்டுக்குள் வைத்திருந்தது? பெரிய சமாஜ், சங்கர மடம் போன்றவற்றிற்கு ஏன் அவ்வளவு செல்வாக்கு கிடைத்தது? எப்படி வியாபாரத்தை உள்குழுவிற்குள் வைத்து, செல்வத்தைப் பெருக்கினார்கள்? – இது போன்ற சம்பவங்களைக் கொணர்ந்திருக்க வேண்டும். மகராஜின் இன்னொரு முகத்தைக் காண்பித்திருக்க வேண்டும்.

ஒரு வில்லன்; ஒரு கெட்ட விஷயம்; ஒரு நல்லவன் – எவ்வாறு தன் நாவன்மையாலும் எழுத்துத் திறமையாலும் அதிகாரத்தை வீழ்த்துகிறான் என்பதற்கு ஊறுகாயாக இரண்டு காதலிகளை வைத்து கச்சிதமாகக் கதையை முடித்து இருக்கிறார்கள். சுவாரசியமான, பார்க்க வேண்டிய படம்.

ஜெய்தீப் அலாவத் – வாழ்ந்திருக்கிறார். அடுத்த படத்தில் நவாசுதின் சித்திக்கி மாதிரி ரஜினி கையால் அடி வாங்குமளவு அசத்தியிருக்கிறார்.

ஆமிரும் புத்திரரும் அடுத்து எந்த மதகுருவை கையில் எடுப்பார் என நினைக்கிறீர்கள்?

Chitrahar: Hindi Songs

தமிழில் ஒலியும் ஒளியும் மாதிரி ஹிந்தியில் சித்ரஹார். தொண்ணூறுகளில் மனதைக் கவர்ந்து தொடர்ந்து நினைவில் பதிந்திருக்கும் பாடல்கள் பட்டியல்.

1. I Love My IndiaPardes

சிஸ்டத்திற்குள் இருந்தே சிஸ்டத்தை முறியடிப்பது போல், இந்தியா பிடிக்கும் என்று சொல்லி அமெரிக்க தேசி மாமனாரை வீழ்த்தும் மஹிமாவா… குடியரசு தின ஸ்பெஷலா…

2. Man MohiniHum Dil De Chuke Sanam

ஹீரோயினுக்கு மழைப்பாடல் கொடுப்பார்கள்; சின்னச் சின்ன ஆசை கேட்பார்கள். ஆனால், துள்ளல் எண்ட்ரி கொடுப்பது ஐஸ்வர்யா ராய்.

3. Mehndi Lagake RakhnaDilwale Dulhania Le Jayenge

விடிஞ்சா கல்யாணம்; மாப்பிள்ளையின் முன்னிலையில் காதலியுடன் கொஞ்சம் டூயட்; துளி பயம்; நிறைய ஆட்டம். நடிப்புக்கு கஜோல்.

4. Rangeela ReRangeela

ராம் கோபால் வர்மாவின் முதல் இந்தி படிக்கட்டு; ஏ ஆர் ரெஹ்மானின் ஆஸ்கார் பாய்ச்சல்; ஊர்மிளாவின் அலட்டலில்லாத பாங்கு; எல்லாவற்றையும் மிஞ்சும் கனவும் நம்பிக்கையும் கொப்பளிக்கும் அர்த்தமுள்ள வரிகள்.

5. Ek Ladki Ko Dekha To1942 A Love Story

இரண்டு நிமிடம் முன்னால் விழுந்த பனி போல் மெத்து மெத்தான ஒளித்தொகுப்பு.

6. Aati Kya KhandalaGhulam

இறுக்கமான நேரத்தில் இயல்பாக்கி, விவகாரமான கேள்வியை விளையாட்டாக கொக்கி போடும் லாவகம்.

7. Jadoo teri nazar: Dar

தொலைக்காட்சியில் நடிக்க ஆரம்பித்து, துணை நடிகராக உயர்ந்து, வில்லனாகக் கலக்கி இன்று ரா #1, மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன!

8. Phir Bhi Dil Hai Hindustani – Title Song

விளம்பரம் எடுப்பவர், திரைப்பாடலுக்கு காட்சியமைப்பு கொடுத்தால், இப்படித்தான் சௌக்கியமாக அமையும்.

9. Ramta jogiTaal

ஐஷ்வர்யா ராய்க்கு நடிப்பு வராவிட்டாலும், ஆட்டம் அமர்க்களம்.

10. Pehla NashaJo Jeeta Wohi Sikander

பக்கத்து வீடு; சின்ன வயது துவங்கி தோழி; முதல் காதல்; பதின்ம வயதில் கல்லூரியில் சகாக்களுடன் பார்த்த காட்சியின் நினைவு மீட்டல்.

Dhobi Ghat (Mumbai Diaries): குறிப்புகள்

கோஸ்லா கா கோஸ்லா‘ பிடித்திருந்தால் ‘தோபி கட்’ உங்களுக்குப் பிடிக்கும், என்கிறது நெட்ஃப்ளிக்ஸ். கூடவே ‘எ வெட்னெஸ்டே‘வும் பரிந்துரைக்கிறது.

என்னைப் போன்றோர் அல்காரிதம் எழுதும் வரை ‘எந்திரன்‘ உலகை ஆள முடியாது என்று நிம்மதி வரவழைக்கும் More Like… ரெகமன்டேஷன்கள்.

காவேரி கரையை விட்டு கூவம் நதிக்கரைக்கு வரும் மகாநதி கிருஷ்ணசாமி; எல்லோரும் பறந்துபோய்விட்ட உலகத்தில் தனிமையிலே இனிமை காணும் WALL-E; பிழைப்பில் எந்த சமரசமும் செய்யாமல் அதே சமயம் பெண்ணாகவும் போலியாக நடிக்கும் டூட்ஸி; கேபிடலிசத்தைக் கிழிக்கும் படங்களை ஹாலிவுட் பட்ஜெட்டில் எடுக்கும் மைக்கேல் மூர்; எல்லாவற்றையும் கண்டு களித்து, கேளிக்கையும் விமர்சனமும் செய்து கொண்டிருக்கும் நாம்.

ஆசையாக வளர்க்கும் ஆட்டை, ஆன்டவனின் கட்டளையாக பக்ரீத் விருந்துக்கு வெட்டுவது போல் பெற்றோரின் அரேஞ்ச்ட் மேரேஜுக்கு உட்பட்டவள் – யாஸ்மின்; மஹாநதியின் ஹீரோ போல் ஆசைகள் கொண்டவள். நடுத்தர வர்க்க டீசன்ஸி கொண்டு பயப்படுபவள்.

கமல் போல் கலைக்காக தனிமையைத் தேடும் குழப்பவாதி; வால்-ஈ போல் தன் சித்தப்படி நடப்பவர்; நடுத்தர வயது அலைக்கழிப்பு கொண்டவர்.

White-guiltல் மாட்டிக் கொண்ட ஏபிசிடி; சிக்கோ, துப்பாக்கி கொலம்பைன் என்று படமாக எடுத்துத் தள்ளும் மைக்கேல் மூர் – ஷாய்.

இவர்களுடைய அழுக்குகளைத் துவைக்கும் வண்ணான் முன்னா.

திரைப்படத்தில் நிறைய முயன்றிருக்கிறார்கள். முஸ்லீம் கதாபாத்திரங்கள். பம்பாய் ட்ரெயிலர். ஸ்லம்டாக் மில்லியனர். தாதா மெட்ரோ கம்பெனி.

அழகான பெண் என நினைக்கும்போது ‘நான் லெஸ்பியன்’ என்று சொல்லிவிடுவது போல் இந்தப் படத்தை ரசிக்கமுடியாமல் போய்விடுகிறது.


Buzz by Siddharth Venkatesan

பாய்ந்தோடிக்கொண்டே இருக்கும் பெருநகரமான மும்பையை பற்றி இதுவரை சொல்லப்படாத எதை ஒரு புதிய படம் சொல்லிவிட முடியும்? மிக மிகப்பரிச்சயமான ஓர் இசையை – பீத்தோவானின் ஐந்தாவது சிம்ஃபனி என்று வைத்துக்கொள்வோம் – நிகழ்த்தப்போகும் ஓர் இசை நடத்துனரின் சங்கடத்திற்கு நிகரானது இது. தந்திக்கருவிகள் இசையின் முதல் ஸ்வரங்களை மீட்டத்துவங்கியதுமே ரசிகர்கள் அடுத்து வரும் பகுதியை – ஒவ்வோர் மாத்திரையாக – எதிர்பார்க்கத்துவங்கிவிடுவார்கள். வெளிப்பாட்டில், வேகத்தில், உத்தியில் சில வேறுபாடுகளை கொண்டுவரலாம். ஆனால் ஒட்டுமொத்த இசைக்கோவையின் பிரம்மாண்டம்… அது மாற்றமுடியாதது. ஆனால், தந்திவாத்தியக்காரர்களின் குழாமிலிருந்து ஒரே இரு செல்லோ வாசிப்பாளரை மட்டும் முன்னே வரச்செய்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். இது போலவே காற்றுவாத்தியக்காரர்களிலிருந்து ஒற்றை சாக்ஸஃபோன் வாசிப்பாளரையும் தோல்வாத்தியக்குழாமிலிருந்து ஒற்றை டிம்பன் வாசிப்பாளரையும், பிராஸ் குழாமிலிருந்து ஒற்றை ட்ரம்போன் வாத்தியக்காரரையும்… மற்ற அனைவரும் மௌனமாகின்றனர். இந்த நால்வரிலிருந்து எழும் ஒலி முழு சிம்ஃபனியின் ஒலியாய் ஒரு போதும் ஆகாது. ஆனால், இந்த சோக இழைகளினூடே, அதன் முழுமையை – கண்ணுக்கு முன் நிகழ்வதில் அல்ல, உங்கள் தலையினுள் – நீங்கள் உணர்ந்துகொண்டே இருப்பீர்கள்.

பரத்வாஜ் ரங்கன் எழுதிய “தோபி காட்” விமர்சனத்தின் ஒரு பத்தியின் மொழியாக்கம். மிக நல்ல விமர்சனம்: Review: Dhobi Ghat « Blogical Conclusion

தோபி காட்: நுட்பமான திரைமொழி! « கொதித்தெழு, புது உலக வாழ்வினை சமைத்திட…!

அமெரிக்காவில் முதலீட்டு வங்கி நிபுணராக பணிபுரியும், தற்காலிக விடுமுறைக்கு மும்பைக்கு வரும் ஷாய் எனும் பெண், வெளி மாநில கட்டுமானத் தொழிலாளர்களை ஓவியங்களாக வரையும் அருண் எனும் ஓவியன், சல்மான் கான் போல சினிமா நட்சத்திரமாக ஆசைப்படும் சலவைத் தொழிலாளியும், இரவில் எலி அடிக்கும் நகர சுத்தித் தொழிலாளியுமான முன்னா என்றழைக்கப்படும் ஜகீம், யாஸ்மின் என்ற திருமணமான இளம் பெண் ஆகிய நால்வரது வாழ்க்கை.

நால்வரது வாழ்க்கையும் சில புள்ளிகளில் ஒன்று கலப்பதையும், ஒருவர் மீது ஒருவர் ஏற்படுத்தும் பாதிப்புகளையும், அதன் மூலம் பெருநகர வாழ்வின் வர்க்க, சமூகப் பிரிவினைகளை ஒவ்வொருவரும் தத்தமக்கே உரிய முறையில் உணரத் தலைப்படுதலையும், திரைப்படம் சொல்கிறது.

முன்னாவிடம் ஷாய் தனது பீகார் கிராமத்தின் நினைவு வருவதில்லையா எனக் கேட்கிறாள். கிராமத்தை நினைத்தாலே தான் உணர்ந்த பசிதான் நினைவுக்கு வருவதாக முன்னா கூறுகிறான். நகருக்கு இடம் பெயர்ந்த தொழிலாளிகள், உரையாடலின் துவக்கத்திலேயே தமது கிராமத்தைக் குறித்து நினைவு கூறும் பொழுது, இப்படியொரு கருத்தை உதிர்ப்பார்கள் எனத் தோன்றவில்லை.

பக்கோடா பேப்பர்கள்: தோபி காட் – ஹிந்தி சினிமா

தன் சகோதரனைப் போல முறையற்ற வழிகளில் சம்பாதிக்காமல், நேர்மையாகச் சம்பாதிப்பதை விரும்பும் முன்னா, அப்பார்ட்மெண்ட்களில் எலிகளை அடித்துக் கொல்வது, ரயிலில் அடிபட்டு இறப்போரை நகர்த்திக் கிடத்துவது போன்றவைகளையும் கூடுதல் பணம் சம்பாதிக்கும் பொருட்டு செய்து வருகிறான் முன்னா. முன்னாவாக ப்ரதீக்பப்பார் (ஸ்மிதா பாட்டீல் / ராஜ்பப்பார் மகன்) அறிமுகம்

வீட்டை செட் செய்யும் போது அருணுக்கு ஏற்கனவே அங்கிருந்தவர்கள் விட்டுச் சென்ற மூன்று வீடியோ காஸட்டுகளும், ஒரு வெள்ளிச் செயினும், மோதிரமும் கிடைக்கிறது. “அவற்றை யாரும் பெற்றுக்கொள்ள வரமாட்டார்கள், வீசிவிடு” என்று சொல்கிறார் வீட்டு ஓனர்.

அந்த வீடியோக்களை பார்க்க ஆரம்பிக்கிறான் அருண். சாதாரணமாகத் துவங்கும் அந்த வீடியோ, உத்தரபிரதேசத்தின் மல்யாபாத் கிராமத்திலிருந்து திருமணமாகி வந்த ஒரு இளம் பெண், யாஸ்மின், தன் சகோதரனுக்காக, மும்பையை சுற்றிக் காட்டிக் கொண்டே பேசிய கடிதங்கள் அவை. அந்த வீடியோக்கள் பார்ப்பது அருணின் தினசரி வேலையாகவே ஆகிவிடுகிறது. ஒரு அடிக்ட் போல அவற்றை பார்த்துக் கொண்டே நேரங்களைக் கழிக்கிறான். அவனுடைய புதிய ப்ராஜக்ட் ஒன்றிற்காக அதைப் பார்த்து பல ஓவியங்களும் வரைகிறான்.

|கீதப்ப்ரியன்|Geethappriyan|: தோபி காட்[Dhobi Ghat][2011][இந்தியா][ஹிந்தி]

இயக்குனர் அலஜென்ரோ கொன்சலேசின் ஆஸ்தான இசையமைப்பாளரான குஸ்டவோ சண்டவோலல்லா இருமுறை ஒரிஜினல் ஸ்கோருக்காக ஆஸ்கர் விருது வாங்கியவர், அமெர்ரோஸ் பெர்ரோஸ், பாபெல், 21 க்ராம்ஸுக்கு இசையமைத்து உலகப்புகழ் பெற்றவர் அவர் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

சாருவின் விமர்சனம்

இது மிகக் குறைந்த செலவில், கெரில்லா படப்பிடிப்பு என்ற உத்தியின் மூலம் எடுக்கப்பட்டது. அதாவது, எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், ஒரு குட்டி ராணுவ அணிவகுப்பு அளவுக்கு ஆள் படை அம்புகளும் விளக்குகளும் ஜெனரேட்டர்களும் இல்லாமல், இரண்டு அல்லது மூன்று பேர் மட்டுமே, நிஜமான சூழலில், படம் எடுக்கப்படுகிறது என்ற விஷயமே யாருக்கும் தெரியாமல் எடுப்பதுதான் கெரில்லா ஷூட்டிங். ஸ்டார்ட், ரோலிங், கட், இடையில் இயக்குனர் போடும் சுத்தத் தமிழ் வார்த்தைகள் என்ற எந்த சத்தமும் இருக்காது. ட்ராலிகள் இயங்காது. பூதாகாரமான விளக்குகள் இல்லை. சினிமா படப்பிடிப்பு என்று நாம் அறிந்திருக்கும் எந்த அடையாளமும், paraphernaliaவும் இல்லாமல் ரகசியமாக எடுக்கப்படுவதே கெரில்லா ஷூட்டிங். இப்படி எடுப்பதால் மட்டுமே ஒரு நகரத்தை அதன் உயிர்த்தன்மை கெடாமல் காண்பிக்க முடியும். அந்த வகையில் டோபி காட்டை எல்.எஸ்.டி.க்கு அடுத்தபடியாக இந்திய சினிமாவில் நடந்திருக்கும் புரட்சி என்று சொல்லலாம். உலகப் புகழ் பெற்ற இசையமைப்பாளரான குஸ்தாவோ சந்த்தாவோலால்யாவை வைத்து எடுக்கப்பட்டும் டோபி காட்டின் பட்ஜெட் 11 கோடிதான். வசூல், படம் வெளிவந்த இரண்டே தினங்களில் 11 கோடியைத் தாண்டி விட்டது.