குறுங்கதை மொழிபெயர்ப்பு « அங்கிங்கெனாதபடி
கிட்டத்தட்ட சித்தார்த்தின் மொழியாக்கம் செய்யப்பட்ட கதையை ஒத்த சமீபத்திய வாசிப்பு ஒன்றின் சுருக்கம்…
அந்த எழுத்தாளனை யாருமே சீந்தவில்லை. எவருமே அவன் படைப்பை அச்சேற்றாமல் நிராகரிக்கிறார்கள். விலைமாதுவின் துணையை நாடுகிறான்.
அவளோ அவனின் கதையை புகழ்கிறாள். ‘இன்னும் எழுது’ என்பதுடன் நில்லாமல், அவனுடைய கோழிக் கிறுக்கல்களை தட்டச்சுகிறாள். கோர்வையாகக் கொண்டு வருகிறாள். இவனோ எப்போதும் போதையில் இருப்பதால், எழுதித் தள்ளுவதற்கே நேரம் போதாமல், டைப்ரைட்டிய பக்கங்களை வாசிக்காமல் மேலும் மேலும் எழுதுகிறான்.
புத்தகம் கிட்டத்தட்ட தயாரான நிலையில், பதிப்பாளர்களை சந்திக்க, தன் அண்ணன் வசிக்கும் நகரத்துக்கு செல்கிறான். கதையைப் படிக்கும் அண்ணன், தன் பெயரில் வெளிவருவதை விரும்புகிறான்.
தம்பிக்கு போதையேற்றி, மோசமான விபத்தை உருவாக்குகிறான். தம்பியை எசகுபிசகான நிலையில் புகைப்படமெடுத்து, மிரட்டி தன் பெயரை முதன்மை படைப்பாளியாக சேர்த்துவிட செய்கிறான்.
புத்தகம் வெளியாகிறது. புரட்டி பார்க்கும் தம்பிக்கு அதிர்ச்சி. தலைப்பு மட்டும்தான் தான் வைத்தது. உள்ளே இருப்பதெல்லாம், விலைமாதின் அனுபவங்கள். அவளுடைய பணக்கார வாடிக்கையாளர்கள், அவர்களின் விநோத நடவடிக்கைகள், என்று விரிகிறது.
விலைமாதுவே சொந்தப் பெயரில் வெளியிட முடியாத கதையை, தம்பியிடம் இருந்து அபகரித்து பெயர் போட்டுக் கொண்ட அண்ணனின் நிலையை ஒப்பிடும் கதை.
நிஜமாக எழுதியவருக்கு உண்மைப் பெயரை எடுத்துரைக்க முடியாது. நிஜமாக எழுதியதாக நினைத்தவருக்கும் படைப்புக்கும் தலைப்பு தவிர ஸ்னான ப்ராப்தி கூட கிடையாது. எழுதியாக சொல்லிக் கொள்பவரும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் கிடைத்த வாய்ப்பை பறித்துக் கொண்டவர்.
இந்தப் புத்தகத்தின் பெயர் தெரியாமல் கதை மட்டுமே என்னுடைய வாசக அனுபவத்தில் தங்கியது மீட்சி.













