இந்தியாவில் வசிக்கும் இன்னொரு தமிழரின் பார்வை:
“கமலாவா டிரம்பா என்பதை விட வெல்லப்போவது இலான் மஸ்க், பாலாஜி ஸ்ரீனிவாசன் முதலியவர்களின் conviction-ஆ அல்லது அமெரிக்காவின் (டிவி) ஊடகங்களின் கணிப்பு (எ) பிரசாரமா என்பதில்தான் எனக்கு அதிகம் சுவாரசியம்! என்னுடைய மற்றுமொரு கணிப்பு என்னவென்றால் அமெரிக்கவாழ் இந்தியர்கள் டிரம்ப் வருவதை (அவர் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரானவர் என்பதனாலேயே) விரும்பவில்லை. கமலாம்மா இந்தியர் என்பதைக் காட்டிலும் டிரம்ப் வந்தால் என்ன பண்ணித் தொலைவாரோ (னோ) என்பதுதான் அவர்களின் கவலையாக உள்ளது.”
———-
இனி என் பார்வை:
அமெரிக்க இந்தியர் கொள்கைப் பற்றாளர் கிடையாது.
அமெரிக்க இந்தியருக்கு மூன்றே குறிக்கோள்:
1. பணம் – பங்குச் சந்தையில் காசு பார்த்தல்
2. குழந்தை – அவர்களை ஒரு வழியாக்குதல்
3. சோம்பேறி – ஓய்வு, டிவி, வம்பு பேசுதல்
அவர் செங்கொடி ஏந்தி சித்தாந்தத்தைத் தூக்கிப் பிடித்ததில்லை.
அவர் அரியணையில் அமர்ந்து மார்கஸ் அரேலியஸ் (Marcus Aurelius) மாதிரி ‘தியானங்களின் சுருக்கம்’ சிந்திப்பதில்லை.
அவர் அரசியல் பற்றி கவலைப்படாத நடுத்தர வர்க்கம்.
அவருக்கு தங்கம் வேண்டும். திருட்டு டிவி வேண்டும். கிசுகிசு வேண்டும். கிளுகிளுப்பு வேண்டும். முகப்புத்தகமும் இன்ஸ்டா ரீலும் வேண்டும். விஜய்யும் அஜீத்தும் வேண்டும்.
சொல்லப் போனால் தமிழ்நாட்டில் வசிப்பதாகவே நினைப்பு.
அவருக்கு தமிழக அரசியல் விவரமாகத் தெரியும். அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கையோ உக்ரெயினுக்கான உதவிக்கான பின்புலமோ அறிய வேண்டிய ஆர்வமோ தேவையோ இல்லாத ஜந்து.
புலம் பெயர்ந்தோருக்கு எதிரானவர் டிரம்ப் என்பதே ஆதிசங்கரரை ‘மாயாவாதி’ எனத் திட்டுவது போல் அர்த்தமற்றது.
சட்டபூர்வமாக உள்நுழைந்தோருக்கு குடியுரிமை தருவதற்கு தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும் கமலா ஹாரிசும் இழுத்தடிக்கிறார்கள்.
அந்த மாதிரி எச்1.பி., பி1 விசாக்களில் வந்தவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் சட்டு புட்டென்று குடியுரிமைத் தருவதாக விவேக் ராமசாமியும் டொனால்ட் டிரம்ப்பும் உறுதியளிக்கிறார்கள்.
எல்லோருக்கும் இருபது டாலர் குறைந்த பட்ச ஊதியம் தருவதாக கமலா ஹாரிஸ் வாக்குறுதி அளிக்கிறார்.
அது வாங்க முடியாமல் அல்லாடும் அப்பாவி அத்துமீறி ஊடுருவல்வாதிகளை, அவர்களின் சொந்த ஊருக்கே திருப்பி அனுப்புவதாக வாக்குறுதி அளிக்கிறார் டிரம்ப்.
கமலா வழிப்படி பார்த்தால் ஏழைகளை உறிஞ்சும் சக்தி டெமொகிரட்ஸ் தான்.
டிரம்ப் வழிப்படி பார்த்தால் சட்டபூர்வமாக வசிப்போருக்கு சரியான சம்பளம் வரும் பாதைக்கான கால்கோள் இடுபவர் ரிபப்ளிகன் தான்.
முழு ராஜ்ஜியமும் கையில் இருந்த போதும் துப்பாக்கிகளைத் தடை செய்யும் திட்டமோ, புவி வெப்பமயமாதலைக் குறைக்கும் சட்டமோ இயற்றாத ஒபாமா போன்ற ஹாரிஸை நம்பும் இந்திய வம்சாவழியினர் அதிகம்.
அவர்கள் மாற்றத்தை விரும்பாதவர்கள்.
ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டால் பங்குச் சந்தை சரியாது. பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். ஆள் குறைப்பு நடக்காது.
நேற்று போல், நாளையும் இருக்கும்.
டிரம்ப் வந்தால் களை பிடுங்கப்படும். அரசாங்க ஊழியர் முதல் கடைநிலை இட்லி கடை எல்லோரும் ஓராண்டிற்காவது சிரம தசைக்கு உள்ளாவார்கள்.
ட்ரம்ப் ஆதரவாளர்கள் இந்த அறுவை சிகிச்சையை விரும்புகிறவர்கள்.
குற்றங்கள் குறைய வேண்டும் என நினைப்போர் டிரம்ப் பக்கம். குழந்தைகளுக்கு அறியா வயதிலேயே பாலியல் கல்வி கூடாது என நினைக்கும் பழமைவாத கலாச்சார காவலர்கள் டிரம்பின் பக்கம்.
முந்தா நாள் போல் நாளையும் இருக்கும்!











