Tag Archives: பட்டினி

அறம் – ஆகாரம் – ஆகாத்தியம்

கல்ப காலம் கழித்து நேற்று அன்னா ஹசாரேவாக இருந்தேன்.

இதுதான் காரணம் என்றில்லை. கடையில் வாங்கும் பொறை போன்ற தானியக் கலவைகளின் மேல் கோபம் ஒரு காரணம். அதே அதே காலை உணவா என்னும் அலுப்பா என்பது இன்னொரு காரணம். காலை உணவைத் தவறவிடுவது மாபாதகம் இன்னொன்றில்லை என்று அறிந்தது மற்றொரு காரணம். அரசன் போல் பிரேக்ஃபாஸ்ட் உண்ணாவிட்டால், மதிய உணவு புசித்து உடல்நலத்தை கெடுக்க வேண்டாம் என்பது அடுத்த காரணம். உடம்பில் இருக்கும் கொழுப்பு கவனித்துக் கொள்ளும் என்பது முக்கிய காரணம்.

நேற்றைய தினம் அமாவாஸ்யை. பெற்றோரில் எவரையேனும் இழந்தவர்கள் இரவு சாப்பிடக் கூடாது. இரமலான் கூட வரப் போகிறது. ரம்ஜானுக்கு ஐந்து மாதம் இருக்கிறது என்றாலும், தேர்தல் வரும்போதா வேட்பாளர் களத்தில் இறங்குவார்? திங்களன்றுதான் ஏகாதசி கழிந்திருக்கிறது. உண்ணாவிரதத்திற்கு பெயர் பெற்ற அண்ணல் அரிச்சுவட்டில் உபவாசம் இருக்க உகந்த நாள்.

அம்பரீஷன் போல் துர்வாசர் யாரும் இங்கு வீட்டிற்கு அதிதியாக வரப் போவதில்லை. அவரவர்களின் இரயில் நிலையங்களிலும் பொதுச்சோலைகளிலும் வீடற்றோர் இன்னொரு பட்டினியை முடித்து எழுந்திருப்பர். அவர்கள் நிலைத்தகவல் இடும் காலம் வரும் முன் சோம வார விரதமும் இருந்துவிட வேண்டும்.

ஆரஞ்சிப் பழம்

uncoil-hand-life-orange-eat-enjoy-live-hunger

இது நேற்று கனவில் நடந்தது. நிஜமாகவே.

“அரிவராசனம் விச்வமோஹனம்”

மின்விளக்கு அணைத்த அகல்விளக்கு இருளில் பஜனை. ஜிப்பாவும் ஜீன்ஸ் பேன்ட்டும் போட்டிருக்கிறேன். ”

ஓம் சக்தி! ஆதிபராசத்தி!!”

ஐயப்ப சாமிமார் கூட்டமா? மேல்மருவத்தூர் வழிபாடா? சந்தேகம் தெளிந்தது.

“ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர”.

என்னிடம் மட்டும்தான் மேல்சட்டை. மற்ற எல்லாரும் திறந்த மார்புடன் தோற்றமளிக்கிறார்கள்.

சர்வமத மையத் தலைவர் என்னை நோக்குகிறார்.

“போலோ ஜெய் ஸ்ரீ சத்ய சாய்பாபாஜி கீ ஜே!”

கனவில் கூட நான் இப்படி எக்குத்தப்பாக வரமாட்டேனே? எப்படி மாட்டிக் கொண்டேன்?

“முதல் முறையா மகனே?”

இல்லை என்பது போல் மேலும் கீழும் தலை ஆடுகிறது.

brain-mandarin_orange-fruit-petal-individual-flickr“நீங்கள்தான் அடுத்த பாபா என்று கடவுள் கை காட்டியுள்ளார். உங்களிடம் இரு ஆரஞ்சிப் பழத்தை ஒப்புவிக்கவும் கட்டளை இட்டுள்ளார். நம்மை வெகு விரைவில் அசுரர்கள் தாக்கவுள்ளனர். அப்போது நாம் ஸ்தம்பித்து நிற்க இந்த முதல் ஆரஞ்ச் உதவும். மனிதர் பிரமை பிடித்தது போல் நிற்பதால் குழம்பிப் போகும் எதிரி சோர்வுற்று ஓய்ந்து போவர். அவர்கள் மறைந்த பின் இரண்டாவது ஆரஞ்சு கொண்டு எம்மை உயிர்ப்பிக்கவும்”.

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மாதிரி ரம்மியமான குரலில் தேஜஸான சர்ஃப் சால்வை அணிந்தவர் சொல்லிவிட்டு பஜனையில் மூழ்கிவிட்டார்.

நான் அடுத்த பாபா ஆகிவிட்டேனா? கையில் இரண்டு ஆரஞ்சு இருந்தது. பரிசோதித்துப் பார்ப்போமா?

ப்ரொடக்சனுக்கு செல்வதற்கு முன் எந்த சாஃப்ட்வேரையும் டெவலப்மன்ட்டில் சோதனை செய்து விடுவேனே! அதே மாதிரிதானே? ஒரு முறை டெஸ்ட் செய்து ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பார்த்துவிடுவோம்.

முதல் பழத்தை விட்டெறிய எல்லோரும் வீழ்ந்தார்கள். பயந்து போய் உடனடியாக இரண்டாவதையும் போட்டு அனைவரையும் தெளிவித்தேன்.

அதே ஸ்ரீஸ்ரீ; எதிரொலிக்கும் தியானக்குரலில் கடுமை துளிக்கூட இல்லாமல் வருகிறார்.

hold-me-please-sun-orange-world-baba-flickr“என்ன காரியம் செய்தாய் மகனே? இதில் கூடவா நம்பிக்கை இல்லை? என்னிடம் இரு ஜோடி ஆரஞ்சி மட்டுமே உள்ளது. இதுதான் மனிதகுலத்திடம் உள்ள கடைசி காபந்து பழங்கள். இதையாவது பத்திரமாய் வைத்து எம்மை பாதுகாப்பாய்”

வெகு சிரத்தையுடன் இரு கையில் ஒன்றாய் வைத்திருக்கிறேன். காலை பஜனை பிற்பகலிலும் வெகு ஜோராகத் தொடர்கிறது.

என்னைப் பார்த்து அந்தச் சிறுமியும் சிறுவனும் ஓடி வந்தார்கள்.

“சார்! ரொம்பப் பசிக்குது. மயக்கமா வருது. நைவேத்தியம் செய்யாம எதுவுமே கொடுக்க மாட்டேங்கிறாங்க. அந்தப் பழத்தைத் தந்தா வயித்தைக் கிள்ளும் பசி கொஞ்சமாவது தீரும்.”

ஆளுக்கொன்றாக கொடுத்துவிட்டேன். புசித்து விட்டார்கள்.

விழித்துக்கொண்டேன்.