Tag Archives: டெமோக்ரட்ஸ்

அமெரிக்காவில் எகிப்து வருமா? சூடான் ஆகுமா?

இது ரொம்ப பழைய கதை. நவம்பரில் நடந்து முடிந்த தேர்தல் கதை

ஒரு ஊரில் ஒருத்தி இருந்தாள். அவள் ஒரு கோழியும் ஒரு சேவலும் வளர்த்தாள். அது நாளொரு முட்டையும் இட்டு வந்தது. சிறு சிக்கன் பல பணம் என்பதற்கேற்ப, ஒன்றை இரண்டாக்கி, இரண்டை பன்மடங்காகப் பெருக்கினாள்.

அவளுக்கு பக்கத்து வீடு மாளிகையாக இருந்தது. அதில் இருந்தவளுக்கு பத்து கோழி இருந்தது. தினந்தோறும் ஆறுமுகனின் கைக்கு ஒன்றாக டஜன் ஈண்டது.

திடீரென்று ஒரு நாள் மாளிகைக்காரிக்கு முட்டை வரத்து குறையத் துவங்கியது. அவள் பக்கத்துவீட்டுக்காரியை சந்தேகப்பட்டாள்.

அரசனிடம் முறையிட்டாள். ஒற்றைக் கோழி வைத்திருப்பவளோ ‘நான் எடுக்கவில்லை’ என மறுக்கிறாள்.

‘அவள் ஏழை. அதனால்தான் எடுக்கிறாள்’ என்கிறாள் பணக்காரி.

குழம்பிப்போன ராஜா, அடுத்த நாளுக்கு ஒத்திவைத்து அனுப்பித்துவிட்டான். விடிந்தது. அரண்மனை வாயிலில் சேறும் சகதியும் ஆக்கிவைக்க சொன்னான். வாயிலைக் கடந்ததும் ஒரு சிறிய கப்பும், இரண்டு வாளி நிறைய தண்ணீரும் வைத்தான்.

இருவரும் வந்தார்கள். ஒத்தை கோழிக்காரி ஒரேயொரு குடுவையளவு நீரை வைத்து, இரண்டு கால்களையும் சுத்தமாக அலம்பிக் கொண்டுவிட்டாள்.

பத்து மாட்டுக்காரிக்கு ஒரு வாளி போதவில்லை. பருத்த கால்கள். கவனம் சிதறிய நடை. சறுக்கி விடக் கூடாதென்ற பயம். எல்லாம் சேர்ந்து முட்டி வரை கரை. முன்னவள் பாக்கி வைத்திருந்த வாளித் தண்ணீரையும் தாராளமாக தாரை வார்த்தாள்.

மரியாதைராமன் பார்த்துக் கொண்டிருந்தார். தன் முட்டை போதாதென்று அடுத்தவர் முட்டையையும் சுடும் பழக்கம் கொண்ட பணக்காரியை கண்டித்து, அபராதம் விதித்தார்.

அங்கே சாட்சியம் இல்லை. அமெரிக்காவில் மீடியம் இருந்தாலும் மக்கள் மருண்டதில் ஒபாமாவின் பிடி தளர்ந்து முட்டை சிதறிவிட்டது.

மரியாதைராமன் போல் குடிமகன்களுக்கும் குழப்பம். நிறைய வைத்திருப்பவர் சிரத்தையாக மேய்த்தால், எதற்காக வளர்ச்சியில் பின் தங்க வேண்டும்? ஒழுங்காக கணக்கு போட்டு, கண்ணுங்கருத்துமாக நிர்வகித்தால், ஏழை பக்கத்துவீட்டுக்கார இந்தியா/சீனா போல் நாமும் முன்னேறலாமே?

இப்போதைக்கு அமெரிக்காவின் விஜயகாந்த் ஆன ‘டீ பார்ட்டி‘யிடம் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள்.

தலைப்புக்கும் இந்தக் கதைக்கும் என்ன சம்பந்தம்?

முதலில் புள்ளிவிவரம்:

கி.பி. 1980: அமெரிக்காவின் மொத்த வருவாயின் பத்து சதவீதத்தை ஒரு சதவீத பெரும்பணக்காரர் ஈட்டுகிறார்கள்.

2007: வெறும் பத்து சதவிகித பெரும்பணக்காரர்கள் 50% (சரி பாதி) வருவாயை வைத்திருக்கிறார்கள்.

2007: நான்கு லட்சம் டாலருக்கு மேல் ஈட்டும் மிகப்பெரும் செல்வந்தர்களிடம் 25% பணம் அடைந்திருக்கிறது.

1973 முதல் இப்போது வரை, பாக்கி 99% சதவிகித சராசரி அமெரிக்கரின் வருவாய் 8.5% உயர்ந்திருக்கிறது.

அதே காலகட்டத்தில் 1% செல்வந்தர்களின் சம்பளம் 190% வளருகிறது.

இப்போது விஜய்காந்த்தின் மதிப்பை உணர்ந்திருப்பீர்கள்.

  • இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?
  • இப்படி பணங்குவிப்பவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டுமா?
  • எட்டு மில்லியன் அமெரிக்கர்களை வேலையில்லாமல் தவிப்பது குற்றமில்லையா?

முழங்கினார்கள்; ‘தேநீர் கட்சி‘ வென்றது.

இப்பொழுது நிகழ்காலம். முதலில் டுனீசியா; நேற்று எகிப்து; நாளை யேமன்? ஜோர்டான்?

Unrest in Arab countries

Political crisis in Egypt

எங்கெல்லாம் புரட்சி வெடிக்கிறது… எப்படி வெடித்தது! ஏன் உருவானது… இதுதான் ஊடகங்களின் பேசு பொருள்.

1848 -இல் ஃப்ரெஞ்சு போராட்டத்திற்கும் அரபு நாடுகளின் எழுச்சிக்கும் முடிச்சுப் போடுகிறது ‘தி வோர்ல்ட்’.

இந்தோனேஷியாவில் 1998 பொங்கி எழுந்த ஏழை வறியோரின் கோபத்தையும் எகிப்தின் போராட்டமும் ஒரு விதத்தில் சரி நிகர் என்கிறது என்.பி.ஆர்.

1989களில் சோவியத் ருஷியா துண்டாடியதும், செக்கோஸ்லோவேகியா பிரிந்ததும், பில் கிளின்டனின் போஸ்னியா போரும் ஒப்பிடத் தக்கது. – அல் ஜஸீரா.

தலைப்புக்கு நிஜமாகவே வந்து விடலாம்.

இனப் போராட்டத்திற்குள்ளான சூடான் இரண்டாகப் பிரிகிறது. அமெரிக்கா இரண்டாகப் பிரியுமா?

சவூதி அரேபியா போல் இஸ்லாமிய நாடாகவும் பிரஸ்தாபிக்காமல், லெபனான் போல் சுதந்திரமும் புழங்காமல் இருக்கும் எகிப்தில் படித்தவர்கள் போராட்டத்தை முன்வைக்க, வறியோர்கள் பின்னெடுத்து செல்கிறார்கள். அமெரிக்காவிலும் ஜீஸஸ் அருளுடன், வீடற்றோர் பொங்கியெழும் ‘டீ பார்ட்டி’ புரட்சி எழுமா?

இந்தியாவைப் பாருங்கள்… உங்கள் வேலையை எடுத்துக் கொண்டு விட்டார்கள்.
சீனாவைப் பாருங்கள்… நீங்கள் உபயோகிப்பவை அனைத்தும் அங்கேதான் தயாராகிறது.

இந்தியனை… வெளியேற்று; சீனாவை… தூக்கியெறி!

பணக்கார ஆசியர் பி.எ.டபில்யூவிலும் லெக்சசிலும் பவனி வரும்போது, அண்டியிருக்க ஓலைக்குடிசைக்கு கூட வக்கிலாதவர்களுக்கு கோபம் வரும். அதுவும், வேற்று நிறத்தவனாகவும் இருந்துவிட்டால்…

உகாண்டாவில் நடந்தது; ஃபீஜியில் நடக்கும்; ஏன் நடக்காது என்பது இன்னொரு நாளைக்கான மேட்டர்.

தொடர்புள்ள நூல்கள்:

1. The Mendacity of Hope: Barack Obama and the Betrayal of American Liberalism by Roger D. Hodge

2. Ill Fares the Land by Tony Judt

அமெரிக்க அரசியல் :: இடைத்தேர்தல்

ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்ததாக சரித்திரம் உண்டா?

உண்மையான ஜனநாயகத்தில் சாத்தியமில்லை. அதுவும் வறுமை தாண்டவமாடும், வேலையில்லாத் திண்டாட்டம் கொடிகட்டி பறக்கும் நாட்டில் தம்பிடிக் காசு கூட பெட்டு கட்ட முடியாது.

இரண்டாண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி. கேள்வி கேட்டார்; குற்றஞ்சாட்டினார்.

இன்றோ ஆளுங்கட்சி. காங்கிரஸ், செனேட், ஜனாதிபதி… சகலமும் டெமோக்ராட் வசம். மார்தா கோக்லி ஒரு பதம் என்றால், முழு வெண்கலப் பானையும் நாளை பொங்குகிறது.

அதிபர் ஆகிய பிறகு எதிர்கொள்ளும் முதல் தேர்தலை பில் க்ளின்டன் முதற்கொண்டு பெரும்பாலானோர் தோற்றே துவங்கியுள்ளனர். ஒபாமாவும் படுதோல்வியுடன் துவங்குவார்.

அதற்கான முக்கிய காரணங்கள் என்ன?

  1. சேமநலம், உடல்நலம் என்று எல்லோரின் செலவையும் இன்ஷூரன்ஸ் நிறுவன நலனுக்காக கூட்டி கொடுத்தது
  2. கடைநிலை ஊழியர்களுக்கு வேண்டிய கட்டுமானத் தொழில் தலைநிமிராதது
  3. வருமான வரி அதிகமாகிப் போகும் அபாயம்

இதனால் ஒபாமாவிற்கு கிடைக்கப் போகும் முக்கிய நன்மைகள் என்ன?

  1. ஆப்கானிஸ்தானில் இருந்து போர்படைகளை விலக்குவதை தாமதிக்க ஆர்வம் காட்டும் மேல்சபை + சட்டசபை
  2. தீவிர இடதுசாரி கொள்கை கொண்ட நிதிக் கொளகை & தொழிற்துறை சார்புநிலையைத் தளர்த்திக் கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவதாக காட்டிக் கொள்ளுதல்
  3. அதன் மூலம் சாரா பேலின் போன்ற ஒப்புக்கு சப்பாணியை தன் போட்டியாளராக 2012 தேர்தலில் நியமிக்க வைத்தல்

அதெல்லாம் இருக்கட்டும். உள்ளூர் அரசியலுக்கு வருவோம்.

மாசசூஸெட்ஸ்

சென்றமுறையே தெவால் பேட்ரிக் மெதுவாகத்தான் துவங்கினார். இந்த முறையும் செம ஆமை ஆரம்பம். ஆனால், முயல்களை விட முன்னிலையில் இருக்கிறார்.

விஜயகாந்த் போல் ரெண்டுங்கெட்டான் கஹில். குடியரசு வாக்குகளை சிதறடிப்பதில் சுதந்திரக் கட்சியின் பொருளாளர் கஹில் பெரும்பங்கு வகிக்கிறார்.

வாக்குச்சீட்டில் மூன்று கேள்விகளில் இரு கேள்விகள் ஜீவாதார முக்கியத்துவம் வாய்ந்தவை.

1. சாராயத்திற்கு வரிவிலக்கு தரலாமா? வேண்டாமா?

2. உங்கள் வருமான வரியை குறைக்கலாமா? வேண்டாமா?

இந்தக் கேள்விகளை Jeopardy போல் தலையைச் சுற்றி வினா எழுப்பியுள்ளனர்.

கலிஃபோர்னியா

மாசசூஸட்ஸ் எல்லாம் ‘ஐயோ… பாவம்’ ரகம். கலிபோர்னியாவில் கஞ்சாவை சட்டபூர்வமாக வளர்க்கலாமா/ வேண்டாமா என்று வினவுகிறார்கள்.

சட்டத்திற்கு அப்பால் போதைப் பொருள் ஏற்றுமதி (கடத்தல் என்று கூட இதற்கு சங்ககாலத்தில் பெயர் நிலவியது) செய்யும் நாடுகளான மெக்சிகோ, கொலம்பியா, கார்சாய் போன்றவை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

பல்கலை மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இந்த சட்டவரைவுக்கான பதிலை நாலை அறியலாம்.

கலிபோர்னியாவில் கஞ்சா தவிர இன்னும் இரு முக்கிய போட்டிகள்.

1. ஹியுலெட் – பக்கர்ட் முன்னாள் தலைவி கார்லி ஃபியோரினா

2. ‘பொருட்கள் எலத்தில் விற்க/வாங்க’ உலகப் புகழ்பெற்ற வலைத்தளமான ‘ஈ பே‘ தலைவி மெக் விட்மன்.

செமொக்ரட் கட்சித் தலைவர் ஹாரி ரீட் :: செனேட்

ஆறு வருடத்திற்கொரு முறைதான் செனேட்டருக்கு மறுதேர்தல் நடக்கிறது. (அமெரிக்க காங்கிரசுக்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை). போயும் போயும் இந்தாண்டுதானா அந்தப் போதாத காலம் வரவேண்டும்?

அந்த ஆறாண்டு காலம் நிறைந்து, இந்த முறை இன்னொரு வாய்ப்பு கோருகிறார் ஆளுங்கட்சி தலைவர் ஹாரி ரீட்.

கட்டிடங்கட்டுவோர், சாலை போடுவோர் என்று தினகூலிக்கு சொற்ப சம்பளம் பெறுவோர் தெருவில் தள்ளப்பட்ட நிலை. அப்படி தள்ளாடும் அமெரிக்கருக்கு போட்டியாக, பக்கத்து நாடான மெக்ஸிகோவில் இருந்து மிகக் குறைந்த ஊழியத்திற்கு கள்ளத்தோணியில் குடிபுகல்வோர்களை கண்டு கொள்ளாத சுதந்திர கட்சி சீட்டை தக்கவைத்துக் கொள்ளுமா?

கதாநாயகி கிறிஸ்டின் ஓடானல்

சென்ற தேர்தலில் நாயகி அந்தஸ்தை சாரா பலின் பெற்றார். இந்தாண்டு அந்தப் பெருமை டெலாவேர் மாகாண செனட்டராக போட்டியிடும் க்ரிஸ்டீன் ஒடானலைச் சேரும்.

ஜோ பைடன் துணை ஜனாதிபதி ஆனதால் காலியான இடத்திற்கான போட்டி என்பது கூடுதல் மகிமை.

கிரிஸ்டீன் ஒடானல் பொன்மொழிகளில் சில:

  1. “பிறன்மனை நோக்குவது தவறு; அதனினும் தவறென்பது கையடித்தல். கைவேலை செய்வது முறை பிழற்ந்த செய்கை.”
  2. “கிறித்துவத்தை பள்ளிப் பாடநூல் திட்டத்தில் இருந்து எடுத்துவிட்டோம்; அதன் செய்வினையால்தான் வாரந்தோறும் வகுப்பறைகளில் துப்பாக்கிச்சூடு நடக்கிறது.”
  3. “தீராநோயை இறைவன் தீற்று வைக்கிறார். புற்றுநோயை கடவுள் குணம் செய்வித்தலை கருத்தில் கொள்ளாமல், பணங்கட்ட சொல்லுகிறார்கள்.”
  4. “எனக்கு நீங்கள் வாக்களிக்க, காரணஞ்சொல்ல தேவையில்லை.” (கேள்வி: நீச்சலுடை புகைப்படத்தைக் காண்பித்து வாக்கு சேகரிப்பீர்களா?)
  5. “பரிணாம வளர்ச்சி என்னும் அறிவியல் கொள்கை வெறும் பம்மாத்து. அது மட்டும் உண்மையென்றால் குரங்குகளெல்லாம் மனிதர்களாகி இருக்குமே?”
  6. 1999ல்: ‘நான் பில்லி, சூனியம் வைக்க முயன்றேன்.’
  7. இன்று: “நான் சூனியக்காரி அல்ல!”

அமெரிக்க காங்கிரஸ் – சட்டசபை

மொத்த இடங்களான 435- இல் நூறு இடங்களில் சரியான போட்டி. நூறு இடங்கள் கொண்ட செனேட்டில் 37க்கு தேர்தல் நடக்கிறது.

ஒபாமாவிடம் எப்பொழுதுமே பணப்புழக்கம் அதிகம். இப்பொழுது ஆளுங்கட்சி வேறு! டெமொகிரேட் கட்சி 145 மில்லியன் டாலர்கள் செலவழித்திருக்கிறது.

அதற்கு சற்றும் சளைக்காத ரிபப்ளிகன் கட்சி 121 மில்லியன் கரைத்திருக்கிறது. அதற்கான வருவாயாக குறைந்தபட்சம் நாற்பது இடங்களாவது கைமாறும் என்று எதிர்பார்க்கிறது.

சீனாவும் கேபிடலிசமும்

இது தவிர கார்ல் ரோவ் போன்ற சுப்பிரமணிய சாமிகள் கைங்கர்யமும் இந்தத் தேர்தலில் நிறையவே உண்டு. இந்த மாதிரி அறுபது மில்லியன் குடியரசுக் கட்சிக்கு கிடைத்திருக்கிறது. அதற்கான அமைப்பாக U.S. Chamber of Commerce செயல்படுகிறது. சீனா போன்ற வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களின் உபயத்தில் வளர்கிறது.

சைனாவின் பணத்தை மதிப்பீடு செய்வதில் சுணக்கம் ஏற்படுத்துவது, டாலருக்கும் மற்ற நாணயங்களுக்கும் நிலவும் ஏற்றத்தாழ்வை அப்படியே விட்டுவைப்பதன் மூலம் ஏற்றுமதியின் லாபவிகிதத்தை மெயின்டெயின் செய்வது போன்றவை சீன அரசின் விருப்பம்.

ஜார்ஜ் புஷ் செய்ததை குடியரசு கட்சி தொடருமென்னும் நம்பிக்கையில் அயநாட்டு செல்வாணியும் உள்நாட்டுத் தேர்தலில் விளையாடுகிறது.

ஆளுநர் – கவர்னர் பதவி

37 இடங்களில் ஆளுநருக்கான போட்டியும் நாளை தேர்தலில் இடம்பிடித்துள்ளது.

இதில் தெற்கு கரோலினா மாகாணத்தின் கவர்னர் வேட்பாளராக அமெரிக்க இந்தியப் பெண்ணான நிக்கி ஹேலி முன்னணியில் இருக்கிறார்.

ஆர்னால்ட் ஸ்வார்ஸனீகர் கட்சியை சேர்ந்த மெக் விட்மேன் வெல்வாரா? நிரந்தரமாக டெமோக்ரட் வெல்லும் மாநிலத்தில் முன்னாள் கவர்னர் ஜெரி பிரவுன் வெல்வாரா?

எவர் வென்றாலும் கஞ்சாவில் மட்டுமே அகில உலகமும் கவனம் செலுத்தும்.

மேலும்:

  1. Key House Races in the 2010 Elections – Interactive Feature – NYTimes.com
  2. A Banner Year for Political Spending – Interactive Graphic – NYTimes.com
  3. Campaigns: Campaign and Election News & Analysis – washingtonpost.com
  4. Basics about Midterm Election – Election Center 2010 – Elections & Politics from CNN.com