Tag Archives: ஆட்டம்

லாஸ் வேகாஸ் குறிப்புகள்

தமிழ்நாட்டில் தினமும் ஒரு பழைய கேசினோ (தியேட்டர்) இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய ஷாப்பிங் மால் உருவாகிறது. லாஸ் வேகாசில் வருடந்தோறும் ஒரு பழைய கேசினோ (சூதாட்ட மையம் + விடுதி) இடிக்கப்பட்டு, அங்கே ஒரு புதிய ரிசார்ட் (கடை, கண்ணி, சூதாட்டம், கேளிக்கை, விடுதி) அமைக்கப்படுகிறது.

இந்த தடவை பெங்களூரை பார்த்தபோது மலைப்பு ஏற்பட்டது. வெளிச்சுற்றுச்சாலை, வொயிட்ஃபீல்ட் நகர மையம், விமான நிலையம் என பல மாற்றங்கள். ஆனால், வேகாசில் ஐந்தாண்டு முன்பு வந்ததற்கும், தற்போதைய நிலைக்கும் பெரிய அளவில் மாறுதல் இல்லை. அதே புகழ் பெற்ற கேசினோக்கள். இப்பொழுது இன்னும் பெரிய பார்க்கிங் கட்டிடங்கள். அலிபாபா போன்ற பெயர் மாற்றங்கள்.

வேகாசுக்கும் திருப்பதி திருமலைக்கும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. இரண்டும் இடமுமே கம்யூனிஸ்ட்களுக்கு ஒத்துக்காது என்பது தவிர…

திருமலை திருப்பதி

லாஸ் வேகாஸ்

1. அங்கே எல்லாவிடத்திலும் பெருமாளும் தாயாரும் போட்டோவிலாவது காட்சி கொடுப்பர். இங்கே ஸ்லாட் மெஷின்கள்.
2. உறங்கா நகரம். 24 மணி நேரம்; ஏழு நாள்; 365 நாள்; கிறிஸ்துமசுக்குக் கூட விடுமுறை இல்லை.
3. அசல் மொட்டை. ஒட்ட சுரண்டும் மொட்டை.
4. ஏகாந்த சேவை ரொம்பவே பிரபலமானது. சயனிக்கும் நேரத்திற்கான revue காட்சிகளுக்குப் புகழ்பெற்றது.
5. நித்ய அன்னதானம். வித விதமான 150 உணவுவகைகளைக் கொண்ட பஃபேக்கள் பிரசித்தம்.
6. உண்டியலில் சில்லறை கொட்டும் சத்தமும், காணிக்கை காசுகளை எண்ணும் ஒலியும் பிரகாரங்களில் ரீங்கரிக்கும். எங்கு திரும்பினாலும் ஸ்லாட் மெஷின்களின் ஓசை.
7. குபேரனுக்குக் கொடுத்த கடனை இன்னும் வெங்கடாசலபதி அடைக்காததாக கேள்வி. கடனில்தான் அமெரிக்காவே ஓடுகிறது; லாஸ் வேகாஸ் எம்மாத்திரம்?
8. பல மணி நேரம் காத்திருந்தால்தான் இலவச தரிசனம் கிடைக்கும். பல மணி நேரம் சூது விளையாடினால்தான் இலவச மது கிடைக்கும்.
9. கடவுளிடம் சொன்னது வெளியில் வராது. வாட் ஹாப்பன்ஸ் இன் வேகஸ், ஸ்டேஸ் ஹியர்.

சஹாரா மூடப்பட்டுவிட்டது. கொஞ்ச காலம் முன்பு வந்தபோது தங்கியிருக்கிறேன். முயல் குட்டி போடுவது போல் சர்க்யூ டீ சொலே, நிகழ்ச்சிகளை பெருக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேசினோவிற்கும் ஒரு சர்க்யு டி சொலில் நிகழ்வு. “ஓ”வின் தண்ணீர் அரங்கை, பலர் பல விதமாக பிரதிபலித்து, தங்கள் தியேட்டரிலும் அரங்கேற்றுகிறார்கள். ஆனால், ஆங்கில விமர்சனத்தைப் படித்துவிட்டு, காப்பியடிக்கும் சாரு நிவேதிதாவாக அவை எல்லாம் நிறையவே பிசிறு தட்டுகின்றன.

குடித்து விட்டு வண்டி ஓட்டுவதாலோ… ஊருக்குப் புதிதாய் லட்சக்கணக்கானோர் சாலைகளை நிறைத்திருப்பதாலோ… தினமும் ஆறேழு விபத்துகளாவது கண்ணில் படுகிறது. இருபது கார்களாவது பலத்த சேதத்தில் காணப்படுகிறது. இந்த ஊருக்கா, இன்பச் சுற்றுலா வந்தோம் என்று மரண பயம் கிலியூட்டுகிறது.

மக்கள் வாழ்வை கண்டு போபோ-வாக பச்சாதபம் ஏற்படாமல் இல்லை. கிறிஸிதுமஸ் அன்று காபி கலந்து கொடுக்கும் ஸ்டார்பக்ஸ் ஊழியரிடம் பூர்ஷ்வா பொஹீமியனாக வருத்தம் ஏற்படுகிறது. ‘நீ 99% சதவீதம்தானே? ஆக்குபை வால் ஸ்ட்ரீட்டில் கலந்து கொண்டாயா? இன்று விடுமுறை தினமல்லவா? பண்டிகை கொண்டாட்டத்தில் நீ ஈடுபடவில்லையா? ஸ்க்ரூஜ் போன்ற முதலாளியா? அவரை சார்லஸ் டிக்கன்ஸ் படிக்க சொல்லவா?’ என்று தத்துவ விசாரத்தில் ஈடுபட மனம் விரைந்தாலும், காபிக்கு, கொழுப்பு நீக்கிய பால் கலக்க சொல்கிறேன்.

நாற்பத்தைந்தாயிரம் டாலருக்கு ஓவியம். எண்பதாயிரத்தி முன்னூறு ரூபாய்க்கு சர்க்கஸ் கோமாளி சிற்பம். பெரும் சூதாடிகளுக்கு மட்டும் திறக்கும் கேசினோ கதவு. எங்கிருந்து நோட்டு அடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், கிருஷ்ணரையோ சகுனியையோ மட்டும் மாமாவாய்க் கொண்டிருந்தால், நிச்சயம் எனக்காக ஆடும் படி அழைத்துச் சென்றிருப்பேன்.

தகதிமிதா – ஜெயா டிவி

கலைஞரைக் குறித்து எழுதினால், அம்மாவை அடுத்து சொல்ல வேண்டும்.

‘தகதிமிதா’ நடன நிகழ்ச்சி. சமீபத்தில் பார்க்கத் துவங்கியுள்ளேன் இப்போதைக்குப் பிடித்திருக்கிறது.

முதல் சுற்றில் தமிழ்ப்பாட்டுக்கு பரதநாட்டியம் ஆடுகிறார்கள். இரண்டாவது சுற்றில் கையில் எதையாவது வைத்து அபிநயம் காண்பிக்கிறார்கள். இறுதியாக, தெலுங்கு அல்லது பிறமொழிப் பாடலுக்கு ஆட்டம்.

நடுவே சுதா சந்திரன் கொஞ்சம் ஆடுகிறார். நடுவரும் அரங்கேறி தன் வித்தையை காண்பிக்கிறார்.

இருப்பதற்குள் இரண்டாம் சுற்றுதான் அலுப்பு தட்டுகிறது. ஒரே விதமான பாவனை வாராவாரம் மறு ஒளிபரப்பு ஆகிறது.

ஏன் இவரைத் தேர்ந்தெடுத்தோம் என்பதை நடுவர் சொல்வதில்லை. நாமே புரிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால், சூப்பர் சிங்கர், நாளைய இயக்குநர் மாதிரி போங்கடிப்பதில்லை. ஓரளவு உருப்படியாக பெர்ஃபார்ம் செய்பவரே வெல்கிறார். தயாரிப்பாளரின் ஒன்று விட்ட அத்தை பையன், புகழ்பெற்றவருக்கு தெரிந்தவர் எல்லாம் முதல் பரிசைத் தட்டி செல்வதில்லை போலத் தெரிகிறது.

தொடர்வது தொகுப்பு:

இந்த நிகழ்ச்சியை கடந்த ஐந்து ஆண்டுகளில் பிரபல நடனமணிகள் மற்றும் நடிகைகளான

  • பானுப்பிரியா,
  • ஷோபனா,
  • சுகன்யா,
  • விமலா,
  • இந்திரஜா,
  • `அண்ணி’ மாளவிகா,
  • மோகினி

ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட நடனமணிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பரிசுகளை பெற்றுள்ளனர்.

சாஸ்திரிய நடனக்கலையை மையமாக‌க் கொ‌ண்டு அமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 400-வது எபிசோடை எட்டியிருக்கிறது.

“கலையை நம் வாழ்வில் தினம் பிரதிபலிக்கும் நிகழ்வாகப் பார்க்க வேண்டும்”
– பரத கலைஞர் ராதிகா சுரஜித்

திரைப்பட நடன இயக்குனர், ஜெயா டிவியில் ‘தகதிமிதா’ நிகழ்ச்சியின் இயக்குனர், ‘த்ரயி’ என்ற நாட்டியப் பள்ளியின் நிறுவனர்.

வெறும் போட்டி நிகழ்ச்சியா இல்லாம அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் கற்றுக் கொள்ளவும் செய்ய வைத்தோம். அது எங்களுக்கு நல்ல ஸ்கோர் வாங்கிக் கொடுத்தது. இந்த நிகழ்ச்சியை நான் செய்ய நினைத்த போது நிறைய பேர் டிவியில் பரத கலையைக் கொண்டு வருவது என்பது சரியா வருமா, எத்தனை பேர் பார்க்கப் போகிறார்கள் என்று பேசினார்கள். ஆனால் நான் ரொம்ப உறுதியாக இருந்தேன். இதை வித்தியாசமாகக் கொடுத்தால் கண்டிப்பாகப் பார்ப்பார்கள் என்று நம்பினேன். அதே நேரத்தில் ஜெயா டிவிக்கும் நான் நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கேன். ஜெயலலிதா ஒரு பரதக் கலைஞர் என்பதால் இந்த நிகழ்ச்சியை நான் பண்ணனும்னு சொன்ன போது உடனே ஓகே சொன்னார். ஜெயா டிவி இதை பிசினஸாகப் பார்க்காமல் ஒரு கலையை வளர்க்கும் முயற்சியாகப் பார்த்தது மற்றொரு பிளஸ்.

முதன் முதலில் இந்திரா படத்தில் ‘நிலா காய்கிறது’ பாட்டுக்கு சுஹாசினி நடனம் அமைக்கக் கூப்பிட்டாங்க.

தங்கர்பச்சானுக்கு என் நாட்டியத்தின் மீது மதிப்பு உண்டு. அதனால் அழகி படத்தில் ‘பாட்டுச் சொல்லி’ பாட்டு பண்ணச் சொன்னார். ஒரு பொண்ணோட மன உணர்வுகளை அப்படியே பிரேமுக்குள்ள கொண்டு வரணும்னு சொன்னார்.

அந்த மாதிரி அமைந்ததுதான் பாரதி படத்தில வந்த ‘மயில் போல’ பாட்டும்.

இவன்’ படத்தில கம்பியூட்டர் கிராபிக்ஸ்ல பரத நாட்டியம் ஆட வச்சதும் ஒரு வித்தியாசமான முயற்சி.