பொண்டாட்டீஸ் ஆர் அஸ்

  1. குறும்படத்தின் துவக்கத்தில் வரும் அறிவிப்புகள், இந்தப் படம் முழு நீள நகைச்சுவைப் படம் என கபர்தார் செய்கிறது.
  2. வேட்டையாடு விளையாடு, சி.எஸ்.ஐ மியாமி போல் பதினாறு, முப்பத்திரண்டு என்று நொடிக்கு நொடி பல் அடுக்கு பிரிவாக விரிந்து மாறும் குட்டித்திரைகள், விலை உயர்ந்த மருத்துவ சாதனங்கள், என காட்சியமைப்பிலும் அரங்கப் பொருள்களிலும் நல்ல கவனம் செலுத்திய தயாரிப்பு.
  3. கொலாஜ் போல் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு துணுக்கு காட்சி, அதன் மேல் நாலைந்து சம்பவங்கள் என்று வசனங்கள் குறைவாக இருப்பது பலே!
  4. ஒரே சமயத்தில் அஷ்டலஷ்மியாக நாலைந்து நபர்கள் வெவ்வேறு சட்டகங்களில் வெவ்வேறு லஷ்மிகளாக தோன்றியிருப்பது சிரத்தை.
  5. உயிர்ப்போலி (க்ளோனிங் டிராக்கர்) உருவாக்கும் கணித்திரையாகட்டும்; அலுவல் திட்டத்தில் வரும் உளுத்தம் பருப்பு, தயிர் ஆகட்டும்; கோப்புகளையும் கணினி இடைமுகத்தையும் பாவ்லா காட்டாமல், உண்மையாகவே தயாரித்திருக்கிறார்கள்.
  6. பெண்ணுக்கு ஆண் குரல் மாற்றம் எல்லாம் கச்சிதமாக இருந்தாலும், ஹேமா ஏன் அவ்வளவு மோதிரம் அணிந்திருக்கிறார் என்பதும், லஷ்மி ஏன் சீமந்தம் போல் அத்தனை வளையல் அணிந்திருக்கிறார் என்பதும் அவிழாத முடிச்சு.
  7. உணர்ச்சிகரமான தருணங்களில் ஆங்கிலத்தில்தான் வசனம் அமைந்திருக்கிறது என்பது நெருடல்

 

Clone_Pondaatis R Us

Product Positioning and PRO: Nayanthara

Nayan_Thara_Actress

நடிகையில் ஒரெழுத்தை எடுத்துவிட்டால் நகை கிடைத்துவிடும். விளம்பரம் என்னும் வார்த்தைக்கு வியாபாரம் என்னும் வார்த்தை மோனை சந்தத்துடன் அமைந்திருக்கும். நயந்தாரா என்றால் அட்டைப்படம் என்று சென்ற வாரம் காணப்பட்டது. கீழே கல்கி அட்டை கட்டுரை:

Kalki_Magazines_Nayan_Thara_Actress

அடுத்து 03/12/2015 ஆனந்தவிகடன் அட்டைப்பட கட்டுரை: நயன் நம்பர் 1 – ம.கா.செந்தில்குமார்

தமிழ் சினிமாவின் கோடி லேடி, சிங்கிள் பெண் சிங்கம், ட்ரெண்டிங் பியூட்டி, மாயாவன தேவதை, தனி ஒருத்தி… அவ்வளவும் நயன்தாராதான்!

ஒரு ஹீரோயினாக 10 வருடங்கள் கடந்தும் படபடக்கிறது நயன்தாரா கிராஃப். அடுத்தடுத்து ‘மாயா’, ‘தனி ஒருவன்’, ‘நானும் ரௌடிதான்’ என ஹாட்ரிக் ஹிட்ஸ் தட்டியவர். காதல் தோல்விகள், வீண் வம்புகள், உள்ளடி வேலைகள் கடந்தும் ஒரு படத்தின் வெற்றிதோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் நயன். மாஸ் நடிகர்களே நயன் கால்ஷீட்டுக்காக மல்லுக்கட்டுகையில், ‘ரெஜினா’, ‘மாயா’, ‘மஹிமா’, ‘காதம்பரி’… என

சினிக்கூத்து, வண்ணத்திரை, சினிமா எக்ஸ்பிரெஸ் எல்லாம் பார்க்கவில்லை. அங்கும் அவர்தான் இருப்பார் என்பது சம்சயம். ஏன்?

GRT_Jewelers_Nayan_Dhara_Heroines

எல்லாப் புகழும் ஜி.ஆர்.டி. தங்க மாளிகைக்கே!

GRT_Nayanthara_Tamil_Films

மாநகராட்சி இடத்தையெல்லாம் பல கோடி கமிசன் பெற்று ஜி. ஆர்.டி வாங்கும் போது இந்த மாதிரி, தங்களுடைய பிராண்ட் அம்பாஸ்டரை முன்னிறுத்துவது ஜுஜுபி:

ஜூலை 2012 செய்தி: சென்னை மாநகர மேயருக்கு தொடர்புண்டா? சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ராபின்சன் பூங்கா அருகில் சுமார் பத்து கிரௌண்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் திமுகவினர் ஆக்கிரமித்து தங்களது கட்சி அலுவலகத்தை நடத்தி வருகின்றனர். இப்போது மீதம் உள்ள இடத்தில எம்சி சாலையை ஆக்கிரமித்து இருந்த நடைபாதை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செயபட்டிருந்தது. இப்போது அந்த இடத்தை ஜி. ஆர். டி தங்க மாளிகை நிறுவனத்திற்கு லீஸ்கு விட சுமார் ஐந்து கோடிக்கு கமிசன் பெற்று கை மாற்றி விட வேலைகள் நடந்து முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நடைபாதை வியாபாரிகளுக்கு தலைக்கு ஒரு லட்சம் கொடுத்து விரட்டபடுவதாக தகவல். மேலும் முக்கிய புள்ளி ஒருவருக்கு பதினைந்து கோடி கைமாறப் போவதாக கூறப்படுகிறது. நீதித் துறையின் உத்தரவு மீறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு கவுன்சிலர்கள் அம்மாவின் உத்தரவையும் மீறி தலா ஐந்து லட்சம் பெற்றுள்ளனர். இதனால் சென்னை மேயரும் பலன் பெற்றிருப்பார என்ற சந்தேகம் வலுத்துள்ளது

இவ்வளவு கோர்த்துவிட்டு, சமீபத்திய நயன் தாரா செய்தியை சொல்லாவிட்டால்… எப்படி?

சமீபத்தில் நயன் – விக்னேஷ் ஒன்றாக எடுத்துக்கொண்ட செல்பி வெளியாகியது. மேலும், விக்னேஷுக்கு நயன் அன்பளிப்பாக பி.எம்.டபிள்யூ கார் மற்றும் வீடு ஒன்றை வாங்கி கொடுத்ததாகவும் தகவல் வெளியானது.

தனது பிறந்தநாளை (18 நவம்பர்) முன்னிட்டு, ரோம் நகருக்கு சென்ற நயந்தாரா, அங்கு போப்பிடம் ஆசிர்வாதம் பெற்றார். அவருடன் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனும் சென்றிருந்தார். அப்படியே நயந்தாராவுக்காக கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய இயக்குநர் விக்னேஷ், தனது பெயரை விக்டர் என்று மாற்றிக்கொண்டாராம். இந்த பெயர் தேவு நயந்தராவின் சாய்ஸாம்.

பிரபு தேவாவுக்காக இந்து மதத்திற்கு மாறிய நயந்தாரா, காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் தனது தாய் மதமான கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்

ஜியார்டி தங்கத்தையெல்லாம் போப்பரசர்தான் விற்கிறாரோ?

நட்பாஸ்

”உங்களை சந்திக்கணுமே…” என்றவுடன்,  நீச்சலுடையை முதன் முதலில் அணியும் சினேஹா போல் சிணுங்கலுடன், “அதெல்லாம் வேணாம் சார். நான் ரொம்ப பேச மாட்டேன்.” என்று தொலைபேசியில் செல்லமாக மறுத்தார்.

தவணை அட்ட்டையில் கடன் வாங்கியது தொடர்பாக நுகர்வோர் எண்ணை அழுத்தினால், ஸ்வாதீனமான குரலில் பெண்மணி பேசுவார். எண் இரண்டை அழுத்தவும்; எண் நான்கை அழுத்தவும் என்று உடனடியாக பதிலளிப்பார். அவ்வாறே எனக்கு பாஸ்கர். நான் அனுப்பும் அஞ்சல்களுக்கு உடனடியாக பதில் போடுவார். தீர்மானமான மறுவினையாக இருக்கும். ஆக்‌ஷன் கிங் என்னும் அடைமொழிக்குப் பொருத்தமானவர். டூரிங் சோதனை செய்து பார்த்தால், நட்பாஸ் என்பவர் ஒரு ரோபோ, என்னும் முடிவுதான் வரும் என்று நான் தெளிவாகவே அறிந்து வைத்திருந்தேன்.

எனவே, இதுவரை மின்னஞ்சல் மூலமாகவே பேசிக்கொண்டிருந்தவரை தொலைபேசியில் பிடித்தது, அவர் எந்திரன் – 2, அல்ல… நிஜம்தான் என உறுதி செய்தது.

எங்காவது இனிப்பை வைத்துவிட்டு சென்றுவிடுங்கள். கொஞ்ச நேரத்தில் ஒரேயொரு எறும்பு மோப்பம் பிடித்து வரும். அந்தர் பல்டி அடித்து, உள்ளே நுழையும். செல்லும் பாதையையும் அங்கே கிடைக்கும் பதார்த்தங்களையும், தன் புற்றுக்குச் சென்று தோழர்களிடம் சொல்லும்.

பாஸ்கர் இந்த எறும்பு.

ட்விட்டரில், வலைப்பதிவில், வலை இதழில், மொழி பெயர்ப்பில், செம்மையான கட்டுரைகளாக, முழுமையான குறிப்புகளாக, தமிழுக்குக் கொணர்வார்.

அதே எறும்பை நீங்கள் இன்னொரு இடத்தில் பார்த்து இருப்பீர்கள். கரப்பான் பூச்சியையே சுமந்து வரும். அதன் இறக்கையை, உடலை, பகுதி பகுதியாகப் பிரித்து, தன்னுடைய சிற்றெரும்பு தலையில் தாங்கி இழுத்து வரும்.

அந்த எறும்பும் பாஸ்கர்.

natbas_Tamil_LivelyPlanet

எங்காவது நல்ல கட்டுரை, வித்தியாசமான பார்வை, புதுமையான எண்ணம் என ஆங்கிலத்தில் கிடைப்பதை சமூக ஊடகங்களில் பகிர்வதோடு நில்லாமல், அதை தமிழாக்கம் செய்து தந்து கொண்டேயிருக்கிறார். திங்கள்கிழமைக்குள் ஆயிரம் வார்த்தைகள் வேண்டும் என்று ஞாயிறு இரவு சொன்னால் கூட, “இன்னும் ஒரிரண்டு மணி நேரத்தில் சரக்கு வந்துரும்” என்று உறுதிமொழி மட்டும் தராமல் செழுமையான, சரளமான மொழிமாற்றம் செய்பவர்.

அவரை நேற்று பார்க்க முடிந்தது. ஒரு பயங்கரவாதியை, அதி தீவிர வீர்யத்துடன் செயல்படும் தீவிர செயலாளியை, அடுத்த தலைமுறையில் தமிழை நிலைநிறுத்தி இணையத்தில் பரவலான ஆக்கங்கள் உருவாக்குவதில் மொழி அரக்கனாகவும் விளங்குபவ்ரை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி.

 

கமலின் தூங்காவனம்: விமர்சனம்

நந்தவனம் x பாலைவனம்

  • அஜீத் நடிப்பில் ‘வேதாளம்’ வெளியான தீபாவளி அன்றே கமலின் ‘தூங்காவன’மும் வெளியாகி இருப்பது, காக்டெயில் விற்கும் இடத்தில் மாக்டெயில் அருந்துவது போல் அமைந்திருக்கிறது. விசைப்பலகை இடுக்குகளில் ஒளிந்திருக்க வேண்டிய துகள்கள், விஸ்வரூபமெடுத்து தமிழ் சினிமாவை ’வேதாளம்’ மாதிரி நிரப்பினால், அந்த பாலவனத்தில், கொஞ்சம் போல் துளிர்க்கும் சோலைவனமாக தூங்காவனம் இருக்கிறது.
  • சந்தானபாரதி இயக்கிய ‘கடமை… கண்ணியம்… கட்டுப்பாடு’ படத்தில் பாடல்கள் கிடையாது. தூங்காவனத்திலும் பாடல்கள் இல்லை. எனினும், இரண்டுமே பாடல்கள் நிறைந்த படங்களை விட நந்தவனம்.

Posters_Thoongavanam_Kamal_Trisha_Tamil_Films_Movies_Cinema

தீவனம்

  • நிரலியை சி ஷார்ப்பில் எழுதிக் கொடுத்தால், அதே நிரலியை பைத்தான், ரூபி, ஜாவா போன்ற கணிமொழிகளில் எவ்வாறு எழுதுவது என்று செய்து பார்ப்பது கணி நிரலாளர்களுக்கு உவப்பான விஷயம். கொஞ்சம் சவாலான விஷயமும் கூட. கமல் இந்த மாதிரி உருமாற்றி, அதை தமிழ் மசாலா சேர்த்து நமக்கு தீவனம் ஆக்குகிறார்.
  • பார்வையாளர்களுக்கு விஷயம் வைக்க வேண்டும் என்று குவிமையம் இல்லாமல், சகல இடங்களுக்கும் பயணித்து குழப்பிக் கொள்ளாமல், எளிமையான பயணத்தில், சுருக்கமான நேரத்தில், பல இடங்களுக்கும் பாய்ந்து பறந்து திக்கின்றி திணறாமல், தீவனம் போடுகிற படம்

சஞ்சீவனம்

  • சோலையில் சஞ்சீவனம் என்பது உணவகம். இங்கே சாப்பாட்டுக் கடையில் பாதி படம் அரங்கேறுகிறது. சமையல் பொருள்களைக் கொண்டு சண்டைக்காட்சி நடக்கிறது.
  • சஞ்சீவியாக கமல் இந்தப் படத்திலும் உலாவுகிறார். அசல் படமான ஃபிரெஞ்சு படத்தில் இருந்து சற்றே விலகி, பெண்கள் கமலை மொய்க்கிறார்கள். வயிற்றில் குத்துப்பட்டாலும், சாவடி வாங்கினாலும் நிமிர்ந்து மீண்டெழுகிறார்.

சீவனம்

  • வேலையில் இருப்பது சம்பாத்தியத்திற்கா? பணியில் அமிழ்ந்து கிடப்பது மணவாழ்வை முறிக்குமா? குடும்பத்தை விட அலுவலில் பெயரெடுப்பது முக்கியமா? போன்ற ஜீவனம் சார்ந்த கேள்விகளை எழுப்பும் படம்.
  • இன்றைய இளைய தலைமுறை போதைக்கும் மதுவிற்கும் கொண்டாட்டத்திற்கும் அடிமையாகி இருப்பதை அமைதியாக சொல்லிச் செல்கிறது.

Thungavanam_Thoongavanam_Kamal_Trisha_Tamil_Films_Movies_Cinema

வனம்

  • கூகுள் கொண்டு சகல தகவல்களையும் அறியும் காலத்தில், முன்னாள் மனைவிக்கு தொலைபேசி போட்டு, மருந்துகளையும் ஊசிகளையும் கேட்டறியும் நாயகன் சி.கே.டி, என்ன சி.ஐ.டி.?
  • மகனின் திறன்பேசியில், எங்கே இருக்கிறான் என்று கண்டறியும் எளிய ஜி.பி.எஸ். கூட இல்லாமல், என்ன ஐஃபோன்?

பிருந்தாவனம்

  • பூஜாகுமாரும் ஆண்ட்ரியாவும் இல்லாமல் இருப்பதே பிருந்தாவனம். மது ஷாலினி அளவாக நடிக்கிறார். வெள்ளித்திரைக்கு புத்துணர்ச்சி கொடுக்கிறார். மிடுக்கான த்ரிஷா அதனினும் சிறப்பு.
  • ஃப்ரெஞ்சு அசலில் கொஞ்சம் போல் உங்கள் ஊகத்திற்கு விட்டுச் சென்றிருப்பார்கள். தமிழில் தெள்ளத் தெளிவாக போட்டுடைப்பது, திரையரங்கு வருகையாளரை மட்டம் தட்டும் புவனம்.

யெளவனம்

  • நேற்று ஓய்வுபெற்ற 61 வயது காவல்துறை அதிகாரி மாதிரி கமல் இல்லாத யெளவனம். முன்னாள் மனைவி ஆஷா ஷரத்தைப் பார்த்தாலும் நாற்பதுகள் போல் தெரியும் யெளவனம். இந்த மாதிரி உடம்பை வைத்துக் கொள்வது தனி உஜ்ஜீவனம்
  • பாரதியை இன்று படித்தாலும் புத்துயிர் பெறுகிறோம்; மலைக்கள்ளனையும் தூக்கு தூக்கியையும் இன்று பார்த்தாலும் ரசிக்கிறோம். அது போல் பிறமொழிக்காரர்களிடம் போட்டுக் காண்பித்தாலும் காலா காலத்திற்கும் சுவாரசியமாக்கும் சொரூபம் கொண்டிருக்கும் படம்.

தாருகாவனம்

தாருகாவனத்தில் பல முனிவர்கள் வேள்வி செய்து கொண்டும் தவமியற்றியபடியும் வாழ்ந்தார்கள். தங்களது தவத்தின் வலிமையால் முக்தியினை நாடினார்கள். முனிசிரேஷ்டர்களுடைய மோனத்தையும், குருபத்தினிகளது கற்பையும் குலைக்க நாராயணரின் துணையோடு சங்கரன் சதி செய்கிறான். மும்மூர்த்திகளில் இருவரையும் ஒழித்துக் கட்ட அபிசார வேள்வியை நிகழ்த்தினார்கள். திடீரென்று வேள்வியின் அக்னி குண்டத்திலிருந்து மகா பயங்கரமான உருவத்தோடு ஒரு புலி உருமியபடி வெளியே வந்தது. அக்னியிலிருந்து அடுத்தடுத்துத் யானை, மான், பூதங்கள், மழு, முயலகன், கொடிய நாகங்கள் என்று ஏவினார்கள். ஏவப்பட்ட பூதங்கள் சிவனின் பூதகணங்கள் ஆகின. மழு அவருக்கே படைக்கலனாகி விட்டது. முயலகன் சிவனின் காலடியில் சிக்கி நகரவே முடியாதவனானான். நாகங்களுக்கு காளி, காளாங்திரி, யமன், யமதூதன் என்று நான்கு விதமான நச்சுப்பற்கள். அவற்றிலிருந்து விஷத்தைப் பீய்ச்சி அடித்தபடி அவை ஆக்ரோஷமாக சிவன் மீது பாய்ந்தன. ஏற்கெனவே, கருடனுக்கு அஞ்சித் தன்னிடம் சரண் புகுந்த பாம்புகள் அவருக்கு ஆபரணமாக விளங்கி வந்தன. இப்போது வந்த கொடிய நாகங்களையும் தம் கையில் பற்றி ”உம் குலத்தவர் ஏற்கெனவே இங்கே என்னுடன் இருக்கிறார்கள். நீங்களும் அவர்களுடன் கூடி வாழுங்கள்!” என்று கூறி அந்த நாகங்களைத் தமது கரம், திருவடி, திருவரை, திருமார்பு முதலிய இடங்களில் கங்கணம், காலணி, அரைஞாண் போன்ற ஆபரணங்களாக அணிந்து கொண்டார்.

Insomnia என்னும் கேளிக்கை மையமே தாருகாவனம். அங்கே இளைஞர்களும் இளைஞிகளும் களிவெறிப் பொருள் கொண்டு கூத்தாடி போதையின் துணையோடு முக்தியினை நாடினார்கள். அங்கே நிலவும் மயக்கத்தைப் போக்க காவல்துறை உயரதிகாரியான திவாகர் களமிறங்குகிறார். அவரை எதிர்க்க போதைத்தடுப்பு அதிகாரியான த்ரிஷா தோன்றுகிறார். திரிஷாவின் மேலிடமான கிஷோர் வருகிறார். அவர்களை ஆபரணமாகக் கொண்டு எவ்வாறு வில்லன்களை எதிர்கொள்கிறார் என்பதே திரைக்கதை.

Thoongavanam_Kamal_Trisha_Tamil_Films_Movies_Cinema

உபசீவனம்

  • சௌந்தர்யலஹிரியையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தையும் எம்.எஸ். சுப்புலஷ்மியின் குரலுக்காகவும் அதன் மந்திர உச்சாடனத்திற்காகவும் கேட்பவர்கள் உண்டு. அட்சரம் பிசகாமல் சொல்பவர்களும் உண்டு. ஆனால், அர்த்தம் உணர்ந்து, பொருள் புரிந்து, அனுபவித்து வாழ்க்கையில் கடைபிடிப்பவர்கள் எவ்வளவு பேருண்டு? அதே போல், சுவாரசியமான படங்களை பார்ப்போர் நிறைய உண்டு. அதனை தமிழ் நாயகர் கொண்டு, மொழிமாற்றுவோர் கூட நிறைய உணடு. ஆனால், பொருத்தமான சினிமாவாகத் தேர்ந்தெடுத்து, அதன் கடுமையான வழிமுறைகளை தமதாக்கி, தமிழுக்குக் கொணர்வோர் மிகச் சிலரே உண்டு. அதற்கு, கமலின் தூங்காவனம் ஒரு சான்று.
  • கிரேசி மோகனின் கத்தி வசனமும் கிடைக்கிறது. காவல்துறையின் தகிடுதத்தங்களும் சத்தமின்றி பூடகமாக வெளிப்படுகிறது. விவாகரத்தான வாழ்க்கையில் மகனின் மேல் செலுத்தும் நேசமும் காணக்கிடைக்கிறது.
  • தான் மட்டும் தனியே எல்லா சட்டகத்திலும் காணக் கிடைத்தால் செல்ஃபி காலத்தில் புளித்துப் போகும் என்றறிந்த கமல், உமா, ஜெகன், பிரகாஷ்ராஜ், கிஷோர் என எல்லோருக்கும் கதாபாத்திரமும் அவர்களுடைய குணச்சித்திரமும் தனித்துவமாகத் தெரியுமாறு அமைத்திருக்கிறார். தானும் வந்துபோகிறார்.

தூங்காவனம் – ஸ்லீப்லெஸ் நைட்

கமல் படத்திற்கு விமர்சனம் எழுதுவதற்கு நிறைய பிரயத்தனம் வேண்டும். 1980ல் ஸ்டான்லி க்யூப்ரிக் ‘தி ஷைனிங்’ என்ற படம் எடுத்தார். அந்தப் படத்தில் என்னவெல்லாம் குறியீடுகள் இருந்தன, அந்தக் காட்சியமைப்பின் உள்ளே பொதிந்திருக்கும் விஷயங்கள் என்னவென்று சொல்வதற்காகவே ரூம் 237 என்ற ஆவணப்படத்தை சிரத்தையாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
Thoonga_VanamTelugu_-Kamal-Cheekati-Rajyam

உத்தம வில்லனுக்குக் கூட இந்த மாதிரி நிறைய கதை கட்டி விட்டிருக்கிறார்கள். வருடத்திற்கு மூன்று படம் என்றானபின், ஜெயமோகன் எழுதும் மஹாபாரதம் போல் கமலின் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் விலாவாரியான அலசல் தேவையிருக்காது.

பாபநாசம் போல் உன்னைப் போல் ஒருவன் போல் ஃப்ரெஞ்சுப் படமான ‘Nuit blanche’ம் அவ்வாறே ஒரு மறு-பதிப்பு. இந்தப் படத்தில் கமலைப் பார்ப்பதற்கு பதில் ஃபிரெஞ்ச் அசலை பார்ப்பது மேல் என்பது போன்ற விமர்சனங்கள் நாளைய தினங்களில் ஃபேஸ்புக்கில் உலாவுவதற்கு முன், அசல் படம் குறித்து பார்த்து விடுவோம்.

வேட்டையாடு விளையாடு‘ போன்ற துள்ளல் போலீஸிற்கும், தூங்காவனம் படத்தின் காவல்துறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. முன்னது நம்பவியலா சாகசங்கள் புரியும் கூரையேறி கோழி பிடிக்கும் இராமாயணம். ‘ஸ்லீப்லெஸ் நைட்’ உள்ளே அழுகிக்கிடப்பதை மெதுவாக அரங்கேற்றும் சண்டைப்படம்.

மிகையுந்துரத்தவெம்பிணியுந் துரத்த
வெகுளியான துந்துரத்த
மிடியுந்துரத்த நரை திரையும் துரத்தமிகு
வேதனைகளுந் துரத்த
பகையுந்துரத்த வஞ்சனையுந் துரத்த
பசியென் பதுந்துரத்த
பாவந்துரத்த பதிமோகந்துரத்த
பலகாரியமுந் துரத்த
நகையுந் துரத்த ஊழ் வினையுந் துரத்த
நாளும் துரத்த வெகுவாய்
நாவரண் டோடிகால் தளர்ந்திடும் என்னை
நமனுந் துரத்து வானோ ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே !
ஆதிகடவூரின் வாழ்வே !
அமுதசீர் ஒருபாகம் அகலாத சுகபாணி !
அருள்வாமி அபிராமியே !

திருக்கடையூர் அபிராமி பட்டர் (இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) நினைவிற்கு வருகிறார். அவருக்கு இன்னல் வரும்போது அந்தாதி இயற்றினார். இன்றைய காலத்துப் பசங்களை அடுத்த மாதத்திற்குள் இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்த்தினால் கூட அந்தாதியை ‘கிட்-ஹப்’பில் தேடி, திருடத் தெரியாத அசமஞ்சங்கள் ஆக இருக்கிறார்கள். அவரோ, கீழே குழி, சுட்டெரிக்கும் நெருப்பு ஜ்வாலைகளைக் கக்க, அம்பிகை வருவாளோ என்னும் பயமும் துரத்த, அவர் பாட்டுக்கு தன் வேலையை, பாடல் புனைவதை செய்து முடிக்கிறார்.

ஸ்லீபெலெஸ் நைட் நாயகன் வின்செண்ட்டும் அம்பிகை பட்டர் போல், கடும் பிரச்சினைகளுக்கு நடுவில் சாந்தமாக செயல்படுகிறான். ஆனால், அபிராமி பட்டரைப் போல் உத்தமன் அல்லன். கொஞ்சம் கெட்டவன்; போதை மருந்து தடுப்புப் பிரிவில் இருந்தாலும், அதற்கு மாறாக, சொந்த ஆதாயத்திற்காக செயல்படுபவன். கள்ளக்கடத்தல் நடப்பதாக கிடைத்த துப்பை வைத்து, அந்த பரிமாற்றத்தைத் தடுத்து, போதைப் பொருள் அனைத்தையும் தனதாக்கிக் கொள்ளப் பார்க்கிறான்.

போதைப் பொருளின் அசல் உரிமையாளர் வெகுண்டு எழுகிறார். கதாநாயகன் வின்சென்ட்டின் மகனைக் கடத்துகிறார். தனக்குச் சொந்தமான போதைப் பொருளை தன்னிடமே ஒப்படத்துவிட்டால், வின்சென்ட் – தன்னுடைய மகனை மீட்டெடுக்கலாம்.

வின்சென்ட் மீது நம்பிக்கையில்லாமல், அவனுடைய காவல்துறையின் உயரதிகாரிகள், வின்செண்ட்டை பின் தொடர்கிறார்கள். ஆனால், அந்த உயரதிகாரியும் அத்தனை உத்தமரில்லை. அவரும் இன்னொரு வில்லன். வின்செண்ட் விற்பதாக இருந்த போதைப் பொருளை, வின்சென்ட்டின் காவல்துறை உயரதிகாரியே, திருடி, தனதாக்கப் பார்க்கிறார். அதற்கு, அப்பாவி த்ரிஷா போல் ஒரு அழகியை நியமிக்கிறார்.

த்ரிஷாவும் காவல்துறை உயரதிகாரியும் கமலை… அல்ல… வின்செண்ட்டை துரத்துகிறார்கள்.

தன்னுடைய மகனைத் தேடி, மதுபான சாலையெங்கும் வின்சென்ட் தேடியலைகிறான்.

வின்சென்ட் பதுக்கி வைத்திருக்கும் போதை சரக்கை, கள்ளக்கடத்தல்காரர்கள் தேடியலைகிறார்கள்.

மூவரும் ஒருவரை ஒருவர், மூர்க்கமாகத் தாக்குவது, உண்மையை அறிவது, கொஞ்சம் பாசத்தைக் கூட அவ்வப்போது பொழிவது எல்லாம் நடக்கிறது. தந்தை என்னும் பாசத்தைச் சொல்வதும் செயலில் காட்டி நிரூபிப்பதும் வின்சென்ட்டிற்கு அவசியம். புதியவளாக, பெண்ணாக, இளையவளாக இருந்தாலும் நேர்மையான கொம்பராக இருப்பது த்ரிஷாவிற்கு அவசியம். போதைப் பொருளைக் கடத்தி பணம் குவிப்பது அதன் உரிமையாளருக்கு அவசியம். மதுசாலை நடத்துபவருக்கு தன் உணவகத்தின் கெத்து அவசியம். சகுனியாக எட்டப்பனாக இருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி அவசியம். தாய்க்கு தன் மகனின் உயிர் அவசியம்.

இவர்களுக்குள் நடக்கும் போராட்டத்தை அன்றாட வாழ்வின் உபகரணங்களைக் கொண்டு அவர்கள் வெட்டிக் கொண்டு சாவதை கத்திக் குத்துக்களோடும், சுவாரசியமான சண்டைக்காட்சிகளுடனும் ஸ்லீப்லெஸ் நைட் காண்பிக்கிறது.
Sleepless_Night_French_Movies_Films_Thoongavanam_nuit-blanche-2
குழப்பமான சினிமா என்பது கவர்ச்சிகரமான மிக்சர் போல் மாதுளை காக்டெயில் போல் மயக்குறச் செய்யும். கோயன் சகோதரர்களின் ‘பர்ன் ஆஃப்டர் ரீடிங்’ கூட இதே வகையிலான ‘குழப்ப சினிமா’க்கள்தான். ஆனால், கோயன் சகோதரர்கள் மெதுவாக ஆற அமரச் செல்வார்கள். அவர்களுக்கு அவசரம் கிடையாது.

ஆனால், ஸ்லீப்லெஸ் நைட் போன்ற படங்கள் வேறு வகையான குழப்பங்களில் திளைப்பவை. எது நிஜம்… எது பொய்… எது சாத்தியம்… எது நடக்கவியலாது… யார் எங்கே இருக்கிறார்கள்… எவர் எங்கே வருவார்கள்… என்ன நடக்கும்… எப்பொழுது ஒழுங்கு பிறக்கும்? எல்லோரும் எல்லாவிடங்களிலும் பார்த்தாலும் யாருக்கும் எவரும் தெரிவதில்லை. இந்த உலகம் என்பது சந்து பொந்துகள் நிறைந்த ஹோட்டல் போல் அறைகளும் பாதைகளும் நிறைந்த கேளிக்கை மண்டபம். அங்கே ஒரு வாயிலில் நுழைந்தால் பார்; மற்றொரு வாயிலில் வெளியேறினால் சமையலறை. அவையிரண்டிற்கும் நடுவே ஓராயிரக்கணக்கானோர் கூத்தாடுகிறோம். சத்தத்தில் சுற்றிவர என்ன நடக்கிறது என்றறியாமல் திளைக்கிறோம். புறத்தோற்றத்தில் ஆடையின் நிறத்தில் மயங்குகிறோம். கேட்பதற்கு ஜென் தத்துவம் போல் ஜேகே சொற்பொழிவு போல் குழப்பம் ஏற்படலாம். படம் பார்த்தால் தெளிவு பிறக்கும்.

Sleepless_Night_Thoonga_Vanam_Kamal_nuit_blanche

விமர்சனம் + அபிப்பிராயம் ≠ நம்பிக்கையின்மை

சொல்வனம் – வெ.சா. நினைவாக இதழ்

வெளியிட்டிருக்கிறது. அதை முன் வைத்து…

“என் அனுபவம் என்பது நான் எதை பொருட்படுத்த ஒப்புக்கொள்கிறேன் என்பதைப் பொறுத்தது. நான் கவனிக்கும் பொருட்கள் மட்டுமே என் சிந்தையை வடிவமைக்கிறன.”
மனவியல் கொள்கை: வில்லியம் ஜேம்ஸ்

எடுத்த விஷயங்களில் உண்மையான கருத்துகளைச் சொல்வதால் அவநம்பிக்கையையும் சலிப்பையும் இடையறாத கடுமையுடன் வெளிப்படுத்தாமல் இருக்க குழந்தைகளுக்கும் குடுகுடுகிழவர்களுக்கும் மட்டுமே முடிகிறது. நடுவில் இருக்கும் நம் எல்லோரும் இரு புறமுமாக வடமிழுக்கும் போட்டியில் அறிவார்ந்த சிந்தனையையும் நப்பாசையையும் மோதவிட்டு பலப்பரிட்சை செய்கிறோம்.

நப்பாசை இல்லமல் செய்யப்படும் அறிவார்ந்த சிந்தனை என்பது வெறுமையை நோக்கி இட்டுச் செல்லும். அறிவார்ந்த சிந்தனையின் அடிப்படையில் எழாத நப்பாசை, முட்டாள்தனமான மூடநம்பிக்கை ஆகிவிடும்.

எதையெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருப்பது விரக்தியில் கொண்டு போய் விடுகிறது. சூம்படைதல் என்றால் என்ன? நிர்க்கதியே கதி என்று எண்ணங்கொள்ளுவதும், அந்த கதியை மாற்ற முடியாது என்பது சப்பைக்கட்டு வாதங்களை முன்வைத்து தற்காத்துக் கொள்வதும் சூம்படைந்தவரின் குணம். வெற்று நம்பிக்கையில் எதிர்காலத்தில் நல்லதே நடக்கும் என்று நம்புவது எவ்வளவுக்கு எவ்வளவு அறிவிலித்தனமோ, அத்தனைக்கு அத்தனை சூம்படைந்தலும் பயனற்ற எதிர்வினையாக இருக்கிறது.

‘எல்லாம் நன்மைக்கே’ என்று நினைத்துவிட்டால், நாளைய விளைவுகளை நம் செய்கைகள் கொண்டு மாற்றலாம் என்னும் நம்பிக்கை அற்றுப் போகும். ஒரு குழுவாக, ஓரினமாக, தனி மனிதராக முன்னேற, அறிவார்ந்த சிந்தனையும் நப்பாசையையும் பூட்டிய இந்த இரட்டை மாட்டுச்சவாரி அவசியம்.

இதையெல்லாம் வெங்கட் சாமிநாதன் உணர்ந்து இருந்ததால்தான் தன்னுடைய கடுமையான விமர்சனத்தை தமிழ்ச்சூழலில் முன்வைத்தார். செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அளவாக ஊற்ற வேண்டும். அப்போது மட்டுமே அந்தச் செடி தழைத்தோங்கி வளரும். அதிகம் ஊற்றினால் அழுகிவிடும். கொஞ்சமாய் ஊற்றிக் கொண்டிருந்தால், உள்ளே காய்ந்துவிடும். இதைத்தான் வெ.சா. செய்தார்.

தற்காலத்திற்கேற்ப இன்னொரு உவமையையும் பார்க்கலாம். வலைப்பக்கங்களுக்கு மேல்நிலை தரவுகளாக அந்தந்தப் பக்கங்களில் தலைப்பில் சில பகுப்புக்களையும் குறிச்சொற்களையும் தரவேண்டும். சரியான அளவில் தரவேண்டும். அளவுக்கதிமாக கொடுத்தால், கூகுள் / பிங் /யாஹூ போன்ற தேடுபொறிகள் குழம்பிப் போய் நிராகரித்துவிடும். மிகவும் குறைவாகக் கொடுத்தால், தேடுபவர்களுக்குப் பொருத்தமான விஷயமாக தேடல் முடிவுகளில், அந்த வலைப்பக்கம் வந்து சேராது.

எதற்காக இந்த இன்னொரு உவமை?

இன்று ஃபேஸ்புக்கின் தேர்ந்தெடுப்புகளுக்குக் கட்டுப்பட்டு தலைவணங்கி நாம் வாழ்கிறோம். ஃபேஸ்புக் நிரலி நமக்கு என்ன பிடிக்கும், நம்முடைய நண்பர்களின் செய்திகளில் எதைக் காட்டலாம்; செய்தித்தாள்களில் இருந்த எந்தச் செய்தியை நீங்கள் படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து வழங்குகிறது. ஃபேஸ்புக் போன்ற ஊடகங்களுக்கு சில குறிக்கோள் இருக்கிறது: மீண்டும் மீண்டும் வரவழைக்குமாறு தூண்டிலிட்டு, தன் பக்கங்களை மயங்கியிருக்க வைத்து, கட்டிப் போடுவது. அப்போது அவர்கள் எந்தவிதமான ரசனை உங்களுக்குப் பிடிக்குமோ அதனையேத் தீனி போட்டு, உரம் கொடுத்து வளர்த்தெடுப்பார்கள். நீங்கள் அறிவாளிதான்; ஆனால், நீங்கள் உபயோகிக்கும் பயன்பாட்டுச்செயலிகளும் நிரலிகளும் ஆழமில்லாத அறிவுக்கூர்மையற்ற மந்தை உலகிற்குள் உங்களை உழல வைக்கும்.

விமர்சகரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்? அவரின் பணிகள் என்ன – ஈ.பி. வொயிட் சொல்லக் கேட்போம்: “எழுத்தாளருக்கு எது முக்கியமாகப் படுகிறதோ எதைக் குறித்துக் கவலை கொள்ள வேண்டும். எது அவரின் இதயத்தைத் துடிக்க வைக்கிறதோ, எது அவரின் சிந்தனையை மொய்ம்புறச் செய்கிறதோ, எது அவருடைய தட்டச்சு விசையை பொறி பறக்கச் செய்கிறதோ, அதைக் குறித்தெல்லாம் அக்கறை கொள்ளவேண்டும். எனக்கு அரசியல் குறித்து கருத்துச் சொல்லும் கடமை கிடையாது. சமூகத்தைக் குறித்து அச்சாவதில் எனக்கு பொறுப்பு இருப்பதாக உணர்கிறேன். ஏனோதானேவென்று மேம்போக்காக பட்டும் படாமல் இருப்பது எழுத்தாளருக்கு அழகல்ல; சுத்தமாக இருக்கவேண்டும். உண்மையைச் சொல்லவேண்டும்; உயிர்பெற்றெழுமாறு வார்த்தைகள் அமையவேண்டும்; முழுமையாகவும் துல்லியமாகவும் எழுதவேண்டும். தன் சஹிருதயரை உயர்த்த வேண்டும்; கீழே இறக்கக் கூடாது. எழுத்தாளர் என்பவர் வெறுமனே வாழ்க்கையை பிரதிபலிக்கவும் பொருள் கொள்ளவும் எழுதுபவர் அல்லர்; உயிரை உணர்த்தவும் வாழ்க்கையை வடிவமைக்கவும் போராடுபவர்.

தன் சமூகத்தை, தன்னுடைய உலகத்தை எழுத்தின் மூலமாகப் புரிந்து கொள்ள வைப்பது முதல் கடமை. அதே சமயம் உத்வேகம் தரவேண்டும்; வழிகாட்டியாகவும் ஒளிபாய்ச்சவேண்டும்; சவால்களுக்கு அறைகூவல் விடுத்து பிசகு சொல்லி ஆஷேபணைகளை எழுப்பதுவும் ஆகும்.

எழுத்தாளரின் பாத்திரம் என்பது பாதுகாவலர் போல், காப்பாளர் போல்… எனலாம். அறிவியலும் தொழில்நுட்பமும் அந்தப் பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறதேயொழிய மாற்றவில்லை. எழுதும் பணியைச் செய்யும் செயலாளராக என்னைக் கருதும் நான், நம்மை வசியப்படுத்தும் எதையும் பாதுகாக்கும் பணிக்கு நியமிக்கப்ப்பட்டிருக்கிறேன். அதிசயிக்கப்படும் அந்த வஸ்து எத்தனை சின்னஞ்சிறியதாக இருந்தாலும், காணாமல் போகாமல் பத்திரமாகப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்திருக்கிறார்கள். சொக்கவைக்கும் எதுவும் தொலையாமல் காவல் காக்கிறேன் என்று இதையெல்லாம் எளிதில் தெரிவிக்கமுடியாது.”

வெ.சா.வின் கருத்துலகை சுந்தர ராமசாமி நான்கு பகுதிகளாகப் பிரிக்கிறார்:

1. நமது இலக்கியம், கலைகள், தத்துவம், சிந்தனை ஆகியவற்றின் நேற்றைய, இன்றைய நிலைகளை ஆராய்ந்து அவற்றின் வெறுமையை அம்பலப்படுத்தும் கருத்துகள்.

2. இலக்கியம் பற்றியும் பிற கலைகள் பற்றியும் தன் பார்வையை முன்வைக்கும் கட்டுரைகள்.

3. கலைஞனின் இயக்கத்திற்குச் சூழல் ஆற்றும் பங்கு.

4. கலை உலகை ஊடுருவி உண்மைக்கு எதிராக இயங்கும் சக்திகளைப் பற்றிய விமர்சனம்.

கலைப் பார்வைக்கும் தொழில்திறனுக்குமுள்ள வேற்றுமையை வற்புறுத்தி, தொழில்திறனை அதற்குரிய ஸ்தானத்தில் பின்னகர்த்தி கலை உணர்வுகள் செழுமைப்படும் சூழ்நிலையை உருவாக்குவதே வெ.சா.வின் ஆதார முயற்சி.

இதை முன்வைத்து வெங்கட் சாமிநாதனைக் குறித்த விமர்சனங்களை நான்கு மேற்கோள்களில் வகுக்கலாம்:

1. உள்வட்டம் x வெளிவட்டம்: ஹண்டர் எஸ் தாம்ஸன்: “புறநிலையில் இயங்குவது என்பது போன்ற பம்மாத்து எதுவும் இல்லை. புறவயமான கருத்தியல் என்ற சொற்றொடரின் அடிப்படையில் ஆடம்பரமான முரண்பாடு இருக்கிறது.”

2. ஆளுமை / நான் என்னும் அகங்காரம்: ஜே டி சாலிங்கர் குறித்து டேவிட் ஷீல்ட்ஸ்: “தன்னுடைய படைப்பின் மூலமாக சாலிங்கர் என்னும் நாயக கதாபாத்திரமாக வாசகர் வரித்துக் கொண்டதை அவர் அதீதமாக கொழுந்துவிட்டெறியச் செய்தார். தன்னுடைய புனைவில் கண்டித்ததை, நிஜ வாழ்க்கையில் கொண்டாடிக் கொண்டிருந்தார்.”

3. எண்ணிக்கை / எண்ணங்களை எழுத்தாக்கும் திறமை: வன்னேவார் புஷ்: ”இது நம்முடைய கூட்டு நினைவகம். துல்லியமாகவும் இருக்க வேண்டும்; உத்தரவாதமும் ஏற்க வேண்டும். கலாச்சார மீத்தங்கலின் சாறெடுத்துத் தர வேண்டும்”

4. தீதும் நன்றும் பிறர்தர வாரா: மரியா பொப்போவா: ”மற்றவர்களைக் குறித்து என்னவெல்லாம் கட்டுக்கதைகளை நீங்களை கற்பனை செய்கிறீர்களோ, அவையனைத்தும் மற்றவர்களை விட உங்களின் கற்பிதங்கள் குறித்து அதிகம் உணர்த்தும்.”

வெ.சா. இணையத்தில் எழுதியதை வெங்கட்ரமணன் தொகுத்து இருக்கிறார். இந்தத் தொகுப்பில் மட்டும் 858 பதிவுகள் இருக்கிறது. அது தவிர இன்னுமொரு 858ஆவது அவருடைய அறுபதாண்டு காலப் பதிவுகளில் அச்சில், கையெழுத்தில் இருக்கும்.

அவர் எழுத வந்த ஐம்பதுகளும் அறுபதுகளும் எழுத்தாளர்களுக்கு பொற்காலம். திபெத்தில் இருந்து தலாய் லாமா ஓடி வருகிறார். சீனாவுடன் சண்டை; கல்கத்தாவில் எல்லோரும் சீன மொழி கற்கத் துவங்கும் அளவு பயம் மேலோங்கி இருந்த காலகட்டம். பாகிஸ்தானுடன் விதவிதமான போர்கள் எல்லாம் நடந்தது. லால் பகதூர் சாஸ்திரி வந்தார்; மறைந்தார். பதினைந்து வருடமாகத் தயாரிப்பில் இருந்த ‘முகல் ஏ அசம்’ வெளியாகிறது. இந்தியாவில் வெறும் பதினெட்டு சதவிகித மக்களுக்கே படிப்பறிவு இருந்த காலகட்டத்தில் வெ.சா. இலக்கிய உலகில் தன் விமர்சனங்களுடன் உள்நுழைகிறார்.

vesa_solvanam_Vesaa_Venakt

ஜெயமோகன் எழுதிய “வெ.சா-ஒருகாலகட்டத்தின் எதிர்க்குரல்” -இல் இருந்து:

இலக்கியமும் கலையும் அடைந்துள்ள நுண்மையையும் ஆழத்தையும் புறக்கணித்து விட்டு பெருவாரியான மக்களுக்கு என ஓர் இலக்கியத்தையோ கலையையோ உருவாக்கிவிடவே முடியாது என்று அவர் (வெ.சா.) வாதிடுகிறார். ராஜ்கபூரின் சினிமா ருஷ்யாவில் பரவலாக ரசிக்கப்படுவதைப் பற்றிப் பேசும் சாமிநாதன்:

”நம்மூர் முற்போக்குகள் (இது ஒரு விசித்திர ஜாதி) போதிக்கிற சித்தாந்தங்களைக் கொண்டு பார்த்தால் கோடிக்கணக்கான ரஷ்ய மக்களைத் தன்பால் ஈர்த்துள்ள ராஜ்கபூர்தான் ‘மக்கள் கலைஞர்’ ஆகவும் அக்கோடிகள் தாம் ‘பாட்டாளி மக்கள்’ எனவும் ட்ஸைக்கோவஸ்க்கியையும், ஐஸன்ஸ்டைனையும் புடோவ்கினையும், ஸாஸ்டகோவிச்சையும் ரசிக்கும், ஒரு சில ஆயிரம் ரஷ்யர்கள் ‘மக்களிடமிருந்து’ அன்னியப்பட்டு போன பூர்சுவா மேல்தட்டு வர்க்க உயர்குழுக்கள் எனவும் எனவே மக்கள் விரோதிகள்’ ஆகவும ஆகிவிடுவார்கள்” (இரண்டு தலைமுறைகளுக்கிடையில்கொல்லிப்பாவை” ) என்று கூறுகிறார்.

கலையின் இயல்பு மேலும் மேலும் நுட்பத்தையும் ஆழத்தையும் தேடுவதே. அது தன்னிச்சையானது. கலைஞனின் அக இயக்கத்தால் மட்டுமே முன்னெடுத்துச் செல்லப்படுவது. அதைக் கட்சிப்பிரச்சாரத்திற்கான கருவியாகப் பார்க்கும்போது அந்தத் தன்னிச்சையான இயக்கம் முற்றாகவே அழிக்கப்படுகிறது. அதன் பிறகு அமைப்பு உருவாக்கி அளிக்கும் கோஷங்களை எதிரொலிப்பதாக அது மாறிவிடுகிறது. இந்நிலையில் அந்தக் கலையும் இலக்கியமும் மனித இதயங்களைத் தீண்டி எழுப்பும் சக்தியை இழந்துவிடுகின்றன. எவரையுமே அவற்றால் ஈர்க்க முடிவதில்லை. ஆகவே அவை பரப்பியக் கலையின் கேளிக்கை உத்திகளைத் தாங்களும் ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கின்றன. தாங்களும் ஒருவகை பரப்புகலையாக பரப்பிலக்கியமாக மாறிவிடுகின்றன. முதல்வகைப் பரப்பிலக்கியம் வெறும் கேளிக்கை; இது பிரச்சாரம் கலந்த கேளிக்கை.

இந்த விவாதத்தின் விளைவாகவே சாமிநாதன் உள்வட்ட வெளிவட்டக் கோட்பாட்டுக்குச் செல்கிறார். … உண்மையில் சாமிநாதன் உள்வட்டத்தில் நிகழும் எந்த ஒரு கலையிலக்கிய உச்சமும் காலப்போக்கில் வெளிவட்டத்திற்கும் சென்று சேரும் என்றே சொல்கிறார். உள்வட்டத்து இலக்கியம்தான் வெளிவட்டத்தில் வெகுஜன வாசிப்புக்காக உருமாற்றம் கொள்கிறது. ஆகவே ஒரு சிறு வட்டத்திற்குள் நிகழும் இலக்கிய, கலைவளர்ச்சி என்பது அர்த்தமில்லாத ஒன்றல்ல. ஒரு சிறிய மக்கள் கூட்டத்திற்கு மட்டும் உரியதுமல்ல. அது அனைவருக்கும் உரியதுதான். அது மக்கள் விரோதமானதல்ல, அது மக்களுக்காகவே நிகழ்கிறது. இவ்வளவுதான் வேறுபாடு.

வெங்கட் சாமிநாதனின் வீச்சைப் பார்க்கும்போது கார்ல் சாகன் காஸ்மோஸ் தொடரில் சொன்னது நினைவுக்கு வருகிறது: “மனிதர்களால் மாயாஜாலம் செய்யமுடியும் என்பதற்கு புத்தகங்களில் ஆதாரம் இருக்கிறது. தட்டையான பொருள்; மரங்களால் தயார் ஆனது; ஆங்காங்கே கருப்புக் கிறுக்கல்கள் கொண்டது. ஒரேயொரு தரிசனம் போதும். இன்னொருவரின் மூளைக்குள் சென்றுவிடுவீர்கள். அவர் நேற்று இறந்தவராகக் கூட இருக்கலாம். ஆனால், இன்றும் அவர் உங்களுடன் உரையாடுகிறார். நேரடியாகவும்… அமைதியாகவும்…”

சொல்வனம் – வெ.சா. இதழ்

In Time – Movie Review

ஆண்ட்ரூ நிக்கல் (Andrew Niccol) என்னும் திரைப்படக்காரரை எனக்கு ரொம்ப நாளாகவேத் தெரியும். அமெரிக்கா வந்த புதிதில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெள்ளித்திரையில் சினிமா பார்த்துக் கொண்டிருந்தபோது, ’ட்ரூமன் ஷோ’ (The Truman Show) திரைப்படத்தை எழுதியவர் என்ற முறையில் எனக்கு ஆண்ட்ரு அறிமுகமானார். வாழ்க்கையே ஒரு நாடக மேடை. நாம் எல்லாம் எங்கிருந்தோ ஆட்டுவிக்கப் படுகிறோம். அதை தொலைக்காட்சிக்காக நிஜ நாடகமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை இந்தக் கால ரியாலிடி தொடர்கள் வருவதற்கு ரொம்ப காலம் முன்பே திரையில் காண்பித்தவர்.

ஆண்ட்ரூவின் அடுத்த படம் எப்பொழுது வரும் எனக் காத்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நாள் கழித்து கெடாக்கா (Gattaca) வந்தவுடன் ஆண்ட்ரூ சிந்தனையை எரியூட்ட வந்த ஜோதிப்பிழம்பாகவே தெரிந்தார். அதன் பிறகு Lord of War. நான்காண்டுகளுக்கு முன்பாக இவரின் சமீபத்திய படம் காலத்தே (In Time) வெளியானது.

‘Gattacca’ படம் எதிர்கால மக்களை குறித்தது. அறிவியல் புனைகதை வகையைச் சேர்ந்தது. வருங்காலத்தில் அனைத்து குழந்தைகளும் செயற்கை முறையிலேயே கருத்தரிக்கப்படுகின்றது. பிறக்கப்போவது ஆணா, பெண்ணா என்பது முதல், அறிவாளியா, விஞ்ஞானியா, விளையாட்டு வீரனா, அறிவியல் மேதையா, பங்குச்சந்தை வித்தகரா, எவ்வளவு வயது வாழலாம், என்ன கலர் கண், எவ்வளவு உயரம், முக்கிய உறுப்புகளின் அங்க அளவுகள் வரை அனைத்தும் தீர்மானிக்கப்பட்ட பின்பே செய்ற்கை முறையில் குழந்தை பிறக்கிறது. இவ்வாறு பிறப்பவர்களின் தகுதியை முன்கூட்டியே நிர்ணயித்து, என்ன வேலை, என்ன படிப்பு, எப்பொழுது ப்ரோமஷன் என்பது வரை கருவிலேயே அட்டவணை போட்டு பெற்றோர், பள்ளி, கல்லூரி, கம்பெனி, கோல்·ப் க்ளப் என அனைவருக்கும் அப்பாயிண்ட்மண்ட் கொடுத்து விடுகிறார்கள்.

இந்த மாதிரி செயற்கை குழந்தை வேண்டாம், இயற்கையான கருத்தரிப்பே வேண்டும் என்று பிறக்கும் குழந்தைகளுக்கு சமுதாயத்தில் மவுசு கிடையாது. ஈனப்பட்டவர்களை போல் பார்க்கப்படும் அவர்கள், தகுதியிருந்தாலும் தாழ்த்தியே வைக்கப் படுகிறார்கள். கதையின் நாயகன் இயற்கை முறையில் பிறந்தவன். வில்லனாக வருபவன் அவனுடைய தம்பி. செயற்கை முறையில் பிறந்தவன். முன்கதை சுருக்கம் போதும்.

கதையில் ஒரு காட்சி: அண்ணன், தம்பி இருவரும் சிறு வயது முதலே, ஆற்றில் நீச்சல் போட்டி நடத்திக் கொள்கிறார்கள். ஒவ்வொரு தடவையும் இயற்கை முறையில் பிறந்து சாதாரண மானுடர்களுக்கு வரும் நோய்களால் தாக்கப்பட்டு, கண் பார்வை குறைச்சலினால் கண்ணாடி போட்டுக் கொண்டு, மலேரியா முதல் ஜாண்டிஸ் வரை எல்லா வைரஸ்களும் குடியிருக்கும் அண்ணனே வெல்கிறான். அற்புதமான உடற்கட்டு, மனநலன், திரண்ட தோள்கள், நல்ல பாக்டீரியாக்கள் மட்டுமே உடலில் வைத்த செயற்கை தம்பி எல்லா நீச்சலோட்ட போட்டிகளிலும், அனைத்து வயதிலும் தோற்கிறான்.

எப்படி???

படத்தின் இறுதியில் தெரியவரும். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

Gattaca_Prisoner_His_Her_Cell_Movies_Niccol_Scifi

கெடாக்காவில் பேசப்படுபவை மூன்று விஷயங்கள்:

1. மரபுப் பொறியியல் (genetic engineering) வளர்ச்சி அடைவதால் வரும் விழுமிய மாற்றங்களும், அதனால் உண்டாகும் சட்டம் சார்ந்த சிக்கல்களும்
2. ஏற்றத்தாழ்வுகள் இன்று ’பணத்தால்’ ஏற்படுகிறது; இதுவே மரபணுவினால் ஏற்பட்டால்?
3. கடவுள் மனிதரைப் படைக்கிறார்; குறைகளோடு உண்டாக்குகிறார். அறிவியல் அந்தக் குறைகளை நீக்கி, கடவுளுக்கே கடவுள் ஆகிறது. மதம் போச்சு; விஞ்ஞானம் பீடம் ஏறுகிறது.

காலத்தே (In Time) படத்திலும் இதே போல் மூன்று கருப்பொருள்கள் உலாவுகின்றன:

1. விஞ்ஞான வளர்ச்சியினால் யாருமே முதுமை அடைவதில்லை. வயதானவர்கள் கூட இளமையாக இருக்கிறார்கள். ஆனால், நேரம் = பணம்.
2. ஏற்றத்தாழ்வுகள் இன்று ’பணத்தால்’ ஏற்படுகிறது; இதுவே நமக்கு நேரத்தினால் ஏற்பட்டால்?
3. இரண்டு படங்களுமே பிழற்ந்த உலகை, டிஸ்டோபிய சமூகத்தை முன்வைக்கிறது. மரபணு வளர்ச்சியினால், சௌக்கியமற்றவர்களும் சுகமடையலாம் என நினைப்பது யுடோப்பியா. மரபணு வளர்ச்சியினால், சௌக்கியமற்றவர்கள், மேலும் பலவீனமாவார்கள் என நினைப்பது.

காலத்தே (In Time) திரைப்படத்தின் உலகில் உள்ள எல்லோரும் தங்களுடைய இருபத்தைந்தாம் வயது வரை வழக்கம் போல் வளர்கிறார்கள். அவர்களுடைய 25ஆம் வயது நிறைந்தவுடன், அவர்களுக்கு ஒரே ஒரு வருடம் மட்டுமே ஆயுள் காலம் தரப்படும். அதன் பிறகு, தன்னுடைய ஆயுளை உழைத்து சம்பாதிக்கலாம்; பிறரிடமிருந்து திருடி எடுக்கலாம்; கடன் வாங்கலாம்; வங்கியில் சேமிக்கலாம்.

ஒவ்வொருவருடைய கையிலும் அவர்களுடைய ஆயுள்கணக்கு சின்னத்திரையில் காட்டப்படும். இன்னும் இந்த உலகத்தில் எவ்வளவு நேரம் பாக்கி இருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக எல்லோருக்கும் தெரியும். அந்த உலகில், உடலும் அங்கங்களும் மூப்பே அடையாது; மாறவே மாறாது. ‘என்றும் 25’ ஆக, இளமையாக ஜொலிக்கும். ஆனால், உரிய நேரத்திற்குள் அடுத்த நொடியை செலுத்திக் கொள்ளாவிட்டால், செத்துவிடுவார்கள்.

எவ்வளவு நேரம் கையில் வைத்து இருக்கிறோமோ, அத்தனைக்கு அத்தனை அவர் பணக்காரர்.

தற்போதைய அறிவியல் ஆராய்ச்சியின் படி மனிதனின் ஆயுளை அதிகரிப்பதற்கு எல்லாவிதமான சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. சில காலம் முன்பு வரை சஷ்டியப்த பூர்த்தி கண்டாலே பெரிய விஷயமாக இருந்தது. இப்பொழுது ஓரளவு உடல் ஆரோக்கியத்துடன் ஆயிரம் பிறை காணுகிற சதாபிஷேகம் சாதாரணமாகி இருக்கிறது. இது இன்னும் 100 வயது, 120 வயது என அதிகரிக்கும். ஆனால், படத்தில் உள்ளது போல் தேகக்கட்டு செய்யும் வித்தையை விஞ்ஞானம் இப்போதைக்கு கண்டுபிடிக்கப் போவதில்லை.

படத்தின் கதாநாயகனாக ஜஸ்டின் டிம்பர்ளேக் (Justin Timberlake) நடித்திருக்கிறார். கொஞ்சம் அடிதடி; நிறைய துள்ளல்; அவ்வப்போது காதல் பார்வை என செவ்வனே தனக்கு இடப்பட்ட வேலையை நிறைவேற்றுகிறார். இவருக்கு அம்மாவாக, அவரை விட எடுப்பான தோற்றத்துடன் ஒலிவியா (Olivia Wilde) வருகிறார். திரைப்படத்தில் அம்மாவாக நடிக்கும் ஒலிவியா, மகனாக நடிக்கும் ஜஸ்டின் டிம்பர்ளேக்கை விட மூன்று வயது சிறியவர். அப்படியானால், இந்தப் படம் எவ்வளவு பசுமையாக இருக்க முடியும் என நினைத்துப் பாருங்கள்!

நிஜத்தில் திரைப்பட நடிகர்கள் இளமையாக இருந்தாலும், அவர்கள் வாழும் சூழல் நரகம் போலவே காண்பிக்கப்படுகிறது. பஞ்சத்தில் வாடும் தினப்படி மனிதர்களைக் காட்டுகிறார்கள். தினசரி உழைக்க வேண்டும்; அதற்கு இருபத்து நான்கு மணி நேரம் சம்பளம் தரப்படும். மீண்டும் அடுத்த நாள் உழைக்க வேண்டும். உழைக்காவிட்டால் செத்துவிடுவோம்.

ஆனால், பணக்காரர்களுக்கு அந்த நிலைமை அல்ல. அவர்கள் கோடி கோடியாக மணித்துளிகளை வங்கியில் சேமித்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஏழு மணி நேரம் நிம்மதியாக உறங்குவார்கள். ஒவ்வொரு சாப்பாட்டையும் ருசித்து புசிக்கிறார்கள். அவசர அவசரமாக ஓடிக் கொண்டே வாழ்க்கையை நடத்துவதில்லை. நேரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செலவழிக்கிறார்கள்.

அந்தப் பணக்காரர்கள் ஏழு கண்டம் தாண்டி வசிக்கிறார்கள். அந்த இடத்துக்குப் போவதற்கு பல்லாண்டுகள் செலவாகும். அவ்வளவு நேரம் எந்த உழைப்பாளியின் கையிலும் கிடையாது. எனவே, பாட்டாளிகள் தங்களுடைய தொழிற்சாலை நகரத்திலேயே உழலுகிறார்கள். அவர்களை அவ்வாறு கீழ்மையான நிலையில் வைத்திருக்கும் செல்வந்தர்கள், வேறொரு தூரத்து சொர்க்கத்தில் நிம்மதியாக நடமாடுகிறார்கள்.

திடீரென்று ஒரு நாள் செல்வந்தபுரியில் இருக்கும் நூறாண்டுகளைக் கையில் வைத்திருக்கும் ஹென்ரி என்பவருக்கு வாழ்க்கை போரடித்து விடுகிறது. இத்தனை நேரத்தை வைத்துக் கொண்டு சுதந்திரமாக எங்கும் சென்று வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க முடியவில்லையே என எல்லாமே அனர்த்தமாக உணர்கிறார். தன்னுடைய நூறாண்டு கால ஆயுளை, கதாநாயகனுக்குள் செலுத்திவிட்டு, இறந்துவிடுகிறார்.

இந்தத் தருணத்தில் ஹென்றி ஹமில்டன் பேசும் வசனம் சிந்தனையைத் தூண்டுமாறு இருக்கிறது:

ஹென்றி: “சிலர் அமரராக வாழ, பலர் இறக்க வேண்டும்.”
ஜஸ்டின்: “ஒரு எழவும் புரியலே!”
ஹென்றி: “உனக்கு நெஜமாவே புரியலே… இல்லியா? எல்லோரும் என்றென்றும் வாழ முடியாது. எங்கே வச்சுப்போம்? எதற்காக தடைக்கற்கள் போட்டு ஏழெட்டு அடுக்கு தாண்டி இருக்கும் தூரத்து ஊர்களை உண்டாக்கி அங்கே தங்கி இருக்கோம்? அனுதினமும் சேரியில் வாடகையும் அத்தியாவசியப் பொருளும் விலை உயர்ந்துண்டே இருக்கே… ஏன்? வாழ இயலாமல் குடிமக்கள் சாகணும். அப்பொழுதுதான் நான் வைத்திருக்கும் மில்லியன் பத்திரமா என்கிட்டயே இருக்கும். உனக்கு தினசரி கவலை மட்டுமே மிஞ்சி இருக்கும். உண்மையைச் சொன்னா… எல்லோருக்கும் வேணுங்கிற அளவு இங்க எல்லாமே நிறைஞ்சிருக்கு. யாருமே அகாலமா சாக வேண்டாம். என்னிடம் இருக்கும் இத்தனை ஆண்டுக்காலம் என்னும் அரியபொருள், உன்னிடம் இருந்தால், நீ என்ன செய்வாய்?”

அதன் பிறகு ஜஸ்டின் என்ன ஆகிறான்? எவ்வாறு உலகை மாற்றப் பார்க்கிறான்? நேரம் பறிபோகாமல் எப்படி முழுக்க உபயோகிக்கிறான்? அதனால் நேரும் விளைவுகள் என்ன என்று படம் தொடர்கிறது.

பிலிப் கே டிக் புத்தகத்தைப் படிப்பது போல் இருக்கிறது. ‘நேரமே இல்லை… நான் ரொம்ப பிஸி!’ என்கிறேன். குழந்தையோடு உல்லாசமாக காலம் போக்க அவகாசம் கிடையாது. அலுவலில் ஏதாவது உதவி கேட்டால், தட்டிக் கழிக்கிறேன். கொஞ்சம் வரும் நாயை புறந்தள்ளுகிறேன். சவரம் செய்ய நேரம் கிடைக்கவில்லை. காரோட்டிக் கொண்டே காலை உணவு. வேலை விஷயமாக தொலைபேசிக் கொண்டே மதிய உணவு. டிவி பராக்கு பார்த்துக் கொண்டு இரவு உணவு.

உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் எந்தவொரு சிரமமும் இன்றி ஆயிரமாயிரம் ஆண்டு காலம் வாழ முடியும் என்னும் உலகை இந்தப் படம் கற்பனை செய்கிறது. மனிதனின் நச்சுப் பொருள் உள்ளீட்டால் உண்டாகும் உலக வெம்மையாக்கம், உணவுப் பொருள் விலையேற்றம், புவிமாசுபடுதல், நிலத்தில் வாழ இடமில்லாமல் போகுதல் போன்ற அச்சுறுத்தல்களால், ஏழைகள் உழைப்பாளிகளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள். உலகெங்கும் இப்பொழுதே ஏழு பில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். இப்படியே வளர்ந்து கொண்டிருந்தால் என்னாவது?

In_Time_Movie_Justin_ArmClock_Watch

காலத்தே (In Time) திரைப்படத்தில் எல்லாவற்றுக்கும் நேரம் மட்டுமே மூலதனம். காபி வாங்க வேண்டுமா? நான்கு நிமிடம் கொடுக்க வேண்டும். கார் வாங்க வேண்டுமா? அறுபது ஆண்டுகள் கொடுக்க வேண்டும். அதெல்லாம் நன்றாக இருக்கின்றன. ஆனால், ஒரு மாமியார் – மருமகள் பிரச்சினையே சமாளிக்க முடியாமல் அல்லாடும் பலரை எனக்குத் தெரியும். இந்தத் திரைப்படம் சித்தரிக்கும் காலத்தில், பத்து பாட்டிகள், அவர்களின் மாமியார்கள், அவர்களின் மருமகள்கள் எல்லோரும் ஒன்று கூடும் இடத்தில் நடக்கும் வம்புகளையும் அரங்கேறும் கலகங்களையும் கிரேசி மோகன் நன்றாக படம் பிடித்திருப்பார். ’இன் டைம்’ பட இயக்குனர் நிக்கோல் தவறவிட்டுவிட்டார்.

அது மட்டுமல்லா. வேறு சில குழப்பங்களும் படத்திலும் உண்டு.

அரிதான விஷயங்களுக்கு நிறைய செலவு செய்ய வேண்டும் என்பது உண்மை. தொப்பை போட்ட பணக்காரர் போல் நீண்டிருக்கும் தொலைக்காட்சிகளில் இருந்து தட்டையான டிவி தோன்றிய போது, எக்கச்சக்கமாய் பணம் கேட்டார்கள். மடிக்கணினி என்பது அலுவலில் கொடுத்தால் மட்டுமே கட்டுப்படியாகும் என்று இருந்த காலமும் நினைவில் இருக்கிறது. செங்கல் போன்ற செல்பேசிகள் கூட ஆயிரக்கணக்கான டாலர் விலை வைத்து விற்கப்பட்டதை பார்த்திருக்கிறேன். வயாக்ரா போன்ற சொகுசு மாத்திரைகள் எட்டாக்கனியாக இருந்த காலமும் உண்டு. ஆனால், நாளடைவில், அந்த நுட்பங்கள் சல்லிசான விலையில் பலருக்கும் அனுகூலமான இடத்தில் நிறைய விற்பனையாகும் பண்டம் ஆக மாறுகிறது.

’இன் டைம்’ படம் இதைக் கருத்தில் கொள்ளவில்லை. எப்போதும் நேரம் என்பதும், மரபணுவில் நீண்ட காலம் வாழ்வதும் கொடிய விலை கொடுத்து வாங்கும் பண்டமாகவே நிலைத்து இருக்கும் என்னும் கருதுபொருளை நினைக்கிறது. நிறைய விற்பனை ஆனால், நிறைய இலாபம்; நிறைய பேருக்கு விற்றால், இன்னும் நிறைய இலாபம் என்று எண்ணும் முதலிய சூத்திரம் கொண்ட நாட்டில் இது போன்ற கொள்கை செல்லுபடியாகாது.

அடுத்ததாக, நேரம் என்பது பண்டமாற்றூப் பொருள் அல்ல. ஒருவரிடம் இருந்து இன்னொருவர் கொடுத்தால்தான் சரிப்படும் என்று சொல்வது படத்திற்கு சுவாரசியமாக இருக்கும். ஆனால், நிஜத்தில் பொருத்தமாக இல்லை. வானத்தில் இருந்து மழை பொழிந்தால், அது என் மேல் ஒரு துளி, பக்கத்தில் இருப்பவனுக்கும் ஒரே துளி என எண்ணியெண்ணிக் கணக்கு பார்த்து விழுவதில்லை. மொத்தமாகப் பொழியும். எவ்வளவு நனைகிறோமோ, அவ்வளவு குளிர்ச்சி.

நண்பருடன் திரைப்படத்தை பார்த்து முடித்தவுடன் என்னிடம் கேட்டார்: “உனக்கு சோஷலிஸம் ரொம்பப் பிடிக்குமா? இருப்பவனிடம் இருந்து திருடி இல்லாதவனிடம் தானமாகக் கொடுக்கிறான். ஆனால், அவனிடம் இருந்து கொள்ளை அடிக்க திருடர்கள் இருக்கிறார்கள். வரிச்சுமையை அதிகரிக்க அரசாங்கம் இருக்கிறது. பொருளாதாரத்தை பலவீனமாக்கும் நிதி நிறுவனங்கள் திட்டம் போடுகின்றன. மார்க்சிஸத்தைப் பிரச்சாரம் பண்ணும் படம்!”

அவர் சொன்னது சரியே. தொழிலாளிகளின் ஒரே பலம் அவர்களுடைய உழைப்பு மட்டுமே என்று காரல் மார்க்ஸ் சொன்னார். அந்த உழைப்பை முடிந்த மட்டும் உறிஞ்ச முயல்வதே முதலாளித்துவத்தின் நோக்கம் என்றார். உழைப்பாளி உயிர் வாழத் தேவையானதையும், உழைக்க உந்துதல் வரப் போதுமானவரையும் — முதலியக்காரர் விட்டுவைப்பார் என்றார் மார்க்ஸ். காலத்தே (In Time) திரைப்படத்தில் அந்த முதலிய பலம் வெகு சிலர் கையில் இருக்கிறது. அவர்களுக்கு இருதயம் இருந்தாலும், இரக்கம் கிடையாது. அடிமைகளாக தங்களுடைய பாட்டாளி வர்க்கத்தை நடத்துகிறார்கள். ’மூலதனத்திற்கு இறப்பே கிடையாது; அதை வைத்திருப்போர் இறக்கலாம்’ என்றார் மார்க்ஸ். ‘நேரம் போவதே தெரியாது; அதை பயன்படுத்தத் தெரியாதவர்தான் ஏழைகள்’ என்கிறார் இயக்குநர் நிக்கொல்.

in_Time_is_power_Money_Justin_Timberlake_Movie_Niccol_Films_Scifi_25_Clock_Watches

காட்டுக்கு எறித்த நிலா

பெண் அழகு.
பெண்ணின் கண் அவளினும் அழகு.
அவளின் கண்ணில் ஒளிரும் வெளிச்சம் எல்லாவற்றிலும் அழகு.
அந்த வெளிச்சம் நிலாவில் இன்று காணக் கிடைத்தது.

முழு சந்திரன் இருந்தார். அப்புறமாக அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக ராகுவும் கேதுவும் விழுங்க ஆரம்பித்தார்கள். வெள்ளை நிலா, கறுப்பு வானத்தில் மறையத் துவங்கியது. ஆனாலும், பால் நிலாவின் வெளிச்சத்தில் முக்கால் பிறை கிருஷ்ணபஷம் போல்தான் தோன்றியது. அந்தக் கரிய நிறம், மெள்ள சிவப்பாக மாறி, செந்நிற வட்டமாகி விட்டது.

வீட்டின் எல்லா விளக்கையும் அணைத்துவிட்டு, பின் வாயில் வழியாக அந்த தகதகக்கும் சிவப்பு சோமனைப் பார்க்கின்ற வேளையில், மரத்தில் இருந்து ஏதோ பறவை ‘கெர்… கெர்’ என்று தன் துணையை அழைத்து அதே வட்ட நிலாவை தன்னுடைய தோழிக்கும் காட்டிக் கொண்டிருந்தது.

ஜெயமோகன் சொன்னது நினைவிற்கு வந்தது: “யாராவது இயற்கையை ரசிக்கும்போது, ‘அப்படி இருந்தால் நல்லாயிருக்கும்… நான் போனமுறைப் பார்த்தப்ப இன்னும் நல்லா இருந்துச்சு! இந்த சமயத்தில் கூடவே அது இருந்திருக்கணும்’ என்று ஒப்பிடாமல், ரசிக்கும்படி, அந்தப் பட்சியிடம் வேண்டிக் கொண்டேன். அவர்களும் மௌனமாக, அந்தச் சுடரை விழுங்கத் தொடங்கினார்கள்.

இத்தனை நாட்சத்திரங்கள். அமைதியாக உலாவும் வாவு. இத்தனையும் எப்போதும் காணக்கிடைக்க கண்.

எதிர்கொள்ளூ ஞாலந் துயிலாரா தாங்கண்
முதிர்பென்மேன் முற்றிய வெந்நோ யுரைப்பிற்
கதிர்கண் மழுங்கி மதியு மதிர்வதுபோ
லோடிச் சுழல்வது மன்

eclipse-moon-4-4-2015-Lunar_Blood_Red

பெரியாரும் பணமும்

பெரியாரும் பாசிசத்தின் கூறுகளும் என்று பி.ஏ.கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.

தமிழகத்தில் பெரியார் எப்படி இவ்வளவு பெரிய ஆளுமையாக இருக்கிறார்?

இந்தக் கேள்விக்கு விடையாக, கீழ்க்கண்ட தகவல்கள் தேவையாகின்றன:

  1. தமிழ்நாடு அரசுத்துறையில் எவ்வளவு நூலகங்கள் இருக்கிறது?
  2. தமிழில் எத்தனைப் பதிப்பகங்கள் இருக்கின்றன?
  3. ஒரு பதிப்பகத்தில் இருந்து எத்தனை பெரியார் புத்தகங்கள் (எவ்வளவு ஆசிரியர்களின் பெயர் போட்டு) வருகின்றன?
  4. ஒவ்வொரு வருடமும் (அல்லது எப்பொழுதெல்லாம் லைப்ரரி ஆர்டர் கொடுக்கிறதோ, அப்பொழுதெல்லாம்) தமிழக அரசு எவ்வளவு கோடியை பெரியார் புத்தகங்களுக்காக ஒதுக்குகிறது?
  5. பஞ்சாயத்துதோறும்  நூல் நிலையம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டபோது எவ்வளவு பணம் புத்தகங்களுக்காக திட்டமிடப்பட்டது? அவை எந்த / எவ்விதமான நூல்களை வாங்குவதற்காக செலவிடப்பட்டன?
  6. பெரியார் நினைவு சமத்துவபுரம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், போன்று தமிழ்நாட்டில் எத்தனை திட்டங்கள் இருக்கின்றன?
  7. பெரியார் உருவப்படங்கள் திறப்பிற்கு எவ்வளவு செலவிடப்படுகின்றன? ஆண்டுதோறும் வேறு எவர் எவர், பிறந்தநாளை முதலமைச்சரும் மந்திரிகளும் வலுக்கட்டாயமாகக் கொண்டாடுகின்றனர்?
  8. ஈ.வெ.ரா. பெயரில் எத்தனை விருதுகள் இயங்குகின்றன? தாழ்த்தப்பட்டவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளும் பள்ளிப்படிப்பிற்கான ஸ்காலர்ஷிப்களும் அவருடைய பெயரின் தலைப்பில் இயங்குவதைப் போல் வேறு எவருக்காவது நடத்தப்படுகிறதா?
  9. எத்தனை சாலைகள் அவருடைய பெயர் தாங்கி இருக்கிறது? எத்தனை இடங்களில் ஒரே பெயர், பெரியாரின் பெயரை தன் தலைப்பில் வைத்திருப்பதால் குழப்பம் உண்டாகிறது?

பெரியார் நாமம் வாழ்க! பாசிஸ்ட் குரல் ஓங்குக!

Periyaar_EVR_Thanthai_Thandhai_EV_Ramasamy_Naicker_Ramasami

அச்சன் செருக்கு

A Father’s Pride | The Moth

நீல் கெமன் எழுத்துக்கள் சுவாரசியமானவை. இங்கே தந்தைமை குணத்தைப் பற்றி பேசுகிறார். உருக்கமான சொற்பொழிவில் சிரிப்பும் வருகிறது. நகைச்சுவைக்கு நடுவே அழுகைத்துளிக் கூட வந்துவிடலாம்.

அவர் சொல்லும் சமபவங்களில் சில என் வாழ்வில் நடந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாடும்போது, இரு அணிகளுக்கு ஆள் எடுப்பார்கள். புளியங்கொட்டை போல் உள்ளங்கைக்குள் அடங்கும் சிறிய விஷயத்தை இரு அணியின் கப்தான்களும் எடுத்துக் கொள்வார்கள். அதை ஒருவர், ‘எந்தக் கை’யில் வைத்திருக்கிறார் என்று இன்னொரு அணித்தலைவர் சொல்ல வேண்டும். சரியாகச் சொன்னால், முதலில் அழைக்க ஆரம்பிக்கலாம். தன் அணியில் எவர் விளையாடுவார் என்று ஒவ்வொருவராகக் கூப்பிடுவார்.

அவன் அந்த அணி; இவன் அந்த அணி என்று இரு பக்கமும் எல்லோரும் போய்விடுவார்கள். கடைசியில் இருவர் இருப்பார்கள். ஒரு பக்கம் சோடா பாட்டில் கண்ணாடியுடன் நான். இன்னொரு பக்கம், என்னைவிட நாலு வயது இளையவளான எதிர்வீட்டு இலச்சுமி. அப்போது, அவளைத் தேர்ந்தெடுத்து, என்னை விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மையாகச் சொல்வார் எதிரணியின் கேப்டன்.

கையில் திறன்பேசி இல்லாமலே, கற்பனைக் கோட்டையாக நகவிரலில் நகாசு செதுக்கி சிந்தனைவயப்பட்டிருக்கும்போது, ‘மொட்டை…. மொட்டை’ என்று எவரோ கதறுவது — கிணற்றுக்குள் இருந்து கூவுவது போல் அரசல்புரசலாகக் காதில் விழும். நிமிர்ந்து பார்த்தால், டென்னிஸ் பந்து என்னை நோக்கி விரையும். அதை அவதானித்து, கீழே விழுந்தபின் தூர்தர்ஷனில் பார்த்த அவார்டுப் படத்தில் வாசலில் கோமூத்திரமும் சாணமும் போடும்வரை காத்திருந்து, பின் ‘பஷூ’ என்று அழைக்கும் மலையாளக்காரர் போல், ‘பந்து’ என்று சொல்லும்போது, “ஏண்டா… உன்னை எனக்குக் கொடுத்தாங்க” என்று திட்டும் அணித் தலைவரை நினைவுகூறும் சமபவம், இவருக்கும் நிகழ்ந்திருக்கிறது.

அவர்… பெரிய, முக்கியமான, புகழ்பெற்ற, விருதுகள் குவிக்கும் எழுத்தாளர். நான் இன்னும் உங்களுடன் பதிவில் பேசிக் கொண்டிருக்கிறேன்.

Neil_Gaiman-Freelancer