Category Archives: Uncategorized

முள் கடிகாரம்

அமெரிக்காவில்…

32 நிமிடங்களுக்கு ஒரு முறை கொலை நிகழ்கிறது.

30 நிமிடங்களுக்கு ஒரு முறை போதையேறியவர் சாலை விபத்தை நிகழ்த்துகிறார்.

13 நிமிடங்களுக்கு ஒரு முறை மார்பக புற்றுநோயால் ஒருவர் இறக்கிறார்.

6 நிமிடங்களுக்கு ஒரு முறை வன்புணர்வு நிகழ்கிறது.

3 நிமிடங்களுக்கு ஒரு முறை identity திருடப்பட்டு பறி போகிறது.

ஒவ்வொரு நிமிடமும் ஒரு கொள்ளை நிகழ்கிறது.

18 விநாடிகளுக்கு ஒரு முறை பெண் வன்முறைக்குள்ளாகிறாள்.

2 விநாடிகளுக்கு ஒரு முறை வழிப்பறி நடக்கிறது.

பின்குறிப்பு: இந்தியாவில் இது மாதிரி புள்ளிவிவரங்களை சேமித்து, விளம்பரப்படுத்துவதில்லை


| | | |

CC:H

மூன்று படங்களை குறித்து எழுதலாம்.

மூன்றுக்கும் உள்ள ஒற்றுமை ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்.

இரண்டு படங்களுக்குள் உள்ள ஒற்றுமை கடவுள் நம்பிக்கை. பிறிதொரு இரண்டுக்குள்ள ஒற்றுமை குழந்தைகள் படம். கிறித்துவத்தைப் பின்னணியாகக் கொண்ட இரண்டு படங்களிலும், டில்டா ஸ்விண்டன் (Tilda Swinton) இருக்கிறார்.

கான்ஸ்டாண்டின்-ஐ (Constantine) சுருக்கமாக சொன்னால் ‘கிங் காங்’ இயக்குநரை ‘பொட்டு அம்மன்’ எடுக்க வைத்தால் எப்படி இருக்கும்!?

நார்னியா-விற்கு (The Chronicles of Narnia: The Lion, the Witch and the Wardrobe) ‘ஆறு’ ஹரியை குழந்தைகளுக்காக இயக்க வைத்தால் எப்படி இருக்கும்!

கடைசியாக, ஹாரி பாட்டர் (Harry Potter and the Goblet of Fire). திரையரங்குக்கு சென்று படம் பார்க்க வேண்டியதை ஹாரி பாட்டர் விடாமல் கோருகிறார். இந்தப் பதிவின் மற்ற இரண்டு படங்களைப் போலவே, ‘ஏன், எதற்கு, எப்படி?’ என்பதை யோசிக்காமல் பார்த்தாமல் ரசிக்கலாம். புத்தகத்தைப் படித்தால்தான் புரியாத மீதி ஹாரி விளங்குவார் போலத் தெரிகிறது.

விறுவிறுவென்று பறக்கும் ஹாரிக்கு நேர் எதிர்மாறாக ‘நார்னியா’ தாலாட்டுகிறது. குழந்தைகள் படம் என்பதால் ‘தவமாய் தவமிருந்து’ கலைப் படம் போல் அன்னநடை நடக்கிறதா என்றால், வெட்டு, குத்து, ஓநாய் என்று சத்தமாக படம் நெடுக பூச்சாண்டி காட்டுகிறார்கள். விமர்சனங்களில் படித்தால்தான் சிங்கம் என்பது யேசு கிறிஸ்துவையும், சூனியக்காரி சாத்தானையும் குறிப்பதாக புரிகிறது.

‘நார்னியா’ – சுவாரசியமாக, படிமங்களாக, அசத்தலாக, ரசிக்கக் கூடிய சாத்தியக்கூறுகளைக் கொண்ட கதை. உள்ளடக்கம் அருமையாக உள்ள வலைப்பதிவில் டெம்பிளேட் கண்ணை உறுத்துவது போல் மாயாஜாலக் காட்சிகள் வெறுப்பேற்றுகிறது. எட்டு வயசுக் குழந்தைக்கு கத்தி கபடா எல்லாம் கொடுத்து ‘லாஜிகல் ரியலிஸம்’ என்பதை ‘மேஜிகல் அன்ரியலிஸம்’ ஆக்கியிருக்கிறார்கள்.

நல்லவர்கள் வாழ்வார்கள்; தீயவர்கள் அழிவார்கள் என்று ‘நார்னியா’ குழந்தைகளுக்கு சொன்னதை, அமர்க்களமான நரகத்துடனும், சப்பு போட வைக்கும் பிசாசுகளுடனும், ‘மேட்ரிக்ஸ்’ ரக தத்துவங்களுடனும் ‘கான்ஸ்டாண்டின்’ போதிக்கிறார்.

சொர்க்கமும் நரகமும் பூமியில்தான் இருக்கிறது. நம் காதில் அவ்வப்போது சாத்தான் வேதம் ஓதும். நாம் அப்போது உள்ளிருக்கும் மிருகத்தை உசுப்புகிறோமா அல்லது அடக்கி ஆள்கிறோமா என்பதில்தான் தேவதைகள் வெற்றி பெறுகிறார்கள்.

செய்தித்தாள்களைத் தடவினாலே முழுவதும் படித்து விடும் ஹெனிஸி; தண்ணீரைக் கொண்டு பரலோகத்தை அடைந்து திரும்புவது; பூதங்களை கண்ணாடிக்குள் அடைப்பது; ஊழை நிர்ணயிக்கும் யேசுவைக் கொன்ற ஈட்டி (Spear of Destiny); ஹாரி பாட்டரின் விநோதங்கள் போன்ற சொறிவண்டு தீப்பெட்டி பொம்மைகள் நிறைந்த டக்கர் ஜிங் படம்.

படத்தில் இருந்து சில வசனங்கள்:

  • (‘நடுராத்திரி’ என்னும் நடுநிலைமையாளனிடம்) அந்தப் பக்கமும் சாயாமல் இந்தப் பக்கமும் சாயாமல் இருப்பது சுத்த பைத்தியக்காரத்தனம். மக்கள் அங்கே செத்துக் கொண்டிருக்கும்போது, பாரபட்சமில்லாமல் ஆட்டத்தை விதிப்படிதான் ஆடுவேன் என்று முரண்டுவது நீ ஒண்டிதான்.
  • உன்னால் சிறைக்கு அனுப்பபட்டவர்களுக்கு நடுவே, நீ கைதியாகப் போனால் எப்படி இருக்கும்!? (What would *you* do if you were sentenced to a prison where half the inmates were put there by you?)

    Constantine – ஜாலம்
    Narnia – கொட்டாவி
    Harry Potter – வால்டிமார்ட் பிரத்யட்சம்; ஹாரி கடாட்சம்


    | |

  • அசோகமித்திரன்

    டிசம்பர் 14, இந்தியா டுடே இதழில் ‘அசோகமித்திரன் கட்டுரைகள்‘ குறித்து பிஏ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். அதில் இருந்து:

    விக்ரம் சேத்தின் எழுத்தைப் பற்றி அசோகமித்திரன் குறிப்பிடும்போது அவரது எழுத்து, வாசகரின் கண்ணைக் கூசச் செய்வதில்லை என்று சொல்கிறார். அ.மி.யின் எழுத்துக்கும் இந்தக் கூற்று நிச்சயம் பொருந்தும்.

    தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி அ.மி. சொல்கிறார்: தமிழ்த் திரைப்படங்களைக் கிண்டல் செய்ய அவ்வளவு ஆற்றல் தேவையில்லை. படத்தின் கதைச் சுருக்கத்தை எழுதினால் போதுமானதாக இருக்கும்.

    கலைஞரின் பராசக்தி குறித்து அ.மி.: புணர்ச்சிக்குப் பின் ஆணைக் கொன்று தின்றுவிட்டு, முட்டையிடலுக்குப் பின் தானும் மடிந்துவிடும் ஒரு கொடூர வகைப் பூச்சி போல பராசக்தி, சினிமாவையும் பின் தள்ளிவிட்டு தமிழ் மேடை நாடகத்தையும் குற்றுயிரும் கொலையுயிருமாகச் செய்துவிட்டது.

    என்னுடைய கொசுறு: (இ.பா.வின் குருதிப்புனல் குறித்த கட்டுரையில் – பக்கம் 457) பொதுவாகவே இலக்கியப் பத்திரிகைகளுக்கு ஓர் எழுத்தாளர் இரண்டாவது படைப்பை வெளிக்கொண்டு வரும்போதே அந்த எழுத்தாளர் மீது அசிரத்தை வந்துவிடுகிறது.


    | |

    தேவதேவன் – நகுலன்

    தேவதச்சனைக் குறித்து புத்தக அலமாரியில் மேயப் போனால் ‘குளத்துக்கரையேறாத கோபியர்கள்’ தேவதேவன் வந்து நின்றார். அவரைக் குறித்த நகுலனின் கட்டுரை:

    நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம்‘ தேவதேவனின் ஐந்தாவது கவிதைத் தொகுதி. பொருத்தமாக ‘பிரமிளுக்கு’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்தம் 15 கவிதைகள். மீண்டும் தேவதேவன் குறிப்பிட்டிருக்கிறபடி கவிதையைக் கவிதைதான் மதிப்பிட முடியும். இந்த வகையில் இத்தொகுதி ஒரு சாதனை.

    கவிதைகள் முழுவதும் ஓடும் சரடு பல்வேறு வகைகளில் இயந்திர நாகரீகம் இயற்கையை – சூழ்நிலையை எவ்வாறு எவ்வெவ்வகைகளில் சூறையாடுகிறது என்பதைத் திறமையாகக் காட்டுகிறது.

    சரளமான மென்மையான நடை, பகட்டு ஜ்வலிப்பு இல்லாத வார்த்தைத் தேர்வு. படிமங்கள் அவை செல்லும் பாதைகளுக்கேற்ப பொருள் வேறுபாடுகள் கொள்ளும் நேர்த்தி. தேவதேவன் சில வார்த்தைகளை மிகத் திறமையுடன் படைத்திருக்கிறார். அவற்றுள் ஒரு சில:

  • நரபோஜிகள்
  • காட்டுக் கவிஞன்

    இத்தொகுதியில் என்னை மிகக் கவர்ந்த அம்சம் அதனூடு மிளிரும் கிண்டல் த்வனி. இது சூழ்நிலையில் பலருக்கும் ஏற்படும் அனுபவச் சூழ்நிலைகள் ஒரு மையத்தினால் ஏற்படுபவை. மேலும் இங்கு சொல்லப்படாமலேயே எழுதப்படாமலேயே சில அனுபவங்கள் பெறப்படுகின்றன.

    சில எடுத்துக்காட்டுகள்:

    1. வெற்றியும் தோல்வியும்
    ‘வீரர்க்கழகானாலும்
    வெற்றிதானே குறி’
    (பக்கம் 16)

    2. ஒரு குழுவினுக்குள்ளேயும் உள்ள உறவு
    அது கூட்டுழைப்பு
    அன்பு இல்லை

    3. காகங்களுக்கு காடு எதற்கு?
    (பக்கம் 12)

    4. சரி, முதலில் குளித்துவிட்டுப் பேசுவோம் என்கிறேன்
    (பக்கம் 36)

    தலைப்பிலேயே ஒரு கிண்டல் த்வனி இருக்கிறது. இத்துடன் நிறுத்துக் கொள்கிறேன்.

    வெளியான இதழ்: விருட்சம், செப்டம்பர் 1993

    நன்றி: நகுலன் கட்டுரைகள் – காவ்யா :: ரூ. 150/-


    | | |

  • அவரவர்

    சுகுமாரன் எழுதிய ‘இந்தியா டுடே’ விமர்சனத்தில் இருந்து:

    தேவதச்சனின் ‘அவரவர் கைமணல்’ (கவிதை தொகுப்பின் தலைப்பு) பிரயோகம் மிக வசீகரமானது. பலரையும் தூண்டிய சொற்சேர்க்கை அது.

    ‘அவரவர் வானம்’ (மெய்ப்பொருள் – வண்ணநிலவன்)
    ‘அவரவர் வீடு’ (பயணியின் சங்கீதங்கள் – சுகுமாரன்)
    ‘அவரவர் உலகம்’ (கணையாழி ஏப்ரல் 1994 – பொன்னாண்டான்)
    ‘அவரவர் ஏமாற்றம்’ (கவனம் இதழ் 4 1981 – ஷங்கரராமன்)

    எனப் பலரும் தேவதச்சனை அடியொற்றி அவரவர் வரிகளை உருவாக்கிக் கொண்டிருப்பதை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

    கடைசி டினோசார்
    தேவதச்சன்
    உயிர்மை பதிப்பகம்
    பக்கங்கள்: 166
    விலை: ரூ. 85/-


    அணைந்த ஜோதி

    காலையில் பனிபொழிவைப் பார்த்தவுடன் இந்தப் பாடல் முணுமுணுக்கத் தோன்றியது. சென்னையில் எப்பொழுது பனி பெய்ந்திருக்கிறது என்னும் முரண்நகை தோன்றினாலும், சென்ற வாரம் சென்னைக்கு ரிலையன்ஸிய போது ‘சென்னை இப்போ ரொம்ப குளிரா இருக்குத் தெரியுமோ… காலையில் ஸ்வெட்டர் இல்லாமல் கால் வைக்க முடியல!’ என்பது மேலும் சிரிப்பை வரவழைத்தது. கொஞ்ச நாளாச்சே உல்டா செய்து என்று பாடலை மாற்றிப் போட்டாச்சு!

    Devikaa - Telugucinema.comபனி இல்லாத பாஸ்டனா
    படை எடுக்காத அமெரிக்காவா
    இனிப்பில்லாத ஸ்வீட்டனரா
    இசை இல்லாத ஓசையா

    அழகில்லாத மாடலா
    ஆசை இல்லாத வலைப்பதிவரா
    மழை இல்லாத ஷ்ரேயாவா
    மலர் இல்லாத பொக்கேவா

    தலைவன் இல்லாத ஆட்சியா
    தலைவி இல்லாத கட்சியா
    கலை இல்லாத கலைஞரா
    காதல் இல்லாத திரைப்படமா

    கொலை செய்யாது ஓடுவதும்
    கனிவில்லாமல் போடுவதும்
    பகைவர் போலே ஏடுவதும்
    பதிவர் செய்யும் அரசியல் அல்லவா

    அசல் பாடல்: பனி இல்லாத மார்கழியா :: ஆனந்த ஜோதி – டி.எம்.எஸ் & பி சுசிலா : கண்ணதாசன் – விஸ்வநாதன் & ராமமூர்த்தி (1963) – Music India OnLine


    | |

    சூறையாடல்

    Exxon - Greenpeaceசுற்றுப்புறத்துக்கு மதிப்பு கொடுப்பதில் அமெரிக்கா ஓரளவு விதிகளைப் பின்பற்றியே வருகிறது. தன்னார்வ நிறுவனங்களின் லாபிகளுக்கு பயந்தோ, சுதந்திர கட்சி உறுப்பினர்களின் கொள்கைகளுக்காகவோ, உலகத்திலேயே மிக அதிகமாக குப்பைகளையும் கழிவுகளையும் போடுகிறோம் என்பதாலோ, ‘எரின் ப்ராகொவிச்’ போன்ற ப்ரெட்டி வுமன் திரைப்படங்களாலோ…

    கத்ரீனா வந்து நியு ஆர்லியன்ஸை சின்னாபின்னம் ஆக்குவதற்கு முன்பு வரை சிரமம் பாராமல், பங்குச்சந்தை நலன் மட்டுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல், பணத்தை விரயமாக எண்ணாமல், சட்டத்துக்கு பயந்து, கழிவுகளை சுத்தம் செய்தே வெளியேற்றினார்கள்.

    லூஸியானா சுத்தம் செய்வதற்காகவும் புயல் கடந்த அவசரநிலை காலகட்டத்திலும் சுற்றுப்புற சூழல் விதிகளை தள்ளுபடி செய்துவிட்டார்கள். போன்சர்ட்ரன் ஏரியில் (Lake Pontchartrain) அதிகப்படியான அசுத்தமான வெள்ள நீரை கலந்து விடுவதற்காகவும், இறந்து போன கால்நடைகளையும் செல்லப்பிராணிகளை எரிக்கவும், மட்டுமே பெரும்பாலும் உபயோகப்படும் என்று காரணம் காட்டி துயரநிலை நிவாரணமாக விதி விலக்கு கொடுக்கப்பட்டது.

    கூடவே எரிவாயு நிறுவனங்களின் மாசுக்கட்டுப்பாட்டுக்கும் தாற்காலிக விலக்கு கிடைத்தது. (இதன் தொடர்ச்சியாக லூஸியானா செனேட்டர்கள் நிரந்தர விலக்குகளை முன்வைத்திருக்கிறார்கள்.)

    கேன் பர்தூ-வின் (Cain Burdeau) சமீபத்திய கட்டுரையில் எக்ஸானின் வரலாறு காணாத பத்து பில்லியன் டாலருக்கான லாபம், இந்த தளர்த்தல்களால்தான் கிடைத்திருக்கிறது என்கிறார்.

    அயல்நாட்டு நிறுவனங்களின் வருகையால் மென்பொருள் எழுத்தாளரின் சம்பளம் நாளொரு ஆயிரமும் பொழுதொரு லகரமுமாக கூடி வருவது போல், அமெரிக்காவில் பெட்ரோல் விலை எகிறிக் கொண்டிருந்த காலத்தில்தான் கத்ரீனா புயல் வீசியது. எரி பொருள் உற்பத்தியைக் கூட்ட வேண்டுமானால், நச்சுகளைக் கண்டு கொள்ளக்கூடாது என்று பல எண்ணெய் நிறுவனங்களும் U.S. Environmental Protection Agency-ஐ மிரட்டி தங்கள் லாபத்தை பெருக்கிக் கொண்டது.

    எக்ஸான், ஷெல், பிரிட்டிஷ் பெட்ரோலியம், செவ்ரான், கொனொகோ-பிலிப்ஸ், மாரதான் ஆகியோர் ஜூலை ஆரம்பித்து செப்டம்பர் முடிய மூன்று மாதத்தில் முப்பத்தி மூன்றரை பில்லியன் டாலர் லாபம் கண்டிருக்கிறார்கள்.

    நிறுவனம் – லாபம் – கடந்த மூன்று மாதகால லாபத்தில் அதிகரித்த சதவிகிதம்

    எக்ஸான் – 9.9 பில்லியன் டாலர் – 75 % அதிகரிப்பு
    ராயல் டட்ச் ஷெல் – 9 பில்லியன் டாலர் – 68 % அதிகரிப்பு
    பிரிட்டிஷ் பெட்ரோலியம் – 6.5 பில்லியன் டால்ர் – 34 % அதிகரிப்பு
    செவ்ரான் – 3.6 பில்லியன் டால்ர் – 12 % அதிகரிப்பு
    கொனொகோ-பிலிப்ஸ் – 3.8 பில்லியன் டால்ர் – 90 % அதிகரிப்பு
    மாரதான் – 770 மில்லியன் டால்ர் – 247 % அதிகரிப்பு

    ‘எண்ணெய் கிடங்குகளில் வெளியாகும் நச்சுப்புகைகள் குறித்த தகவல்களை தாமதமாக தருவதன் மூலம்தான் உற்பத்தியை பெருக்க முடியும்’ என்று மிரட்டியே எக்ஸான் போன்றவர்கள் காரியத்தை சாதித்துக் கொண்டு விட்டதாக, EPA-வின் ஹ்யூக் கௌஃப்மன்-னும்(Hugh Kaufman) ஒத்துக் கொண்டிருக்கிறார்.

    எல்லாம் சிரியானா மயம்.


    Lee Raymond & Exxon – Greenpeace 

    Lee Raymond & Exxon – Greenpeace Posted by Picasa

    MGR University

    ரொம்ப நாள் கழித்து (மூன்று மாதமாவது இருக்கும்) சன் செய்திகள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. DVR வந்தபிறகு சன் செய்திகளும் சீரியல்களும் பார்க்க முடிவதில்லை.

    புதிய நீதிக் கட்சியின் ஏசி சண்முகம் நடத்தும் எம்.ஜி.ஆர். பொறியியல் கல்லூரியை இடித்துத் தள்ளினார்கள். நூலகம், மாணவர் விடுதி, மருத்துவக் கல்லூரி வளாகங்கள் புல்டோசப்பட்டது. அறுபது கோடிக்கு மதிப்பிடப்படும் கட்டிடங்கள், ‘அண்ணாமலை‘ ரஜினியின் வீட்டை இடிப்பது போல் சர்வமும் நாசமாக்கப்பட்டது.

    போன வாரம் பெய்த மழையில் கூவம் நதி பிரவாகமெடுத்து ஓடியதற்கு காரணமாக பலவற்றை முன்வைக்கிறார்கள்:

  • ஆற்றுப் படுகைகளில் மணல் திருட்டு
  • நதிக்கரைகளில் அத்துமீறி கட்டப்பட்ட நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு
  • ஆற்று நீர் ஓடுவதை குறுக்கிய குடிசைகள், கடைகள்
  • போதிய அளவு அணைக்கட்டுகள் இல்லாதது
  • இன்னும் இருக்கலாம்.

    கூவம் நதிக்கரையில் அமைந்த ம.கோ.ரா. பல்கலையின் மூன்று கட்டிடங்கள் புறம்போக்கு நிலத்தை வளைத்து வளர்ந்திருப்பதாக குற்றம் சாட்டி இடித்தும் முடிந்துவிட்டது.

    கல்லூரி ஆரம்பிக்கையில் வகுப்புகள் மட்டுமே கொண்ட கட்டிடங்கள்தான் முதலில் எழுந்திருக்கும். பொறியியல் வருமானம் பெருக ஆரம்பித்தவுடன் நூலகம் தொடங்கப்பட்டிருக்கும். மேலும் வருவாயை ஈட்ட உபரியாக மருத்துவம் பயில்விக்கத் தொடங்குவார்கள். தொடர்ச்சியாக வரும் வெளியூர் மாணவர்களுக்காக விடுதி அமைக்கப்பட்டிருக்கும்.

    இடப்பற்றாக்குறையால் நீர் வரத்தில்லாத கூவத்தின் தலையில் எம்ஜியார் பல்கலை விரிந்துவிட்டது. தொலநோக்கு இல்லாததை மட்டும் குற்றம் கூறாமல், ஆரம்ப நிலையில் அதிக விலை கொடுத்து பெரிய அளவில் நிலத்தை வாங்க முடியாததும் இவ்வித ‘வளர்ச்சி’க்கு காரணமாக இருந்திருக்கலாம்.

    ஆறரை ஏக்கர் பரப்பளவு கொண்ட நூலகம்; ஆயிரம் மாணவர்களுக்கு மேல் தங்கக்கூடிய விடுதி ஆகியவற்றை காலி செய்ய 24 மணி நேரம் கெடு கொடுக்கப்பட்டது.

    இந்த அகற்றலின் மூலம் நான்கு கிராமங்களின் சேதம் கட்டுக்குள் அடங்கும் என்கிறார்கள்.

    இரு வருடங்களுக்கு முன்பே நேற்று இடிக்கப்பட்ட இடங்களை அகற்றிவிடுமாறு அரசாணை சென்றிருக்கிறது. 2003-இல் இருந்து ஒன்றுமே செய்யாமல் இருந்ததன் பலன் நேற்று இடிந்து விழுந்திருக்கிறது.

    மிகவும் வருத்தமான நிகழ்வு.

    ஆனால், இரும்புக் கரம் கொண்டு காருண்யம் பார்க்காமல், முதலியார் வாக்கு வங்கி கணக்குப் போடாமல், லஞ்சம் பெற்றுக் கொண்டு விட்டு விடாமல் — நதியின் பாதையை சீரமைக்கும் ஜெயலலிதாவைப் பாராட்டலாம்.


    | |

  • நட்சத்திரங்களின் நடுவில் நிலா

    சும்மா ‘நச்’னு இருக்கு: சுக்கலோ சந்துருடு குறித்த தமிழ் முரசு செய்தி

    Thamizh Murasu

    ‘சுக்கலோ சந்துருடு’/சிவகுமார் குறித்த முந்தைய பதிவு :: (மீண்டும்) இயக்குநராகும் தோழன்


    | |