Category Archives: Uncategorized

Prabhu Rajadurai

சென்ற தேர்தலின் போது நண்பர் பகிர்ந்து கொண்டது. வக்கீலுக்கு என் நன்றிகள்.

வேட்பாளர் தகுதி, வேடிக்கைக்காகவா? – பிரபு ராஜதுரை

பத்திரிக்கையாளர் மாலன் தேர்தல் விவாதங்களுக்காகவே வலைப்பதிவு ஒன்றினைத் தொடங்கி மாநிலவாரியாக தேர்தல் நிலவரங்களை அலசி வருகிறார். மாலனின் வாசகர்கள் அவரது கணிப்புகளை நினைவில் வைத்திருப்பார்களோ இல்லையோ, மைசூர் மகாராஜா உரிமை கொண்டாடும் மாளிகைகளையும், சோனியாவுக்கு இந்தியாவில் இல்லாமல் இத்தாலியில் இருக்கும் வீட்டினையும் மறக்க மாட்டார்கள். பொதுவாகவே இந்திய நடுத்தர வர்க்கத்தினருக்கு தேர்தல் காலத்தில் மெல்லுவதற்கு அவலுக்கு பஞ்சமிருக்காதெனினும், இந்தத் தேர்தலில் இன்னும் பல கைப்பிடிகளாக வேட்பாளர்களின் சொத்து மற்றும் வங்கிக் கணக்கு விபரங்கள் கிடைத்திருக்கிறது. தெருவோரத்தில் இஸ்திரி போடுபவரின் தினப்படி வருமானத்திலிருந்து, பக்கத்து வீட்டுக்கு புதிதாக குடி வந்திருப்பவரின் மாதச் சம்பளம் வரை கூச்சமில்லாமல் விசாரிப்பவர்களுக்கே இப்படி வெட்ட வெளிச்சமாக வேட்பாளர்களின் சொத்து மற்றும் பண விபரத்தினை திறந்து வைத்திருப்பது உதவும் என நான் எண்ணினேன். ஆனால், ‘எண்ணங்கள்’ பத்ரி பங்குச் சந்தைக்கு விற்பனைக்கு வரும் நிறுவனங்களின் நிர்வாகிகள் தங்களது சொத்து விபரங்களை வெளியிடுவதில்லையா? அது போலவே இது மிகவும் தேவையானது’ என்கிறார். என்றாலும் எனக்கென்னவோ தினந்தோறும் பத்திரிக்கைகளில் இவற்றை தொடர்ந்து படிக்கையில், ஒரு தனிமனிதனின் வங்கிக் கணக்கை இப்படி வலியத் திறந்து பார்ப்பதில், பார்ப்பவருக்கு ஒரு குரூர சந்தோஷமும், பார்க்கப்படுபவருக்கு பல தர்மசங்கடங்களும் இருப்பதாக தோன்றியது. என் எண்ணம் நியாயமானதா? அதற்கு இந்தச் சடங்கின் பின்புலத்தையும் சற்று ஆராய்தல் நலம்.

ஒரு கொலை
‘வேட்பாளர், தனது சொத்துக் கணக்கினை வெளியிட வேண்டும்’ என்று வலியுறுத்தும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்க்கான விதை, 1995ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு கொலை என்றால் ஆச்சரியமாக இருக்கலாம். தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் அவளைக் கொல்வதும் அசாதாரமாணதல்ல. ஆனால் கொலையாளி சுஷில் சர்மா காங்கிரஸில் பெரும் புள்ளி. சர்மாவும் அவரது மனைவியான நைனா சாஹ்னியும் தில்லி அரசியல் வட்டாரத்தில் பிரபலமானவர்கள். நைனாவின் உடலை உணவு விடுதி தந்தூரில் வைத்து எரிக்க முயன்றதால் ‘தந்தூர் வழக்கு’ என்று பிரபலமடைந்த இவ்வழக்கில் சமீபத்தில்தான் தண்டனை வழங்கப்பட்டது.

நைனா கொலை, அரசியல் குற்றவாளிகளுக்கான புகலிடமாக மாறிவிட்டதாக பெரிய அளவில் விவாதத்தினை எழுப்பியது. இதனை தொடர்ந்து வலியுறுத்திய ஊடகங்கள், இரண்டு ஆண்டுகளாக அரசு கிடப்பில் போட்டு வைத்திருந்த வோரா குழும அறிக்கையை (Vohra Committee Report) மக்களுக்கு நினைவுபடுத்தின.

மும்பை தொடர் குண்டு வெடிப்புகள், அதுவரை சட்டம் ஒழுங்குப் பிரச்னையாக மட்டுமே கருதப்பட்டு வந்த மாபியா கும்பல்கள், தங்கள் வீச்சினை, எந்த அளவுக்கு இந்திய அதிகார மட்டத்தில் ஊடுறுவியிருக்கிறது எனபதை அரசுக்கு உணர்த்தியது. எனவே அரசு, மத்திய அரசில் உள்துறை செயலாளராக பணியாற்றிய என்.என்.வோரா என்பவர் தலைமையில் ஒரு குழுமம் அமைத்து

‘மாபியா கும்பல்களின் செயல்பாடுகள் அவற்றிற்கிடையேயான தொடர்புகள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளை அறிந்து, மேலும் தொடர்ந்து செய்தியினை திரட்ட நிரந்தரமான ஒரு அமைப்பு ஏற்படுத்துவதற்கான அறிவுரைகளை தெரிவிக்கும்படியும்’

அக்குழுமத்தை பணித்தது. பல்வேறு அரசு அமைப்புகளிடமும் விபரங்களைப் பெற்ற வோரா மூன்றே மாதத்தில் தனது அறிக்கையினை தாக்கல் செய்தார். அனைத்து உளவு, காவல் மற்றும் அமலாக்க துறைகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் வோரா தனது அறிக்கையில் எவ்வாறு இந்தியாவின் அனைத்து அதிகார மட்டத்திலும் பல்வேறு குற்றவாளிக் கும்பல்களின் ஆளுமை படர்ந்து கிரிமினல்கள் ஏறக்குறைய இங்கு ஒரு இணை அரசே நடத்திக் கொண்டிருப்பதாக பல பக்கங்களில் போட்டுக் கிழித்துவிட்டார். இந்த அறிக்கையின் கடுமையை உணர்ந்த அரசு அதை வெளியிடாமல் கிடப்பில் போட்டது.

நைனா கொலை வழக்கினால் வோரா அறிக்கை (வோரா அறிக்கை என்று கூறுவதே பொருத்தம். ஏனெனில் அறிக்கையின் தீவிரம் கருதி அவர் மட்டுமே தயாரித்து உறுப்பினர்கள் யாருடைய கையெழுத்தும் இன்றி உள்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தார்) வெளியிடப்பட வேண்டும் என்ற வாதம் வலுத்தது. நடந்த கொலையினால் தனது கட்சிக்கு ஏற்பட்ட அவப்பெயரை ஓரளவுக்கு துடைக்கும் வண்ணம் பிரதமர் நரசிம்ஹராவ் வோரா அறிக்கையினை பாராளுமன்றத்தில் வெளியிட்டார். ஆனால், இந்த அறிக்கைக்கு பின்புலமான குறிப்புகளை வெளியிட அரசு மறுத்து விட்டது.

ஆயினும் வோரா அறிக்கையின் சாராம்சமே மெல்லிய இதயம் படைத்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுத்த தக்கதாக இருந்தது. பாராளுமன்றத்திலும் ஊடகங்களிலும் பெரிய விவாதம் நடைபெற்றது. அப்போது கிளம்பியதுதான், ‘அரசியலில் கிரிமினல்கள் ஊடுருவிவிட்டனர். எனவே கிரிமினல்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை. இவ்வாறு தோன்றிய பொதுக்கருத்தினை மனதில் கொண்டு சட்ட மாறுதல்களை பரிந்துரைக்கும் சட்ட ஆணையமும் (Law Commission) கிரிமினல்களை தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கும் வண்ணம் சட்ட மாறுதலை அரசின் முன் வைத்தது. தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்ள விரும்பாத அரசு பரிந்துரையை வழக்கம் போல கண்டு கொள்ளவில்லை.

ஒரு வழக்கு
மக்களாட்சி சீர்திருத்தத்திற்கான அமைப்பு (Association for Democratic Reforms) என்ற தன்னார்வ குழு 1999ம் வருடம் தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவினை தாக்கல் செய்தது. வோரா அறிக்கை சுட்டிக் காட்டிய தீமைகளை இந்தியாவில் இருந்து ஒழிக்கும் வண்ணம் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளின்படி தேர்தல் நடைமுறை விதிகளில் (Conduct of Election Rules’1961) மாறுதல் செய்யப்பட அரசுக்கு ஆணையிட வேண்டும் என்பதுதான் மனுவின் சாரம். வழக்கினை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் ‘சட்டமியற்றுவது சட்டமன்றங்களின் வேலை. எனவே இவ்வாறு மாறுதல் கொண்டுவரப்பட வேண்டும்’ என்று நீதிமன்றம் ஆணையிட முடியாது என்று கூறியது. ஆனாலும் ‘சரியான நபர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணம் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களிடம் இருந்து அவர்கள் மீதான குற்றவியல் வழக்குகள், சொத்து விபரங்கள், கல்வித்தகுதி, அவரது கட்சியின் தகுதிகள் பற்றிய விபரங்களை கோர வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு கட்சிமாறுபாடு இல்லாமல் அனைத்து அரசியல்வாதிகளின் வயிற்றில் புளியைக் கரைக்க மத்திய அரசு இந்த உத்தரவினை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது. இதே வகையில் பியூசிஎல் (PUCL) அமைப்பும் ஒரு பேராணை மனுவினை (Writ Petition) நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, இரண்டும் சேர்த்து உச்ச நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியும் வழக்கில் தன்னை சேர்த்துக் கொண்டு தில்லி உயர்நீதிமன்ற உத்தரவினை நீக்கக் கோரி வாதிட்டது. அனைவரையும் விசாரித்த உச்ச நீதிமன்றம் தில்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை சிறு மாறுதல்களுடன் ஏற்றுக் கொண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளின் அடிப்படையிலேயே 2003ம் வருடம் மார்ச் மாதம் தேர்தல் கமிஷன் வேட்பாளர்கள் தங்களது, தங்களது கணவன்/மனைவி மற்றும் சார்ந்திருப்பவர்களின் (dependents) சொத்து விபரங்கள், அரசு நிறுவனங்களிடம் பெற்ற கடன்கள், கல்வித் தகுதி, நிலுவையிலுள்ள குற்றவியல் வழக்குகள் கிய விபரங்களைத் பொதுவில் தர வேண்டும் என்ற உத்தரவினை வெளியிட்டது.

ஒரு தீர்ப்பு
தன்னைப் பற்றிய விபரங்களை ஒரு வேட்பாளர் சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவு, தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான செயல் இல்லை என்பதால், இதன் காரணங்களையும், நோக்கங்களையும் நாம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில்தான் தேட வேண்டியிருக்கிறது.

எந்த எந்த விபரங்களை தேர்தல் ஆணையம் வேட்பாளரிடம் இருந்து கோர வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றமே வரையறுத்தது. முதன்மையானதும் முக்கியமானதுமான விபரம் அந்த வேட்பாளர் சம்பந்தப்பட்ட குற்றவியல் வழக்குகள். இதைப் பொறுத்து யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கப் போவதில்லை. ஒரு வேட்பாளர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டிருந்தால் அவர் தகுதி இழக்க மாட்டார். ஆனால், அதன் விபரங்களையாவது வாக்காளர்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியத்தை வோரா அறிக்கை நமக்கு உணர்த்துகிறது. மேலும் குற்றவியல் வழக்குகளை தெரிவிக்க கட்டாயப்படுத்துவதால், ஒரு வேட்பாளருக்கு இழப்பு (legal injury) ஏதுமில்லை. ஏனெனில், நமது நாட்டில் குற்றவியல் வழக்குகளின் விபரங்கள் பொது ஆவணங்கள். யார் வேண்டுமானாலும், தகுந்த காரணம் இருப்பின் வழக்கு விபரங்களைப் பெறலாம். வழக்குகளும் அனைவரின் பார்வைக்கு திறந்த நீதிமன்றங்களில்தான் நடக்கின்றது. எனவே, இவற்றில் ரகசிய காப்புறுதி ஏதும் இல்லை.

அதைப் போலவே கடைசியும் அதிக முக்கியமல்லாததுமான விபரம், வேட்பாளரின் கல்வித் தகுதி பற்றியது. நாடாளுவதற்கு கல்வித் தகுதி பெரிய தகுதியில்லையெனினும், இதனாலும் யாரும் பாதிக்கப்படுவதில்லை. ஏனெனில், வேட்பாளரின் கல்வி பற்றிய விபரங்களையும் யாரும் சட்டபூர்வமான முறையில் பெற முடியும். எனவே இதைப் பொறுத்தவரையும் ரகசியம் ஏதுமில்லை. எம்ஜிஆரும் கருணாநிதியும் ஏன் ஜெயலலிதாவும் பள்ளிக்கூடத்தோடு சரி என்பது அனைவரும் அறிந்ததே! ஆனால், இவர்களது அறிவு, பட்டம் பல பெற்ற யாருடைய அறிவுக்கும் குறைந்ததல்ல என்பது வேறு விஷயம்.

அடுத்தது, வேட்பாளர், அவரது மனைவி/கணவர் மற்றும் சார்ந்திருப்போர் ஏதேனும் அரசிடமோ அல்லது பொது நிறுவனங்களிடமோ ஏதேனும் கடன் பட்டிருந்தால் அதைப் பற்றிய விபரங்கள். இந்த விபரங்களிலும் ஏதேனும் ரகசியம் இல்லை. தாங்கள் விரும்பினால் பொது நிறுவனங்கள் தங்களிடம் கடன்பட்டவர்கள் பற்றிய விபரங்களை பொதுவில் தெரிவிக்கலாம். வாக்காளர்கள் வேட்பாளர்களைப் பற்றிய ஒரு கருத்து கொள்வதற்கு இந்த விபரம் அவசியம்.

மேற்சொன்ன மூன்று விபரங்களையும் அந்த விபரங்கள் மீதான வேட்பாளரின் கருத்தையும் இணைத்து அனைத்து தேர்தல் அதிகாரிகளின் அலுவலகங்களிலும் பொதுப் பார்வைக்கு வைக்கலாம். வேட்பாளரின் கருத்து அவசியம் என்று நான் கூறுவது, ஒரு வேட்பாளர் தான் பட்ட கடன் மற்றும் தன் மீது உள்ள குற்ற வழக்குகள் பற்றிய தனது நியாயத்தையும் எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு. காவலர்கள் பொய் வழக்கு தொடுப்பது ஒன்றும் புதிதல்லவே!

ஆனால், பிரச்னைக்குறியதாக நான் கருதுவது வேட்பாளர்களின் சொத்து விபரங்கள். ஒருவருக்கு சொந்தமான கட்டிடம், நிலம் போன்ற அசையா சொத்துகள் குறித்த விபரங்கள் பொது ஆவணமாக கிடைக்கும். இதில் பெரிய சிக்கல் இல்லை. ஒருவரின் பங்குப் பத்திரம் குறித்த விபரங்களும் தேவையானவை எனக் கூறலாம். எனெனில் ஒரு வேட்பாளருக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான உரிமை மற்றும் ஆர்வத்தை (interest) வாக்காளர்கள் தெரிந்து கொள்வது அவசியம். (அமெரிக்க பாதுகாப்பு மந்திரி டோனால்ட் ரம்ஸ்பீல்ட் மந்திரியானவுடன் தனது பங்குகள் அனைத்தையும் விற்றார் என அறிகிறேன்)

ஆனால், சிக்கல் வேட்பாளர் தன்னிடமுள்ள நகை, ரொக்கம், மற்றும் வங்கியிலுள்ள சேமிப்பு இவற்றை வெளியிடுவதில் இருப்பதாக எண்ணுகிறேன். பொதுவாகவே எவ்வளவு நெருங்கிய நண்பர்களாயினும் நாம் ஒருவருக்கொருவர் வங்கியில் எவ்வளவு தொகை வைத்திருக்கிறோம் என்று கூறிக் கொள்ள விரும்புவதில்லை. ஏன், மனைவியிடமே வங்கியிலுள்ள தொகையை கூறுவதில் ஆபத்து இருக்கிறது:-) சேரியமாகக் கூறினால், மும்பை போன்ற மாபியா ஆளுமைக்குட்பட்ட நகரங்களில் பலர் தங்களது பொருளாதார நிலமையை ரகசியமாக வைத்திருப்பது அவசியமானது. தமிழகம் போல இங்கு லாட்டரியில் பரிசு விழுந்தவர்களை விளம்பரப்படுத்துவது இல்லை. காரணம் கூறவேண்டியதில்லை. மும்பை மட்டுமல்லாமல் எங்குமே, வங்கிகளும் ஒருவரின் சேமிப்பில் உள்ள தொகையை தகுந்த நீதிமன்ற ஆணையில்லாமல் வெளிப்படுத்த சட்டம் இடம் கொடுக்கவில்லை. எனவே ஒருவரிடம் உள்ள அசையும் சொத்துகள் பொது ஆவணம் அல்ல. அந்த விபரங்களை ஒரு தனி மனிதர் தன்னிடமே வைத்திருக்க அவருக்கு உரிமை இருக்கிறது.

அவ்வாறெனில், ஒரு வேட்பாளர் ஏன் தனது சொத்து விபரங்களை அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்மானித்தது என்பதை ஆராய்வது அவசியம். நான் ‘அசையும் சொத்து விபரங்கள் அளிப்பது தர்மசங்கடமான விஷயம்’ என்ற கோணத்திலேயே தீர்ப்பினை அணுகினாலும், ‘நீதிபதிகள் அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விபரத்தை அளிக்க வேண்டிய கடமையோடு வேட்பாளர்களின் சொத்து விபரங்களை சேர்த்து குழம்பி விட்டனர்’ என்றே கருதுகிறேன். எனெனில் ‘அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விபரங்களை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்ற நடத்தை விதியினை நீதிபதிகள் தங்கள் தீர்ப்புக்கு காரணமாக மேற்கோள் காட்டுகின்றனர். ‘சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு ஊழியர்களே’ என்று ஏற்கனவே நரசிம்ஹராவ் வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதையும் நினைவு கூறுகின்றனர். ஆனால் இங்கு சொத்து விபரங்களை அளிக்க கடமைப்பட்டவர் வேட்பாளர். தேர்தலில் வென்றவர் இல்லை. தேர்தலில் வென்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுபவரை தனது சொத்து விபரங்களை சமர்ப்பிக்கக் கூறுவதில் நியாயம் உண்டு.

ஆனால் அந்த விபரங்களை விட பொது ஆவணமாக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.

நீதிபதிகள் மேலும் ‘அமெரிக்காவில் செனட் தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் சொத்து விபரங்களை அளிக்கும் வழக்கம் உள்ளதாக எவ்வித மேற்கோள்களும் இல்லாமல் குறிப்பிடுகின்றனர். நான் தேடியவரையில் அப்படி ஒன்று இருப்பதாக தெரியவில்லை. அனைத்து வேட்பாளர்களும் தங்கள் தேர்தல் நிதி வரவு-செலவுகளை வெளியிடுகின்றனர். மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களே சொத்து விபரம் முழுவதும் அளிக்கின்றனர். எது எவ்வாறு எனினும், சொத்து விபரம் அளிப்பதன் நோக்கம் என்ன?

வழக்குரைஞர்கள் மீண்டும் மீண்டும் பல்வேறு வார்த்தைகளில் வலியுறுத்திய காரணங்கள், தீர்ப்பிலிருந்து நான் பார்த்த வரையில் ‘வாக்காளர்களின் அறிந்து கொள்ளும் உரிமை’ மற்றும் ‘வேட்பாளர்களின் பின்புலம் மற்றும் செயல்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்வதால் ஜனநாயகம் காப்பாற்றப்படுகிறது’ என்பதுதான். (right to know) இதனோடு ‘வேட்பாளரைப் பற்றி முழுமையாக ஒரு வாக்காளர் தெரிந்து கொள்வதால், சரியான ஒரு முடிவெடுத்து தனது வாக்கினை தகுதியான நபர்களுக்கு அளிக்க முடியும்’ என்பதனையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்த பொதுப்படையான காரணங்கள்தான் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றனவே தவிர ஒரு வேட்பாளரின் சொத்து விபரத்தை தெரிந்து கொள்வதற்கான நேரிடையான காரணம் இல்லை.

ஆனால் நீதிபதிகள் கூறும் ஒரே காரணம், ‘சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் குடிமகன் அவர்கள் தவறான வழியில் நடந்து அதிகமான பொருளீட்டியவர்களா என்று அறிவது அவசியம். இந்த விபரத்தை வேட்பாளரின் சொத்து விபரத்தை கோருவதன் மூலம் எளிதில் பெறலாம்’ என்பதுதான். மேலும் ஒரு இடத்தில் நீதிபதிகள் கூறும் மற்றொரு காரணம், ‘ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அதிகமான அளவில் (tons of black money) கறுப்புப் பணத்தினை திரட்ட முடிகிறது. இவ்வாறு சொத்து விபரங்களை அவர்கள் அளிக்கக் கூறுவதன் மூலம், வாக்காளர் இவ்வாறு கறுப்புப் பணம் திரட்டியவரை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமா? என்று சிந்திக்க முடியும்’

இரண்டாவதாக நீதிபதிகள் கூறியது ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பற்றியது. அவர்கள் ஏற்கனவே அரசு ஊழியர்கள் என்பதால் சொத்து விபரங்களை அளிக்க கடமைப்பட்டவர்கள். ஆனால், ஏன் முதன் முறையாக தேர்தலில் நிற்பவர்கள் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் முன்னரே இவ்வாறு கோர வேண்டும்? தவறான முறையில் பொருளீட்டியிருந்தால், அதை கணக்கில் காட்டாமல் கறுப்புப் பணமாகவே வைத்திருக்க வாய்ப்பு அதிகம். அதை யாரும் தெரிவிக்கப் போவதில்லை. ஏனெனில் அது தங்களை ஒரு குற்ற வழக்கில் உட்படுத்தும் செயல் என்பதை அறிவர். பிரச்னை, தேர்தலில் நின்று பார்ப்போமே என்று முன்வரும் நபர்களுத்தான். வெற்றியும் கிடைக்காமல், அவரது சட்டைப் பையில் எவ்வளவு பணமிருக்கிறது என்பதிலிருந்து அவர் மனைவி அணிந்திருக்கும் தாலியிலிருப்பது தங்கமா இல்லையா என்பதை ஊர் முழுவது தெரிந்து போவதில் பலருக்கும் தர்மசங்கடம் இருக்கும் என்று நான் அனுமானிக்கிறேன். நல்ல முறையிலும் பெரும் பொருளீட்டலாம். அதை திறந்து வைப்பது பொறாமைக் கண்களை ஒரு நபர் மீது செலுத்தாதா?

தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மத்திய விஜிலன்ஸ் ஆணையர் (CVC) போன்ற அமைப்புகளிடம் வருடம்தோறும் தங்களின் சொத்து விபரங்களை சமர்ப்பிக்க செய்வதும் அவற்றை ரகசிய ஆவணங்களாக வைத்திருந்து ‘ஒரு உறுப்பினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக’ ஆணையர் கருதுகையில் குற்ற வழக்கிற்கு பரிந்துரைப்பதும் ஊழலுக்கு எதிரான போதிய நடவடிக்கையாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எதிரான பொதுக்கருத்து நிலவுகிறது. உச்ச நீதிமன்றமும் அதற்கு இசைந்து தீர்ப்பு கூறியிருக்கிறது. இது நியாயமென்றால்….உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு அலுவலர்கள் மற்றவர்களும் தங்கள் சொத்து விபரத்தினை பொதுவில் வைப்பதும் நியாயமே. அப்படி யாராவது வேண்டி ஒரு பேராணை மனுவினை தாக்கல் செய்தால் ‘பத்மாசுரனுக்கு வரம் கொடுத்த சிவன் போல’ சிலர் நெளிய வேண்டி வரும்.

மும்பை
16/04/04

(முடிவினை வைத்து முதலுக்கு சென்ற ஒரு ஆய்வு. எனது சார்பு நிலை இதில் இருக்கலாம். முடிவினை நீங்களே எடுக்கும் வண்ணம் இருபுற வாதங்களையும் தெரிவித்துள்ளேன்)


| |

சொல்றாங்க சொல்றாங்க

1. அடுத்த முதல்வர் கருணாநிதிதான் – அன்புமணி ராமதாஸ்

2. நான் எப்பொழுதும் கட்சிக்கும் அம்மாவுக்கும் விசுவாசமாக இருப்பேன். எனக்கு எந்தப் பதவியை வேண்டுமானாலும் கொடுப்பதும் பறிப்பதும் அம்மாவின் இஷ்டம் – நிதியமைச்சர் பொன்னையன்

3. விஜயகாந்த் 148 படங்களில் நடித்துக் கிடைத்த பணத்துக்கெல்லாம் ஒழுங்காக வருமான வரி ஆண்டுக்கு ஆண்டு கட்டிவருகிறார். திமுக தலைவர்கள் தங்கள் சொத்துகளுக்கு/வருமானத்துக்கு வருமான வரி கட்டியுள்ளனரா? – விஜயகாந்த் கட்சி அலுவலகத்திலிருந்து

4. கூட்டணிக்குத் தயார் – பாஜகவின் (மொட்டை அடித்திருக்கும்) வெங்கையா நாயுடு. இரண்டு மூன்று நாள்களுக்கு முன்னர்தான் தனித்துப் போட்டியிடுவோம் என்றார்கள்.

(பத்திரிகை படித்ததிலிருந்து – approximate-ஆக. கட்/பேஸ்ட் செய்யமுடியாமல் தினமணி ஆன்லைன் இன்று கொஞ்சம் இடிக்கிறது…)

ஜெயலலிதாவின் கரடிக்கு கருணாநிதியின் பதில்

முந்தாநாள் ஜெயலலிதா கரடி கதை சொன்னதற்கு பதிலாக கருணாநிதி ஓர் அறிவிப்பை விடுத்துள்ளார். நகைச்சுவை உணர்வுடன் இப்படி இவர்கள் இருவரும் மாறிமாறி கதையும் கருத்தும் சொல்வது நமக்கு இன்பத்தைத் தருகிறது.

கருணாநிதியின் பதிலைப் படிக்க: இட்லிவடை பதிவில்

வலையகங்கள் – ஆனந்த் சங்கரன்

சில மின் இதழ்கள் ஒரு பார்வை – ஆனந்த் சங்கரன்

தினகரன், தினமலர், தினத்தந்தி, தினபூமி,… விகடன், குமுதம், யாஹூ குழுமங்கள், மற்றும் 800க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகள், அதில் நடக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள், என படிக்க உட்கார்ந்தால் 24 மணி நேரம் பத்தாது.

விகடன், குமுதம் போன்று பெரிய நிறுவனங்கள் போல் இல்லாமல், வலைப்பதிவு போன்று தனியொரு மனிதனின் படைப்பாகவும் இல்லாமல் நடுவில் இருக்கும் மின் இதழ்கள் பற்றி ஒரு பார்வை. இந்த கட்டுரையில் வரும் மின் இதழ்களை, நடத்தும் நிர்வாகிகளை பற்றிய பரிச்சயம் எனக்கு உண்டு.

அவர்களுக்கு என்னை தெரியுமா தெரியாது, ஆனால் அவர்களை எனக்கு ஓர் அளவுக்கு தெரியும்.

மின் இதழ்களை ஒப்பிடும் என்னுடைய டேபிளை இணைத்துள்ளேன்

திண்ணை : கடந்த ஏழு வருடங்களாக சீராக ஆயிரகணக்கான வாசகர்களோடு வியாழன் தோறும் தடையில்லாமல் வெளிவருகிறது. யாஹு குழுமம், வலைப்பதிவு என்றெல்லாம் வருவதற்கு முன்பே பலவிதமான எழுத்தாளர்களை எழுத ஊக்குவித்தது / அறிமுகப்படுத்தியது என்ற பெருமையை தட்டிச்செல்கிறது. வாரம் தோறும் இருபதுக்கும் அதிகமான படைப்புகள், சிறிய / பெரிய படைப்பாளிகள் என்று வலம் வருகிறது. மேலும் முந்தைய படைப்புகளை சென்று படிக்க வழி வகுக்கிறது. முந்தைய இதழ்களை வார இதழாகவே படிக்க முடிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். லாப நோக்கில்லாமல் என்று முதல் பக்கத்தில் இருக்கிறது. அதை மெய்பிக்கும் வகையில் தளத்தில் விளம்பரங்கள் எதுவும் கிடையாது. Anyindian திண்ணை நிர்வாகிகளின் மற்றொரு சேனல் என்பதால் அது மட்டும் இருக்கிறது.

குறைகள் என்று பார்த்தால் ஏற்கனவே பலருக்கும் தெரிந்ததுதான்,

  • எளிதாக படிக்ககூடிய எழுத்துரு கிடையாது.
  • கட்டுரைகள் சீராக வடிவமைக்கபடாமல் இருக்கும்.
  • தேடுவது சிரமம்
  • பல வருடம் பின் தங்கிய தொழில் நுட்பம்.

    திசைகள் : தமிழ் மக்களுக்கு அதிகம் பிரபலமான சன் டிவி / எழுத்தாளர் ‘மாலன்’ அவர்கள் கௌரவ ஆசிரியராக நடத்தி வரும் மின் இதழ். கடந்த மூன்று ஆண்டுகளாக மாதந்தோறும் வெளிவருகிறது. திண்ணை போல் அதிக படைப்புகள் இதில் கிடையாது. தேர்தெடுக்கப்பட்ட எழுத்தாளர்கள் என்று மாதந்தோறும் பதினைந்துக்கும் குறைவான படைப்புகள். யுனிகோடில் வெளிவந்த முதல் இதழ் என்று படித்ததாக நினைவு. முந்தைய படைப்புகளை படிப்பது சற்று சுலபம். மாதா மாதமாக சென்று படிக்கலாம். இதுவும் லாப நோக்கில்லாமல் நடத்தப்படும் ஒரு மின்னிதழ்.

    குறைகள் என்று பார்த்தால்

  • யுனிகோடு தவிர, பின் தங்கிய தொழில் நுட்பம்.
  • HTML லே-அவுட்டே இதில் சரியாக இல்லாததுதான்.

    தமிழோவியம் : தொழில்நுட்பத்தில் முன்னோடியாக இருக்கும் மின்னிதழ். நான்கு வருடங்களுக்கு மேலாக வெளிவருகிறது. தீபாவளி மலரை சிறப்பாக வெளியிடுவார்கள். அவ்வப்போது போட்டிகள் நடக்கும். Consistentஆக ஒரு சிலர் தொடர்ந்து எழுதுகிறார்கள். வலைப்பதிவுகளைப் போல மறுமொழிகள் இருப்பதால் படிப்பதற்கு ஆர்வத்தைத் தூண்டுகிறது. வாரம் தவறாமல் தமிழ்ப்பட விமர்சனம் இருக்கும். கருத்துப்படம் போல் வ…வம்பு ரசிப்பேன். ஜோதிடம் பார்த்து தருவது, ஈ-புக் விற்பது போன்ற வணிக சேவைகள் உண்டு.

    குறைகள் என்று பார்த்தால்

  • வெரைட்டியாக எதிர்பார்க்க வைக்காமல், ஒரே மாதிரியான சரக்கு வருவது.
  • வியாழன், வெள்ளி என்று அப்டேட் செய்து கொண்டிருந்தவர்கள், ஞாயிறு, திங்கள் என்று மாற்றிக் கொள்வது.
  • எது எங்கே இருக்கிறது என்று site map தெரியாமல், புதியவர்கள் கொஞ்சம் மிரளலாம்.

    நிலாச்சாரல் : “Nilacharal.com : Yet another website #@! No? So what’s special?” என்று அவர்கள் சொல்வது போல் இதை வெறும் மின்னிதழ் என்று வகைப்படுத்த முடியாது. இதில் அதையும் தாண்டி .. பல விஷயங்கள் உள்ளது. வார இதழ், ஷாப்பிங், வாழ்த்து அட்டை என இதில் அடக்கம். நிலாச்சாரல் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் படைப்புகளை வெளியிடுகிறது. இதில் தேடுவதற்கான வசதியும், முந்தைய வாரங்களை எளிதாக செல்ல வசதி இருக்கிறது.

    குறைகள் என்று பார்த்தால்

  • முகப்பில் எழுத்துரு மிகவும் சிறியதாக உள்ளது. நிறைய தொடுப்புகள் காட்ட வேண்டும், அதே சமயம் 800×600 திரையிலும் தெரிய வேண்டும் என்ற எண்ணமாக இருக்கலாம்.
  • புதிய தொழில் நுட்பங்கள் இருப்பது போல் தெரியவில்லை. (யுனிகோட்,செய்தியோடை, xml)

    அம்பலம் : இன்றைக்கு இருக்கும் பல மின்னிதழ்களுக்கு முன்னோடி என்று சொல்லலாம். பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள் பொறுப்பேற்று நடத்தும் வார இதழ். விகடன் சென்ற ஆண்டு அமல்படுத்திய கட்டண சேவையை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ‘சிறப்பு அம்பலமாக’ செய்த பெருமை இதற்கு உண்டு. சினிமா, சிறுவர், வாழ்த்துஅட்டை என சில பிரிவுகளும் உண்டு. சுஜாதா என்ற ஒரு மெகா ஸ்டாரை மட்டும் நம்பி இயங்கும் தளம்.

    குறைகள் என்று பார்த்தால்.

  • புதிய தொழில் நுட்பத்திற்கு மாறாமல் இருப்பது.
  • சிறப்பு அம்பலத்தில் [சுஜாதா அவர்களின் படைப்புகள் தவிர] படிப்பதற்கு பெரிதாக ஒன்றும் கிடையாது.

    ஆறாம்திணை : முன்பு சிறப்பாக இருந்த இணையதளங்களில் இதுவும் ஒன்று. தற்போது எப்படி என்று தெரியவில்லை. முழுவதும் காசு கொடுத்து படிக்க வேண்டும். முகப்பு பக்கத்தை பார்த்த வரையில், காசு கொடுத்து படிப்பதற்கான / சுண்டி இழுப்பதற்கான அறிகுறி இல்லை. தற்போது, தென்றலாக அமெரிக்காவில் ஆறாம்திணையின் சில பக்கங்கள் மட்டும் படிக்க கிடைக்கிறது.

    அப்புசாமி : பாக்யம் ராமசாமி அவர்களின் தளம். எப்பொழுது புதிப்பிக்கப் படுகிறது என்று சரியாகத் தெரியவில்லை. அந்தக்கால எழுத்தாளர்களின் விஷயங்கள் அபரிமிதமாகக் கிடைக்கும். நகைச்சுவை, சினிமா, நையாண்டி என்று ஜனரஞ்சகமாக இருக்கும். அப்புசாமி, சீதாப் பாட்டிக்காகவே தொடர்ச்சியாக போய் பார்ப்பேன்.

    Tamil E-zines Feature Comaprison – Anand Sankaran


    மின் மடலைப் படித்தவுடன் நானும் ஒரு அட்டவணைப் போட்டுப் பார்த்தேன். ஒரு ‘டிக்’ குறி ஓரளவுக்கு வசதி உண்டு என்பதையும்; மூன்று டிக் மார்க்குகள் பலமாக இருக்கிறது என்பதையும் குறிக்கும்.

  • பு.எ.பி. – புதிய எழுத்தாளர்களைப் பிரசுரித்தல்
  • வலையமைப்பு – வலையக வடிவம், எளிதில் கண்டுபிடிக்க, தேட, மேய முடிவது
  • வடிவம் – நிழற்படங்கள், புகைப்படங்கள், கிராஃபிக்ஸ் போன்றவற்றின் ஒரிஜினாலிடி
  • ஓரிஜினாலிடி – பிற வலைப்பதிவுகள், வெகுஜன ஊடகங்கள், வார சஞ்சிகைகள், நாளிதழ்களின் பிரதிபலிப்பு மற்றும் தாக்கம்
  • மறுமொழி – பின்னூட்ட வசதி
  • தரம் ரகம் – (Rating) தரவரிசைப் படுத்தும் வசதி
  • வகை – பிரிவு வாரியாக வகைப்படுத்துதல்
  • புரவலர் – தளத்தின் சில பகுதிகளை மற்றவருக்கு பயன்படுமாறு வேறு வலையகங்களில் சொருகும் வசதி (put a small amount of the site’s content on an external site)
  • அந்தரங்கம் – Personalisation

    தவறுகளை, விடுபட்டவைகளை சுட்டவும். என் புரிதல் மாறுமானால், அட்டவணை திருத்தப்படும்.


    |

  • திமுக கூட்டணி தொகுதி உடன்பாடு

    நேற்று நடந்த கூட்டணிக் கூட்டத்துக்குப் பிறகு ஏற்பட்டுள்ள முடிவுகள்: (தினமணி)

    1. கூட்டணிக் கட்சிகள் தத்தம் வேண்டுதல்களை பிப்ரவரி 15க்குள் திமுகவிடம் சமர்ப்பிப்பார்கள்.

    2. அதன்பின்னர் மார்ச் 2 வரை திமுக பிரதிநிதிகள் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். Informal-ஆக.

    3. மார்ச் 2க்குள் முடிவு எடுக்கப்படும். மார்ச் 3-5 திருச்சியில் திமுக மாநில மாநாடு நடக்கும். அங்கு கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் பற்றி பொதுமேடையில் அறிவிக்கப்படும்.

    ஆக மார்ச் 5ம் தேதிக்குள் பேச்சுவார்த்தைகள் முடிவடையும் என்று தெரிகிறது. இன்னமும் 20 நாள்கள்தான் பாக்கி!

    அதிமுக பக்கம் இப்பொழுதைக்கு யாரும் வெளிப்படையாகச் சாய்வதாகத் தெரிவதில்லை!

    வைகோ பற்றி கருணாநிதி

    நேற்று நிருபர்களிடம் பேசியதிலிருந்து (உபயம்: தினமணி)

    * திமுக அணியிலிருந்து மதிமுக வெளியேறி அதிமுகவுக்கு வர வேண்டும் என சட்டப் பேரவை முன்னாள் தலைவர் கா. காளிமுத்து கூறியிருக்கிறார். கிடைக்கிற ஆதாயத்துக்கு ஏற்ப அணிமாறும் சபல குணம் படைத்தவர்கள் யாரும் எங்கள் கூட்டணியில் இல்லை.

    * மதிமுக பற்றி தொடர்ந்து செய்திகள் வந்தபோதிலும், அதன் தலைமை விளக்கம் தரவில்லையே என்ற கேள்வி எழவில்லை. அந்தக் கட்சியின் தலைமைக்கும் எனக்கும் நீண்ட காலமாக தனிப்பட்ட முறையில் இருக்கிற நெருக்கம்தான் அதற்குக் காரணம். அதனால் அவர் விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்றார் கருணாநிதி.

    அம்மாவின் குட்டிக்கதைகள் – கரடி, கம்பளி, சாக்லெட், தண்ணீர்

    ஜெயலலிதாவின் scriptwriter யாரோ? மீண்டும் குட்டிக்கதைகள் ஆரம்பித்துவிட்டன. இவற்றைத் தொகுத்து ஒரு நல்ல புத்தகம் வெளியிடலாம். காப்புரிமை பிரச்னைகள் வரும் என்பதால் நான் கழன்றுகொள்கிறேன்.

    தினமணியில் முழுதாக மூன்று கதைகள் உள்ளன. இட்லிவடை பதிவில் ஒரு கதையை யூனிகோடில் போட்டிருக்கிறார்.

    இன்று சன் டிவியில் கருணாநிதியின் பதிலடி அறிக்கையை வாசித்தார்கள். அது நாளை செய்தித்தாளில் வந்ததும் சுட்டி கொடுக்கிறேன்.

    சபாஷ்! சரியான போட்டி!

    விஜயகாந்த் – திமுக மோதல் + காமெடி

    விஜயகாந்த் கட்சி (ஏதோ மு.க) தொடங்கியதிலிருந்தே பெரிய கட்சிகளுடன் தகராறு ஆரம்பித்து விட்டது. விஜயகாந்த் தான் தனித்து நின்றே போராடுவேன் என்கிறார். திமுக, அஇஅதிமுக இரண்டுக்கும் மாற்று என்கிறார். ஏதோ கல்யாண மண்டப இடிப்பு என்று பிரச்னை வந்தது. அதன்பின் கருணாநிதியின் வீட்டில் வருமான வரிச் சோதனை நடத்தவேண்டும் என்று விஜயகாந்த் கேட்டிருக்கிறார் போலும். (ப.சிதம்பரம், பழனிமாணிக்கத்தையெல்லாம் தாண்டி அது நடக்குமா என்ன?) அதற்கு பதிலாக நேற்று ஆற்காடு வீராசாமி விஜயகாந்தைத் தாக்கிப் பேசியுள்ளார்.

    இப்பொழுது விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. வீராசாமியாரின் சில துளிகள் இங்கே (தினமணி வழியாக):

    * கருணாநிதி சிறையில் இருந்த நாள்களைவிட, இவருடைய (விஜயகாந்துடைய) கட்சியின் வயது குறைவு.

    * சுனாமிக்கு கருணாநிதி நிதி வழங்கவில்லை என்கிறார். ஆனால் சோனியாவிடம் 1 கோடி, ஸ்டாலின் வழியாக ஜெயலலிதாவிடம் 21 லட்சம் சுனாமிக்காகக் கொடுத்தார். இப்பொழுது சன் குழுமப் பங்குகளை விற்றதன் வாயிலாக மனைவி வழியாகக் கிடைத்த பணத்தில் ரூ. 5 கோடியில் அறக்கட்டளை.

    * விஜயகாந்த் நடித்த படங்களில் எவ்வளவு சம்பளம் வாங்கினார், அதன் செலவு விவரங்கள் என்ன ஆகியவற்றைப் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

    அடுத்து பழனிமாணிக்கம் தன் அதிகாரிகளை கேப்டனைப் பார்க்க அனுப்புவார் என்று நம்புகிறோம்.

    விஜயகாந்த் தான் அதிமுக, திமுக அணிகளை விமரிசித்துப் பேசுவதால் தன் உயிருக்கு ஆபத்து என்று நேற்று கோவையில் பேசியிருக்கிறார்!

    இதெல்லாம் பூச்சாண்டி. தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களைக் கொல்லும் அளவுக்கு கேவலமான நிலைமை வந்துவிடவில்லை. அட, பீஹாரிலேயே இப்பொழுது இதெல்லாம் நடப்பதில்லை ஐயா!

    புதிய சலுகை – ஜெயா

    அரசு ஊழியர்களுக்கு மட்டும் சலுகைகள் வருவதாக இன்று ‘தேஸிகள்’ என்று செல்லமாக அழைக்கப்படும் அமெரிக்க வாழ் என்.ஆர்.ஐ.க்கள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் புகார் கூறினர்.

    அமெரிக்க தேஸிகளின் பத்திரிகைகளான ‘லிட்டில் இந்தியா‘, ‘தென்றல்‘, போன்ற மாத இதழ்களின் நிருபர்களை திடீரென்று அழைத்து சந்தித்த செல்வி. ஜெயலலிதா, “இணையத்தில் மட்டும் வம்பளந்தாலும், அமெரிக்கத் தமிழர்களையும் வாக்கு வங்கிகளாகத்தான் நான் பார்க்கிறேன். எனக்கு பாரபட்சம் கிடையாது. உங்களில் சிலர் தமிழகத் தேர்தலின் போது, இந்தியாவுக்கு வருகை புரிந்தாலும், வாக்களிப்பது கிடையாது என்பது எனக்குக் கவலையைத் தருகிறது. தாங்கள் எந்தக் கட்சிக்கும் வோட்டளிக்காமல் திரும்புவதற்கு மரணபயம் தவிர, வேறு எண்ணங்களும் இருக்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது” என்று ஆரம்பித்தார்.

    தொடர்ந்து அமெரிக்கத் தமிழர்களுக்கு பல சலுகைகளை அறிவித்தார். அமெரிக்காவில் சம்பாதிப்பதற்கு ஓப்பான சம்பளம், பதினைந்து நாள் வரை ஈடாகாத் தரப் போவதாகக் கூறினார்.

    “ஒரு நாள் சம்பளத்திற்கு கூட சபலப்படுபவர்கள் அவர்கள். தாங்க்ஸ்கிவிங் போன்ற தினங்களுக்காகக் காத்திருந்து வருகிறார்கள். தேர்தல் சமயத்தில் வருபவர்கள், சகாய விலையில் தாசில்தாரை (உரிய முறையில்) கவனித்துக் கையெழுத்து வாங்கி, ‘விடுமுறைத் தேர்தல்’ என்னும் படிவத்தை தகுந்த அன்பளிப்புடன் அதிமுக அலுவலகத்தில் சமர்ப்பித்தால், பத்து வருடங்களுக்குள், அவர்களின் விடுமுறை கால ஊதியம் திரும்பத் தரப்படும்” என்றார்.

    இதைக் கேள்விப் பட்டவுடன் ‘முரசொலி’ நிருபர்கள் கலைஞர் கருணாநிதியிடம் விரைந்தார்கள். நாளைய சன் டீவியில் தன்னுடைய அறிக்கை வெளியாகும் என்று கலைஞர் சொன்னதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    உங்களுக்காக நாளைய கலைஞரின் இன்றைய அறிக்கை:

    “நான் என் வக்கீல்க்களைத் தொடர்பு கொண்டுள்ளேன்.அம்மையார் சோனியா காந்தியுடன் அளவளாவினேன். கூட்டணிக் கட்சிகளுடனும் சர்வ கட்சி மாநாடு போடவுள்ளேன். இந்த சலுகையை வளைகுடா நாட்டில் இருக்கும் தமிழருக்கும் கொடுக்காதது காலங்காலமாகத் தாழ்த்தப்பட்டோரை வஞ்சிப்பதைக் காட்டுவதாக இராமதாஸ் என்னுடன் தொலைபேசினார். என்னைப் பொறுத்தவரை கடாரம் சென்ற தமிழ்க்குடிமகனும் ஒன்றுதான். கலிங்கம் சென்று உழைக்கும் தேசியத் தமிழனும் ஒன்றுதான். அனைவருக்கும் இந்த சலுகை வேண்டுமென்று கொல்கதா முதல் க்யூபெக் வரைத் தமிழர்கள் போராடுவதாக எனக்குத் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.

    நான் ஆட்சிக்கு வந்தால் ‘விடுமுறை சந்தை’ என்பதை புதிய நிகழ்ச்சியாக சன் டிவியில்ல் அறிமுகப்படுத்துவேன்.” என்று முடித்துக் கொண்டார்.

    சிகாகோவில் இருக்கும் வைகோ, அதிமுக-வின் புதுமையான அறிவிப்பை வரவேற்பதாக டெலக்ஸ் அனுப்பியுள்ளார்.

    தொடர்புள்ள நிஜ அறிவிப்பு: சென்னைஆன்லைன்


    |

    கிராம்மி விருதுகள் 2006

    1. (பீட்டில்ஸ் புகழ்) பால் மெக்கார்ட்னி புத்தம்புதிய ‘Chaos And Creation In The Backyard’ தவிர தங்களுடைய குத்து ஸ்பெஷல் ‘Helter Skelter’ போட்டுத் தாக்கினார். வயதானாலும் சூப்பர் ஸ்டாரும் மெக்கார்ட்னியும் கலக்குறாங்கப்பா!

    2. கற்பனைக்கு இடம் தராத ‘Desperate Housewives’ நட்சத்திரம், முன்னாள் சூப்பர் மேனின் காதலி டெரி ஹாட்சரின் ஆடை சலிப்பைத் தந்தது. ‘வானிடி ஃபேரி’ன் அட்டைப்படம் போல் கற்பனைக்கு விடுவது உகந்தது. (அல்லது பரி-க்கு சுட்டி கொடுக்க வேண்டுமானால், கற்பனைகளுக்கு உகந்தன 🙂


    3. யூ-2வுக்குக் கொடுக்கும் விருதுகள் போதுமப்பா… கொஞ்சம் மிச்ச மீதிப் பேர்களையும் கவனியுங்க கிராம்மி :-((((((

    4. குலுங்கிக் குலுங்கிப் பாடாமல், இறைவனைத் துதித்தார் மரியா கரே. தெய்வீக அனுபவம். இறைவி தரிசனைத்தைக் கொடுக்காமல் சம்ர்த்தாகப் பாடினார் க்ரிஸ்டினா அகிலெரா.

    5. காமெடி நாய்கர் டேவ் சேப்பல் வந்தார். அமரிக்கையாக ரெண்டே ரெண்டு வார்த்தை சிரிக்க வைத்துவிட்டு ஓடிவிட்டார். அவர் இல்லாமல் காமெடி செண்ட்ரல் கன்னலே சகிக்கலே! சீக்கிரம் திரும்பு வந்து உய்வியுங்கள் சேப்பல்காரூ.

    மிச்ச மீதி உருப்படியான விவரங்களுக்கு கிராம்மி என்று யாஹூவிலோ அல்லது யாஹூ வலையகத்திலோ தேடித் தெளியவும்.

    முன்குறிப்பு: இந்தப் பதிவில் கூகிள் எங்கும் சுட்டப்படவில்லை \:D/ யாஹூ என்னும் தாழ்த்தப்பட்ட நிரலியை இட ஒதுக்கீடாக உபயோகித்திருக்கிறேன்.