Category Archives: Uncategorized

Author & the Novel

புகழ் பெற்ற நாவல்களின் தொடக்கங்கள்.

என்ன கதை, யார் எழுதியது என்று தெரிகிறதா?

1. “தோஸ்த், ஆஜ் நெட் பிராக்டிஸ் ஹை. ஜரூர் ஆஜாநா”, என்று நாஸிர் அலிகான் சொல்லிட்டுப் போனான். அந்த ஆண்டு கல்லூரி கிரிக்கெட் கோஷ்டிக்கு நாஸிர் அலிகானைத் தலைவனாக அறிவித்திருந்தார்கள். நாஸிர் அலிகான் ஒரு மொயினுத்தவுலா கோப்பை ஆட்டத்தில் பழம்பெரும் ஆட்டக்காரர்கள் மத்தியில் இடம்பெற்றுப் பத்தாவது நபராக மட்டையடிக்கச் சென்றாலும் பத்து நிமிஷத்திற்குள் முப்பத்தி மூன்று ஓட்டங்கள் எடுத்து இறுதியில் ஆட்டமிழக்காமல் இருந்தான். நானூறு மாணவர்கள் படித்து வந்த அந்தக் கல்லூரியில் நாற்பது பேர் தைரியமாக கிரிக்கெட் ஆடவருவார்கள். அந்த ஆண்டு என்றில்லை, இன்னும் பல ஆண்டுகளுக்கு நாஸிர் அலிகான் காப்டனாக இருப்பான் என்பதில் ஆருக்கும் சந்தேகம் கிடையாது. மாலையில் ஆட்டம் பழகிக் கொள்ளும் போதுகூட சில்க் ஷர்ட்டும் ஃப்ளானல் பாண்ட்டுமாக வரும் நாஸிர் அலிகான் இதற்கு முன்னர் சந்திரசேகரனுடைய ஆட்டத்தைப் பற்றி ஒன்றும் தெரியச் சந்தர்ப்பமில்லாதிருந்தும் அன்று அவனைக் கல்லூரி நெட் ப்ராக்டிஸுக்குக் கூப்பிட்டிருக்கிறான். நாஸிர் அலிகான் அவனிடம் சொல்லிவிட்டுப் போனபின் சந்திரசேகரன் சைக்கிளின் சக்கரங்களை அழுத்திப் பார்த்தான். நல்ல வேளையாக இரு சக்கரங்களிலும் காற்று இருந்தது.

2. அது வேறு உலகம். பூமிப் பரப்பில் இன்னொரு கிரகம். மேகங்களால் நிராகரிக்கப்பட்டு இயற்கையால் சபிக்கப்பட்டு கடக்கும்போது தேவதைகள் கண்மூடிக் கொள்ளும் வறண்ட நிலம்.

கருவேலமரம், பொத்தக்கள்ளி, கிலுவை, கற்றாழை, சப்பாத்திக் கள்ளி, இலந்தை, நெருஞ்சி, சில்லி, பிரண்டை, இண்டஞ்செடி, சூராள்கொடி முதலான வானத்துக்குக் கோரிக்கை வைக்காத தாவரங்களும் –

நரி, ஓணான், அரணை, ஓந்தி, பூரான், பாம்பு முதலான விலங்கினங்களும் – கழுகு, பருந்து, காடை, கௌதாரி, சிட்டு, உள்ளான், வல்லூறு முதலிய பறவை இனங்களும் மற்றும் மனிதர்களும் வாழும் மண் மண்டலம்.

கரும்பாறையிலும் – சரளையிலும் – சுக்கான் கல்லிலும் முள் மண்டிய நிலங்களிலும் தொலைந்துபோன வாழ்வை மீட்டெடுக்கும் போராட்டம்தான் அவர்களின் பொழப்பு”.

3. வெளிச்சம் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடும்.

வாசலைப் பார்த்தார் ஆனந்தரங்கர். இருட்டைப் பிசைந்து நீர் ஊற்றி மெழுகியது போல கருத்திருந்தது வாசல். உள்ளே வலப்பக்கத்து பூஜை அறையிலிருந்து, மெல்லிசாக வெள்ளை மஸ்லின் துணி விரித்தாற் போல, சாம்பிராணிப் புகை பரவிக் கூடத்துக்கு வந்த்து. அத்துடன் முத்துக்கொட்டை, வேம்பு, எண்ணெய், கடலை எண்ணெய், நெய் கலந்து எரித்த விளக்கிலிருந்து எழுந்த நெய் மணம் சுகமாய்ப் பரவியது. பிரான்சிலிருந்து தருவிக்கப்பட்ட ஆளுயரக் கடிகாரத்தில் மணி நாலு ஐம்பது ஆகியிருந்தது. ஆனந்தரங்கர் ஸ்நானம் முடித்து பூஜை புனஸ்கார நியமங்களையும் முடித்து வர்த்தகர்களுக்குரிய நீண்ட வெள்ளை அங்கியும், இடைக் கச்சையில் செருகப்பட்ட வாளும், தலைப்பாகையும் அணிந்து கூடத்து ஊஞ்சலின் மேல் மான் தோல் விரித்து அமர்ந்திருந்தார்.

மங்கைத்தாயம்மாள், பின்கட்டையும் கூடத்தையும் இணைக்கும் கதவை ஒட்டி நின்று தலையை நீட்டிக் கணவரை அவதானித்தாள். அவள் அதற்குள் ஸ்நானம் முடித்திருந்ததைத் தோளில் புரண்டு விழுந்த ஈரக் கூந்தலும், அதன் காரணமாய் நனைந்திருந்த ரவிக்கையும் உணர்த்துமாயிருந்தன. அக்னி நாக்கு மாதிரி நெற்றியில் மெல்லிய சூர்ணம் இட்டிருந்தாள். மாலை ஆகாச நிறத்தில் ரவிக்கையும் அணிந்திருந்தாள். தொண்டையைச் செருமிக்கொண்டு அம்மாள் சொன்னாள்.

“புது கவர்னரை வரவேற்கப் போக வேணும் என்று வார்த்தை வந்ததே!”

4. இந்தச் சின்ன ‘டாய்லெட்டில்’ உட்காரும் போதுதான் இந்த வீடு பெரிதாகத் தெரிகிறது.

ஒன்றையொன்றுடன் ஒப்பிடும் வகையில்தான், குளிக்கும் தொட்டியிலிருந்து, விஞ்ஞான உண்மை, நிர்வாணமாக வெளிவந்திருக்கிறது.

மரத்தடியில் இளைப்பாறும்போது, அதுவே ஆப்பிளாக விழுந்து, தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறது. மரத்தடியில், தத்துவ த்ரிசனமும் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால்,

இது போன்ற சின்ன டாய்லெட்டிலிருந்தவாறு, யாரேனும் ஒரு புதிய சிந்தனையை உலகத்தோடு பகிர்ந்து கொண்டதாக சரித்திரம் உண்டோ?

‘க்ளாஸ்டர் போஃபியா’ ஏற்படமாலிருந்தால் சரிதான். நான் வார்ஸாவுக்கு வந்த புதிதில், வீட்டைப் பற்றிய ஏமாற்றம் என் முகத்தில் தெரிந்தபோது, ‘சோஷல்பிரோ’ விலிருந்த அந்த அழகான பெண், முகத்தை சற்று சாய்த்து, புன்னகை ஒளிர சொன்னாள் – ‘விசிட்டிங் ப்ரொஃபஸர்’களுக்கு, அவர்கள் கிழக்கோ, மேற்கோ, எங்கிருந்து ‘விசிட்’ செய்தாலும் சரி, வெளி நாட்டினர்களுக்கு கொடுக்கப்படும் வீடுகளில், என் வீடுதான் பெரிது என்று.

மேஜையின் இழுப்பறையிலிருந்து ஓர் ஆப்பிளை எடுத்துக் கடித்துக் கொண்டு அவள் இன்னுமொன்றும் சொன்னாள். ‘இது உங்களுக்குச் சிறிய வீடாகத் தோன்றினால் வார்ஸா பல்கலைக்கழகப் போலிஷ் ப்ரொஃபஸர்க்ளுடைய வீடுகளைப் போய்ப் பாருங்கள். உங்கள் வீடு, எவ்வளவு பெரிதென்று உங்களுக்குத் தெரியும்!’

5. குளிக்கும்போது எல்லோரும் பார்க்கிறார்கள்.

ராணி சொன்னாள்.

ராஜா பல்லாங்குழிப் பலகையில் சோழிகளை நிறைத்தபடி நிமிர்ந்து பார்த்தார்.

அழகான ராணி. இளவயசு கடந்து கொண்டிருக்கிறது. முலைகள் இறுக்கம் தளர்ந்து தொங்க ஆரம்பித்து விட்டன. அரைக்கட்டு பெருத்துக் கொண்டு வருகிறது.

ஆனாலும் ராணி. ஐம்பதுகளின் அந்தப் பக்கம் இருக்கும் தன்னோடு ஒப்பிட்டால் இன்னும் சின்னஞ் சிறிசு தான்.

அவள் குளிக்கும்போது ஏன் பார்க்க வேண்டும் ?

தான் இதுவரை அவளைக் குளியலறையில் கதவைத் திறந்து போய் ஒரு தடவை கூடப் பார்த்தது இல்லை என்பது நினைவுக்கு வரச் சோழிகளைத் தரையில் பரத்தி வைத்தார் ராஜா.

அதில் ஒன்று உருண்டு வாசலுக்கு ஓட ஆரம்பித்தது.

முன்னோர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். சோழிக்குள் அவர்களில் யாரோதான்.

ராஜாவுக்கு இந்தக் குறுக்கீடு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அந்தரங்கமாகப் புருஷனும் பெண்சாதியும் கதைத்துக் கொண்டிருக்கும்போது முன்னோர்கள், பின்னோர்கள், அரண்மனை ஜோசியன், மிளகாய்மண்டிக்காரன், சேடிப்பெண் யாரும் வருவது முறையானதில்லை.

பின்னோர்கள் சொன்னால் கேட்பார்கள். உடனே புரிந்து கொண்டு அவர்கள் காலத்துக்குத் திரும்பிப் போய்விடுவார்கள்.

முன்னோர்கள் விஷயத்தில் இது எடுபடாது. அவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பவர்கள். எந்த நிமிடமும் எங்கேயும் நுழைந்து அதிகாரமாக ஆலோசனை சொல்லி, பயமுறுத்தி, நம்பிக்கை அளித்து வழி நடத்திப் போக வேண்டும் என்று நினைப்பவர்கள்.

ராணி குளிப்பதை யாரோ பார்த்தாலும் அவர்களுக்கு ஒன்றும் இல்லை. ஏதோ தலை போகிற விஷயம் இருப்பதாக வெள்ளைச் சோழியில் புகுந்துகொண்டு அறிவிக்கிறார்கள்.

கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டமிடவும்.


| |

Cartoons on Middle-East Situation – Israel vs Hezbolla in Lebanon

கார்ட்டூன்களுக்கு விளக்கம் எழுதுவது நல்ல கவிதைகளுக்கு பதவுரை எழுதுவது ஒப்பானது. கவிஞன் சொல்ல நினைத்ததை தவறாகப் புரிந்து கொள்வதால் படைப்பாளிக்கும், தனக்குப் புரிந்தற்கேற்ப வளைத்துக் கொள்வதால் வாசகருக்கும், அனுபவிக்க வேண்டிய காபியின் தன்மையை எழுத்தில் கொணருவதால் ஏற்படும் சிதைவால் பொறிப்புரையாளருக்கும் முறையே கோபமும், ஆதங்கமும், அயர்ச்சியும் தரவல்லது. இருந்தாலும், ‘தமிழ்ப்பதிவுகள்’ என்னும் இடுகுறிப்பெயருக்கேற்ப, சில உப-தலைப்புகள்.

  • அகிலமெங்கும் சுதந்திரக் காற்று வீசச் செய்வதுதான் என் தாரக மந்திரம் என்றவர், பாலஸ்தீனம், லெபனான் போன்ற தேர்தல் நடத்தும் நாடுகளையும் பாகிஸ்தான், ஜோர்டான் போன்ற சர்வாதிகார தேசங்களையும் பார்த்து குழம்புகிறார்.

  • ரூபிக் க்யூப் தெரியுமா?

  • ஹெஸ்பொலாவின் நிலை

  • லெபனானின் நிலை

  • இஸ்ரேலின் நிலை.

  • நாலு அமெரிக்கர்களுக்கு ஆபத்து என்றால் அணுகுண்டும் போடலாம். (அமெரிக்காவின் நிலை)

  • நிஜ நிலை.

  • ஈரானின் நிலை

  • ஐ.நா.வின் நிலை.

  • சன்னி நாடுகளின் நிலை

  • அடுத்த தலைமுறையின் நிலை

  • இரண்டு கழுகுகள் யார் என்பதுதான் எல்லா விவாதங்களின் மையபுள்ளி (அல் க்வெய்தாவும் ஈரானும் (அல்லது) அமெரிக்காவும் இங்கிலாந்தும்)

  • இது ஒரு சக்கரம் அய்யா… இதைத் தடுக்க முடியாதய்யா!? பூக்களைப் பறிக்காதீர்கள்.


    | |

  • Pros & Cons – Politics behind the Panchayath Board Conversions

    Dinamalar.com

    கட்சி சார்ந்த தேர்தல் “பேரூராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகளில் “புரமோஷன்’ பின்னணி அம்பலம்” – தினமலர்

    சமீபத்தில் மாற்றப்பட்ட பேரூராட்சிகள் மற்றும் மூன்றாம் நிலை நகராட்சிகளுக்கும் கட்சி அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட் டுள்ளது. இதன்மூலம் கிராம பஞ்சாயத்துகளை பேரூராட்சிகளாக மீண்டும் மாற்றியதற் கான காரணம் வெளிப் பட்டுள்ளது.

    தமிழகத்தில் 611 பேரூராட்சிகள் இருந்தன (டவுன் பஞ்சாயத்துகள்). பெரும்பாலான மாநிலங்களில் பேரூராட்சிகளே கிடையாது. மத்திய அரசு கிராம மேம்பாட் டுக்காக வழங்கும் பல்வேறு திட்டங்களுக்கான பயன்கள் தமிழகத்தில் உள்ள பேரூராட் சிகளுக்கு கிடைக்காமல் இருந் தன. இதனால் மத்திய அரசின் திட்டங்கள் மூலம் நிதியை பெறுவதற்காக முந்தைய அ.தி.மு.க., அரசு 50 பேரூராட்சிகளை மூன்றாம் நிலை நகராட்சிகளாகவும், 561 பேரூராட்சிகளை, சிறப்பு ஊராட்சிகளாகவும் மாற்றி உத்தரவிட்டது. எனினும் பேரூராட்சிகளில் முன்பு இருந்த அதே நிர்வாக முறை மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள் முறை மாற்றப்படவில்லை.

    தற்போது தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்த பின், இம்மாத துவக்கத்தில் ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டது. இதன்மூலம் 561 சிறப்பு ஊராட்சிகளையும் மீண்டும் பேரூராட்சிகளாக மாற்றி உத்தரவிடப்பட்டது. இவ்வாறு மாற்றியதற்கு காரணம், விரைவில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதற்காக தான் என்று பேசப்பட்டது. இதுதவிர, மாநகராட்சிகளில் மேயர் மற்றும் நகராட்சிகளில் தலைவர்களை நேரடியாக தேர்வு செய்ய தேர்தல் நடத்துவதற்கு பதிலாக கவுன்சிலர்களே தேர்ந் தெடுக்கும் வகையில் மற்றொரு அவசரச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், தற்போது மாநில தேர்தல் ஆணையம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், டவுன் பஞ்சாயத்துகள், மூன்றாம் நிலை நகராட்சிகள் மற்றும் இதர நகராட்சிகளுக்கான கவுன்சிலர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் தேர்தல் கட்சி அடிப்படையில் நடத்தப்படுமென தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இதற்கு முன் 2001ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போதும் பேரூராட்சிகளுக்கு கட்சி அடிப்படையில் தான் தேர்தல் நடத்தப்பட்டது.

    ஆனால், அதன்பின் 2004ம் ஆண்டு தான் பேரூராட்சிகள் சிறப்பு ஊராட்சிகளாக மாற் றப்பட்டன. எனவே இந்த ஆண்டு அக்டோபரில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலின் போது கட்சி அடிப்படையில் இந்த சிறப்பு ஊராட்சிகளில் வேட்பாளர்களை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    ஊராட்சிகளுக்கு மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு கட்சி அடிப்படையில் இல்லாமல் கட்சி சின்னம் இல்லாமல் சுயேச்சையாக தான் போட்டியிட முடியும். அவ்வாறு சிறப்பு ஊராட்சிகளில் சுயேச்சைகளாக கட்சியினர் போட்டியிட்டால், ஒரே கட்சியினருக் குள்ளும், கூட்டணி கட்சியினருக்கு இடையேயும் பல்வேறு பகுதிகளில் மோதல் உருவாகும் என கருதப்பட்டது. அதுமட்டுமன்றி, ஆளும் கூட்டணியில் அதிக கட்சிகள் இருப்பதால் தமிழகத்தில் உள்ள ஆறு மாநகராட்சிகள் மற்றும் 150 நகராட்சி, மூன்றாம் நிலை நகராட்சிகளில் மட்டும் தான் பொறுப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும்.

    இதனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே உள்ளாட்சிகளை பிரித்துக் கொள்வதில் அதிருப்திகள் உருவாகும். மேலும் பல பகுதிகளில் பதவிக்காக காத்திருக்கும் கட்சியினரை திருப்திபடுத்த முடியாமல் போகும்.

    எனவே தான் 561 சிறப்பு ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்றி, அங்கு கட்சி அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலும் நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இத்துடன் உள்ளாட்சித் தேர்தலுக்கு ஓட்டுச்சாவடிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான அறிவுரைகள் கொண்ட கையேடும் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஓட்டுச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம், பஞ்சாயத்து யூனியன் அலுவலகம், கிராம பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் தேர்தல் அதிகாரி முக்கியமானதாக கருதும் இடங்களில் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலின் இரண்டு பிரதிகள் அரசியல் கட்சிகளுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

    ஒவ்வொரு வார்டுக்கும் நூறு பிரதிகளை அச்சிடுமாறு மாநில தேர்தல் கமிஷனின் செயலர் தங்கசாமி பிறப் பித்துள்ள அரசாணையில் தெரிவித்துள்ளார்.

    Chidambaram Temple & Thiruvasagam – Coverage by BBC

    BBCTamil.com

    சிதம்பரம் ஆலயத்தில் தமிழில் பாட தடை குறித்த சர்ச்சை

    தமிழ் நாட்டில் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பொற்சபையிலிருந்து தமிழ் பக்தி பாடல்களான, தேவாரம் , திருவாசகம் போன்றவற்றை பக்தர்கள் பாட, கோவிலை நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்கள் அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு, இரு தரப்புகளும் கலந்தோலோசித்து ஒரு தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும் என்று பொது தீட்சிதர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான ஏ.சம்பந்தம் தெரிவித்துள்ளார்.

    தமிழோசைக்கு அளித்த ஒரு பேட்டியில், சம்பந்தம் அவர்கள் இந்த கோவிலில் 1987ம் ஆண்டில், தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, தீட்சிதர்களே ஆறு கால பூஜைகளின் போது , வேத மந்திரங்களுடன் தேவார திருவாசகப் பாடல்களை பாடிவருவதாகக் கூறினார். ஆனால் இந்த முறை , பக்தர்களும் ஓதுவார்களும் பொற்சபையிலிருந்து தாங்களே இந்த பாடல்களை பாடி இறைவனை வழிபட அனுமதிக்கப்படவேண்டும் என்று கோருவதாலேயே, இந்தப் பிரச்சினை எழுந்துள்ளதாக அவர் கூறினார்.

    இது குறித்து தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அதிகாரி இரண்டாண்டுகளுக்கு முன்னரே அளித்த உத்தரவில், தீட்சிதர்கள் பொற்சபையிலிருந்து தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடலாம் என்றும் மற்றவர்கள் பொற்சபையின் முன்னுள்ள பிரகாரத்திலிருந்து அந்த பாடல்களை பாடலாம் என்றும் கூறப்பட்டிருப்பதாகவும் கூறிய சம்பந்தம், இந்த உத்தரவைத் தாண்டி புதிய முடிவு எடுக்கப்படுமானால் அதன் சட்டபூர்வ தன்மை குறித்து நீதி மன்றங்கள்தான் முடிவு எடுக்க முடியும் என்றார்.

    TV Serials should be Censored – Ramadoss

    Webulagam : TV Serials also forward the Sencor Board-Ramadoss

    டிவி தொடர்களையும் தணிக்கை செய்ய வேண்டும்-ராமதாஸ்!

  • ஆரம்பக் கல்வி தரமாக இருக்க பள்ளி கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
  • ஆரம்ப கல்விக்கு என்று தனி அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும்.
  • அனைத்துத் தனியார் பள்ளிகளிலும், ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அந்த மாணவர்களிடம் இருந்து ஒரு ரூபாய் கூட கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
  • விழுப்புரம், சேலம், கோவை, வேலீர் ஆகிய மாவட்டங்களையும் இரண்டாக பிரிக்க வேண்டும். தற்போதுள்ள 31 மாவட்டங்களை 39 மாவட்டங்களாக உயர்த்த வேண்டும்.
  • பொது இடங்களில் அரசியல் உள்ளிட்ட சுவர் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
  • சினிமாவில் பெயர் மட்டும் தமிழில் இருந்தால் போதாது. படம் முழுவதும் ஆங்கில கலப்பு இல்லாமல் இருக்க வேண்டும். தமிழ் பெயருக்கு மட்டும் மக்கள் வரிப்பணத்தை பரிசாக கொடுப்பதை ஏற்க முடியாது.
  • அண்ணி உறவை கொச்சைப்படுத்தல் போன்ற பண்பாட்டு சீரழிவு காட்சிகள் சினிமாவில் இடம்பெறுகிறது. டிவி தொடர்களிலும் கலாச்சார சீரழிவுகளே அதிகமாக உள்ளன. எனவே டிவி தொடர்களையும் தணிக்கை செய்ய வேண்டும்.
  • Continuing School Mishaps and Kumbakonam Inaction

    Dinamani.com – Editorial Page

    தரமான, பாதுகாப்பான கல்வி :: எஸ்.எஸ். இராஜகோபாலன்

    ஜூலை 16 – தமிழகப் பள்ளிக் குழந்தைகள் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் நாள். இரண்டாண்டுகட்கு முன்னர் இதேநாளில்தான், கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி வளாகத்தில் தீயில் வெந்து கருகி 94 குழந்தைகள் மாண்டனர். கல்வி கற்க வேண்டும் என்ற உந்துதலில் அக் குழந்தைகள் பள்ளி நாடி தொலைதூரத்தினின்று வந்தனர். சமுதாயத்தின் அடித்தள மக்களைச் சார்ந்தவர்களாகவே அக் குழந்தைகள் இருந்தனர்.

    ஏன் அவர்கள் கும்பகோணம் பள்ளியை நாடினர் என்ற வினாவிற்கு விடை காண முற்படாது, பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த ஓலை வேய்ந்த கூரையே விபத்திற்குக் காரணம்

    என்று மக்கள் கவனம் திசைதிருப்பப்பட்டது.

    அனைத்துப் பள்ளிகளிலும் ஓலை வேய்ந்த கூரைகள் நீக்கப்பட வேண்டுமென்று முதலமைச்சர் ஆணையிட 24 மணி நேரத்தில் எல்லாப் பள்ளிகளிலும் ஓலைக்கூரைகள் நீக்கப்பட்டன. மாற்றுக் கூரைகள் பல பள்ளிகளில் போடப்படாத நிலையில், மாணவர் திறந்த வெளியில் வெய்யிலையும் மழையையும் பொருள்படுத்தாது கற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பல அரசுப் பள்ளிகளில் மாணவரிடமிருந்தே கட்டாய வசூல் செய்யப்பட்டு மாற்றுக் கூரைகள் போடப்பட்டன. அரசு எவ்வித நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.

    தீ விபத்திற்குக் காரணத்தைக் கண்டு தவிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய அறிவுரை வழங்க நீதிபதி சம்பத் தலைமையில் ஒரு நபர் குழு நியமிக்கப்பட்டது. மூன்று மாதத்தில் அறிக்கை கொடுக்க வேண்டுமென்றிருந்தும், அவர் விபத்து நடந்து ஓராண்டு முடிவதற்கு முதல் வாரத்திலேயே அறிக்கை கொடுத்தார். பட்டிதொட்டியெல்லாம் சென்று பள்ளிகளைப் பார்வையிட்டார்.

    மாற்றங்களைப் பெரும் பொருள்செலவில் செய்ய பள்ளிகள் நிர்பந்திக்கப்பட்டனர். ஓராண்டாகியும் அவர் அறிக்கை வெளியிடப்படவில்லை. அறிக்கையில் கூறப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி யாரும் அறிய மாட்டார். எனவே சம்பத் கமிஷன் சம்பிரதாயத்திற்கு அமைக்கப்பட்ட கண் துடைப்பு பணியே என்று அறியலாம். குழந்தைகள் பாதுகாப்பு மீது உண்மையான அக்கறை இருந்தால், விரைவாக அறிக்கை பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.

    கடந்த முப்பதாண்டுகாலமாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் இலவச, தரமான கல்வி மறுப்பே கும்பகோணம் விபத்திற்குக் காரணம். விபத்தில் இறந்த 13 குழந்தைகள் வாழ்ந்த நத்தம் கிராமத்தில் பள்ளி கிடையாது. கும்பகோணம் அங்கிருந்து ஏறக்குறைய 7 கி.மீ. எனவே 1 கி.மீ தூரத்தில் பள்ளி அமைத்திருக்கிறோம் என்ற அரசின் அறிவிப்புகள் உண்மையல்ல என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. ஒரு கட்டடத்தில் ஒரு பள்ளிதான் இருக்க வேண்டும். கிருஷ்ணா பள்ளி வளாகத்தில் மூன்று பள்ளிகள் செயல்பட்டன. ஒன்று அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, மற்றொன்று ஆங்கில வழிப் பள்ளி. அரசுப்பள்ளிகளும், அரசு உதவி பெறும் பள்ளிகளும் போதுமான ஆசிரியர்களின்றி இயங்குவதால், பெற்றோர் கட்டணப் பள்ளிகளை நாடும் கட்டாயம் ஏற்பட்டதன் விளைவே கிருஷ்ணா பள்ளியைப் பெற்றோர் நாடக் காரணம். மேலும் ஆங்கில வழிக் கல்வி உயர்தரமானது என்ற மாயை தமிழகத்தில் பல ஆண்டுகளாக வளர்த்து விடப்பட்டுள்ளது. தரமான இலவசக்கல்வியை வீட்டிற்கருகில் அரசு அளித்திருந்தால், குழந்தைகள் கிருஷ்ணா பள்ளியை நாடியிருக்க மாட்டார்கள். எனவே விபத்திற்கு ஒட்டுமொத்த பொறுப்பேற்க வேண்டியது அரசே ஆகும்.

    ஜூலை 16 ஆம் நாளை “”குழந்தைகள் பாதுகாப்பு நாள்” என்று அறிவிக்கவும், இறந்துபட்ட குழந்தைகளின் நினைவை நிறுத்த ஒரு நினைவுத்தூண் நிறுவ வேண்டுமென்றும்” விடப்பட்ட வேண்டுகோள்களை அரசு நிறைவேற்றவில்லை. இறந்து பட்டவர் ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்தவர் என்பது காரணமோ!

    கும்பகோணம் விபத்து தரும் முதல் பாடம் அரசு தரமான கல்வியை ஒவ்வொரு குழந்தைக்கும் தர வேண்டுமென்பதே. வீட்டிற்கருகில் பள்ளிகள் இருக்க வேண்டும். இம்மாதம் ஒரே வாரத்தில் ஆறு விபத்துகளில் பள்ளிக் குழந்தைகள் இறந்திருக்கின்றனர். பள்ளி தண்ணீர்த் தொட்டியில் விழுந்தும், மின்சாரம் தாக்கியும் குழந்தைகள் பள்ளிகளிலேயே இறந்துள்ளதும் வரலாறு. பள்ளிகள் பாதுகாப்பான இடங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    உயர்கல்வியும் தமிழ்வழியில் கற்பிக்க வகை செய்வது ஆங்கில வழிக் கல்வியின் மீதுள்ள மோகத்தைக் குறைக்கும். கலை அறிவியல் கல்லூரிகளில் முன்னர் வழங்கி வந்த தமிழ்வழி வகுப்புகளைப் புதுப்பித்தும், விரிவுபடுத்தியும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேபோல, அரசின் பொறுப்பிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரி, ஒரு மருத்துவக் கல்லூரியிலும் தமிழ்வழி வகுப்புகள் பரீட்சார்த்தமாகத் தொடங்க வேண்டும். தமிழ் வழியில் பயிலும் பெரும்பான்மையான மாணவர் நம்பிக்கையோடு உயர் கல்வி தொடர உதவுவதுடன், தமிழ் மொழியும் அறிவை அள்ளித் தரும் மொழியாக உருவாகும்.

    தமிழகத்தில் தற்போதைய அரசு கல்வித்துறையில் வரவேற்கத்தக்க சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. நான்கு கல்வி வாரியங்களை இணைத்து ஒரே வாரியம் அமைத்து, பொதுவான கலைத்திட்டம், தேர்வு முறை கொண்டு வர முடிவு செய்திருப்பது கல்வியாளர்கள் நெடுநாள்களாகக் கோரி வந்த ஒரு மாற்றம்.

    அதுபோலவே, தமிழினைக் கட்டாய முதன்மொழியாக அறிவித்ததும், பள்ளிகள் நன்கொடைகளைத் தடை செய்ததும், ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுப்பதும், தொகுப்பூதிய ஆசிரியர்களை முறைப்படுத்தியதும் நல்ல கல்வி அளிப்பதில் அரசின் அக்கறையை எடுத்துக்காட்டுகின்றன. இதுபோலவே பள்ளிக்கல்வியில் மேலும் பல சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

    அரசுப் பள்ளிகளின் நம்பிக்கையைப் பெறும்வகையில் அவற்றின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும். கும்பகோணம் பள்ளிக் குழந்தைகளின் உயிர்த் தியாகம் நல்ல கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்க வழி செய்வதன் மூலமே ஈடுகட்ட முடியும்.

    One Day Strike by Bank Employees

    Dinamani.com – Headlines Page

    வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று வேலை நிறுத்தம்

    நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

    அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவை இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

    வங்கிப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் கொள்கையை எதிர்த்தும், வங்கிகளில் ஒரு லட்சம் காலி இடங்களில் ஊழியர்களை நியமிக்கக் கோரியும் இந்த வேலை நிறுத்தம் நடத்தப்படுவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது.

    வங்கிகளின் பணிகளை தனியார் ஏஜென்சியிடம் ஒப்படைக்க ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வங்கிக் கணக்கைத் தொடங்குவது, பணத்தை வங்கியில் செலுத்துவது, பணத்தை எடுப்பது, டிராப்ட் தருவது, கடன் வழங்குவது போன்ற பணிகளை வாடிக்கையாளர்களுக்காக தனியார் ஏஜென்சிகளே இனி மேற்கொள்ளும்.

    இது வங்கிகளைத் தனியார் மயமாக்குவதற்கு ஒப்பாகும். நிறுவனங்கள் மற்றும் அரசின் காசோலைகளை பணமாக மாற்றும் பணியை ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றுமுள்ள பொதுத்துறை வங்கிகள் செய்து வருகின்றன. இனிமேல் நேஷனல் பேமன்ட் கார்ப்பரேஷன் என்ற தனியார் கம்பெனி இந்த பணியைச் செய்யும். இதனால் வங்கிகளில் பணியிடங்கள் குறையும் என்று இச்சங்கம் கூறியுள்ளது.

    Free Electricity will be provided for free Color TVs

    Dinamani.com – Headlines Page

    குடிசைகளில் அரசு டி.வி.க்கு இலவச மின்சாரம்

    இலவச கலர் டி.வி. பெறும் குடிசைவாசிகளுக்கு அதற்கான மின்சாரமும் இலவசமாக வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி அறிவித்தார்.

    பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய கலைராஜன் (அதிமுக), குடிசைகளில் ஒரு பல்புக்கு மட்டும் இலவச மின்சாரம் தரப்படுவதால், இலவச கலர் டி.வி.க்கும் மின்சாரத்தை அரசு இலவசமாகத் தருமா என்று கேட்டார்.

    அதற்குப் பதில் அளித்த அமைச்சர், குடிசைவாசிகளுக்கு இலவச கலர் டி.வி. தரும்போது, ஒரு பல்பு மற்றும் டி.வி.க்கு இலவசமாக மின்சாரம் தரப்படும் என்று கூறினார்.

    Name the Author & the Novel

    புகழ் பெற்ற நாவகளின் தொடக்கங்கள்.

    என்ன கதை, யார் எழுதியது என்று தெரிகிறதா?

    1. அதிகாலை முகுந்தன் கனவு கண்டான். மொத்தம் ஒரு ஓவர்தான் பாக்கியிருக்கிறது. எடுக்கவேண்டிய ரன்களோ பதினெட்டு. விக்கெட்டு ஒன்பது விழுந்து விட்டது. கடைசி ஓவர் போடப் போவது யார் என்று அவர்கள் யோசிக்கிறார்கள். திடீர் என்று பெவிலியனுக்குச் செய்தி போய் இம்ரான்கான் வருகிறான். எப்படி வாளாடி டீமில் இம்ரான்கான் வரமுடியும் என்று காப்டனைக் கேட்கிறான். அதற்கு அவன், அப்படித்தான் அது, இப்போது புதுசா ரூல் கொண்டு வந்திருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் கடைசி ஓவரில் போடலாம் என்று வந்திருக்கிறது என்கிறான்.

    2. ஒரு சாரை எறும்புகள் ஊரை விட்டு விலகிய பாதையில் அவசரமாகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நாகுவிற்கு பதினோறு வயது நடந்து கொண்டிருந்தது.

    தெருக்களிலும் வீட்டு உத்திரங்களிலும் வேம்பிலும் அலைந்து கொண்டிருந்த எறும்புகள் சில நாட்களாகவே ஊரை விலக்கிச் சென்று கொண்டிருந்தன. காலை நேரத்தில் அவை மண்சுவர்களை விட்டு மெதுவாகக் கீழிறங்கித் தலையைச் சிலுப்பியபடி தெருவின் நீண்ட தனிமையில் பயத்தோடு, கால்கள் பரபரக்க ஊர்ந்து செல்வதைப் பார்த்துக் கொண்டேயிருந்தா. அவன் வீட்டு வேம்படியில் இருந்த எறும்புகள் நேற்றோடு முற்றாக வெளியேறிப் போய்விடன. எறும்புகளின் சரசரப்பு ஓசையும் அற்றுப் போனபிறகு மரத்தில் காற்று துளிர்ப்பது கூட ஒடுங்கி விட்டது. இலைகள் தலைகவிழ்ந்தது போல நிசப்தித்துவிட்டன. எறும்புகள் எங்கே செல்கின்றன என்றே தெரியவில்லை.

    3. கணேசன் கண் விழித்ததும் அவன் முதலில் பார்த்த பொருள் ஒரு நட்சத்திரம். ஜன்னலுக்கு வெளியே வெகு தொலைவில் அற்புதமாய் மின்னிக் கொண்டிருக்கிற விஷயம்.

    எழுந்தவுடன் நட்சத்திரம் பார்ப்பது நல்லதா, கெடுதலா? உள்ளங்கையைப் பரக்கத் தேய்த்துப் பார்ப்பது தான் கணேசனுடைய தினசரி வழக்கம். அப்படி பார்க்காத நாளெல்லாம் சிரமப்படுத்தும் என்பது தீர்மானம். ஆனால், இன்றைக்கென்னவோ எழுந்தவுடன் முதலில் பார்த்த பொருள் நட்சத்திரம்தான்.

    புலருமுன் தெருவில் விளக்கணைத்து விட்டார்கள். அறைக்குள்ளே இருட்டு கனமாக அழுந்திக் கொண்டிருக்க நட்சத்திரம் சிரித்துக் கொண்டிருந்தது. வெகு தூரத்தில் சிவப்பாய், கனமாய், அழகாய் அந்தச் சுடர் மின்னிக் கொண்டிருந்தது. பிசுபிசுத்த இமைகளூடே ஒளிக்கதிரால் முத்தமிட்டது. இத்தனை அழகாய், அமைதியாய் சிரிக்கிற சுடர் கெடுதலைத் தருமா? கணேசன் விழிகளை அசைக்கிற பக்கமெல்லாம் அதுவும் நகர்ந்த்து. விழிகளைத் திறந்ததும் ஜன்னலுக்கப்பால் வெகு தொலைவில் போய் ஒட்டிக் கொண்டது.

    “இதென்ன விளையாட்டு உனக்கு. சாவித்திரி மாதிரி?”

    4. மெலிந்த மேகங்கள் தெருவிற்கு மேலே கடந்து போயின. அதற்கு எதிர்த்திசையில் கூட்டமாக விரைந்து பயணிப்பதாய் பிரமை கொடுத்த நட்சத்திரங்கள் நுட்பமாகத் துடித்தன. மண்ணிலிருந்து எதையோ கவர மாமரத்தின் புல்லுருவிக் கொடிகள் ஊசலாடித் தொங்கின. வேப்பம்பழத் தோல்களுக்குள்ளிருந்து வெளியேறியிருந்தன சிற்றெறும்புகள். வேம்பின் அடர்ந்த கிளைகளொன்றிலிருந்து பால் கசிகிறது கையறு நிலைக்கண்ணீர் போல. மரத்தின் இருட்டந்தரங்கத்தில், உச்சிப்பாதுகாப்பில் வழிகிறது. யாரும் அறிந்திருந்தால் அப்போதே அது மாரியம்மனாயிருக்கும். அடிமரத்தில் மஞ்சள் பாவாடை கட்டப்பெற்றிருக்கும். தொழ வந்திருக்கும் பெருங்கூட்டம். திண்ணைச் சுவருக்கும் ஓட்டிற்குமான இடைவெளியில் பெரியண்ணன் எப்போதோ கோந்து தயாரிப்பதற்காக, முருங்கைப் பிசினில் நீர் ஊற்றி ஊற வைத்திருந்த தகர டப்பாவிற்குள்ளிருந்து மீள முடியாமல் அமிழ்ந்தது பாச்சை. வேம்பையும் வீட்டுத் திண்ணை உத்தரத்தையும் பிணைந்திருந்த கம்பிக்கொடியில் உலர்ந்தது வேஷ்டி. தென்னங்கீற்றுகளில் நிழல்கள் வேஷ்டியில் விழுந்து விரல்களாக முறுக்கிக் கொள்கின்றன். பிசைந்து கொண்டு பிரிந்து கூடி நடுங்குகின்றன.

    திண்ணையில் படுத்திருந்த பெரியண்ணனின் கால்களை மடியில் வைத்து அம்மா தடவிக் கொடுத்தாள். பெரியண்ணன் பேச இயலாதிருந்தான். கூர்ந்தொளிந்து துலங்கியது பார்வை. தாவித்தாவி அலைக்கழித பார்வை அம்மாவின் முகத்தில் நிலைத்தது ஏக்கமாக. கசங்கிக் கிழிந்து தொய்ந்த தளிரைப் போல உடல் முழுதும் முற்றும் சோர்ந்திருந்தது. அக்கா, அவன் தாகத்திற்கு குளுகோஸ் கரைத்த சுடுநீரை ஸ்பூனல் புகட்டினாள்.

    5. எதைப் பார்த்தாலும் சிரிப்பு வருகிறது. கலியாணப் பந்தலைப் பார்த்தால் சிரிப்பு. மணமகள் தலைகுனிந்து நாணத்திலும் அடக்கத்திலும் முழுகிப் போய் உட்கார்ந்திருக்கிறாள். அதைப் பார்த்தால் சிரிப்பு. அகல மார்பும் இடைச்சரிவும் வழவழத் தோலுமாக, மணமகன் அக்னியில் நெய்யை வார்க்கிறான். அதைப் பார்த்தால் சிரிப்பு. இதைப் பார்த்துக் கொண்டிருக்கிற கிழவர்களையும் நடு வயதுக்காரர்களையும் பார்த்தால் சிரிப்பு. இத்தனை இரைச்சல்களையும் கவனிக்காமல், சீவாளியைக் குழந்தைக் கடியாக் கவ்விக் கொண்டு, ஆகாசத்திற்கும் பூமிக்குமாக நாயனத்தை வீசி வளைத்துக் கொண்டிருக்கிறாரே, அவரைப் பார்த்தால் சிரிப்பு. எதற்கு ‘உம்’மென்று இந்த முகம்! இந்தக் கன்ன உப்பல்! நாயன் துவாரங்களை இத்தனை கண்ணும் கருத்துமாகத் தடவி, எந்த ஸ்வர சுத்தத்துக்கோ பயந்து கொண்டு வேதனைப் படுவதைப் பார்த்தால்… கலியாணத்துக்குக் கூடியிருக்கிற இத்தனை சாயல்களை, பற்களை, நெற்றிகளை, கால்களை, சிரிப்புகளை, புருவந்தூக்கும் கவலைகளை, முகங்களில் படர்ந்திருக்கிற பூசணி வெள்ளைகளை, தானே பேசுகிற குழந்தைகளை, வருடங்கள் கழிந்து சந்திக்கும் தாயாதிகளை – ஒன்றையும் பார்க்காமல் ஏன் இப்படி கண்ணை மூடி நாயனத்தில் வதை கொள்ள வேண்டும்?

    கண்டுபிடித்தவர்கள் பின்னூட்டமிடவும்.


    | |

    Chidambaram temple deekshidars to take important decision today

    Chidambaram temple deekshidars to take important decision today

    சிதம்பரம் நடராஜர் கோவில் சர்ச்சை: தீக்ஷிதர்கள் இன்று முக்கிய ஆலோசனை

    சிதம்பரத்தில் உள்ள பிரபலமான நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றைப் பாட, கோவிலை நிர்வகித்து வரும் தீக்ஷிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சிதம்பரம் நீதிமன்றத்தில் தடை உத்தரவும் வாங்கி வைத்துள்ளனர்.

    முதல்வரின் கருத்து தீக்ஷிதர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில், நடராஜர் கோவிலுக்குள் தேவாரம், திருவாசகம் பாட சிதம்பரம் நீதிமன்றம் விதித்திருந்த தடையுத்தரவு நேற்றுடன் முடிந்தது.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தடையை நீடிக்கக் கூடாது என்று தமிழார்வலர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனால் தீக்ஷிதர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இந் நிலையில் தீக்ஷிதர்களுக்கு ஆதரவாக அர்த்தஜாம சிவபுராண வழிபாட்டுக் குழு, தில்லை திருமறை கழகம், பவுர்ணமி வழிபாட்டுக் குழு, தில்லை காளி வார வழிபாட்டு மன்றம் ஆகியவை கிளம்பியுள்ளன.

    இந்த அமைப்பினர் இன்று மாலை சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள நடராஜர் கிருபா திருமண மண்டபத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தள்ளனர். இதில் தீக்ஷிதர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

    இதுதொடர்பான அழைப்பிதழில்,

    தமிழை மட்டுமே தாய் மொழியாகக் கொண்ட தீக்ஷிதர் சமுதாய பெருமக்கள், தமிழுக்கு விரோதிகள் போல ஒரு மாயை உருவாக்கப்படுகிறது. அதையே காரணம் காட்டி, பாரம்பரியமாக நமது முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ள ஆலய வழிபாட்டு முறைகளை விமர்சனம் செய்து ஒரு கூட்டம் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

    எனவே நடராஜ பக்தர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்

    என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தக் கூட்டத்தில் தீக்ஷிதர்கள் தரப்பில் என்ன முடிவெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழார்வலர்களிடையே எழுந்துள்ளது.