தன்னை உணர்வதற்கான அமைதிப் புரட்சி :: மாரீசன்
புதிய பார்வை – ஏப்ரல் 16-30, 2007
சமூகம் என்பது பல்வேறு மனிதர்களின் தொகுப்பு. மனிதன் என்பவன் பல்வேறு சிந்தனைகளால் அலைக்கழிக்கப்படும் சமூகப்பிரஜையாக இருக்கிறான். ஒவ்வொரு தனிமனிதனுக்குள்ளும் குறுக்கும் நெடுக்குமாகப் பல்வேறு சிந்தனைகள் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கின்றன. எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அந்தப் பணியில் கவனமும் அதை விட்டு விலகிய வேறு பல சிந்தனைகளும் ஒரு சினிமாவைப் போல் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இத்தகைய சிந்தனைகளே அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடைந்த மனிதனை வேறு தள வரிசைக்கு இட்டுச் செல்கிறது. இதனையே நாம் தேடுதல் என்றுக் குறிப்பிடுகிறோம். இந்தத் தேடுதல் என்பது வாழ்க்கை முழுமை அடையாத தன்மையை, அதிருப்தியை, நாகரிகமாகக் குறிக்கிறது.
தேடுதல் என்பது எது குறித்து நிகழ்கிறது? எதனைத் தேடுகிறோம்? என்ற பல உளவியல், ஆன்மிகம் சார்ந்த கேள்விகளை உள்ளடக்கியே இருக்கிறது. அவரவர் அனுபவர்த்திற்கும் சமூகச் சூழலுக்கும் ஏற்ற வண்ணம் தேடுதலை மனிதர்கள் அமைத்துக் கொள்கிறார்கள். வேகமாக மாறிவரும் வாழ்க்கை, கலாசார சிதைவு, பல்வேறு ஊடகங்களின் தாக்குதல், நவ நாகரிக உலகின் ஊடுருவல்கள் தனி மனிதனைப் பல்வேறு மன உளைச்சலுக்கு ஆட்படுத்துகின்றன. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், அன்பு செலுத்த மனிதர்கள் என்ற நிலையில் வாழ்ந்தாலும் அவனுக்குள் ஏதோ ஒரு தாகம், அதிருப்தி இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கான விடையைத் தேடுபவனையே நாம் தேடுதலில் உள்ளவன் என்று குறிக்கிறோம்.
இவனுக்கு வழிகாட்ட எப்போதுமே சமூகத்தில் உளவியல் அறிஞர்கள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மதவாதிகள், ஆன்மிகவாதிகள் எனப் பல்வேறு ஆளுமைகள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. எந்த ஒரு துறையில் மிக ஆழமாக ஈடுபட்டாலும் அந்த ஒரு குறிப்பிட்ட துறையின் ஆளுமை வளர்கிறதே தவிர வாழ்வில் முழுமை வருவதே இல்லை. எனில் வாழ்வின் முழுமை எதில்தான் இருக்கிறது?










