சல்மா தொண்ணூறுகளின் இறுதியில் எழுத்தொடங்கிய தமிழின் முக்கியமான இளம் கவிஞர்களில் ஒருவர். காலச்சுவடு வெளியீடாக ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்ற கவிதை நூலும் உயிர்மை வெளியீடாக ‘பச்சை தேவதை’ என்ற கவிதை நூலும் உட்பட மூன்று கவிதைத் தொகுப்புகளும் சமீபத்தில் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்று ஒரு நாவலும் வெளிவந்திருக்கின்றன. சல்மா சிறுகதைகளும் எழுதுகிறார்.
ஏராளமான எதிர்ப்புகளுக்கிடையே பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுக் கவுன்சிலராக இருந்தவர். பொது நூலகங்களுக்குச் சிறந்த நூல்களைத் தெரிவு செய்யும் நூல் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.
பயண நேரம் – சல்மா
பயணம் நிகழ்கையில்
ஜன்னலோர இருக்கை வாசிகள்
அதிர்ஷ்டசாலிகள்
சீறும் காற்று
முடியைக் கலைக்கவும்
கண்ணில் தூசு விழவுமாய்
அசௌகர்யங்கள் இருந்தாலும் கூட
மனிதருள்,
இயற்கையுள் நுழைய
வேண்டும் ஜன்னலோர இருக்கைகள்
பாதையோரத்தில்
இடிந்து கிடக்கும்
ஒற்றைச் சுவர்
என்னவாய் இருந்திருக்கும்?
அது ஓர்
அச்சம் தரும் நினைவு
முடிவு நேரம் அறிவிக்கப்படாத
பயணம் துரிதப்படுத்துகிறது
எல்லாவற்றையும் முடிக்க
ஏதொன்றுமே
முடிவடைவதில்லை.
பயணம் முடியும் வேளை
தகிக்கும் நிறைவின்மை
அச்சுறுத்துகிறது அனைவரையும்
சமயத்தில் எரிக்கிறது
எல்லாவற்றையும்










