Category Archives: ஒபாமா

ஒபாமாவின் தலையங்கம் – இந்தியா அப்ரோட்

இந்தியா அப்ரோட் வாரயிதழின் OP-ED பக்கத்தில் இந்திய அமேரிக்கர்களுக்கு ஒபாமா விடுத்துள்ள செய்தி:

தேசி நண்பர்களுக்கு!

அமெரிக்க தேர்தல் களம் – இன்று (பெப். 25)

1. ‘எம்ஜியார் ஆட்சி தருவோம்’ என்று வாக்குறுதியளிப்பது போல், அமெரிக்காவின் ஒபாமாவைப் போல் புத்துணர்ச்சியுடன் நல்லாட்சி தருகிறோம் என்று உலகெங்கும் ப்ராண்ட் நேம் காப்பியடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

செய்தி: Obama’s European counterparts – Los Angeles Times

Obama_Kenya_Drudge_report_Traditional_Dress

2. படம் DRUDGE REPORT FLASH 2008® | செய்தி Obama Photo Becomes an Issue – The Caucus – Politics – New York Times Blog

தன் தந்தை நாடான கென்யாவிற்கு வருகை புரிந்தபோது, சொமாலியத் தலைவரின் உடையை அணிந்திருக்கிறார் பராக். அந்தந்த நாட்டின் பாரம்பரிய ஆடையை அணிவது அரசியல் தலைவர் முதல் விளையாட்டு வீரர் வரை எல்லோருக்கும் சகஜம்.

‘இதை இப்போது வெளியிட்டு, அதையும் அரசியலாக்கி பார்க்கிறார் ஹில்லரி‘ என்கிறார் ஒபாமா.

3. வலைப்பதிவுகளில் எந்த வார்த்தைகள் எவ்வளவு அதிகம் இடம்பிடித்தது என்பதன் வரைபடம்:

Boston_Globe_New_Words_Buzz_Obama_Rama_Momentum

புதிது புதிதாக சொல்லாக்கம் நிகழ்வது அமெரிக்க அரசியலுக்கே உரித்தானது. வாடர்கேட்டைத் தொடர்ந்து, கேட் என்பதை வைத்து கிடைத்த பட்டியலை இங்கு (List of scandals with “-gate” suffix) பார்க்கலாம். அதே போல், ஒபாமா -உந்தம் போன்ற மொமென்டம் சொற்றொடர்கள் புகழ்பெற ஆரம்பித்திருக்கின்றன.

நன்றி: Obama-rama-mentum – The Boston Globe

4. அடுத்த உப ஜனாதிபதிக்கான தள்ளுமுள்ளு மேளா நடைபெற்று வருகிறது. தற்போது களத்தில் இருக்கும் அனைவருமே செனேட்டர்கள். ஆளுநர்கள்தான் இரண்டு கட்சிகளுக்கும் வளைய வேண்டிய நேரத்தில் வளைந்து, நிமிர்ந்து நேர்கொண்டு தடுத்தாட் கொள்ள வேண்டிய நேரத்தில் கொள்கைப் பிடிப்பை பறைசாற்றும், உண்மையான தலைவர்கள் என்பது தொன்றுதொட்ட எண்ணம். கவர்னர்களின் மாநாடு நடைபெறுகிறது என்னும் செய்தி: At Governors’ Meeting, a Vice Presidential Buzz – New York Times

5. குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ஜான் மெக்கெயினுக்கு மேலும் இன்னொரு பின்னடைவு. ஜான் மெகெயினுடைய பிரச்சாரக் குழுவின் இணை இயக்குநர் மேல் – பண மோசடி, மிரட்டி பணம் பறித்தல், அயல்நாட்டில் கறுப்பு பணத்தை பதுக்குதல் உட்பட 35 குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டாண்டுகளாக இவரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.

எனினும், 2006- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இவரின் நன்னடத்தைக்கு சான்றிதழ் வழங்கி மெகெய்ன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். ரிக் ரென்சியை கண்டித்து, குடியரசுக் கட்சியின் தலைவர்கள் அறிக்கை விட்டுக்கொன்டிருக்கிறார்கள்.

செய்தி: Joseph A. Palermo: John McCain and the Rick Renzi 35-Count Indictment – Politics on The Huffington Post | New York Times: Grand Jury Indicts Arizona Congressman

'ஹிலாரியைவிட நம்பகமானவர் ஒபாமா'

ஹிலாரி கிளின்டனை காட்டிலும் அதிக நம்பகமானவர் பராக் ஒபாமா என அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்ட தரப் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.

தயாரிப்புகளை நுகர்வோர் மத்தியில் பிரபலப்படுத்தும் திறன் பெற்றவர்களை பட்டியலிட்டு வெளியிட்டு வரும் நிறுவனம் டேவி பிரௌன். டேவி பிரௌன் பிரபலங்கள் குறியீட்டெண் என்ற இந்த மதிப்பீடு மூலமாக தங்களது தயாரிப்புகளை விளம்பரப்படுத்த யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்பதை நிறுவனங்கள் முடிவு செய்கின்றன. நுகர்வோர்களிடம் நட த்தப்படும் கருத்துக் கணிப்புகளின் அடிப்படையிலேயே இந்த குறி யீட்டெண் தயாரிக்கப்படுகிறது.

அண்மையில் இந்த நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளின்டன், குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கைன் ஆகியோரைக் காட்டிலும் அதிகப் புள்ளிகளைப் பெற்று முன்னணியில் இருக்கிறார் பராக் ஒபாமா. நம்பகத்தன்மை, விழிப்புணர்வு, கவர்ச்சி, செல்வாக்கு, வேட்கை உள்ளிட்ட எட்டு முக்கியப் பண்புகள் இந்த பட்டியலில் கணக்கிடப்படுகின்றன.

இதில் விழிப்புணர்வு என்ற ஒரே பண்பில் மட்டுமே ஒபாமாவைவிட ஹிலாரிக்கு அதிகப் புள்ளிகள் கிடைத்துள்ளன. நம்பகத்தன்மை உள்ளிட்ட மற்ற அனைத்துப் பண்புகளிலும் ஒபாமா முன்னிலை பெற்றுள்ளார்.

திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் ஒபாமாவுக்கு 3-வது இடமும், ஹிலாரிக்கு 8-வது இடமும் கிடைத்துள்ளது.

குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கைன் மற்றும் மைக் ஹக்கபீ ஆகியோர் முறையே 20 மற்றும் 74-வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்துபவரும், ஒபாமாவின் தீவிர ஆதரவாளருமான ஓபரா வின்ஃபிரே, இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

நன்றி: தினமணி

ஆங்கிலத்தில்: Celebrity Index: U.S. Consumers Find Obama More Appealing, Trustworthy Than Clinton, McCain: Financial News – Yahoo! Finance

சூப்பர்டெலகேட்சுக்கு காசு கொடுத்து கவனிக்கும் ஜனநாயகக் கட்சி

Capital Eye – Seeking Superdelegates (வழி: Superdelegates get campaign cash):

விடாக்கண்டர் ஹில்லரிக்கும், கொடாக்கண்டர் ஒபாமாவுக்கும் நடக்கும் இழுபறி சண்டை முடிகிறபாடாக இல்லை. தன்னுடைய சொந்த ஊரான இல்லினாய் தவிர வேறு எந்த பெத்த மாகாணத்திலும் ஒபாமா ஜெயிக்கவில்லை என்பதை முக்கிய குறையாக ஜனநாயகக் கட்சி கருத ஆரம்பித்துள்ளது. மார்ச் நான்காம் தேதி நடக்கும் ஒஹாயோ, டெக்சஸ் போன்ற மாபெரும் மாகாணங்களின் தேர்தல் வெற்றி, அந்தக் குறையை போக்கலாம்; அல்லது க்ளின்டனின் வாதத்திற்கு வலுசேர்க்கலாம்.

எவருக்கும் பெரும்பான்மை இல்லாத, இந்த நேரத்தில் பெரிய பிரதிநிதிகள் (‘பெ.பி.’) எனப்படும் சூப்பர்டெலகேட்ஸை இருவரும் மொய்க்க ஆரம்பித்திருக்கின்றனர். ;பொன் மகள் வந்தாள்’ மழையாக இதுவரை கொட்டப்பட்ட நிதி – $904,200

பராக் ஒபாமாவின் பங்கு – $698,200
ஹில்லரி க்ளின்டனின் பங்கு- $205,500

மொத்த பெரிய பிரதிநிதிகள் – 800 (கிட்டத்தட்ட)
முடிவு வெளிப்படுத்தாதவர்கள் – 400 (கிட்டத்தட்ட)

ஒபாமாவை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (தேர்தல்களில் வென்றவர்கள்) – 82
இவர்களில் ஒபாமாவிடமிருந்து தேர்தல் நிதி பெற்றவர்கள் – 35 (43 சதவீதம்)
ஒபாமாவை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (கட்சி பிரதிநிதிகள்) – 52 (தேர்தல் நிதி பெற முடியாது)

ஹில்லரியை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (தேர்தல்களில் வென்றவர்கள்) – 109
இவர்களில் ஹில்லரியிடமிருந்து தேர்தல் நிதி பெற்றவர்கள் – 13 (12 சதவீதம்)
ஹில்லரியை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (கட்சி பிரதிநிதிகள்) – 128 (தேர்தல் நிதி பெற முடியாது)

இன்னும் முடிவை அறிவிக்காத 52 ‘பெ.பி.’களுக்கு ஒபாமாவின் அன்பளிப்பு – $363,900
இன்னும் முடிவை அறிவிக்காத 15 ‘பெ.பி.’களுக்கு ஹில்லரியின் அன்பளிப்பு – $88,000

இருவரிடமிருந்தும் பணத்தைப் பெற்றவர்களின் எண்ணிக்கை – 8
இவர்களில் ஹில்லரியை ஆதரிப்பதாக அறிவித்தவர்கள் – 7

மாஸசூஸட்ஸ் செனேட்டர் டெட் கென்னடி மட்டும் ஒபாமாவிற்கு ஆதரவளிக்கிறார்.
இவருக்கு ஹில்லரி கொடுத்த தேர்தல் நிதி – $10,000
ஒபாமா வழங்கிய தேர்தல் நிதி – $4,200

கடைசியாக, ஹில்லாரியின் 2006 செனேட் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒபாமா வழங்கிய நிதி – $4,200

ஆதாரம்:

1. விரிவான கணக்குப் பட்டியல்: Capital Eye: Superdelegates

2. எந்த பெரிய பிரதிநிதி, எவரை ஆதரிக்கிறார்? 2008 Democratic Convention Watch: Superdelegate Endorsement List

ஹில்லரி விடைபெற்றுக் கொண்டாரா – டெக்சாஸ் தர்க்கம்: சரசர குறிப்புகள்

இன்று தொலைக்காட்சியில் பார்த்த ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் விவாதத்தில் கவனத்தை ஈர்த்தவை:

  • ‘இளைய தளபதி’ விஜய் பொது நிகழ்ச்சிகளில் அல்லது தான் நடித்த சினிமா படத்திற்கான சன் டிவி பேட்டியில் வரும்போது, பரபிரும்மம் போன்ற நிர்ச்சலனமான முகபாவத்துடன் கலந்து கொள்வார். பராக் ஒபாமாவும் அப்படியொரு அகத்தின் பிரதிபலிப்புகளை வெளிக்கொணராத தோரணையைக் கட்டிக் காத்தார்.
  • இதற்கு நேர் எதிராக இருந்தார் ஹில்லரி கிளிண்டன். இராக் போருக்கு ஆதரவாக வாக்களித்தவர் எவ்வாறு மெகெயினுடன் தர்க்கிக்க முடியும்?‘ என்று ஒபாமா குற்றஞ்சாட்டியவுடன், இருக்கையில் நெளிந்து, ஓரத்திற்கு சென்று பதுங்கிக் கொள்வது போன்ற உடல் மொழி வெளியானது.
  • ஆனால், ஒபாமாவோ, ‘வெறும் வார்த்தைக் கோட்டை எழுப்புகிறார்; அது கூட சொந்த சரக்கல்ல; கட்சித் தலைவர்கள் சொன்னதை ஜெராக்ஸ் போடுகிறார்என்ற ஹில்லரியை, மிகக் கடுமையான குரலில் நடுவில் புகுந்து உலப்பி, கடுமையான தொனியில் கண்டித்தார்.
  • தன்னுடைய நேரம் வந்தபோது, இதற்கு பதிலாக, ‘எனக்கு வாக்களித்த இருபது மில்லியன் மக்கள் மருண்டுதான் போய் இருக்கிறார்களா? அவர்களை அவ்வாறு நம்பிக்கையுடன் செலுத்தவைத்து, என்னைப் பரிந்துரைத்த நாளிதழ்களும் கற்பனையில்தான் மிதக்கின்றனவா? கனவு காண்பது தவறா’ என்று ஒரு போடு போட்டார்.
  • இருவருமே தங்கள் கொள்கைகயும் கோட்பாடும் திட்டங்களும் ஒத்துப் போகின்றன என்றனர்; பெருமளவு வித்தியாசங்களை முன்னிறுத்தவில்லை.
  • ஹில்லரி பேசும்போது, சின்சியராக ஒபாமா எதையோ எழுதிக் கொண்டிருந்தார். கையெழுத்து போட்டு பழகிக் கொண்டாரா அல்லது ஸ்ரீராமஜெயம் எழுதினாரா என்பதை ஹில்லரியிடம் யாரும் வினவவில்லை.
  • ஹில்லரியைப் போலவே, அவர் குறிப்பெடுக்க வைத்திருந்த பேப்பர்களும் படபடவென்று அடித்துக் கொண்டு கவனத்தை சிதற வைத்தன.
  • ஜான் எட்வர்ட்சுக்கு வாக்களித்தவர்களை — இருவர்களுமே குறிவைத்து பேசினாலும், எட்வர்ட்ஸின் பெயரைக் குறிப்பிட்டே வாக்குகளைக் கோரினார் ஹில்லரி. ஒபாமா ஜான் எட்வர்ட்ஸின் பெயரை முன்வைக்கவில்லை. (அவசியமும் இல்லை!)
  • மொத்தத்தில் நிறைய நேரம் ஒபாமா பேசிய மாதிரி காட்சியளித்தது. ஹில்லரியை விட தெளிவாக, கோர்வையாக, சுவையாக, அதிபருக்குரிய மிடுக்குடன் கலக்கினார்.
  • இறுதியாக ஹில்லாரி, ‘என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களை உலகமே அறியும். எனினும், என்னைவிட அதிகமாக பாதிக்கப்பட்டவர்களான — போர்முனையில் அடிபட்டு, கை காலிழந்து வருபவர்கள், வீடுகளுக்கு மாதாந்திர தவணை செலுத்த முடியாமல் பற்றாக்குறையில் தவிப்போர் உட்பட பலரின் பிரச்சினைகளை பார்த்து வருகிறேன்’ என்று தொடங்கி, நடுவில் ஒபாமாவுடன் மேடையைப் பகிர்வதன் பெருமையை உணர்த்தி, பராக்கையும் மனமாரப் பாராட்டிவிட்டு, ஜனநாயகக் கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்தி, முத்தாய்ப்புடன் முடித்துக் கொண்டார். இதெல்லாம், ஹில்லரிக்கு வாக்குகளாக மாறி, டெக்சஸில் பெருவெற்றியாகி — பிரதிநிதிகளைக் குவிக்கும் வாய்ப்புகள் குறைவு.
  • மேடைக்கு வருவதற்கு முன்பே ஹில்லரி க்ளின்டன் – வெகு சகஜமாக, ஒபாமாவை நெருங்கி, பரஸ்பரம் கைகுலுக்கி, தங்கள் பாதுகாவலர்களின் உயரங்களை ஒப்பிட்டு, ஜாலியாக அரட்டையடித்துக் கொண்டிருந்ததாக, சி.என்.என் தொகுப்பாளர் ஜான் கிங் பகிர்ந்து கொன்டார்.

தொடர்புள்ள தமிழ் சசியின் பதிவு: ஒபாமா – ஹில்லரி டெக்சாஸ் விவாதம்

முழு விவாதத்தையும் சி.என்.என்.னில் வாசிக்கலாம்.

ஒபாமா – ஹில்லரி டெக்சாஸ் விவாதம்

இன்று டெக்சாஸில் சி.என்.என் தொலைக்காட்சியில் ஜனநாயகக் கட்சியின் விவாதம் நடைபெற்றது. டெக்சாஸ், ஓகாயோ ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில் இருக்கும் ஹில்லரிக்கு இந்த விவாதம் ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும் என கருதப்பட்டது. இந்த விவாதம் மூலம் தன் ஆதரவு வாக்குகளை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய சூழலில் ஹில்லரி இருந்தார்.

பொதுவாகவே விவாதங்களில் ஹில்லரி, ஜான் எட்வேர்ட்ஸுடன் ஒப்பிடும் பொழுது ஒபாமா அவ்வளவாக எடுபடுவதில்லை. பல இடங்களில் ஒபாமா தடுமாறுவார். ஹில்லரி தன் கருத்துக்களை தெளிவாக விவாதங்களில் எடுத்துரைப்பது அவருக்கு சாதகமான விடயம்.

இந்தக் காரணத்திற்காகவே Super Tuesdayக்குப் பிறகு ஒபாமாவுடன் அதிகளவு விவாதங்கள் நடத்த ஹில்லரி கோரியிருந்தார். ஆனால் ஒபாமா அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அது குறித்த சர்ச்சைகளும் நிலவியது. ஹில்லரி அணியின் சார்பாக ஒபாமா விவாதத்திற்கு வர மறுப்பதாக விளம்பரங்களும் வெளியிடப்பட்டது.

சமீபத்தைய தொடர் தோல்விகளுக்குப் பிறகு இன்றைய விவாதம் ஹில்லரிக்கு முக்கியமானதாக கருதப்பட்டது.

ஆனால்…

இந்த விவாதம் இது வரை இருந்த விவாதங்களுக்கு நேர்மாறாக இருந்தது. ஹில்லரியை விட ஒபாமா சிறப்பாக செய்தார்.

என்னைக் கவர்ந்த சில விடயங்கள்

– க்யூபா குறித்த கேள்வி எழுந்த பொழுது ஹில்லரி, ஒபாமா இடையேயான வெளிநாட்டு உறவுகள் குறித்த முக்கியமான வேறுபாட்டினை உணர முடிந்தது. ஹில்லரி அமெரிக்கா க்யூபாவுடன் உறவுகளை பேண சில நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்றார். அமெரிக்காவிற்கேயுரிய மேலாதிக்க தன்மையுடன் (Hegemony) ஒரு அமெரிக்க ஜனாதிபதி க்யூபாவிற்கு செல்வது குறித்த கருத்துகளை தெரிவித்தார். ஒபாமா அதனை மறுத்தார். நாடுகளுடான உறவை அத்தகைய மேலாதிக்க தன்மையுடன் அணுக கூடாது என்ற கருத்தை முன்வைத்தார். நம் நண்பர்களுடன் மட்டும் பேசக்கூடாது. எதிரிகளுடனும் பேச வேண்டும் என்றார். அவர் ஜனாதிபதியானால் அதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் ஒபாமா உலக நாடுகளிடையேயான உறவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டு வர முடியும். (அமெரிக்க அதிகார மையம் அதனை அனுமதிக்குமா என்ற கேள்வி ஒரு புறம் உள்ளது)

– பொருளாதார சூழல் குறித்த கேள்விக்கு ஒபாமா அளித்த பதிலுக்கும், ஹில்லரி அளித்த பதிலுக்கு பெருத்த வேறுபாடு இருந்தது. ஹில்லரியின் அனுபவமும், ஒபாமாவின் அனுபவமின்மையும் வெளிப்பட்ட தருணங்களில் இது முக்கியமானது.

– ஹில்லரிக்கு ஒபாமாவை எதிர்த்து எத்தகைய பிரச்சரத்தை மேற்கொள்வது என்பதில் குழப்பம் உள்ளது போலும். அதனால் தான் ஒபாமா வேறு ஒருவரின் உரையை காப்பியடித்து பேசினார் (Plagiarism) என்றெல்லாம் பேசுகிறார். Hillary sounded very silly

– ஈராக் குறித்த கேள்விகள் வழக்கம் போல ஹில்லரிக்கு பலவீனமான விடயம். ஒபாமா ஈராக் விடயத்தில் தன்னுடைய Judgement சரியாக இருந்தது என்பதை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார். அது போல மெக்கெயினை எதிர்த்து தன்னால் மட்டுமே போட்டியிட முடியும் என்ற ஒபாமாவின் கருத்தும் பலமாக எடுபட்டது போல தான் தோன்றியது.

– ஒபாமாவின் பேச்சு, ஹில்லரியின் தீர்வுகள் (Speech Vs Solutions) என்ற கேள்வி எழுந்த பொழுது ஒபாமாவின் பதில் ஹில்லரியின் புதிய அஸ்திரமும் பலவீனமடைந்து போனதை தான் தெளிவுபடுத்தியது.

டெக்சாஸில் ஹில்லரி வெற்றி பெற்றாக வேண்டிய சூழலில், இந்த விவாதம் ஒபாமாவிற்கே சாதகமாக உள்ளது போல தோன்றியது.

ஒபாமாவின் 11வது தொடர் வெற்றி

ஜனநாயகக் கட்சியின் வெளிநாட்டு பிரதிநிதிகளின் வாக்களிப்பில் ஒபாமா 65% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் (ஹிலரி 32%)

வெளிநாட்டில் வசிக்கும் கட்சி உறுப்பினர்களுக்கு மொத்தம் 22 பிரதிநிதிகள் உள்ளனர் இவர்களுக்கு ஆளுக்கு 1/2 ஓட்டு என மொத்தம் 11 ஓட்டுக்கள் கன்வென்ஷனில் கணக்கெடுக்கப்படும்.

இந்த வெற்றியையும் சேர்த்து ஒபாமா முனோட்டத் தேர்தலில் தொடர்ந்து 11 வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

Obama wins Democrats Abroad contest – CNN

படம் – CNN

புதிய தந்திரத்துடன் திருமதி.கிளின்டன்

ஒபாமாவின் தொடர்ந்த வெற்றிகளால் குளம்பிப்போயுள்ள திருமதி.கிளின்டன் புதிய திட்டங்களுடன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Wisconsin வெற்றியானது, ஒபாமாவின் அதிரடி வெற்றியாகக் கணிக்கப்படுகின்றது. வரும் வியாழக் கிழமை இருவரும் டெக்ஸாசில் ஒரு நேரடி விவாதத்தில் கலந்துகொள்ள உள்ளனர். இதில் தூள் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Ohio, Texas ஆகிய இரு மானிலங்களிலும் வெற்றி பெற்றால், மொத்தத்தில் வெற்றி பெறும் வாய்ப்புள்ளதாக திரு.கிளின்டன் கூடச் சொல்லியுள்ளார்.

தாழ் மட்ட வேலை புரிவாரின் வாக்குகள் டெக்சாசில் செல்வாக்கு செலுத்தும் என்று எதிர்பார்ப்பதால் ஒபாமா, கிளின்டன் இருவரும் Blue color தொழில் புரிபவர்களை இலக்கு வைத்து தமது பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர்.

இதேவேளை குடியரசுக்கட்சியின் வேட்பாளராக கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட மக் கெயின் கூட ஒபாமாவை இப்பவே தன் பேச்சுக்களில் குறி வைக்கத் தொடங்கிவிட்டார். அவர் ஒரு பேச்சில்

“I will fight every moment of every day in this campaign to make sure that Americans are not deceived by an eloquent but empty call for change,”

இளைஞர்களை அதிகமாக ஒபாமா கவர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது 10 இளைஞர்களில் 6 பேர் ஒபாமாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெற்றி நடைபோடும் ஒபாமா

nullதிருமதி. கிளின்டன் Wisconsin ல் வெற்றி பெறலாம் என்று ரொம்பவுமே நம்பி இருந்தாராம். காரணம் அங்கே பொரும்பாலானார் (90% வீதமானோர்) வெள்ளையர்கள், அத்துடன் பெரும்பாலானோர் வேலைபார்ப்பவர்கள் அதிலும் மேலாக 50 வீதமானோர் பெண்களாவார். இங்கு ஒபாமாவின் வெற்றி அமெரிக்கர் மத்தியில் இனவாதம் எவ்வளவு அகன்றுவிட்டது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இது ஒபாமாவின் 9ம் தொடர் வெற்றி.

திருமதி. கிளின்டன் நிவ்யார்க், நிவ் யேர்சி (அமெரிக்காவில் இங்குதான் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றார்களாம்) போன்ற பெரிமாநிலங்களில் கவனம் செலுத்தி அங்கே வெற்றி பெற்றிருந்தார். ஆனால் அவையெல்லாம் இப்போது தொலைதூரக் கனவு ஆகிவிட்டதுங்கோ..!!!

இதுவரை
திருமதி. கிளின்டன்
Arizona, Arkansas, California, Florida, Massachusetts, Michigan, Nevada, New Hampshire, New Jersey, New Mexico, New York, Oklahoma, Tennessee

திரு. ஒபாமா
Alabama, Alaska, Colorado, Connecticut, Delaware, Georgia, Hawaii, Idaho, Illinois, Iowa, Kansas, Louisiana, Maine, Maryland, Minnesota, Missouri, Nebraska, North Dakota, South Carolina, Utah, Virginia, Washington state, Wisconsin

நடக்கப்போவதை இருந்து பார்ப்போம்!!!

விஸ்கான்சின் மாநிலத்தில் ஒபாமா வெற்றி

விஸ்கான்சின் மாநிலத்தில் ஒபாமா வெற்றி பெறுவார் என சி.என்.என் அறிவித்துள்ளது. தற்பொழுது ஓட்டு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் ஒபாமா முன்னிலையில் உள்ளார். இந்த மாநிலத்தில் ஒபாமா வெற்றி பெற்றால் அவர் பெறும் 9வது தொடர் வெற்றியாகும்.

இது ஹில்லரி கிளிண்டன் நிச்சயம் தோல்வி அடையக்கூடும் என்பதன் திட்டவட்டமான அறிகுறியாகவே தெரிகிறது. காரணம் ஹில்லரி கிளிண்டனுக்கு சாதகமான வாக்களார்கள் அதிகம் கொண்ட மாநிலமாக விஸ்கான்சின் கருதப்பட்டது.

விஸ்கான்சின் தோல்வி அடுத்து வரும் டெக்சாஸ், ஓகாயோ போன்ற மாநிலங்கள் ஹில்லரிக்கு வாழ்வா, சாவா என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெற்றி ஒபாமா தான் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் என்பதை ஏறத்தாழ உறுதிப்படுத்துகிறது.

குடியரசுக் கட்சியின் சார்பாக விஸ்கான்சின் மாநிலத்தில் மெக்கெய்ன் வெற்றி பெறுவார் என சி.என்.என் அறிவித்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு…