Ponniyin Selvan Movie: What made Mani Ratnam to take it?


பொன்னியின் செல்வன் ஏன் வந்தது என்பது குறித்து ஏழு காரணம் சொல்லியாகி விட்டது.

மற்ற மூன்றையும் நினைத்துப் பார்த்து அந்த #PS1 அத்தியாயத்தை முடித்துவிடலாம்.

எட்டு:
“மரைக்காயர் : அரபிக்கடலின் சிங்கம்” படத்தைப் பார்த்தார்கள்.

  • அறுபதைத் தாண்டிய சுனீல் ஷெட்டி, பிரபு, அர்ஜுன், மோகன்லால் எல்லோரும் இளமையாகத் திரியும்போது நாற்பதுகளைக் கொண்டு படத்தை எடுக்கலாம் என முடிவு செய்தார்கள்.
  • மரைக்காயரில் அரபிக்குத்து; நபிகளின் சொற்பொழிவு; புனிதப் போர் என இஸ்லாம் குறித்த எளிய அறிமுகம். பொ.செ.வில் ‘அரியும் சிவனும் ஒண்ணு; அறியாதவன் வாயில் மண்ணு!’ என்னும் எளிமையாக்கங்கள்
  • அங்கே மாங்காதச்சன் , பணிக்கர், குரூப், அபூபக்கர் ஹாஜி, நாயர், கொச்சி ராஜா, சம்பூத்ரி (சமூத்ரி?) என நிறைய சிற்றர்சர்கள்; இங்கேயும் அவர்களின் உள்ளடி சதித் திட்டங்கள் உண்டு
  • குஞ்ஞாலி என்றாலும் மம்மாலி என்றாலும் மொகமது அலி என்றாலும் மரக்கார் பெயர்தான். (பொன்னியின் செல்வர், அருள்மொழிவர்மன், ராஜராஜ சோழன் என்பது போல்)
  • படம் பார்த்தால் சோர்வு வருகிறது (இரண்டு படத்திலும்தான்)

ஒன்பது:

இருபதாண்டுகள் முன்பு ஹாரி பாட்டர் புத்தகங்கள் தொடர்படமாக வெளியாகின. அதே போல் பல்லாண்டு முன்பு வெளியாகிய லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் நாவல்களும் மூன்று படங்களாக கொண்டாட்டமாக கோலாகலமாக வெளியானது.

அதைப் பார்த்து மணி ரத்னமும் எடுக்க நினைத்திருக்கிறார். எண்ணம் சிறப்பு; செயலாக்கம் அன்னியம்.

அதில் இருக்கும் பிரும்மாண்டத்தைத் தமிழில் ஓரளவிற்கு கொண்டு வருகிறார். எனினும், கதாபாத்திரங்களுக்கு உயிர் இல்லை. எதிர்பார்ப்பு இல்லை.

டைடானிக் மூழ்கினால் என்ன போச்சு என்று தோன்றுமாறு கப்பலைப் பற்றிக் கவலைப்படாமல் ரோஸ் பற்றியும் ஜாக் பற்றியும் சற்றே சிந்திக்க வைப்பது இயக்குனர் வேலை.


பத்து:

‘பார்த்தாலே பரவசம்’ மட்டுமே பாலச்சந்தர் அல்ல. ஆனால், அந்தத் தலைமுறைக்கு இயக்குநர் சிகரம் என்றால் அறுவை ரம்பம் என்றறியப்படுமாறு அந்தப் படம் ஓடியது.

கௌதம் வாசுதேவ மேனன் போன்று காற்று வெளியிடை, கார்த்திக் சுப்பாராஜ் போன்று செக்கச்சிவந்த வானம் என்று ஏனோதானோவென்று மற்ற இயக்குநர்கள் போன்று படம் வெளியிடாமல், தனித்துவமாக, தன் முத்திரையுடன் பார்வையாளர்களிடமிருந்து விடைபெற ஒரு சீரீஸ் தேவை – அதற்காக பொன்னியின் செல்வன் உருவாகிறது.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்கு எக்கச்சக்க சீடர்கள்; ஆசான் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வாசகர் வட்டம் போல். பாக்கியராஜ் நடிகராகவும் உலா வந்து போய் விட்டார்.

படம் என்றால் உச்சகட்டம் முக்கியம். கட்டுரை என்றால் இறுதி சொற்றொடர் முக்கியம். திரைமேதை என்றால் கடைசிப்படம் கொண்டே நினைவில் வைத்திருப்பார்கள்.

அதற்காகவே பொன்னியின் செல்வன்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.