ஐஸிஸ்
அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளராக இருந்தவர் பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders). டெமொகிராட் கட்சி சார்பாக போட்டியிட்டவர். இவர் தன்னுடைய சோஷலிஸக் கொள்கையாக இவ்வாறு பேசியிருந்தார்:
நாம் எவ்வாறு ஐஸிஸ் (ISIS)-ஐ எதிர் கொள்ள வேண்டும்? உலக அளவில் கூட்டணியை ஏற்படுத்த வேண்டும். இதில் இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்பு மிக மிகப் பெரியதாக இருக்க வேண்டும். இஸ்லாமின் அகவுயிருக்கானப் போராட்டம் இது. இதில் இஸ்லாமின் உயிரை மீட்க வேண்டுமென்றால் பணம் பலமும் கொண்ட சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் களத்தில் இறங்க வேண்டும். அவர்கள் தோள் கொடுத்தால் மட்டுமே ஐஸிஸ் தோற்கும். இராணுவத்திற்கு செலவழிக்கும் நாடுகளில் உலகளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சவுதி போன்ற நாடுகள் ஐஸிஸை தவறவிட்டு, யேமனில் (Yemen) இருக்கும் ஹௌத்தி போராளிகளைத் தாக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்
இந்தப் பேச்சு சவுதியின் பாதுகாப்புத் துறை மீதும் அமீரகத்தின் விமானங்கள் யேமன் ஹவுத்திகளைக் கொன்று குவிப்பது மீதும் சற்றே கவனத்தைப் பாய்ச்சியது. சவுதியில் சன்னிக்கள் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். யேமன் நாட்டிலும் சன்னிக்களே பெரும்பான்மையினர். அவர்களிடமிருந்து வடக்கு யேமனில் ஹௌத்தி இனத்தினர் தங்கள் விடுதலையைக் கோரினார்கள். 2014-ல் ஹௌத்தி போராட்டம் பெரிதாகி, யேமன் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.
ஹௌத்தி இனத்திற்கு எதிராக பத்து நாடுகளை சவுதி அரேபியா ஒன்று திரட்டியது. பெரும்பான்மை சன்னி பிரிவினர் ஆண்ட யேமனில், ஷியா பிரிவைச் சார்ந்த ஹௌத்தி இனத்தினரை வான் வழியே இந்த பத்து நாட்டு கூட்டணித் தாக்கியது. நூறு போர் விமானங்கள், ஒன்றரை இலட்சம் படைவீரர்களை இதற்காக சவூதி ஒதுக்கியது. 2,415 தடவை வான்வழித் தாக்குதலை நடத்தி ஆயிரக்கணக்கான குண்டுகளை விண்ணில் இருந்து வீசி இருக்கிறது.
இதெல்லாம் ஏன் முக்கியம்?
ஐஸிஸ் வீழ்வதற்காக அறுபது நாடுகள் கொண்ட கூட்டணியில் சவூதியும் அங்கம் வகிக்கிறது. தன் சார்பில் நான்கே நான்கு தடவை மட்டும் எஃப்-15 போர் விமானங்களைப் பறக்க விட்டிருக்கிறது.
பாதுகாப்பு மற்றும் ராணுவ வரவுசெலவு
ஒப்புமைக்காக, அதிக அளவில் இராணுவத்திற்காக செலவிடும் நாடுகளின் பட்டியலைப் பார்ப்போம்:
தர வரிசை | நாடு | செலவு ($ பில்லியன்) |
% of GDP
உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தியில் இராணுவத்திற்கான செலவின் பங்கு |
---|---|---|---|
அனைத்து உலக நாடுகளும் |
1,676.0 | 2.3 | |
1 | ![]() |
597.0 | 3.9 |
2 | ![]() |
215.0 | 1.9 |
3 | ![]() |
87.2 | 13.7 |
4 | ![]() |
66.4 | 5.4 |
5 | ![]() |
55.5 | 2.0 |
6 | ![]() |
51.3 | 2.3 |
14 | ![]() |
22.8 | 5.7 |
மூலம்: விக்கிப்பீடியா
சௌதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இருக்கும் உறவை விவரிப்பது சிக்கலானது. அமெரிக்காவிற்கு சவுதியின் கச்சா எண்ணெய் தேவையாக இருந்தது. இப்போதும் அந்த நாட்டின் எண்ணெய்க் கிணறுகள் மீது நிறையவே பற்று இருக்கிறது. அமெரிக்காவிற்கு கடன் கொடுக்கும் நாடுகளில் கம்யூனிச சீனாவிற்கு சரியான போட்டியாக சௌதி நாட்டின் அரசர்கள்தான் இருப்பார்கள். அமெரிக்காவில் 700 பில்லியன் டாலர்களை சவுதி மன்னர் பரம்பரை முதலீடு செய்திருப்பதாக ஃபோர்ப்ஸ் கணிக்கிறது.
செப்டம்பர் 11, 2001-ல் உலக வர்த்தக் மைய தாக்குதலில் எண்ணற்றோர் பலியானது தொடர்பான விசாரணையின் முடிவில் வெளியான அறிக்கையில் தணிக்கை செய்யப்பட்ட 28 பக்கங்களை வெளியிட்டால், இந்த முதலீடு திரும்பப் பெறப்படும் என செல்லமாக பராக் ஒபாமாவை மிரட்டும் அளவு சக்தி பெற்ற நட்பு கொண்டிருக்கிறது சௌதி அரேபியா.
அமெரிக்காவின் மொத்த ஏற்றுமதியில் பத்தில் ஒரு பங்கை சவுதி வாங்கிக் கொள்கிறது. எல்லாம் இராணுவத் தளவாடங்கள்தான். ஆனால், 2016ன் அதிகாரபூர்வ அறிக்கையை பார்த்தால், அமெரிக்காவில் முதலீடு செய்யும் தலை இருபது நாடுகளில் சவுதி இடம் பிடிக்கவில்லை. கொஞ்சம் போல் தலை சுற்றத்தான் செய்கிறது.
சீனாவைக் குறித்து அமெரிக்க ஊடகங்கள் ஏன் இப்படி எதிர்மறையாக எழுதித் தள்ளுகின்றன? அதை விட மோசமான அல்லது சீனாவை போலவே பிற்போக்கான கற்கால நாகரிகத்தை சட்டமாக வைத்துள்ள சவுதியை அமெரிக்க செய்தித்தாள்களும் புதிதாக முளைத்த வாக்ஸ், குவார்ட்ஸ், பஸ் ஃபீட், வெர்ஜ் போன்ற வலையகங்களும் ஏன் தொடுவதேயில்லை?
சவுதியின் அரசர்கள் ஆகட்டும், வர்த்தகர்கள் ஆகட்டும் – அமெரிக்க செய்தித்துறையோடு புரையோடிய நட்பு பேணுபவர்கள். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள். 2006 முதல் 2010 வரையிலான நான்கே ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் போர்க்கருவிகளில் 275% அதிகமாக சவுதி அரேபியா வாங்கிக் குவிக்கிறது. எண்ணெய்க் கிணறுகளுக்கு மத்தியில் திரிசங்கு சொர்க்கமாக தனித் தீவை அமெரிக்கர்களுக்காக சவுதி உருவாக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட பணக்கார பாசத்தினால் ஊடகங்களும் சவுதி குறித்த உண்மை நிலைப்பாடுகளை அடக்கியே வாசிக்கின்றன. சவுதி இளவரசர் லாஸ் ஏஞ்சல்ஸில் பாலியல் குற்றங்களுக்காக மாட்டிக் கொண்டாலும் பெரிதுபடுத்தாது.
இந்திய தொழிலாளர்கள் தவறாக நடத்தப்படுவது மற்றும் உழைப்புச் சுரண்டல்
இந்தியாவிலும் இதே போன்ற ராஜபோக மரியாதை சவுதி அரேபியாவிற்கு வழங்கப்பட்டு வந்தது. இப்பொழுதுதான் அங்கிருக்கும் இந்தியர்கள் குறித்த நிலை குறித்து நாளிதழ்கள் செய்திகள் வெளியிடுகின்றன:
1. இந்தியர்களை சவுதி அரேபியா சொந்த செலவில் திருப்பி அனுப்பிகிறது || தினத்தந்தி
முகாம்களில் தங்கியிருப்பவர்கள் பிற நிறுவனங்களில் மீண்டும் வேலையை நாட அனுமதிப்பதாகவும் சவுதி அரேபியா அறிவித்து உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். சவுதி அரேபியா சென்று உள்ள வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே. சிங், இந்திய தொழிலாளர்களுக்கான ஏற்பாடுகளை முறைப்படுத்திய பின்னர் இந்தியா திரும்புவார்
சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், அங்கு ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சம்பள பாக்கியும் இருப்பதால், அவர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகின்றனர்.
3. சவுதியில் வேலை இழக்கும் குடியேற்றதாரர்க்கு உதவ அழைப்பு || UCAN / வத்திக்கான் வானொலி
சவுதி அரேபியாவில், ஒரு பீப்பாய் எண்ணெய், 100 டாலரிலிருந்து, 30 டாலராக இவ்வாண்டில் குறைந்துள்ளவேளை, அந்நாடு, 2009ம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக, வரவுசெலவில் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது.
4. பாலைவனத்தில் தவிக்கும் இந்தியர்கள் || சிந்தனைக் களம் » தலையங்கம் – தி இந்து
பொருளாதார மந்தநிலை காரணமாகவும் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய விலை வீழ்ச்சி காரணமாகவும் பெட்ரோலிய வள நாடுகள் குறிப்பாக, சவுதி அரேபியாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கும் அவல நிலை உருவாகியிருக்கிறது. அன்றாடச் சாப்பாட்டுக்கே வழியின்றி பட்டினியில் வாடுகின்றனர். சவுதியில் மட்டும் இப்படி 10,000 தொழிலாளர்களின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மொத்தத் தொகையில் ரூ.2.5 லட்சம் கோடி குறைந்திருக்கிறது. வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளிலிருந்துதான் இந்தியாவுக்குத் தொழிலாளர்கள் அனுப்பிவைக்கும் தொகையில் 50% கிடைக்கிறது. அப்படி அனுப்பும் தொகையில் 40% அதாவது, ஒரு லட்சம் கோடி ரூபாய் கேரளத்துக்கு மட்டும் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கேரளத்திலிருந்து வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளுக்கு 24 லட்சம் பேர் வேலைக்காகச் செல்கின்றனர். அவர்களில் 11 லட்சம் பேர் திரும்புகின்றனர்.
வளைகுடா நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் அனுப்பும் தொகை மட்டும் கேரளத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 22% அளவுக்கு இருக்கிறது. அது மேலும் தேய்வதால் கேரளத்தின் பொருளாதாரத்துக்குப் பெருத்த பின்னடைவு ஏற்படும். அரசும் தனியாரும், கிராமங்களிலும் நகரங்களிலும் முதலீடுகளைப் பெருக்கினால் தவிர, கேரளத்தில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை தருவதும், வருமானத்தைத் தக்க வைப்பதும் இயலாததாகிவிடும்.
வெளிநாட்டுச் சிறை
சவுதியில் வேலை பார்ப்பதின் சௌகரியம் என்னவென்றால் வருமான வரி கட்ட வேண்டாம். எவ்வளவு சம்பளம் சவுதியில் கிடைக்கிறதோ, அத்தனையும் நமக்கே. நயா பைசா கூட அரசுக்கு கப்பம் செலுத்தத் தேவையில்லை.
ஆனால், எண்ணெய் விலை குறையக் குறைய, இந்த நிலை மாறுகிறது. 72 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறையை சமாளிக்க உள்ளூர்வாசிகளிடம் வருமான வரி போட முடியாது. அயல்நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தோரிடம் மட்டும் வருமான வரியை வசூலிக்க அரசு திட்டமிடுகிறது.
1980களில், இதே போன்ற நிலையில், எண்ணெய் விலை சரிந்தபோதும் அயலூர்க்காரர்களிடம் மட்டும் வரி போட்டு நிதி அதிகரிக்க சவுதி அரேபியா யோசித்தது. அப்போது தொழிலாளர்கள் எல்லோரும் ஒன்று கூடி போராட்டக் களத்தில் இறங்கினார்கள். வேலை நிறுத்தம் செய்தார்கள். வெளிநாட்டினருக்கு மட்டும் வரி விதிப்பு கொள்கை கைவிடப்பட்டது. இந்த முறை அரசு முந்திக் கொண்டது. போராடக் கூடியவர்களை வேலையை விட்டு கடாசி விட்டது. சம்பளமும் கிடைக்காமல், வேலைவாய்ப்பும் இல்லாமல், விமானத்திற்கான காசும் இல்லாமல் அனாதரவாக இருப்போருக்கு இப்போது பயணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் சவுதி மன்னர்.
தமிழ் நாட்டில் ரேஷன் அரிசி தள்ளுபடி விலையில் கிடைப்பது போல் சவுதியில் தண்ணீருக்கு தள்ளுபடி விலை. தண்ணீர் கொள்முதலுக்கு உண்டான விலையில் விற்றால், குடிமகன்கள் பொங்கி விடுவார்கள் என்பதால் சல்லிசாக விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த மானியத்தை ரத்து செய்வது மற்றும் புகையிலைப் பொருள்களுக்கு வரி விதிப்பது என்று வேறு சில திட்டங்களையும் சவுதி யோசிக்கிறது.
சவுதியில் வேலை செய்யும் நண்பருடன் பேசியதில் அவர் சொன்னது இது
இப்போது சவுதியில் வணிகம் மிக மோசமான நிலையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்த செய்திதான். சவூதி ஓஜர் (Saudi Oger) மட்டுமல்ல மிகப்பெரிய பல நிறுவனங்கள் (சவூதி பின்லேடன் உட்பட) பல நிறுவனங்கள் வேலையை விட்டுத்தூக்கியுள்ளன. அதேபோல சில நிறுவனங்கள் கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக சம்பளமும் வழங்க வில்லை. இதற்கு முக்கியக் காரணம் அரசு மெயின் காண்டிராக்டருக்கு வேலை முடித்ததற்கு உரிய பணத்தை வழங்கவில்லை. அவர்கள் தங்களுக்குக் கீழே இருக்கும் சப் காண்டிராக்டருக்கு வழங்கவில்லை. இப்படியே இது ஒரு சங்கிலி. இரு மாதங்களுக்கு முன்பாக சவூதி பின்லேடனைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். சவூதி சட்டத்தின் படி யாரும் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது.
மேலும், சவுதி சட்டத்தின்படி, எந்த இடத்தில் வேலை பார்க்க வந்தோமோ அந்த முதலாளியையோ நிறுவனத்தையோ விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்ல முடியவே முடியாது. வேலை பார்க்கும் இடம் கொத்தடிமை போல் நடத்தினாலும், பிச்சைக் காசு கொடுத்தாலும், அதே நரகத்தில் அப்படியே உழல வேண்டியதுதான் தொழிலாளியின் கதி. இதற்கு, கஃபாலா (பிணையாக்கல்) – கடனுக்காகவும் மற்ற பிரச்சினைக்காகவும் ஆட்களையோ பொருட்களையோ பிணையாக்குதல் என்று பெயர்.
கத்தார் நாட்டில் 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான கட்டுமானப் பணிகளில், இத்தகைய கடுமையான வேலை பளுவின் காரணமாக பல தொழிலாளர்கள் இறந்துள்ளனர். கத்தார் நாடே வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2010-ஆம் ஆண்டு மட்டும் 4 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.
சவுதியில் பிலிப்பைன்கள் யாரும் பிரச்சினைகள் இருந்தால் அந்த அரசு முடிந்தவரை போராடும். இந்தியர்கள் இத்தனை காலமும் இதுகுறித்து இங்குள்ள தூதரகம் பற்றி பொருமியதுண்டு. ஆனால் இப்போது மாற்று அரசின் அதிகாரிகள் தமது மக்களுக்காக பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. 15 டன் உணவை அவசர கால நிவாரணமாக களத்தில் இறங்கி பட்டினியில் வாடியவர்களுக்கு உதவி இருக்கிறது.
அவதூறா? அடிமை வர்த்தகமா?
பத்தாயிரம் இந்தியர்கள் இருநூறு நாள்களாக சம்பளமின்றி வேலை செய்கிறார்கள். அதுவும் இவர்கள் எல்லோரும் கை நிறைய ஊதியம் வாங்கும் கணினி நிரலாளர்களோ, எண்ணெய் நிறுவனங்களை மேய்க்கும் மேலாளர்களோ, வங்கிகளில் வர்த்தகம் நிர்வகிக்கும் கணக்கர்களோ இல்லை. தினக்கூலியாக குப்ப்பை அப்புறப்படுத்துவதில் இருந்து கட்டுமானப்பணியில் (Over 800 Saudi companies are ‘ignoring summer midday work ban’ – Al Arabiya English) சுட்டெரிக்கும் வெயிலில் உடலுழைப்பைக் கடுமையாகக் கோரும் ஊழியர்கள்.
இவர்களின் உண்மை நிலையை அம்பலப்படுத்தினால்,உலகிற்கு தெரியப்படுத்தினால் என்னவாகும்?
பொங்கியெழுந்தது அரேபிய அரசு. “முப்பது லட்சம் இந்தியர்கள் சௌக்கியமாக சவுதியில் இருப்பது உங்கள் கண்ணில் படவில்லையா? சவுதி ஓஜரில் ஏதோ 800 சொச்சம் இந்தியர்கள் வேலையிழந்தார்கள். அதற்கு போய், இப்படி கூச்சல் போடுகிறீர்களே!” என்கிறார்கள்.
“இந்தியர்களுக்கு மட்டுமா இந்த மாதிரி அரை வருட சம்பள பாக்கி வைத்திருக்கிறோம்? பாகிஸ்தானியர்கள், பங்களாதேஷிகள் போன்றவர்களுக்குக் கூடத்தான் பணம் தராமல் வேலை வாங்கி வந்தோம். அந்த நாட்டினர் எந்த சத்தமும் போடாத போது நீங்கள் மட்டும் உணவு வேண்டும் எனக் கேட்பது அக்கிரமமாகத் தெரியவில்லையா?” என நியாயம் கேட்டிருக்கிறார்கள்.
“இந்தியாவில் கூட கிங்ஃபிஷர், சஹாரா போன்ற நிறுவனங்கள் திவாலாகின. அது போல் எங்கள் சவுதி நிறுவனங்களையும் போண்டி ஆக்கி விட்டார்கள் இந்தியர்கள். எங்களின் பொருளாதார நிலையை புரிந்து கொள்ளாமல் (Saudi Arabia’s economic time bomb | Brookings Institution) சம்பளம் கேட்பவர்களை என்ன செய்யலாம்?” என முறையிடுகிறார்கள்.
“இந்தியாவில் முஸ்லீம்களுக்கு மரியாதை இல்லை என்பதில்தான் இங்கே மீன் பிடிக்க வருகிறார்கள். அதற்குக் கூட கடிதம் எழுதலாமா?” என வருந்துகிறார்கள்.
செய்தி – முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்: தனியார் நிறுவனம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டப்படி 63 மீனவர்களுக்கும் மாதந்தோறும் உரிய சம்பள பணத்தை கொடுக்கவில்லை. அந்த 63 மீனவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அந்த தனியார் நிறுவனத்திடம் உள்ளது. இதனால் 63 மீனவர்களும் சவுதி அரேபியாவில் தவித்தப்படி உள்ளனர். எனவே தாங்கள் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதருக்கு உத்தரவிட்டு, சவுதி அரேபியாவில் உள்ள உயர் அதிகாரிகள் கவனத்துக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும்.
ஜார்க்கண்டை சேர்ந்த 25 வயது பெண்ணின் கணவர் சவுதியில் வேலைக்கு சென்ற இடத்தில் அவரது முதலாளியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை பார்க்க அந்த பெண் ஓராண்டு காலமாக காத்திருக்கிறார். “இதைப் போன்றோரின் நிலையை புத்தகமாக வேறுப் போட்டால், நாங்கள் மாறி விடுவோம் என நம்புகிறீர்களா?” என எழுத வைக்கிறார்கள்.
”இப்போதைக்கு இருட்டில் தடவிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் எஸ். இருதயராஜன்: We’re groping in dark on issues facing Indians in Middle East: Expert | The News Minute
சவுதி மன்னர் எப்போது படுதாவை விலக்க அனுமதிப்பாரோ?
தொடர்புள்ள பதிவுகள்
- மைத்ரேயன்: பாலையில் துவங்கிய நெடும் பயணம்
- அருணகிரி: அரபு நாடுகளில் புரட்சி – ஜனநாயகம் சாத்தியமா?
- விக்கி: ஆதாரமற்ற பொருளாதாரம்
- சுந்தர் வேதாந்தம்: எண்ணெய்யும் தண்ணீரும்: இயற்கைவள சாபம்
- முகின்: எல்லைக் கோட்டைத் தாண்டி- இந்திய வெளியுறவு செயல்பாடு
- பி.எஸ்.நரேந்திரன்: சிரியாவும் இன்ன பிறவும்…
- ஜெயக்குமார்: ஷியாவா? ஸுன்னியா?
- லக்ஷ்மண பெருமாள்: சவூதி அரேபியாவில் பெண்கள் நிலை – முன்னேற்றமா?
- குளக்கரை:சவுதி நிதி, அரபு விதி
- பி.எஸ்.நரேந்திரன்: பாலை நிலத்து நினைவலைகள்
- ஒரே நாளில் 47 பேரை வெட்டிச் சாய்த்த நாட்டிற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பீடம்
- அரவிந்தன் நீலகண்டன்: உடையும் இந்தியா? – புத்தகத்திலிருந்து ஒரு பகுதி