Daily Archives: ஜனவரி 4, 2016

நகரேஷு நியு யார்க்

பிரையன் ஈனோ இங்கே கதை சொல்கிறார். அந்தக் கதையை நான் இவ்வாறு என் மொழியில் சொல்லிப் பார்க்கிறேன்:

1978ஆம் வருடம். நியு யார்க் நகரத்தில் இருந்தேன். அரசல் புரசலாக எனக்கு அறிமுகமாகியிருந்த அந்தப் பணக்காரரின் புதுமனைப் புகுவிழாவிற்கு அழைப்பு வந்திருந்தது. குண்டும் குழியுமான சாலைப் பயணம். வாடகைக் கார் ஓட்டுனர் என்னை சந்தேகாஸ்தபமாகப் பார்த்துக் கொண்டேதான் வண்டியோட்டினார்.  போகும் வழியி்ல் வீட்டின் வெளிச்சுவர்களில் விவகாரமான மொழியில் கரியினால் மிரட்டப்பட்ட கிறுக்கல்களும் காணக்கிடைத்தது.

இறுதியாக அந்தப் பாழடைந்த பழைய பின்னி மில்ஸ் கட்டிடம் போல் சிதிலமடைந்த கோடவுனில் வண்டியை நிறுத்தினார். அதன் வாயிற்படிகளில் இருவர் மயங்கி உலகமறியாத போதையில் கிடந்தனர். தெருவில் வேறு அரவமே இல்லை.

”நாம தப்பா வந்துட்டோம்னு நெனக்கிறேன்”, என்று ஈனஸ்வரத்தில் சொல்லிப் பார்த்தேன்.

அவர் சரியான விலாசத்திற்குத்தான் கொண்டு வந்து சேர்ந்த்திருந்தார். என்னுடைய நண்பன் உற்சாகமாகக் கூவினான், “மேல் மாடி!!”. எனக்கு இன்னும் கொஞ்சம் நம்பிக்கை பாக்கி இருந்தது. அவன் விளையாட்டுப் பையன். அழைப்பு மணியை அடித்துவிட்டு, திறக்கும்போது, “எல்லாம் நிஜம்னு நம்பிட்டியா…” என்று வேடிக்கை மாயம் செய்யப்போகிறான் என கற்பனை செய்துகொண்டேன்.

மின்தூக்கி க்ரீச்சிடும் அபாய ஓசையுடன் அசைந்தாடி அதல பாதாளத்தில் தள்ளும் பிரக்ஞையுடன்  வந்து சேர்ந்தது. லிஃப்டில் இருந்து வெளியே வந்தால், தகதகவென இழைக்கப்பட்ட கோடானுகோடி மினுக்கும் மாளிகை அரண்மனைக்குள் கால் வைத்தேன்.

எனக்கு விளங்கவில்லை. இவ்வளவு படோடாபமாய், இத்துணை பணம் வாரியிறைத்து, இந்த மோசமான பகுதியில் எதற்காகக் குடியேற வேண்டும்? விருந்துபசரிக்கும்  அவனின் குடும்பத்தலைவியிடம் கேட்டே விட்டேன்: “உங்களுக்கு இந்த டஞ்சன் பிரதேசம் பிடித்திருக்கிறதா?”

“நான் குடியிருந்த வீடுகளிலேயே, இந்த இடம்தான் பெஸ்ட்!

“ஆனால், வெளியில் பார்த்தால் பயமாக இருக்கிறதே?”

“ஓ… பேட்டையைச் சொல்கிறீர்களா! அது வெளியில் அல்லவா இருக்கிறது!?!”

நியு யார்க் என்றால் இந்த மனநிலைதான். இந்த மனோபாவம்தான் என்னை மீண்டும் மீண்டும் நியு யார்க் நகரத்திற்கு இழுக்கிறது. எல்லாமே கொண்டாட்டம்; எதிலும் வேகம்; இப்பொழுதைய தருணத்தைக் கொண்டாடுவோம்; நாளை நம் நாளோ… நமன் நாளோ!

New_York_Pigeon_Sky_Towers

இந்த தடவை நான்கு நாள் நகரத்தில் கழிக்க முடிந்தது.

  1. முதல் நாள்: விட்னி அருங்காட்சியகம்
  2. இரண்டாவது நாள்: செண்ட்ரால் பார்க்
  3. உலக வர்த்தக மையம் + 9/11 நினைவுச் சின்னம்
  4. டைம்ஸ் சதுக்கம் & அலாவுதீனும் அற்புத விளக்கும்

நான்கையும் பற்றி தனித்தனியே எழுத வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் இயக்குநர் இளமுருகுவையும் எழுத்தாளர் அரவிந்தன் கன்னையனையும் சந்தித்ததையும் நண்பர் டைனோ மற்றும் அவரின் மனைவியின் அறுசுவை விருந்தோம்பலையும் அவர்களின் உபசரிப்பையும் டைனோ வீட்டில் உண்ட நளபாக விருந்தையும் விவரிக்க வேண்டும்.

இன்ஷா நியு யார்க்.

செம்புலம்

http://www.youtube.com/watch?v=6qFNhKSO9XE

  1. துவக்கத்தில் அர்ப்பணிப்பு, அஞ்சலி எல்லாமே பிரும்மாண்டத்தை முழக்கமாக தெரிவிக்கின்றன. (அவை தமிழிலும் இருக்கலாமோ?)
  2. புத்தம் புதியதாக கட்டப்பட்ட நூறடுக்கு மாடி உலக வர்த்தக மையம் ஒரு ஷாட்; உடனடியாக இலையுதிர்ந்த காடு போன்ற பெருஞ்சோலையை பருந்து போல் ஆயிரம் அடியில் இருந்து பார்க்கும் தூரயியங்கி கோணம்; இருட்டில் முகம் மட்டுமே தெரியுமாறு ஒளிப்பதிவு என ஒவ்வொரு ஃப்ரேமும் செதுக்கி இருக்கிறார்கள்.
  3. பையை அப்படியே பின் தொடரும் பட அமைப்பு; கார் புறப்பட்டுச் செல்வதை வித்தியாசமாக மனதில் பதியுமாறு அமைத்திருக்கும் கோணம் – எல்லாமே உறுத்தாமல் உள்ளத்தில் பதியும் திரைச்சிந்தனை.
  4. பொண்டாட்டீஸ் ஆர் அஸ் போல் இதிலும் அனாதைப் பையில்தான் கதை ஆரம்பிக்கிறது. இரண்டும் சத்யராஜ்குமார் திரைக்கதை என்பதாலா? அல்லது ஒளிப்பதிவாளர் தினேஷ் ஜெயபாலனின் கைங்கர்யமா?
  5. ஐ.எஸ்.ஐ போலி அடையாள அட்டை எல்லாம் தயார் செய்திருக்கிறார்கள். (எனக்கு ஒண்ணு  பார்சல் பண்ணுங்க)
  6. சோபாவில் துப்பாக்கி ஒளித்து வைத்திருக்கும் இடம் தூள். (நிஜமாச் சொல்லுங்க… எந்த சினிமாவில் இதைப் பார்த்தீங்க?)
  7. நான்காண்டுகள் முன்பும் மோகன்ராம் அதேத் தோற்றத்தில் இல்லாமல் இருந்திருக்கலாம். தலைக்கு கறுப்பு மசி, தாடி இல்லாத முகம் என்று இல்லாவிட்டாலும், மழுவோ மச்சமோ, ஒட்டி விட்டிருக்கலாம்.
  8. ‘முஸ்தபா… முஸ்தபா’ போல் அந்த நட்புக் காட்சிகள் வலுவின்றி க்ளிஷேவாக, தற்பால் உறவின் விளிம்புக்கு அழைத்துச் செல்கின்றன.
  9. எங்கே நிஜம், எங்கே கிராஃபிக்ஸ், எங்கே ஸ்டாக், எங்கே வெட்டி ஒட்டல் என தெரியாதவாறு ஏர் இந்தியா பறக்கிறது; குண்டுகள் வெடிக்கிறது; துப்பாக்கிகளும் தோட்டக்களும் பின்னணியில் படச்சுருள்களும் சுவாரசியம் கூட்டுகின்றன.
  10. கண்ணாடியில் பிரதிபலிப்பு தெரிவது பழைய வாழ்க்கையை ஜீப்ராவை நினைத்துப் பார்க்க வைக்கிறதா… காதில் ஏதோ கர்ஜனை ஆணை வாங்கி கறுப்புக் கண்ணாடியுடன் அவருடனேயே நடக்க வைப்பதன் மூலம் வெளிச்சத்தில் வாழ்ந்தாலும் இருட்டில் இருப்பதைக் குறிக்கிறதா! யோசிக்க வைக்கிறார்கள்

Sembulam_Shorts_Films_Movies_Ila_Tractor_Satyaraj_Kumar

பொண்டாட்டீஸ் ஆர் அஸ்

http://www.youtube.com/watch?v=DLQO1Jru0mU

  1. குறும்படத்தின் துவக்கத்தில் வரும் அறிவிப்புகள், இந்தப் படம் முழு நீள நகைச்சுவைப் படம் என கபர்தார் செய்கிறது.
  2. வேட்டையாடு விளையாடு, சி.எஸ்.ஐ மியாமி போல் பதினாறு, முப்பத்திரண்டு என்று நொடிக்கு நொடி பல் அடுக்கு பிரிவாக விரிந்து மாறும் குட்டித்திரைகள், விலை உயர்ந்த மருத்துவ சாதனங்கள், என காட்சியமைப்பிலும் அரங்கப் பொருள்களிலும் நல்ல கவனம் செலுத்திய தயாரிப்பு.
  3. கொலாஜ் போல் ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு துணுக்கு காட்சி, அதன் மேல் நாலைந்து சம்பவங்கள் என்று வசனங்கள் குறைவாக இருப்பது பலே!
  4. ஒரே சமயத்தில் அஷ்டலஷ்மியாக நாலைந்து நபர்கள் வெவ்வேறு சட்டகங்களில் வெவ்வேறு லஷ்மிகளாக தோன்றியிருப்பது சிரத்தை.
  5. உயிர்ப்போலி (க்ளோனிங் டிராக்கர்) உருவாக்கும் கணித்திரையாகட்டும்; அலுவல் திட்டத்தில் வரும் உளுத்தம் பருப்பு, தயிர் ஆகட்டும்; கோப்புகளையும் கணினி இடைமுகத்தையும் பாவ்லா காட்டாமல், உண்மையாகவே தயாரித்திருக்கிறார்கள்.
  6. பெண்ணுக்கு ஆண் குரல் மாற்றம் எல்லாம் கச்சிதமாக இருந்தாலும், ஹேமா ஏன் அவ்வளவு மோதிரம் அணிந்திருக்கிறார் என்பதும், லஷ்மி ஏன் சீமந்தம் போல் அத்தனை வளையல் அணிந்திருக்கிறார் என்பதும் அவிழாத முடிச்சு.
  7. உணர்ச்சிகரமான தருணங்களில் ஆங்கிலத்தில்தான் வசனம் அமைந்திருக்கிறது என்பது நெருடல்

 

Clone_Pondaatis R Us