Daily Archives: ஓகஸ்ட் 2, 2013

Hindu vs Greek Mythology: Adi Sankara and Orpheus

சுவாரசியமான கதைகளையும் முக்கியமான புத்தகங்களையும் மகளின் புண்ணியத்தால் படிக்க முடிகிறது. அவளின் லத்தீன் மொழி வகுப்பில் கிரேக்க நாட்டு தொன்மங்களை சொல்கிறார்கள். ஹிந்து மதத்தையும் பாரதப் புராணக் கதைகளையும் பல சமயம் ஒப்பிட முடிகிறது.

இளையராஜாவிற்கு தாத்தா போல் இசைத் திறன் கொண்டவன் ஆர்ஃபியஸ். அவன் காதல் மனைவி இறந்துவிட ’அவ என்ன என்னத் தேடி வந்த அஞ்சல’ என்று டோப்பு அடித்து சோகத்தில் மூழ்குகிறான். ’போனால் போகட்டும் போடா’ பாடாமல் அவளை மீட்டுவர உறுதிகொண்டு மாண்டவர்கள் வாழும் பாதாள உலகிற்குச் செல்கிறான். தன் மனைவியைத் தன்னோடு அனுப்பி வைக்க வேண்டுகிறான். பூமிக்குச் சென்று சேரும்வரை எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது என்ற நிபந்தனை விதித்து அவர்களும் அனுப்பி வைக்கிறார்கள். மனைவி பின் தொடரச் செல்லும் ஆர்ஃபியஸ், பூமியில் காலடி வைக்க ஓரடி இருக்கும்போது திரும்பிப் பார்த்துவிட, நூறு பாடல்களை அம்பிகாபதி தொடர்ந்து இயற்றி அரங்கேற்றினாலும் மரண தண்டனை கிடைத்தது போல் அவன் மனைவி பாதாள உலகிற்குள் மீண்டும் சிக்கிக் கொள்கிறாள்.

எம்.ஜி.ஆர். முதல் இளையராஜா வரை கொல்லூர் மூகாம்பிகை ரொம்ப பிரசித்தம். இப்பொழுது அந்த ஸ்தல புராணம்:

ஆதி சங்கரரின் கனவில் கலைவாணி தோன்றியபோது அவர் தேவியை தன்னை கேரளாவுக்கு பின் தொடருமாறும், தேவி எங்கு உறையவேண்டும் என்று அவர் விரும்புகின்றாரோ அங்கு தேவி எழுந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டதாகவும், இதற்கு சம்மதித்த தேவி ஒரு நிபந்தனையும் விதித்ததாக சொல்லப்படுகிறது. அதாவது, தான் தொடர்ந்து வருவதை அவர் திரும்பிப்பார்க்கக்கூடாது என்று சாரதாதேவி ஆதி சங்கரரை கேட்டுக்கொண்டார். அம்பாள் வருகிறார் என்பதை கொலுசு ஓசையை வைத்து உணர்ந்தார் சங்கரர். இப்படி கேரளாவை நோக்கி நடந்த ஆதிசங்கரர் மூகாம்பிகா வந்தபோது அவருக்கு பின்னால் கேட்டுக்கொண்டிருந்த தேவியின் கொலுசு ஓசை நின்றுவிட்டது. சங்கரர் திரும்பி பார்த்துள்ளார். உடனே தேவி தன் நிபந்தனையை கூறி தன்னால் அந்த இடத்துக்கு மேல் வர முடியாது என்று கூறுகிறார்.

முதலாவது கிறித்துவிற்கு முந்தைய கதை. சங்கரரும் சரஸ்வதியும் ஒன்பதாம் நூற்றாண்டில் நடை பயின்றிருக்கிறார்கள். எங்கே நல்ல code கிடைத்தாலும் அதை என்னுடைய பிராஜெக்டிற்கு பயன்படுத்துவது போல் சும்மா திரும்பிப் பார்த்த லாஜிக் இல்லாத விர்ஜில் சொன்ன கதை போல் இல்லாமல் சங்கராச்சாரியாரும் மெத்த ஆய்ந்து பொருத்தமாக எடுத்தாண்டிருக்கிறார்.

via Gokul Prasad

இந்துக் கடவுள்களுக்கு கிரேக்கக் கடவுள்களின் அல்லது மன்னர்களின் சாயல் இருப்பதைப் பற்றி நண்பர் கிருஷ்ண துவைபயனாவுடன் பேசிக்கொண்டிருந்தேன். இதையெல்லாம் அறுதியிட்டு நிறுவ முடியாது எனினும் கிரேக்கக் கடவுள்களின் மறுவார்ப்பே இந்தியக் கடவுள்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான தியரி தான்.

Zeus-இன் மகனான Dionysus-க்கும் சிந்துசமவெளி நாகரீகத்தின் கடவுளான பசுபதிக்கும் (ருத்ரன்) இடையே ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. பசுபதி என்றால் மிருகங்களின் தலைவன் எனப் பொருள். தியோனிஸஸின் புனித விலங்குகளாக சிறுத்தையும் புலியும் பாம்பும் எருதும் இருக்கிறது. பசுபதி தான் பிற்காலத்தில் சிவபெருமானாக அறியப்பட்டார். அவர் கழுத்தில் பாம்பிருக்கிறது. புலித்தோல் ஆடை அணிந்திருக்கிறார். இருவருக்குமான ஒற்றுமைகள் பிடிபடுகிறதா? தியோனிஸஸ் இமய மலைக்கு விஜயம் செய்திருப்பதற்குண்டான ஊகங்களையும் சில ஆய்வாளர்கள் முன்வைத்திருக்கிறார்கள்.

இந்த தியோனிஸஸின் கிரேக்கப் புராணக் கதையையும் கிரேக்க மன்னன் அலெக்ஸாந்தரின் வரலாறையும் கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து சிவபெருமானுக்கும் முருகனுக்கும் பங்கு பிரித்திருக்கிறார்கள். அலெக்ஸாந்தரை ‘ஸ்கந்தர்’ என்றே பண்டைய குறிப்புகளில் வழங்குகிறார்கள். நம்முடைய ‘தமிழ்க்கடவுளான’ முருகனின் வீரப்பிரதாபங்களை முன்னிறுத்தும் புராணக் கதையின் தலைப்பு ‘ஸ்கந்த புராணம்’. அலெக்ஸாந்தர் போரிட்ட இந்திய மன்னனின் (போரஸ்) கொடியில் சேவல் இருந்திருக்கிறது. முருகனின் கொடியில் இருப்பதும் சேவல் தான். அலெக்ஸாந்தரை சந்திரகுப்த மௌரியர் கடவுளாக வணங்கியதற்கான சான்றாதாரங்கள் உண்டு.

பாலகனான தியோனிஸஸை கவனித்துக்கொள்ள பன்னிரெண்டு பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். முருகனுக்கு ஆறு கார்த்திகைப் பெண்கள். அலெக்ஸாந்தரை அல்லது ஸ்கந்தரை கடவுளின் மகன் என்றும் இளவரசன் என்றும் வர்ணித்திருக்கிறார்கள். குமரன் என்றாலும் இளவரசன் தான். இன்னும் என்னென்னவோ கட்டுடைப்புகள், சந்தேகங்கள், ஊகங்கள். மேலும் ஆர்வமுள்ளவர்களுக்கு சில இணைப்புகளை பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறேன்.

ஆக, அலெக்ஸாந்தரைத் தான் நாம் முருகனாக வணங்கிக் கொண்டிருக்கிறோமா? இந்த விஷயம் நாம் தமிழர் தம்பிகளுக்குத் தெரியுமா?

Proverbs: Umbrella

’வெளியே விரியும்; வீட்டிற்குள்ளே சுருங்கும்’

மகளின் தமிழ்ப் புத்தகத்தில் கொடுத்திருந்த விடுகதைக்கு விடை தேடிக் கொண்டிருந்தோம். அவளும் அறிவியல்பூர்வமாக யோசித்து ‘தோல்’ என்றாள். குளிர்காலத்தில் தோல் தசைகள் சுருங்கும். கோடை சூரியன் காய்ச்ச ஆரம்பித்த பின் சிவப்பாகி நீளும்.

எனக்கு சரியான விடை அது இல்லை. அடுத்ததாக என் மனைவி விடை தெரியும் என்றாள். ‘மில்கி வே’, புவி. நமது சூரிய மண்டலத்தைப் பொருத்தவரை, இந்தப் பேரண்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. ரொம்ப நோவா பார்க்கிறாளோ என்று சந்தேகம் வந்துவிட்டது.

இப்படியே நிறைய பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
– பலூன். வெளியில் போனால் பறக்கிறது.
– முட்டை. வயிற்றுக்குள் குட்டி; வெளியில் வந்தால் குஞ்சு; கொஞ்ச நாளிலேயே முழு வளர்ச்சி
– புத்தகம். கிணற்றுத் தவளையாக இல்லத்திற்குள்ளே முடங்கினால் சிந்தனை சுருங்கும்; உலகைப் பார்க்க கிளம்பினால் மனம் விரிவடையும்.

எதுவும் திருப்தியில்லை. நான் கவிஞன் இல்லை. விஞ்ஞானி. விடை ஒன்றுதான் இருக்க முடியும்.

கடைசியாக துப்பு கொடுக்க ஆரம்பித்தேன். “மழை.”

மகள் உடனடியாக விடை சொன்னாள். “அம்ப்ரெல்லா.”

“தமிழில் சொல்லு…”

“மழையில் இருந்து தப்பிக்க ஷீல்ட் மாதிரி உபயோகிக்கிறோம். எனவே, அதன் பெயர், ‘மழைக் கேடயம்’.