ஜூன் போனால் சென்னைக் காற்றே


1. சென்னையில் டூ வீலர்கள் எல்லாரும் தலையில் எதாவதுக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்களுக்கு ஹெல்மெட். ‘சென்னை-600 028’ விஜயலஷ்மிகளுக்கு துப்பட்டா. இஸ்லாமியர்களுக்கு தொப்பி.

2. பதிவர் சந்திப்புகள் பல சிட்டி சென்டரில் நடக்கிறது. இரைச்சலுக்கு மத்தியில் வாகாக இல்லை. சீட்டு பிடிப்பது தமிழ்மணத்தில் பின்னூட்டம் இட்டு இடம் தக்கவைத்துக் கொள்வது போன்ற நச்சுப்பிடிச்ச வேலை. மழை பெய்தாலும் ஒதுங்க இடம் தரும் திறந்த வெளி வுட்லண்ட்ஸுக்கு மாற்று கிடைக்க வேண்டும்.

3. குறைந்த நிறுத்தங்களில் நிற்கும் பேருந்து, சாதா பல்லவன் என்று இரண்டு வகை மட்டுமே அறிந்த எனக்கு, ஏசி, வெறும் சி, சி இல்லாத ஏ என்று குழப்பமான மாநகரப் போக்குவரத்து. ஒவ்வொரு வண்டியிலும் ஏறியவுடன் நடத்துநர் ‘மினிமம் இருபது ரூபா’ என்று ஆட்டோ ஓட்டுநரை ஒத்து மிரட்டுகிறார்கள்.

4. நுகர்வோருக்கானப் பொருட்காட்சியில் உள்ளே செல்வதற்கு ஐம்பது ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். நண்பர் முன்பு எப்போதோ சொன்னதுதான் நினைவிலாடியது: ‘வெளிநாடு போகிறவர்கள், எந்த நிலையில் சென்றார்களோ, அப்படியே தேங்கிப் போயிடறாங்க! தமிழ்நாட்டுக்காரங்க தற்காலத்துக்கு ஏத்தபடி அட்ஜஸ்ட் பண்ணி மாத்திக் கொண்டேயிருக்காங்க.’

5. சென்னை சிடி சென்ட்டரை விட ஸ்பென்சர்ஸில் நவநாகரிக யுவதிகள் வசந்த்களுடன் சுஜாதாவின் எழுத்தை நிஜமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

6. தசாவதரத்தை காலை ஆறு மணியில் இருந்து இரவு பதினொன்று வரை 15 காட்சிகள் ஐநாக்ஸில் திரையிட்டிருந்தார்கள். எல்லா அரங்குமே நிறைந்து விட்டிருந்தது. ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ செல்லலாம் என்று திரையரங்கைப் பார்க்கும் ஆசையில் சென்றால், ‘பேட்டரியை குப்பைத் தொட்டியில் போடுவோம்’, ‘செல்பேசிக்கு தடை’ என்று ஜபர்தஸ்து செய்து கொள்கிறார்கள்.

7. மேலேக் குறிப்பிட்ட ‘ச.சு.’ முதற்கொண்டு இன்டியானா ஜோன்ஸ் வரை துணையெழுத்துகளுடன் பாரிமுனையில் டிவிடியில் இருபது ரூபாய்க்கு லோல்படுகிறது. தசாவதாரமும்தான்.

8. கபாலி கோவிலை பிரதோஷ காலத்திற்காகவாவது எக்ஸ்டென்சன் செய்ய வேண்டும். ‘நந்தா’ பார்த்தபிறகு எல்லோருக்கும் திரயோதசி மகிமை தெரிந்துவிட்டிருக்கிறது.

9. அகலபாட்டை இணையம் சுறுசுறுப்பாக பறக்கிறது. இந்த வேகத்தில் வலை கிடைத்தால், இந்தியாவில் டாரென்ட் இறக்கம் புகழ்பெறும்.

10. இத்தனை மணிக்கு வண்டி வரும் என்பதை 21ஜி, இருவுள் விரைவு வண்டி நிறுத்தங்களில் போட்டிருக்கிறார்கள். இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது போல், இந்த நேரவிவரங்களையும் கணக்கில் எடுத்து கர்மசிரத்தையாக கடிகாரத்தைப் பார்க்க கூடாது.

2 responses to “ஜூன் போனால் சென்னைக் காற்றே

  1. ‘வெளிநாடு போகிறவர்கள், எந்த நிலையில் சென்றார்களோ, அப்படியே தேங்கிப் போயிடறாங்க! தமிழ்நாட்டுக்காரங்க தற்காலத்துக்கு ஏத்தபடி அட்ஜஸ்ட் பண்ணி மாத்திக் கொண்டேயிருக்காங்க.’ – உண்மை. வெளிநாடு போகிறவர்கள், அதையே தங்கள் வாழ்நாளில் அடைய வேண்டிய ஒரே லட்சியமாக கொண்டிருக்கிறார்களோ.
    – மாது.

  2. Probably they are too soon to be hit with mid-life crisis or US makes them lazy & pampered.

bsubra -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.