முதலில் குமுதம் நிரஞ்சன் வகை பயோடேட்டா:
பெயர்: பூங்கா
வயது: செப்டம்பர் வந்தால் ஒராண்டு
நண்பர்கள்: எல்லா திசைகளிலும் இல்லை
திடீர் எதிரிகள்: நாலு கிலோபைட்டுக்கு மேல் எழுதியும் பூங்காவில் இடம்பெறாதவர்கள்
நீண்டகால எதிரிகள்: பாரதீயவாசிகள்
தொழில்: எல்லாரையும் எல்லாவற்றையும் படிக்கவைப்பது
பழைய பொழுதுபோக்கு: விவாதாங்களை நீட்டித்தது
புதிய பொழுதுபோக்கு: தொகுப்பாளரின் மேசையிலிருந்து மூச்சு வாங்க வைப்பது
பிடித்த வேலை: பழைய கதைகளை கிளறுவது
பிடித்த இடம்: தமிழ் பாரதி அல்ல
மறந்தது: பூந்தோட்டம்
மறக்காதது: ‘இணையத்தமிழின் முதல் வலைப்பதிவிதழ்’ என்று பிரஸ்தாபிப்பது
விரும்புவது: வாழ்த்துச் செய்திகளைப் படிப்பது
கிடைப்பது: பயனர்களின் தொழில்நுட்ப பரிந்துரை
எரிச்சல்: நேரந்தவறிய ‘தமிழ்மணம் வாசிப்பில்‘ பத்திகள்
சமீபத்திய சாதனை: தொடர்ச்சியாக முப்பது+ இதழ்கள் கொண்டு வருவது
நீண்டகால சாதனை: தமிழில் வலைப்பதிவுகள் என்றால் தமிழ்மணம் என்றாக்கியது
இப்பொழுது திருவிளையாடலுக்கு மாறுவோம்:பிரிக்க முடியாதது என்னவோ? பூங்காவும் புரியாமையும்
பிரியக் கூடியது? பூங்காவும் பெண்ணியமும்
சேர்ந்தே இருப்பது? பூங்காவும் புரட்சியும்
சேராதிருப்பது? பூங்காவும் பட்டிமன்றமும்
கேட்கக் கூடாதது? இடுகைகள் ஏன் இடம்பெறவில்லை
கேட்கக் கூடியது? இடுகைகளை இடம்பெற்றதற்கு நன்றிகள்.
சொல்லக்கூடாதது? பூங்காவில் கருத்து சுதந்திரம்
சொல்லக்கூடியது? ஊடகங்களில் கருத்து சுதந்திரம்
பார்க்கக்கூடாதது? பிடித்தவர்களின் மறுபக்கம்
பார்த்து ரசிப்பது? புனிதப்பசுக்களின் மறுபக்கம்
இதழுக்கு வேண்டியது? இடுகைகளின் சம்மதம்











பிச்சு ஒட்தறுரீங்க. இங்க ரெம்ப நாளா வராமப் போயிட்டேனே
அடிக்கடி வாங்க சிறில்
பா.பா வாழ்த்துக்களுக்கு நன்றி!
//நீண்டகால எதிரிகள்: பாரதீயவாசிகள்//
அப்ப நீங்களும் பாரதீய (தீய) வாசி இல்லையா!?
//சொல்லக்கூடாதது? பூங்காவில் கருத்து சுதந்திரம்//
பூங்காவில் கருத்துச் சுதந்திரம் என்பது எனக்குப் புரியவில்லை பா.பா. பூங்காவின் நிலைப்பாடு (சமூக, அரசியல் தளங்களில்) வெளிப்படையானது. இதில் மாற்றுக்கருத்துகளில் அதனளவில் நியாயமானதும், பெருவாரியான சமூகத்தினரின் மேலான அக்கறையோடும் எழுதப்பட்டவை என்று கருதுபவற்றை ஆசிரியர் குழு தொகுப்பதில் தயக்கம் காட்டியதாக நான் நினைக்கவில்லை. இந்ததவிசயத்தில் புகழ் பூத்த ஆங்கில நாளிதழைவிட பூங்கா வாசகருக்கு வெளிப்படையாகவே இருக்கிறது. நடுநிலை என்ற போலி முகமூடியை அணிவதில்லை.
உங்கள் உழைப்பும், சேகரிப்பும் பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியது.
தங்கமணி,
தங்கள் வருகைக்கும் பதிலுக்கும் நன்றிகள்.
புதிய பூங்காவை பார்த்து விட்டு எனக்கு ஏதாவது குறை, விண்ணப்பம், விருப்பம் இருந்தால் முன்வைக்கிறேன். இல்லாமல் போகாது. 🙂
—————————————————————————–
—பூங்காவில் கருத்துச் சுதந்திரம் என்பது எனக்குப் புரியவில்லை—
தற்போதைய நிலையில் இந்த கருத்து எழுவதற்கு சில காரணங்கள்:
1. ‘தொகுப்பாளரின் மேசையிலிருந்து’ போன்ற சொந்தமாக (பிரத்தியேகமாக) எழுதப்படும் இடுகைகளில் பின்னூட்ட வசதியோ, பின் தொடர்ந்த கருத்தின் (ட்ராக்பேக்) சுட்டியோ இடம்பெற இயலாத நிலை.
2. ஒரு போக்கை/கருத்தை கண்டித்து கட்டுரை வெளியிடும் சம்யத்தில், அதற்கான எதிர் கருத்துக்களையும் அந்த வாரத்து பூங்கா இதழிலேயே வெளியிடாத நிலை.
இதற்கு இரு காரணங்கள் என்று நான் நினைக்கிறேன் (assumptions).
(i) சில சமயம் இந்த மாதிரி கட்டுரைகள் பதிவுகளிலேயே வெளியாகியிருந்தாலும், ‘பூங்காவுக்கு அனுப்ப சம்மதம் கிடையாது’ என்று சொல்லி இருப்பார்கள். அப்படியானால், இந்த மாதிரி முக்கியமான கட்டுரைகளை ‘பூங்காவின் பரிந்துரைகள்’ என்ற பெயரில் வாராவாரம் கோர்க்கலாம்.
(ii) சில சமயம் மாற்று சிந்தனை கொண்ட ஆக்கங்கள் எழுதாமல் போனதால் நேரலாம். அப்படிப்பட்ட நேரத்தில் பூங்காவே ‘எதிர் வாதங்களை’ (எழுதக் கூடியவர்களிடம்) கேட்டு வாங்கி வெளியிடலாம்.
அப்படி யாரும் எழுத முன்வராவிட்டால், அசல் பதிவில் வெளியான ‘வேறுபடும்’ பின்னூட்டங்களில் சிலவற்றையாவது, மற்றொரு பக்கத்தின் வாதத்தையும் represent செய்யும் விதமாக மேற்கோள் காட்டலாம். இதுவும் முடியாத பட்சத்தில் தொடர்புள்ள ஆங்கிலக் கட்டுரை சுட்டிகளையாவது கொடுக்கலாம்.
3) சில எழுத்தாளர்களின் பெயர்களையே மீண்டும் மீண்டும் அதே சார்பு நிலைகளில் பார்ப்பதால் ஏற்படும் (ஸ்டீரியோடைப்) அயர்ச்சி.
இதைத் த(க)விர்க்க புள்ளிவிவரங்களை வெளியிட்டாலே போதுமானது. எவ்வளவு பேர் பங்களித்துள்ளார்கள்? எத்தனை தடவை இன்னார் எழுதிய இடுகைகள் வெளியாகியுள்ளது?
4) அதே போல் எந்த எந்த சார்புகளில் கட்டுரைகள் வெளியாகிறது என்று தானியங்கியாக புள்ளிவிவரக் கணக்கு சொல்வது கடினம. என்றாலும் டக்கென்று யோசித்தால் இந்தியாவைப் பாராட்டியோ, மேற்கத்திய சாதனையாளர்களை விவரித்தோ, அமெரிக்க சந்தைப்படுத்தலை முன்வைத்தோ வந்த கட்டுரைகள் எத்தனை?
ஆனால், எந்த வாரம் சென்றாலும் தீர்வுகளை எதுவும் முன்வைக்காமல், இந்தியாவை திட்டும்/தாழ்த்தும் பதிவுகளை ஏராளம் பகிர்வது தொடர்கதையானது. (இது முன்முடிவுகளால் ஏற்பட்ட தோற்ற மயக்கமாகவும் இருக்கலாம். நான் கணக்கிட்டால் ஒரு எண்ணிக்கையும் பூங்கா குழு எண்ணினால் பிறிதொரு எண்ணும் வரும் சாத்தியக்கூறும் உண்டு!)
———————————————————————————-
அப்படியே மனதில் நீண்ட நாளாக விட்டுப் போன கேள்விகள்:
அ) தொகுப்பாளரின் மேசையிலிருந்து கட்டுரையை தலையங்கம் பத்திக்கு ஒப்பாக சொல்லலாம். இது ஏன் எழுதியவர் பெயர் தாங்காமல் வரவேண்டும்? (accepting responsibility)
ஆ) பூங்கா – 27 ஆகஸ்ட் 2007இல் இருந்து…
—மக்கள் பிரச்சனைகளை எழுப்பும் பலருக்கு ஊடகவெளி அணுக முடியாதிருப்பதும் ஒரு முக்கிய காரணம்.—
எனக்கு பூங்காவின் தலையங்கங்களே அணுக முடியாத நிலையில் இருக்கிறது. படிப்பவருக்கு இலகுவாக தரலாமே?
—————————————————————————————–
—நடுநிலை என்ற போலி முகமூடியை அணிவதில்லை.—
இந்தக் கருத்தில் எனக்கு முழு ஒப்புதல்.
நன்றி பா.பா. உங்களது சில கருத்துக்களை பூங்கா பின்பற்றலாம். குறிப்பாக ‘பூங்காவின் பரிந்துரைகள்’ என்று பொருத்தமுடைய சுட்டிகளைத் தருவது..
***
//இந்தியாவைப் பாராட்டியோ, மேற்கத்திய சாதனையாளர்களை விவரித்தோ, அமெரிக்க சந்தைப்படுத்தலை முன்வைத்தோ வந்த கட்டுரைகள் எத்தனை?//
நீங்க ஜோக் அடிக்கலையே!!
ஏறக்குறைய வாரத்துக்கு ஒருவர் மீனவர் என்று கொல்லப்படுகிறார்/ தாக்கப்படுகிறார்; தண்ணீர் இல்லை மக்கள் தஞ்சைப் பகுதிகளில் மக்களுக்கு பைத்தியம் பிடிக்கையில், நீதிமன்ற தீர்ப்புகளைக் கூட அமுல் படுத்த முடியாத அரசுகள்; தற்கொலை செய்துகொல்லும் விவசாயிகள்/ 5 வருடங்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருக்கும் மணிப்பூர் இரோம் சர்மிளா; நர்மதா அணைதிட்டம் இப்படி எத்தனையோ பிரச்சனைகளில் ஒன்றினையோ, சிலவற்றினையோ தீர்க்க முனைந்திருந்தால் கூட அது மிகப்பெரிய சாதனைதான்.
இந்தியாவின் சாதனைகள் என்று மக்களுடைய நலனில் முக்கியமான நல்லவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் கண்டிப்பாகப் பூங்காவில் கவனம் பெற்றிருக்கின்றன.
மாறாக உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களை கண் கட்டவும், கிச்சுக்கிச்சு மூட்டவும், ஏமாற்றவும், காலங்கடத்தவும் செய்யப்படுவனவற்றை சாதனைகளாகக் காட்டவேண்டிய/ புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் நமக்கெதற்கு! அதற்காக மக்கள் பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழித்து விழாக்கள் நடத்தி, சாட்டிலைட் அனுப்பி தொலைக்காட்ட அரசுகள் இருக்கும் போது.
மாறாக சில தனிமனிதர்கள், அமைப்புகள் உண்மையான பிரச்சனைகளில் ஈடுபட்டு போராடுவது இந்தியாவின் சாதனை இல்லை என்று நினைக்கிறீர்களா? ஒரு நாட்டின் சாதனை என்பது அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டவை மட்டும் தானா?
இந்தியாவில் மலம் அள்ளும் தொழிலாளர்களின் பிரச்சனையை வெளிப்படுத்துவதும், அதற்காகப் போராடுவது சாதனை இல்லை இலையென்று நாம் எப்படி நினைக்கிறோம்? சாதனை என்பது மட்டையைச் சுழற்றி அடித்துவிட்டு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுப்பது என்பது மட்டும் தான் என்று அதற்குள் பழகிக்கொண்டோமா!?
***
உங்களது ஆர்வத்துக்கும், ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளுக்கும் எப்போதும் போல இப்போதும் நன்றிகள் பா.பா.
பிங்குபாக்: Feedback: Closed group vs Wider societies - Bane of Tamil Blogodom « Snap Judgment