History of Tamil Print Magazines & Tamil Nadu Press – Chronology: Savithri Kannan (Puthiya Parvai)


The original article appeared in புதிய பார்வை dated March 16-31, 2007. This piece quotes only portions which were of interest and facts which will be of use to me. For better clarity, I have taken liberty with pruning the opinions and also rearranged the paragraphs.

சுதந்திரத்திற்கு முந்திய தமிழ் இதழியல் சூழல் :: சாவித்திரி கண்ணன் (புதிய பார்வை)

பத்திரிகைத் தொழில் சீனாவில் வேர்விட்டது. ஜெர்மனியில் உருப்பெற்றது. இங்கிலாந்தில் வலுப்பெற்று வடிவம் கண்டது.

17 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில் ஆங்கிலச் செய்தித்தாள்கள் வெளிவரத் தொடங்கின. 17 ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் அமெரிக்காவிலும் செய்தித்தாள்கள் வெளிவரத் தொடங்கின. ஆனால் இந்தியாவிலோ இதற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகே, 1780 முதல் செய்தித்தாள் வெளியானது. இந்திய இதழியல் துறையின் முன்னோடியான ‘ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹக்கி‘யின் ‘பெங்கால் கெஜட்’ அந்நாளில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்தது.

முதல் முப்பது ஆண்டுகள் ஆங்கிலத்தில் மட்டுமே செய்தித்தாள்கள் வெளிவந்தன. முதன் முதலாக இந்திய மொழிகளில் தமிழ்தான் இதழியலுக்காக அச்சேறிய மொழியாகும். அச்சேறிய ஆண்டு 1812. இதழின் பெயர் ‘மாசத் தினசரிதை‘. இந்த இதழின் ஆசிரியர் தஞ்சையைச் சேர்ந்த ஞானப்பிரகாசம்.

இந்தத் தகவல் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இதழியல் ஆய்வில் தொய்வின்றி ஈடுபட்டுவரும் மூத்த பத்திரிகையாளர் அ.ம. சாமியின் ‘விடுதலை இயக்க இதழ்கள்’ என்ற நூலில் உள்ளது. ஆனால் இது வரையிலான மற்ற பல ஆய்வாளர்கள் 1820களில் வெளியான வங்காள இதழ்களையே இந்திய பிரதேச மொழிகளில் வெளியான முதல் இதழ்களாக எழுதி வந்தனர். ‘மாசத் தின சரிதை’ விடுதலை இயக்கப் போராட்டத்திற்கு எந்தப் பங்களிப்பும் செய்ததாகத் தகவல் இல்லை. ஆனால், ‘சுதேசமித்திரனுக்கு முன்பாகவே பல தமிழ் இதழ்கள் விடுதலைப் போராட்டங்களுக்கு வித்தூன்றியது’ என்ற தகவல்கள் இப்போதுதான் வெளியாக ஆரம்பித்துள்ளன.

1831 இல் வெளியான ‘தமிழ் மேகசின்‘ தமிழின் முதல் இதழ் என்றும், 1856 இல் வெளியான ‘தினவர்த்தமானி‘யே முதல் வார இதழ் என்றும் கூறுகிறார் மா.பா. குருசாமி. ஆயினும் சுதேசமித்திரனுக்கு முன்பே ‘சேலம் சுதேசபிமானி‘ என்ற மாதமிருமுறை இதழை 1877-லிருந்தே சே.ப. நரசிம்மலு என்ற சிறப்புமிக்க செய்தியாளர் நடத்தியுள்ளார். இதை மற்றொரு இதழியல் ஆய்வாளரான பெ.சு. மணியும் உறுதிப்படுத்துகிறார். தமிழின் முதல் புலனாய்வு இதழ் என்ற கூடுதல் சிறப்பும் இவ்விதழ்க்குரியது. 1881களிலேயே மாஜிஸ்திரேட்டுகளும், தாசில்தாரும் மலினப்பட்டு கையூட்டுப் பெறுவதை கண்டுபிடித்து எழுதியது இவ்விதழ்.

சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இதழாளர் எனக் கருதப்பட்ட நரசிம்மலு ஒரு கள ஆய்வாளருமாவார். கோவை குடிநீர்ப் பஞ்சம் தீர மலை உச்சியிலிருக்கும் முத்துக்குளம் அருவியிலிருந்து தண்ணீர் கொண்டுவரமுடியும் என்று முதன் முதல் கண்டறிந்து எழுதியவர், வலியுறுத்தியவர் நரசிம்மலு.

1800களின் பிற்பகுதியிலேயே தமிழில் சுமார் ஐநூறு இதழ்கள் வெளிவந்துள்ளன. அதேசமயம், மக்களிடம் இதழ்கள் படிக்கும் ஆர்வம் அதிகம் இருந்ததாகச் சொல்ல வழியில்லை. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் படித்தவர்களின் விகிதாச்சாரமே ஏழெட்டு சதவிகிதத்திற்கு மேலில்லை. அப்படி படித்தவர்களிலும் கூட நாட்டு நடப்புகளை, பொது விவகாராங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் அதிகம் இல்லை.

இதனால் பத்திரிகை ஆரம்பித்தவர்கள் பாடு, படு திண்டாட்டமாயிருந்துள்ளது. பத்திரிகை ஆரம்பித்தவர்கள் எப்படியாவது சந்தா சேர்ப்பதற்காக முதல் சில நாட்கள் இலவசமாக அனுப்பியும் கூட மக்கள் இசைந்து கொடுக்கவில்லை. மேலும் ஆங்கிலம் படிப்பவர்கள் தமிழ்ப் பத்திரிகை படிப்பதைக் காட்டிலும் ஆங்கிலப் பத்திரிகையில்தான் ஆர்வம் காட்டியுள்ளனர். எனவே மக்களைப் பத்திரிகை படிக்கவைக்க மன்றாடிப் பார்த்தும் அவர்கள் மசியாத காரணத்தால் மரித்துப் போன பத்திரிகைகளே அதிகம்.

பத்திரிகைகளின் விற்பனையோ சுமார் 50 படிகளிருந்து அதிகபட்சம் 500 படிகள் என்பதாயிருந்தது. விலையோ சுமார் ஒரு பைசாதான். இதில் விதிவிலக்காக விற்பனையை அதிகப்படுத்தி 1000 பிரதிகளைத் தொட்ட பத்திரிகை ஜி. சுப்பிரமணிய ஐயரால் தொடங்கப்பட்ட ‘சுதேசமித்திரன்‘தான் .

சுதந்திர வேட்கைக்கான சுடரொளி தாங்கிய இதழாக தமிழ் மக்களால் இது தலையில் வைத்துப் போற்றப்பட்டது. ஆரம்பித்த காலத்தில் அதிக பொருளாதார இடர்ப்பாடுகளைச் சந்தித்தபோதிலும் அழுத்தமான கொள்கைப்பற்றால் மெல்ல, மெல்ல ஆதரவு தளத்தை அதிகப்படுத்திக் கொண்டது.

ஜி. சுப்பிரமணிய ஐயர் முற்போக்குவாதியாக முன்னொடியாகத் திகழ்ந்தவர். விதவைப் பெண்கள் சமூகத்தில் வெறுத்தொதுக்கப்பட்டு சகல இன்னல்களுக்கும் சாட்சியங்களாகிக் கொண்டிருந்த சமூகச் சூழலில், தன் விதவை மகளுக்கு மறு விவாகம் செய்து வைத்தார். இதனால் இந்து பத்திரிகை பாகஸ்தராக இருந்த ஜி. சுப்பிரமணிய ஐயர் பல இடர்ப்பாடுகளுக்கு ஆளாகி கடைசியில் இந்து பத்திரிகையைத் தன் கூட்டாளி வீரரகவச்சாரியிடமே விட்டுவிட்டார். தி ஹிந்து பத்திரிகை ஜி. சுப்பிரமணிய ஐயருக்குப் பிறகு ஆங்கில அரசுக்கு அனுசரணையாக மாறியது.

பாரதியார் சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகவிருந்து கொண்டு ‘சக்கரவர்த்தினி‘ மகளிர் மாத இதழின் ஆசிரியராக பெண்ணுரிமைக்காக சமரசமற்ற கருத்துப் போர் நடத்தினார்.

மண்டையம் குடும்பத்தாரின் ஆதரவில் நடத்தப்பட்ட ‘இந்தியா‘ இதழின் ஆசிரியராக பாரதியார் பொறுப்பேற்ற ஆண்டு 1907

அந்நாளில் ‘இந்தியா’ இதழின் விற்பனை அதிகபட்சமே ஆயிரம் பிரதிகள்தான் என்றபோதிலும் ஒவ்வொரு இதழுமே குறைந்தபட்சம் ஐம்பது பேரிடமாவது கைமாறியது; விவாதிக்கப்பட்டது; விரிவான கருத்துப் பரவலுக்கு வித்தூன்றியது.

பாரதியார் இந்தியா இதழின் வருடச் சந்தாவை எப்படி நிர்ணயித்தார் என்பது சுவாரஸ்யமான செய்தியாகும். சாதாரண பொது ஜனங்களுக்கு ஆண்டுச்சந்தா ரூபாய் 3 என்ற பாரதியார், வசதியாக வருவாய் ஈட்டுவோருக்கு ரூபாய் 15 என்றும், ஜமீன்தார், ராஜாக்களாயிருந்தால் ரூபாய் 30 என்றும், வெள்ளை அரசாங்கத்துக்கு வேண்டுமென்றால் ஐம்பது ரூபாய்க்கு குறைந்து அனுப்ப முடியாதென்றும் அறிவித்தார்.

இந்தியா இதழோடு ‘பாலபாரதம்‘ என்ற ஆங்கில வார இதழும் துணை இதழாக வந்தது. இந்த ஆங்கில இதழின் ஆசிரியரும் பாரதியார்தான். புதுச்சேரி புகலிடம்தானே என்றில்லாமல் ‘விஜயா‘ என்ற மாலை நாளிதழுக்கும் ஆசிரியராக இருந்தார். இது புதுவையில் வெளியான முதல் மாலை நாளிதழாகும். பிறகு ‘சூரியோதயம்‘ என்ற வார இதழிலும் வரிந்து கட்டிக்கொண்டு ஆங்கில அரசை எதிர்த்து எழுதினார் பாரதியார். இதனால் இந்தியா இதழுடன் இவ்விதழுக்கும் தமிழ்நாட்டில் விற்பனை தடை விதிக்கப்பட்டது.

அரவிந்தர் ஆசிரியராகவிருந்து நடத்திய ஆங்கில இதழான ‘கர்மயோகி‘யின் தமிழ்ப் பதிப்புக்கு பாரதியார் ஆசிரியராக இருந்தார். இலவசமாக விநியோகிக்கப்பட்ட ‘தர்மம்‘ இதழிலும் ஆசிரியர் பொறுப்பேற்றார். பாரதியாரின் வெற்றி பெறாத முயற்சிகளாக முலையிலேயே அழிந்தது ‘அமிர்தம்‘ என்ற பெயரில் அவர் ஆரம்பிக்கவிருந்த இதழும், ‘சித்திராவளி‘ என்ற பெயரில் முழுக்க முழுக்க சித்திரங்களின் வழியாகவே கருத்தைப் பரப்ப எண்ணிய இதழும்.

பாரதியின் நெருங்கிய நண்பரான சுப்பிரம்ணிய சிவா ‘ஞானபானு‘, ‘பிரபஞ்சமித்திரன்‘ என்ற இதழ்களை நடத்தினார். சமஸ்கிருதம் கலவாமல் தனித்தமிழில் எழுதப்படும் கட்டுரைக்கு ரூபாய் 5 பரிசாகத் தரப்படும் என்றும் சிவா அறிவித்தார்.

…1900..கள் குறித்த குறிப்புகள்… பின்னால் தனிப்பதிவில் தட்டி சேர்க்கும் எண்ணம்…

காந்தியுகத்திற்கு முன்பே தமிழில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் ஆதிதிராவிடர்களின் ஆயுதமாகவும் பல இதழ்கள் வெளிவந்துள்ளன. அவற்றில்

  • சூரியோதயம் – 1869
  • பஞ்சமன் – 1871
  • திராவிட பாண்டியன் – 1885
  • திராவிட மித்ரன் – 1885
  • இரட்டைமலை சீனிவாசனரால் நடத்தப்பட்ட ‘பறையன்‘ – 1893
  • அயோத்திதாச பண்டிதரால் நடத்தப்பட்ட ‘ஒரு பைசா தமிழன்‘ – 1907

குறிப்பிடத்தக்கவையாகும்.

…திராவிட இயக்கங்கள் குறித்த குறிப்புகள்… பின்னால் தனிப்பதிவில் தட்டி சேர்க்கும் எண்ணம்…

ஆதார நூல்கள்:

  1. விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு – ம.பொ.சி.
  2. விடுதலை இயக்கத் தமிழ் நூல்கள் – அ.மா. சாமி
  3. விடுதலைப் போரில் தமிழகம் – ம.பொ.சி.
  4. இதழியல் கலை – பொ. குருசாமி
  5. 19ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்் – அ.மா. சாமி
  6. இதழாளர் பெரியார் – அ. இறையன்
  7. விடுதலைப் போரில் தமிழ் இதழ்கள் – பெ. சு. மணி
  8. பாரதியின் பத்திரிகை உலகம் – சீனி. விசுவநாதன்
  9. இலக்கிய இதழ்கள் – இ. சுந்தரமூர்த்தி & மா.ரா. அரசு

நன்றி: புதிய பார்வை :: மார்ச் 16-31, 2007

Related piece: Snap Judgement: Tamil Magazine History – Journals, Zines, Media, Newspapers Chronology – Sequence of events and Developments lifted from source அலைஞனின் அலைகள்: குவியம்

2 responses to “History of Tamil Print Magazines & Tamil Nadu Press – Chronology: Savithri Kannan (Puthiya Parvai)

  1. Thinnai: “சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் :: வெங்கட் சாமிநாதன்”

    Thinnai: “சுதந்திரப் போராட்டமும் தமிழ் எழுத்தாளர்களும் – 2 :: வெங்கட் சாமிநாதன்”

  2. Savithri Kannan Article: “சுதந்திரத்திற்கு முந்திய தமிழ் இதழியல் சூழல்”

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.