சந்திப்புகள் குறித்து க்வார்ட்டருக்கு (மூன்று மாதங்களுக்கு) ஒன்றாக எழுதுவது வாய்ப்பாடு. (பாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்)
இந்த முறை சென்னை அடுத்த வாரம் நியு ஜெர்சி.
முதலில் ஜெர்சி சந்திப்பில் பிறரைக் கேட்க விரும்பும் கேள்விகள்:
1. நீங்கள் ஏன் வலையில் பதிகிறீர்கள்? எதற்காக நேரம் செலவழித்து பிறர் பதிவுகளில் பதில் போடுகிறீர்கள்?
2. உங்கள் பதிவினால் என்ன பயன்? யாருக்கு எப்படி உபயோகம் என்று தெரியுமா? எவருக்கும் லாபமில்லை என்னும் டிஸ்க்ளெய்மர் கொடுத்தால், என்றாவது உருப்படியாக்கும் எண்ணம் உண்டா என்று அறிய விருப்பம்?
3. ஒரு பதிவுக்கு எத்தனை நேரம் செலவழித்து இடுகிறீர்கள்? பதிவுகள் எவ்வாறு உருக்கொள்கிறது?
4. திரட்டிகளில் வெளியாகுவதால் பதிவுகளில் மனத்தடை (inhibitions) ஏற்படுகிறதா? எந்த வகை எண்ணங்கள், எழுத்துருவாக்கம் காணமல் இப்படி மறையும் அபாயம் உள்ளது? கொந்தி (mask) அணிவது இதற்கு வெளிப்படையான தளத்தை உருவாக்குமா?
5. நண்பர்கள் மனம் புண்படுமே என்று உங்கள் இடுகைகளை சுயதணிக்கை செய்ததுண்டா?
6. இவருடன் ஒத்துப் போனால் இமேஜ் பரிபாலனம் செய்ய முடியாதே என்று ஈகோவுக்குக் கட்டுப்பட்டு, பதிவுகளின் சுதந்திரம் தடைப்படுகிறதா?
7. பதிவுகளில் கதை/கவிதை மட்டுமே இட்டு வருவது, புகழ்பெற்ற பாடல்களான சங்க இலக்கியம்/குறளுக்கு பொருள் கொடுப்பது போன்றவை தேவையா? ஏன்?
8. குறிப்பெடுத்து, பலரோடு பகிர்வதின் நோக்கமாக எதைச் சொல்வீர்கள்? இத்தனை பேரைக் கொண்டு இயக்கமாக, சமூக சக்தியாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
9. லாஜிக் இல்லாத வாதங்கள்; அரைகுறையாகச் சொல்லும் ஓட்டைத் தகவல்; ட்விஸ்ட் ஆட்டம் போடும் சரித்திரம்; – கண்டால் பொங்கியெழுந்து கண்டிப்பீர்களா? பின்னூட்டமாகவா, பதிவாகவா?
10. #4-இன் உப-கேள்வி: பதிவைப் பாராட்டும்போது முகமிலியாக ‘நன்றி’ சொல்வது சரியா? விமர்சித்தால் ‘ப்ராண்ட் நேம்’ அவசியமா? கொந்தி கொண்டு மாற்றுக் கருத்தை முன்வைத்தால், உரியவாறு சென்றடைந்து, திரட்டி நிர்வாகிகளின் நற்பெயரையும் அடைய முடியுமா?
அடுத்ததாக சென்னை சந்திப்பு
- நிறைய பேரை சந்திக்க முடிந்தது. பாலபாரதிக்கு நன்றி எத்தனை முறை சொன்னாலும் தகும்.
- குறிப்பாக தங்கவேலு, வினையூக்கி, லக்கிலுக், முத்து (தமிழினி), ஜிரா, மோகன்தாஸ், வரவணையான், வீதபீப்பிள், மிதக்கும் வெளி, யோசிப்பவர் என்று எழுத்தில் மட்டும் பார்த்த பலரை நேரிலும் காண மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- பெண் பதிவராக ஒருவர்தான் வந்திருந்தார்.
- யாரும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வரவில்லை.
- மூன்று பேருக்கு மேல் இருந்தாலே உரையாடலாக இல்லாமல், உபன்யாசமாகும் அபாயம் உண்டு. நியூ ஜெர்சியிலும் லெக்சராகலாம்!?
- சிறில்/தருமி போன்ற தெரிந்த குரல்களை ஒலிக்க விட்டதற்கு பதில், சென்னப்பட்டணம் சாராத பிறரைப் பகிரத் தூண்டியிருக்க வேண்டும். (ஜெர்சியிலும் அதிகம் எழுதாத பதிவாளர்களின் சிந்தனையை கேட்க அவா)
- அனைவரையும் சிறு சிறு குழுக்களாக சந்தித்து இருந்தால், அவர்களின் எழுத்துக்கள் குறித்த எண்ணங்களையும், கொள்கை மேலான சந்தேகங்களையும் கேட்டுத் தெளிந்திருக்க ஏதுவாகியிருக்கும். (தொடர்ச்சியான இராப்பத்துக்கும் செல்ல இயலாதவாறு அன்றே அமெரிக்கா திரும்பும் சூழல் 😦
- சந்திப்புக்கு தொலைபேசுவது தவிர்க்கப்பட வேண்டும். ஸ்பீக்கரில் போடாமல், ஒவ்வொருவருடனும் தனித்தனியாகப் பேசுவது, தனிமடலில் உசாவுவது போல் அன்னியமாகப் பட்டது. பதிவுக்கு வராமல், விசாரணை தொனியில் செல்பேசியில் கதைப்பதை, பதிவர் உரையாடலின் பிற்பாடோ முற்பாடோ வைத்துக் கொள்ள வேண்டும்.
- அமெரிக்காவில் ஜனாதிபதிக்குப் போட்டியிடும் அரசியல்வாதிகள் குட காபி-டேபிள் சந்திப்பு என்று நாமகரணமிட்டு, ஆறேழு பேரை மட்டும் வட்டமேஜையிட்டு விவாதித்துக் கொள்வார்கள். அந்த மாதிரி குறு நிகழ்வுகள் திட்டமிடலாம்.
- தன் எழுத்தைப் போலவே பேச்சிலும் ம. சிவகுமார் ‘எழுதியதை அப்படியே வெளியிட முடியாததால், அடிக்கடி பதிவது இல்லை’ என்று வெளிப்படையாக சொல்லி யோசிக்கவும் விட்டார்.










