Over 70 pc cast votes in 2nd phase of civic polls in TN: Sporadic violence


Dinamani.com – TamilNadu Page

உள்ளாட்சித் தேர்தல்: 2-ம் கட்ட வாக்குப்பதிவு அமைதியாக முடிந்தது

சென்னை, அக். 16: தமிழகத்தில் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை அமைதியாக நடைபெற்றது. சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவாகின.

அங்கொன்றும், இங்கொன்றுமாக நடைபெற்ற சாலை மறியல்கள், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றைத் தவிர, பெரும்பாலான இடங்களில் தேர்தல் அமைதியாக நடைபெற்றது.

திருச்சி, மதுரை மாநகராட்சி உள்பட 6 ஆயிரத்து 645 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 54 ஆயிரத்து 630 பதவிகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இத் தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.31 லட்சம் உள்ளாட்சிப் பதவிகளுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் சுமார் 18 ஆயிரம் பதவிகளுக்கான வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முதல்கட்டமாக 67 ஆயிரம் பதவிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின.

2-ம் கட்டமாக சுமார் 54 ஆயிரம் பதவிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை மாநகராட்சித் தேர்தலில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களை அடுத்து, இத் தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீஸôர் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் குறிப்பாக, நீலாங்கரை, கொட்டிவாக்கம், மேடவாக்கம், மடிப்பாக்கம், பொழிச்சலூர், கவுல்பஜார் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான வாக்குச் சாவடிகளில் ஆண்களும், பெண்களும் நீண்டவரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

திருச்சி, மதுரையில் வன்முறை: திருச்சி மற்றும் மதுரை மாநகராட்சிக் கவுன்சிலர் பதவிகளுக்காக நடைபெற்றத் தேர்தலில் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.

திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஒரு வேட்பாளரின் கார் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

மதுரையில் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் கடத்தப்பட்டதாகக் கூறி, அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸôர் தடியடி நடத்தினர்.

சென்னையில்…: சென்னை புறநகர்ப் பகுதியான மேடவாக்கத்தில் வாக்குச்சீட்டுகளை சூறையாடியதாக ஊராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளர் கைது செய்யப்பட்டார்.

அம்பத்தூரில் உருட்டுக்கட்டைகளுடன் கள்ள வாக்குப் போட வந்ததாக ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவொற்றியூர் நகராட்சித் தேர்தலில் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறி அதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை வன்முறைச் சம்பவங்கள் காரணமாக வாக்குப் பதிவு பாதிக்கப்பட்ட 26 இடங்களில் மறுவாக்குப் பதிவு நடத்த மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை: 2 கட்டங்களாக பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தமிழகம் முழுவதும் 826 மையங்களில் புதன்கிழமை (அக். 18-ல்) நடைபெறும்.


வாக்குச்சீட்டுகளை தூக்கிச் சென்ற அதிமுக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் உள்பட 7 பேர் கைது

சென்னை, அக். 16: சென்னை மேடவாக்கத்தில் பள்ளிக்குள் புகுந்து போலீஸôரை தாக்கிவிட்டு வாக்குச் சீட்டுகளை தூக்கிச் சென்ற அதிமுக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் காளிதாஸ் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

காளிதாஸ் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சாலை மறியல் செய்த 82 பெண்களைப் போலீஸôர் கைது செய்தனர்.

சென்னை மேடவாக்கம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் 126-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடுபவர் காளிதாஸ். இவர், அதிமுக ஆதரவுடன் போட்டியிடுவதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவில் மேடவாக்கம் அரசு பள்ளிக்குள் ஒரு கும்பல் புகுந்தது. அங்கு 234-வது வாக்குச் சாவடியில் இருந்த 600 வாக்குச் சீட்டுகளையும், 235-வது வாக்குச் சாவடியில் இருந்த 3,421 வாக்குச் சீட்டுகளையும் தூக்கிச் சென்றனர்.

இதைத் தடுக்கவந்த சப்-இன்ஸ்பெக்டர் முத்தேலு உள்பட 3 தலைமைக் காவலர்களை அவர்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இதில், ஒருவரின் செல்போன் தவறி கீழே விழந்தது. உடனே, அந்த செல்போனை போலீஸôர் கைப்பற்றினர்.

விசாரணையில், அந்த செல்போன் வேட்பாளர் காளிதாஸின் ஆதரவாளர் அசோக்குக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து காளிதாஸ், பாலகிருஷ்ணன், அசோக், மகேஷ், செல்வம், சுரேஷ், சுந்தர் ஆகியோரை போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

வாக்குச் சீட்டுகளுடன் இருவர் தலைமறைவு: மொத்தம் 4,021 வாக்குச் சீட்டுகளுடன் தப்பி ஓடிய காளிதாஸின் தம்பி குமார் மற்றும் ரவி ஆகியோரை போலீஸôர் தேடி வருகின்றனர்.


சில நிமிடங்களில் பதிவான ஆயிரம் வாக்குகள்

சென்னை, அக். 16: பயங்கர ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஆயிரம் வாக்குகளை சில நிமிடங்களில் பதிவு செய்தது என்று திருவொற்றியூர் 31-வது வார்டில் சுயேச்சையாகப் போட்டியிடும் வேட்பாளர் மாலதி கூறினார்.

திருவொற்றியூர் நகராட்சித் தேர்தலின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து அவர் கூறியது:

நான் கடந்த மூன்று தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன். கடந்த முறை சுயேச்சையாகப் போட்டியிட்டு இதே வார்டில் வெற்றி பெற்றேன். பின்னர் திமுகவில் இணைந்தேன். இந்த தேர்தலில் எனக்கு திமுகவில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படாததால் சுயேச்சையாகப் போட்டியிட்டேன்.

ஆனால் எனக்கு பழக்கமானவர்களே பெரிய கத்திகளுடன் உள்ளே புகுந்து மிரட்டியதைப் பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தேன். என் வாழ்நாளில் இத்தகைய வன்முறை நடைபெற்ற தேர்தல்களைப் பார்த்ததே இல்லை. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை சில நிமிடங்களில் பதிவு செய்துவிட்டு பின்புற வாசல் வழியாக மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர் என்றார் அதிர்ச்சி கலந்த பயத்துடன்.


26 இடங்களில் மறுவாக்குப் பதிவு: 2-ம் கட்ட தேர்தலில் 70% வாக்குப் பதிவு

சென்னை, அக். 16: தமிழகத்தில் 2-ம் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் டி. சந்திரசேகரன் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறியது:

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரத்து 962 பதவியிடங்களுக்கு அக். 13, 15 (வெள்ளி, ஞாயிறு) ஆகிய நாள்களில் பெரும்பாலான இடங்களில் அமைதியாகத் தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் முதற்கட்டமாக 72 சதவீதமும், 2-ம் கட்டமாக 70 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

தமிழகத்தில் இந்த உள்ளாட்சித் தேர்தலில் மாலை 3 மணி நிலவரப்படி ஒட்டுமொத்தமாக 55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

கடந்த 2001-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்டமாக 62.9 சதவீதமும், 2-ம் கட்டமாக 67 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. 525 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடந்தது.

சென்னை மாநகராட்சியில் கடந்த 2001-ம் ஆண்டில் 36.11 சதவீதமும், தற்போது 55.03 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் தமிழகத்தில் இத் தேர்தல் பெரும்பாலான இடங்களில் அமைதியாக நடைபெற்றுள்ளது.

ஒரு சில இடங்களில் மட்டுமே அசம்பாவித சம்பவங்கள் நடந்துள்ளன.

மறு வாக்குப்பதிவு:ஆனால், தற்போது 26 வாக்குச் சாவடிகளில் மட்டுமே மறு வாக்குப்பதிவு அக்டோபர் 16, 17 (திங்கள், செவ்வாய்) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.

இதில் 2-ம் கட்டமாக தேர்தல் நடந்த 26 வாக்குச் சாவடிகளில் மட்டும் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

மாவட்ட வாரியாக மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை விவரம்:

  • தர்மபுரி,
  • திருநெல்வேலி தலா 5,
  • விருதுநகர் 4,
  • கடலூர்,
  • விழுப்புரம் தலா 3,
  • ராமநாதபுரம்,
  • திருவள்ளூர்,
  • மதுரை தலா 2,
  • தேனி 1.

  • பின்னூட்டமொன்றை இடுக

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.